Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

முஸ்லீம் சகோதரர்களுக்கு நீதிகோரி சமவுரிமை இயக்கம் நடாத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

இலங்கை அரச அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத - இனவாத சக்திகள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக நட்த்தும் பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்தும், நீதிகோரியும் இன்று 18.08.2014 கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சமவுரிமை இயக்கம் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது .

அனைத்துச் சமூகத்தினரும், கட்சிகளும், மதத்தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிக அளவில் சிங்கள மொழி பேசும் மக்களுடன் பிக்குகள் பலரும் கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் வடக்கின் பிரபல அரசியல்வாதியும் வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம், முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், நவசமாசக் கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம உரிமை ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே  உரையாற்றுகையில்,

தற்போது நாட்டில் உருவாகியுள்ள இன மற்றும் மதவாத வன்முறைப்போக்கிற்கு பிரதான காரணம் எமது நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் பிழையான அரசியல் முறைமையே என்று குற்றஞ்சாட்டியதுடன் இந் நிலைமையை மாற்றி அமைக்க நடை முறைச்சாத்தியமான அரசியல் மாற்றம் ஒன்றின் அவசியத்தை வலியுறித்தினார்.

இதே கருத்தையே அங்கு தமிழில் உரையாற்றிய முஹமட் பாரூக் அவர்களும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோசங்கள் சில :

- மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்!

- சிங்கள, தமிழ், முஸ்லிம்: நாம் எல்லோரும் மனிதர்கள்

-இனவாத மதவாத பொறியில் மீண்டும் சிக்க வேண்டாம்

-இனவாதத்தையும் மதவாதத்தையும் ஊக்குவிக்கும் ஆட்சியாளரின் தேவையை தோற்கடிப்போம்!

- இனவாத தாக்குதலை உடனே நிறுத்து!

- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய் !

இதேவேளை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முஸ்லீம் சகோதரர்கள் மீதனான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.

நாட்டில் நடக்கும் சகல அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் வழிநடத்தி வரும் அமைப்புகள் நாட்டில் அவ்வப்போது மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன.

ஆட்சியாளர்களின் மூழ்கி வரும் அரசியல் அதிகாரத்தை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தும் போது அதற்கு எதிராக நீதிமன்ற தடை யுத்தரவுகளை பெறும் ஆட்சியாளர்கள், மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அறிந்தும் அடிப்படைவாத கருத்துக்களை தெரிவிக்கும் கூட்டங்களை நடத்த இடமளிப்பதாகவும் நஜீத் இந்திக குறிப்பிட்டுள்ளார்.