Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களின் கலந்துரையாடலில் பொது உன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன

கடந்த 06.07.2014 அன்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஹட்டனில் இடம்பெற்ற மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கோரிக்கைகள், பொது வேலைத்திட்டம் மற்றும் பொது அமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும்; ஆர்வலர்களிடையே ஒரு பொது இணக்கப்பாட்டை காண்பதற்கான கலந்துரையாடலிலே மலையக மக்கள் தனி வீடு அமைத்துக் கொள்ள காணித்துண்டுகள் உரித்துடனும் சுய தொழில், விவசாயத்திற்கான காணியும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த கோரிக்கையை குறிப்பாக வரையறுத்துக் கொள்வது பற்றியும் அதனை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டம் பற்றியும் அவ்வேலைத்திட்டத்தை வென்றெடுப்பதற்கான பொது அமைப்பு பற்றியும் இக்கலந்துரையாடலின் அடுத்த அமர்வில் இணக்கம் காண்பது என்றும் அடுத்த அமர்வை ஒரு மாத கால இடைவெளிக்கு முன்னர் நடாத்துவது எனவும் அமைப்புகள் இணங்கிக் கொண்டன. பொது அமைப்பை கட்டும் வரை மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாட்டாளராக செயற்பாடுவது என இணக்கம் காணப்பட்டது. இவ்வாறு கலந்துரையாடலை ஏற்பாடு செய்த மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அழைப்பை ஏற்று வருகை தந்து மலையக மக்களின் காணி வீட்டு உரிமை பிரச்சினைப் பற்றிய தங்களின் கருத்துக்களை பரிமாறி மலையக மக்களின் எரியும் பிரச்சினையாக உள்ள காணி, வீட்டு உரிமை பிரச்சினை பற்றிய கருத்தாடலை மேலும் விரிவாக்கியமைக்கு அனைத்து பிரதிநிதிகளுக்கும் அவர்கள் சார்ந்து அரசியல், தொழிற்சங்க, சிவில் அமைப்புகளுக்கும் ஆர்வலர்ளுக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு அடுத்தக்கட்ட பணிகளுக்கான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

மலையக மக்களுக்கு காணி உரிமையுடன் தனி வீட்டுக்கான உரிமையும் சுயதொழில்ஃவிவசாய காணியும் வழங்கப்பட வேண்டும் என்று பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ள போதும் அவற்றின் குறிப்பான விடயங்கள் தொடர்பாகவும் அவ்வுரிமைகளை வென்றெடுப்பதற்கான குறிப்பான வேலைத்திட்டங்களை அடையாளம் காணுவதற்கும் கருத்தாடலை மேலும் முன்னேக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இவை தொடர்பில் அமைப்புகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் பொது அடையாளத்துடன் இவ்விடயம் தொடர்பில் இணைந்து பணியாற்றுவதற்கு தடையாக இல்லை என்பதை தொடக்க கலந்துரையாடல் உறுதிப்படுத்தியுள்ளதுடன் கருத்தாடல்களை தொடர்வதனூடாகவும் விரிவுப்படுத்துவதுனாடகவும் பொது இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த சந்திப்பின் போது குறித்த விடயம் பற்றிய கருத்தாடல்களையும் நடவடிக்கைகளையும் வினைத்திறனாக செய்யக்கூடிய வகையில் வடிவமைப்பதற்கு பங்குபற்றிய, பங்குபற்ற முடியாது போன அமைப்புகளினதும் கருத்துக்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அக்கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அடுத்த அமர்வு வடிவமைக்கப்படும்.

1970களுக்கு பின்னர் மலையகத்தில் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகள் பல இடம்பெற்றுள்ளன.அவைகள் மலையக மக்களின் நேர்கணிய அசைவியக்கத்திற்கு வழிசமைத்துள்ளன. அவற்றின் படிப்பினைகளை உள்வாங்கிக் கொண்டு காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கு மலையக மக்களை ஒரு பொது அமைப்பின் கீழ் அணித்திரட்ட வேண்டிய கடப்பாடு நம் அனைவரும் முன் இருக்கிறது. எனவே மலையக மக்களின் உரிமை தொடர்பில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினருக்கும் இக்கலந்துரையாடலின் அடுத்த அமர்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதோடு முதல் கலந்துரையாடலில் பங்குகொள்ள முடியாது போன அமைப்புகளை அடுத்த அமர்வில் பங்குபற்றுமாறு அழைக்கின்றேன். என குறிப்பிடப்பட்டிருந்தது.

பொது கலந்துரையாடலில் பங்குபற்றிய 15 அமைப்புகளின் (அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள்) விபரம் வருமாறு:

1. விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம்

2. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்

3. அருனலு மக்கள் முன்னணி

4. சமூக நல நிறுவனம்

5. இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி

6. ஜனநாயக மக்கள் முன்னணி

7. மனித அபிவிருத்தி தாபனம்

8. சமூக அபிவிருத்தி நிறுவகம்

9. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்

10. லியோ மார்கா ஆஸ்ரம்

11. ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கம்

12. மலையக மக்கள் முன்னணி

13. மலையக சமூக ஆய்வு மன்றம்

14. மலையக தமிழ் பண்பாட்டுப் பேரவை

15. மலையக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்

16. விடிவெள்ளி சமூக அபிவிருத்தி நிறுவனம்

-சட்டத்தரணி இ. தம்பையா