Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

கொழும்பில் நடைபெறும் சமவுரிமை இயக்கதின் 2ம் நாள் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்!

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம்  போரால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்  மற்றும்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. நேற்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று 2வது நாளாக நடைபெற்றக் கொண்டிருக்கும் இந்த  சத்தியாககிரக போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள்  ஆதரவு வழங்கி கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் கொழும்பிலிருந்து செயற்படுகின்ற ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ ஊடகவியலாளர்கள் சிலரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் இணைந்துகொண்டனர். பல்வேறு ஊடக அமைப்புக்களும் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்து இந்தப் போராட்டத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் தொடர்ந்து இரவுபகலாக 23ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சிறிமல்வத்த; “யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கழிந்துள்ளன. இதில் வடக்கு மக்கள் தங்களது காணி உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெறுவதற்காக அழுத்தங்களைக் கொடுத்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆட்சிக்குவந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழ்க் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டோர் வடக்கு மக்களின் காணிகளை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். வடக்கில் போராட்டத்தில் தொடர்புபட்ட பல இளைஞர்கள் நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றச்சாட்டுக்கள் எதுவும் அற்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதானது ஸ்ரீலங்காவில் மிகவும் ஜனநாயக ரீதியலான பாரிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் ஜனநாயகம் என்று வார்த்தையால் கூறுவதையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கடந்த காலத்தில் ராஜபக்சவின் அரசாங்கத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற கடத்தல், காணாமல் போகச்செய்தல் போன்ற சம்பவங்களை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பலர் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திவிட்டனர். நீதியைப் பெறுவதாக பிரசார மேடைகளில் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. எனினும் அந்த வாக்குறுதிகளும் காலத்தால் மறக்கடிக்கச் செய்யப்பட்டதாக அமைந்துவிட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி எந்தவொரு காரணமும் இன்றி மக்களை கைது செய்தமை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்த அடக்குமுறை சட்டங்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யும் கோரிக்கையும் இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.