Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!

எமது நாடு இனவாத, மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜுலை மாதம் -இற்றைக்கு 31 வருடங்களுக்கு முன்னர், அன்றைய ஆட்சியாளர்களாலேயே நடத்தப்பட்ட கறுப்பு ஜுலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். அனாதைகளாகினர். எல்லாவற்றையும் விட எமது சமூக மனச்சாட்சி, பகுத்தறிவு, மனிதநேயம் அனைத்தும் இழக்கப்பட்டது. அந்த பாரிய அழிவின் பின்னர், யுத்தம் முடிந்து விட்டது என ஆறதலடையும் சமயத்தில் மீண்டும் இனவாத- மதவாத பொறியில் சிக்கவைக்க அழுத்கம, பேருவள பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் நாம் கண்டோம். இந்த பொறியை நிர்மாணித்தவர்கள் ஆட்சியாளர்களே மீண்டும் யுத்தத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையில் செல்வது எந்தளவு அழிவைத்தரும் என்பதை அனுபவ வாயிலாக கண்டோம். நாங்கள் அந்த வழியில் மீண்டும் சென்று பொறியில் சிக்க வேண்டுமா?

உண்மையான பிரச்சினைகளை மறைத்து பொய்யான பிரச்சினைகளை கொண்டுவருவது எப்படி என்பது நாட்டை ஆள்பவர்களுக்கு தெரியும். அதனால்தான் இப்படியான பொறிகளில் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள். உண்மையான எதிரியை மறப்பதற்கு போலி எதிரியை காட்டுவது எப்படி என்பதும் அவர்களுக்குத் தெரியும். முழு சமூகமும் இந்தப் பொறியில் சிக்குவது பொறி வைப்பவரின் திறைமையால் மட்டுமல்ல, அதற்கு எம்மிடமுள்ள பிற்போக்குத்தனமும், முட்டாள்தனமும் கூட காரணம்தான். பன்முக கலாச்சாரத்தை கொண்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டில் ஒன்றாக வாழ்வதாயிருந்தால் இந்த பன்முகத் தன்மையை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். எங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வும், மதிப்பு மரியாதையும் இல்லையென்றால் மனிதர்களாக எங்களால் வாழ முடியாது.

இந்த நவ தாராளமய சமூகத்தில் எவ்விதத்திலும் சகிக்க முடியாவற்றை பார்த்தும்கூட சகித்துக் கொள்கிறோம். பொலிஸின்- ராணுவத்தின் பலாத்காரங்களை, அரசியல்வாதிகளின் அவதூறுகளை, பெரிய கம்பனிகளின் வர்த்தக விளம்பரங்கள் ஊடாக செய்யப்படும் மோசடிகளையும், ஊடகங்களின் வாயிலாக திணிக்கப்படும் பொய்கள், கையிலிருக்கும் ரெண்டு துட்டையும் பறிக்கக் கூடிய வார்த்தை ஜாலங்கள், இவை அனைத்தையும் சகித்துக் கொள்கிறோம். ஆனால் எமக்கு பக்கத்தில் இருக்கும் மற்றவரின் கலாச்சார வித்தியாசத்தை சகிக்க முடியாது என்கிறோம். ஒருபோதுமே சகிக்க முடியாதவற்றை சகிப்பதையும், சகிக்க வேண்டியவற்றின் மீதுள்ள ஆதிக்க மனோபாவத்தையும தூக்கி எறிவோம். மற்றவரின் தனித்துவத்தை, கலாச்சார வித்தியாசத்தை சகிக்க முடியாவிட்டால், அவற்றை மதிக்க முடியாவிட்டால் ஒருவரையொருவர் சாகடித்துக் கொள்ளும் நிலை உருவாகும். இந்த மண்ணை இரத்தத்தால் நனைக்க நேரிடும். அதற்கு இடமளிக்க வேண்டுமா?

நாம் உரத்த குரலில் இனவாதம், மவாதம் இல்லை-என்போம்

எம்மை அழிக்க வைக்கும் பொறியில் சிக்காதிருப்போம்

ஒரே நரகப்படுகுழியில் துன்பப்படும் சிங்கள-தமிழ்- முஸ்லிம்

நாங்கள் எல்லோரும் சேர்ந்து உண்மையான எதிரியை கண்டுபிடிப்போம்

சம உரிமை இயக்கம்

தொலைபேசி - 0112837422