Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சமவுரிமை இயக்கத்தின் லண்டன் போராட்ட படங்கள்

இலங்கையில், முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இனரீதியிலான வன்முறையினை கண்டித்து லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை நேற்றைய தினம் (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர்.

கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். மக்களின் உண்மையான பிரச்சனைகளிற்கு வெளியால் திசை திருப்பி, திட்டமிட்டு இன-மதக் கலவரங்களை உருவாக்கி மக்களை மோதவிட்டுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத செயலே இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த யுஎனபி (UNP), சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் (SLFP)  தொடர்ச்சியான வரலாறாக இருக்கின்றது. தமிழ், முஸ்லீம் மக்களை பிரதிகிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் இந்த இன-மத வாதங்களை அடிப்படையாக கொண்டு மக்களை பிரித்து வைக்கும் அரசியலை தான் முன்னெடுக்கின்றன.

இதற்கு முன்னர் கலவரங்கள் நிகழ்ந்த போது பெரும்பான்மையான பொதுமக்களுக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அரச குண்டர்களிற்கு பயந்தோ அல்லது இதில் தலையிடுவது, எதிர்ப்பது தேவையில்லாத சிக்கல்களை தமக்கு கொண்டு வரும் என ஒதுங்கி ஒதுங்கி இருந்தனர். ஆனால் இந்த தடவை அந்த நிலை தகர்க்கப்பட்டு விட்டது. இலங்கையிலும், லண்டனிலும், உலகெங்கிலும் உள்ள இலங்கை மூவின மக்களும் ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கி இனவாதம், மதவாதத்திற்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளனர். இலங்கையின் வரலாற்றிலேயே இது ஒரு புதிய திருப்பம், தொடக்கம் ஆகும். இந்த ஒற்றுமை, ஜக்கியம் மேலும் பல பரிமாணங்களில் வளர்க்கப்பட்டு தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும். அது இலங்கையில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை தொடக்கி வைக்க வேண்டும். மேலும் இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தன.

{jcomments on}