Fri12042020

Last updateSun, 19 Apr 2020 8am

இன்னொரு அழிவிற்கு முன்

சில நாட்களுக்கு முன்பு யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசுபொருளாகியிருக்கின்றது. வழமைபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த சம்பவத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றாக சம உரிமை இயக்கம் கருதவில்லை. பல வருடங்களாக விதைக்கப்பட்டதைத்தான் இன்று அறுவடை செய்கின்றார்கள். எமது நாடு இனவாத எரிமலைக்கு மேல் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினால் அதில் தவறு கிடையாது. அது அடிக்கடி வெடிக்கின்றது. சமீபத்திய வெடிப்புதான் யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தது.

யுத்த முடிவு தெற்கின் வெற்றியாகத் தெரிந்தாலும், வடக்கிற்கு அது வெற்றியாகத் தெரிவதில்லை. மக்களை கூட்டுப் படுகொலை செய்த, காணி நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்ட, பிள்ளைகளை காணாமலாக்கி நூற்றுக்கணக்கானோரை அரசியல் சிறைக் கைதிகளாக்கிய யுத்தம் வடபுல மக்களுக்கு அனைத்தையும் இழக்க செய்தது. இராணுவம் ஆயிரக்கணக்கில் தங்கியிருந்து இரும்புச் சப்பாத்தினால் மிதித்துக்கொண்டு நடத்திய ஆட்சியை அவர்களால் சகிக்க முடியவில்லை. அது அவர்களுக்கு ஒரு ஆக்கிரமிப்பு. 88-89 காலகட்டத்தில் தமது பிள்ளைகளைக் கடத்திய, அவர்களை டயர் சிதையில் எரித்த அரச ஆயுதப்படையை தெற்கு மக்கள் எப்படி பார்த்தார்களோ அப்படித்தான் இன்று வடக்கு மக்களும் பார்க்கின்றார்கள். அனைத்திற்கும் மத்தியில் பல்கலைக்கழகங்களுக்குப் பக்கத்தில் கட்டப்படும் புத்தர் சிலைகளைப் போன்று, விசாக் நோன்மதித் தினத்தில் ஒருங்கிணைக்கப்படும் பாரிய கலாச்சார நிகழ்ச்சிகள் அவர்களுக்கு அந்நியம், துன்புறுத்தல். பொங்கி வந்த இந்த அழுத்தம்தான் யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்தது. நாகரிக சமூகத்தில் எவராலும் அந்த சம்பவத்தை அனுமதிக்க முடியாது. எந்தவொரு இனவாதப் போக்கும் அழிவையே கொண்டு வரும். ஆகவே, அந்த சம்பவம் நம் அனைவரினாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

அதே போன்று, இந்த சம்பவத்தை பயன்படுத்தி அநேகமான இனவாதிகள் தெற்கு பல்கலைக் கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு எதிராக இனவாதத் தாக்குதல்களுக்கு தூபமிட்டுக் கொண்டுள்ளார்கள். அவ்வாறான அழிவுகளுக்கு மீண்டும் இடமளிக்க முடியாது. எமது சமூகம் இதற்காக ஏற்கனவே அளவிற்கதிகமாகவே நட்டஈடு வழங்கிவிட்டது. இனவாத அரசியல்வாதிகள் கூறுவதைப் போன்று யாழ். பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஆயுதப்படையின் தலையீட்டைக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. காரணம் ஒருபுறமிருக்க, மேலோட்டமான தண்டனைகளினாலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சந்தேகமும், அவநம்பிக்கையும் நிறைந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை உண்டாக்குவதற்கான வேலைத் திட்டம் ஆட்சியாளர்களிடம் கிடையாது. தமது அதிகாரத்திற்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் பயன்படுத்துவதுதான் அவர்களது ஒரே வேலைத்திட்டம்.

வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாயின் ஒவ்வொருவரினதும் பிரச்சினைக்காக ஒன்றிணைந்த போராட்டமொன்று தேவை. முதலாவதாக, இராணுவ அத்துமீறல்களுக்கு ஆளாகிய வடபுல மக்களிடமிருந்து பறித்த காணிகள், சிறைக்காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தேவைகளுக்காக அந்தப் போராட்டத்தை தொடங்க வேண்டும். இந்நாட்டின் நசுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய, மீனவர், மாணவர் ஆகிய சக்திகளால் மாத்திரமே அவ்வாறான போராட்டத்திற்கு தலைமை வழங்க முடியும். வடக்கிலும் தெற்கிலும் இனவாத முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் தோல்வியடைந்தமை தேவைக்கும் அதிகமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எமது சமூகத்தை இவ்வாறான அழிவுகளுக்குள் தள்ளிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தடிகளை கையிலெடுக்க வேண்டும். நாங்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் கற்களும் தடிகளும் ஆட்சியாளர்கள் பக்கம் திரும்ப வேண்டும்.

சம உரிமை இயக்கம்


2016-07-22

குறிப்பு: இத் துண்டுப்பிரசுரம் கடந்த இருநாட்களாக தென்பகுதி பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.