Wed04172024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு ஆண்டுக்கு முன் கவிதையானவன் எங்கள் தோழன் எம்.சி

கவிஞனாக, செயல் வீரனாக, மனித நலனை முன்னிறுத்தி மற்றவர்களுக்காக வாழ்ந்த எம்.சி லோகநாதன் இன்று எம்மைவிட்டு பிரிந்து ஒரு வருடங்கள் கடந்து விட்டது.

இனம் - மதம் - சாதி - பால் கடந்த வர்க்கமற்ற சமூகத்தை நோக்கிய எமது பயணத்தில், எம்முடன் தோழோடு தோழ் நின்று பயணித்தவன் எங்கள் தோழன் எம்.சி.

இனவாத சகதிகளையே நிரம்பிய அரசியலுக்கு சாவல் விடும் வண்ணம், சரியாக ஒரு ஆண்டுக்கு முன் யாழ்ப்பாணத்தில் "அரசியல் கைதிகளை விடுதலை செய்" எனக்கோரி சம உரிமை இயக்கம் நடத்திய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு போராடியது மட்டுமல்ல தென்பகுதியில் இருந்து வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான உணவு ஒழுங்குகளையும் செய்திருந்தான் எம.சி. இதற்கு அடுத்த நாளே நிகழ்ந்த அவனின் மரணம் என்பது அடக்கப்பட்ட சமூகத்தின் பொது இழப்புத் தான்.

அன்று அவனுடன் வீதியில் நின்று போராடிய தோழர்கள், அவன் விட்டுச் சென்ற பணியை இன்று ஆலமரமாக்கி விட்டனர். இன்று இலங்கையின் எந்த மூலையிலும் இனவாதம் எழுந்தாலும் அதனை எதிர் கொண்டு போராடுகின்ற வரலாற்றிற்கு, அவனும் ஒரு ஆரம்ப மூச்சாக எம்முடன் நின்றான் என்பது அவனுக்கான சமூகப் பெருமை.

இனவாதமும், நவதாராளவாதமும் இணைந்து அரசியல் கோலோசி நிற்கும் இன்றைய சூழலில், இதை மாற்றும் அரசியல் செயற்பாட்டை மறுக்கும் நடைமுறையற்ற கருத்தாக அரசியலை முடமாக்க முனையும் சூழலில்; மக்கள் நடைமுறை மாற்றத்தை போராட்டம் என்னும் செயல் மூலம் கோரி நிற்கின்றனர். போராட்டம் இல்லாத அன்றாடச் செய்திகள் இன்று கிடையாது. நடைமுறைக்கு வேறு இயக்கம் கிடையாது என்று சொல்லுமளவுக்கு, இதற்கு வெளியில் நடைமுறையைக் காணமுடியாத வரலாற்று கால் தடங்களில் எங்கள் எம்.சி எம்முடன் பயணித்தான் என்பதும் - அவனின் நினைவும் மக்களுக்கானது.

மனித குலத்திற்கு எதிராக முதலாளித்துவம் தன்னை மூடிமறைக்க முன்தள்ளும் இனவாதம் - சாதியவாதம் - நிறவாதம் - பால்வாதம் என அனைத்தையும் எதிர்த்து அதை மாற்ற நடைமுறையில் வாழ்ந்து காட்டுவதன் அவசியத்தை எம் அனைவரிடமும் எம்.சி விட்டுச் சென்றுள்ளான்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

18.02.2016