Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாம் சொல்வதெல்லாம் உண்மை பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை..!

மகிந்த அரசு தான் சொல்வதெல்லாம் உண்மையென பொய், புரட்டு, பித்தலாட்டத்தையே தன் அரசியல் வாழ்வாதாரம் ஆக்கியுள்ளது. அண்மைக் காலமாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறி நடவடிக்கைகளில் சொல்வதும் - செய்வதும் மாபெரும் அரசியல் பித்தலாட்டம் தான் என்பதை ஊர் உலகு அறியும்.

அனைத்துலக சக்திகளே நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக அண்மையில் அரசியல் பித்த வாந்தி எடுத்துள்ளார் மகிந்த ராஜபக்ச. கடந்த 15ஆம் 16ஆம் (யூன் 2014) திகதிகளில் அளுத்கம வேருவளைப் பகுதிகளில் நடாத்தப்பட்ட பொதுபல சேனாக் காடைக் கும்பலின் தாக்குதலின் போது, கோத்தபாயவும், இக் காடையர் கும்பலும் நின்றதான புகைப் படம் மகிந்த அரசிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரக இணையத்தில் வந்த இக் காணொளித் தகவலில் என்னதான் பொய் உள்ளதோ? மத - மது வெறிப் போதைகளில் இன வெறித் தாக்குதல் புரியும் போது இக் காணொளிகளை கச்சிதமாக எடுப்பதை உங்களால் எப்படிக் கண்காணிக்க முடியும்.

இதேபோல் ஜாதிகபல சேனா இயக்கத்தின் தலைவர் விஜித தேரர் கடத்திச் செல்லப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை வெறித் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, பாணந்துறையில் ஓர் பாலத்திற்கு அருகில் தூக்கி வீசப்பட்டார். இவற்றை பொலிஸ் விசாரணையின் போது வாக்குமூலமாகக் கொடுத்தார். இந் நிலையில் இது தவறான முறைப்பாடாகும் என பொலிஸ் தரப்பு கூறுகின்றது. பொதுபல சேனாவிற்கும் அரசிற்கும் அபகீர்த்தி ஏற்படுத்த தன்னைத் தானே தாக்கிக் கொண்ட திட்டமிட்ட நாடகமாகுமென பொலிஸ் தரப்பு சொல்கின்றது. காயங்கள் பற்றி அவதானிக்கும் போது அது அவராலேயே ஏற்படுத்தப்பட்டவையாக கொள்ள வேண்டியுள்ளது என தேசிய வைத்தியசாலையின் வைத்தியப் பிரிவு சொல்கின்றது. 

இத்தனைக்கும் பிறகும் இப்போதும் இலங்கையில் பூரண சமய சுதந்திரம் உண்டு. அனைத்து இன மக்களும் ஒருதாய் மக்கள் போல் வாழ வைத்துள்ளேன், என ஜனாதிபதி சொல்வதுதான், சொல்வதெல்லாம் உண்மை - பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதேயாகும்.