Wed12112019

Last updateTue, 10 Dec 2019 10am

"அனைத்து வகைப் பேதங்களையும் எதிர்த்து, ஒன்றிணைந்து போராடுவோம்" டென்மார்க் கூட்டத்தில் தோழர் லோகன் செல்லம் சிறப்புரை

டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் டென்மார்க் சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான தோழர் லோகன் செல்லம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றியிருந்தார். அவரது உரையினை இங்கு வாசகர்களுடன் பகிர்கின்றோம்.

இலங்கையின் பாசிச அரச கட்டுமானத்தாலும், வர்க்கச் சமூகப் போக்கினாலும், ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து மக்களும் இணைந்த விடுதலையில் நின்று.., குறிப்பாக கடந்த ஐந்து தசாப்தங்களாகப் போராடி, தொலைந்துபோன - உயிர்நீர்த்த அனைத்துப் போராளிகளையும், மக்களையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சம உரிமை போராட்ட இயக்கத்தினால், இலங்கையில் மனித உரிமைகளைக் கோரி (14.12.2013) டென்மார்க், கொல்ஸ்ரபுறோ நகரில் இன்று இடம்பெறுகின்ற பொதுக் கூட்டத்தில் சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கை மூலம், இலங்கையின் அரச பாசிசத்தால் அல்லற்படும் அனைத்து மக்களையும், அப்பாசிச வடிவங்களை எதிர்க்கின்ற ஜனநாயகப் போராட்டத்திற்கு உங்களை அழைப்பிடுகின்றது.

மக்கள் தமது பண்பாட்டின் அடிப்படையில் கூட்டமாக நினைவஞ்சலிக்க முடியாது தடுக்கின்ற, இலங்கைப் பாசிச அரசையும் அதன் இராணுவ அடக்குமுறை ஆட்சியையும் அனைத்து மக்களும் முழுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். போராடுவோம். இப்போராட்டம் என்பது இன முரண்பாடுகளைத் தீர்க்கக் கூடிய, சுய நிர்ணயத்தை வழங்குகின்ற தீர்வுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதில் அரசியற் சந்தேகம் தேவையில்லை.

கடந்தகால ஈழ விடுதலைப் போராட்டத்தில், உயிர் நீர்த்த போராளிகளையும் அவர்களின் உறவுகள் நண்பர்கள் அயலவரை நினைவுகூரும் நவம்பர் 27ம் நாள் என்பது, அவ் விடயம் சார்ந்த தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையாகும்.

சம உரிமை இயக்கம் இந்த உரிமையினை உறுதி செய்யும் போராட்டத்திலும் ஒடுக்கப்பட்ட சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றது. இதனை நிறுத்துவதோ குழப்புவதோ தடுப்பதோ, அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

அனைத்து வகைப் பேதங்களையும் எதிர்த்து..!

அனைத்து வகைப் பாசிச வன்முறைகளையும் எதிர்த்து..!!

ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிமைகோரி..!!!

நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அப்படிப் போராடுவதே பாசிசக் கட்டுமானங்களை தகர்க்கின்ற வீரிய போராட்ட வடிவமாகும்.

எந்தவித பாசிசத்துக்கும் குடை பிடித்தோ, அல்லது அதனுடன் அண்டிப் பிளைத்தோ நாம் மக்களுக்கான விடுதலையைக் காண முடியாது. இதனை கடந்த காலம், அனைத்து மக்களுக்கும் கற்றுத் தந்திருக்கின்றது.

இன்றைய காலத்தில் பாசிச அரசுக்கு எதிரானஇ இன - மத - பிரதேச - சாதி - பால் பேதமற்ற, அதிகமான அமைப்புகள், சிறிலங்காப் பாசிசத்தின் மத்திய கேந்திரமான தெற்கில் ஒன்று திரண்டு, அந்தப் பாசிச முகத்துக்கு முன்னால் நின்று, ஜனநாயகப் போராட்டம் நடாத்துகின்றார்கள். அவர்கள் அனைவரும் எமது அரசியற் தோழர்கள் ஆகும். இந்தப் போராட்டங்கள் ஆரம்பம் மட்டுமாகும். இவை இன்னும் பல வீரிய போராட்டங்களை நோக்கிச் செல்லும். அனைத்து மக்களுக்கும் சம உரிமைப் போராட்டக் கருத்துகளும், வழிமுறைகளும் சென்று சேரும். அனைவரும் அனைத்துப் பாசிச வடிவங்களையும், அதன் நிகழ்வுகளையும் முழுமையாக எதிர்த்து, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடுவோம்.

தனித் தடி பலமாகாது என்பதும், சிறிய பாம்பானாலும் பெரிய தடிகொண்டு அதனை அடி என்பதும், எமது முன்னோர் சொன்ன வாக்கு என்பது மட்டுமல்ல, இவை எமது கடந்தகால அனுபவமுமாகும். பாம்பை பெரிதாக வளரவிட்டுத் சிறு தடியால் அடித்து, நாம் ஆண்டாண்டாய் அழிபடுவதை விட, அப் பாம்புகளின் கரு முட்டைக்குள்ளேயே, பாசிச விசத்தை இல்லாதொழிக்கும் நுட்பத்தைக் கையாழ்வதே சிறந்தது என்கிறோம்.

அனைத்து வகையாலும் ஒடுக்கப்பட்ட, அனைத்து மக்களுக்கும் தீர்வொன்று தேவை. அது தெற்கிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், அனைத்து மக்களுக்கும் பரப்புரைகள் முன் வைக்கப்படுகின்றன. பாசிசத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்கள் நடக்கின்றன. இப்போராட்டம் இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும். அதாவது பிணக்குகள் இன்றி அனைத்து இனங்களும் இணைந்து வாழ்வோம்.

பாசிசங்களின் பயங்களின்றி, அன்னிய நாடுகள் எம்மை வந்து சுரண்டாத, எம்மீது தலையிட்டுக் குழப்பாத, எமது எல்லை தாண்டி தமது திமிர் காட்டாத, இனங்களுக்கான சுய மரியாதையுடன், எமது பாரம்பரிய மண்ணில் நாம் வாழ்வோம். இனச் சுயத்துடன் வாழ்வோம். இது அனைத்து இனங்களின் புரிந்துணர்விலேயே தங்கியுள்ளது.

அதாவது அரசாங்கம் இரண்டு பூச்சாண்டிகளைக் காட்டியே செயற்படுகின்றது. ஒன்று பிரிவினைவாதம். மற்றது ஏகாதிபத்தியவாதம். ஹிட்லரின் காலத்திலும் இப்படியான மகிழ்விப்புகள் இருந்தன. மக்களால் பேரணிகளும் நடந்தன. அந்த மக்களுக்குள் மறைந்து கொண்டு கொலைக் குழுக்களும் செயற்பட்டன. இன்றும் அதே நிலைதான்.

அரச பங்கரவாதத்தால் கடத்தப்பட்ட லலித் - குகன் இனவாத அரசியலைச் செய்யவில்லை. வடக்கின் சமூகத்திற்கும், தெற்கின் சமூகத்திற்கும் மத்தியில் நல்லிணக்கத்தை கொண்டு வரும் சம உரிமை அரசியலையே செய்தார்கள். வடக்கு மற்றும் தெற்கின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்வதற்குப் பயந்த அரசு, லலித் - குகனை கடத்தியது.

2010இற்குப் பின்னர் அரசாங்கம் நினைத்தது தெற்கின் பௌத்த வாக்குகளால் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியுமென்று. ஆகவேதான் பலவீனமான எதிர்க் கட்சியொன்றும் இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் இந்த ஆட்சியை காலனித்துவ ஆட்சியாகவே நான் கருதுகிறேன். அரசாங்கம் வடக்கை காலனித்துவப் பாணியிலேயே ஆட்சி செய்கிறது.

யுத்தத்தின் பின்னரும் மக்கள் காணாமல் போவதாயிருந்தால் அது பாரதூரமான பிரச்சினை. இன்று ஒட்டு மொத்த சமூகமும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக அரசாங்கம் 306 பில்லியன் ஒதுக்கியிருக்கிறது. அது கடந்த வருடத்தைவிட 16.7 பில்லியன் அதிகம். மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்த நிலைமையை தொடர்வதற்காகவே இவ்வாறு நிதி ஒதுக்கப்படுகிறது.

வடக்கில் பாடசாலைகள் உடைக்கப்படுகின்றன. கோவில்கள் உடைக்கப்படுகின்றன. தொடற்சியாக பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்படுகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டுப் போராடிய பெண்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சுடப்பட்டுள்ளார்கள். குடிநீர் கேட்டுப் போராடியோர் கம்பகாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புத்தளத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகப் போராடியோர் சுடப்பட்டனர். இப்படிப் பலவுள்ளன.

தமிழரின் பாரம்பரிய இடங்களும் - உயிர்களும் பாரிய யுத்த அழிவின் பின்பும், மக்களின் அரசியல் ரீதியான சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கருவோடு அழிக்கும் திட்டத்தில், மனித வாழ்விற்கான தீர்வை மறுத்து, அரச பாசிசம் தொடர்கின்றது. இதற்கு அனைத்து உலக பாசிச அரசுகள் ஒத்தாசை புரிகின்றன.

ஆக.., உண்மையான நல்ல அராசாங்கம் என்றால், அது மக்களுக்கு சிறந்த சேம வாழ்வை வழங்க வேண்டும். இன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு, இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையை ஏற்க வேண்டும். ஆனால், அரச பாசிசக் கட்டுமானம், இனங்களுக்கான உரிமைகளை ஒருபோதும் வழங்காது. அதன் நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கையில் எந்தத் தீர்வும் கிடையாது என்பதே நிலமை. இந்த நிலைமைகள் மாற வேண்டும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.

அடங்கு, இல்லையேல் அடக்கப்படுவாய் என்கிறது பாசிச வர்க்கம். நாம் அனைவரும் இணையும்போத, இந்தப் பாசிசவர்க்கம் ஒடுங்கி அடங்கி அழிந்துபோகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அப்படிப் போராடுவதே பாசிசக் கட்டுமானங்களை தகர்க்கின்ற வீரிய போராட்டம்.

அனைத்து வகைப் பேதங்களையும் எதிர்த்து..!

அனைத்து வகைப் பாசிச வன்முறைகளையும் எதிர்த்து..!!

ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிமைகோரி..!!! அனைவரும் போராடுவோம் என்பது, மனித உரிமை நினைவு தினத்தில், சம உரிமை இயக்கத்தின் அனைவருக்குமான அழைப்பாகும்.