Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழக பிழைப்புவாதிகளும் ஈழப்போராட்டமும்

ஈழப்போராட்டத்தின் ஆதரவுச் சக்திகளாக எமது இயக்கங்கள் இனங்கண்டு அவர்களின் ஒத்துழைப்பை பெற்றிருக்கின்றன. தமிழக ஆதரவுச் சக்திகள் தமிழீழத்தை ஆதரிக்கின்ற ஒரே காரணத்தினால் ஈழத்தின் நட்பு சக்திகளாக அடையாளம் காணப்பட்டனர். ஆனால் அந்த ஆதரவுச் சக்திகள் தமிழகத்தில் பின்பற்றும் அரசியல் என்ன என்பது பற்றிய அக்கறை அறவே அற்ற நிலைதான் ஈழவிடுதலை இயக்கத்தவர்களிடம் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு அரசியலைக் கொண்ட பிழைப்புவாதிகளாக இருந்துள்ளார்கள்.

1. வகுப்புவாத – சாதியக் கட்சிகள்

2. முதலாளித்துவ கட்சிகள் (திமுக, அதிமுக)

3. மார்க்சீய லெனினியக் கட்சிகள்

ஈழத்தைப் பொறுத்தவரை வெவ்வேறு காலங்களில் முதலாளித்துவ கட்சிகள் மாறிய கொள்கைகளைக் கொண்டதாக இருந்திருக்கின்றது. தமிழகக் கட்சிகள் தேர்தலில் வாங்குக்களை பெறுவதையும், அரசியல் அரங்கில் தாம் ஒரு சக்தி என்று நிலைநிறுத்திக் கொள்கின்ற கவர்ச்சி அரசியல் போக்கையும் பின்பற்றி வந்திருக்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்ற போது ஒரு பேச்சும், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சும் என்ற நிலைப்பாட்டில் தான் கவனம் செலுத்தினர். இவர்ககளின் அரசியல் என்பது ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை கொண்டதாக இருந்ததில்லை.

இந்த கட்சிகள் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சி மாநாடு, தமிழ் நாட்டிலுள்ள தமிழீழ அகதிகள் அகதி அந்தஸ்து கூட இல்லாமல் இருப்பது பற்றியும், அகதிகளின் குறைந்த பட்ச வாழ்நிலைப் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை தீர்க்க, இந்திய மத்திய-மாநில அரசுகளை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும் என்பது பற்றியோ, அல்லது தமிழீழப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும், புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என இந்திய அரசை நிர்ப்பந்திக்கும்படியான போராட்டங்களை ஆட்சியில் இருந்த போது எடுத்ததில்லை.

ஈழப் போராட்டத்தையும், புலிகள் இயக்கத்தையும் நசுக்கி அழிக்க முற்படும் உலகப் பொது எதிரிகளை இணைந்து செயற்பட்டனர், செயற்படுகின்றனர்.

ஈழவிடுதலைப் புலிகள் அரசியல் ஆதரவு தேவை என்பதற்காக பாஜக போன்ற மதவாதச்சக்திகள், சாதியக் கட்சிகளான பாமாக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற வகுப்புவாதிகளுடன் ஒத்துழைத்தனர். இந்த சாதியமான்களின் தமிழ் தேசிய நாடகத்தினை எதிர்க்காது அவர்களுடன் ஒத்து ஊதினார்கள்.

இன்று சாதியக் கட்சிகளின் அடவடித்தனமான செயற்பாடுகள் தமிழக உழைக்கும் மக்களை பிரித்து பந்தாடுகின்றது. சொத்துக்களை, உயிரைப் பறித்து மக்களை தொடர்ச்சியான பிளவிற்கு உட்படுத்துகின்றது. இவ்வாறான சிதைவு அரசியலே தருமபுரிப் சாதியக் கலவரமாகும். சாதியக் கட்சிகள் அடையாள அரசியல் ஊடாக இழந்த உரிமையைப் பெறப்போராடுவதாக கூறிக் கொள்வது என்பது வெறும் பாசாங்கு அரசியலே. இந்த சாதியக் கட்சிகள் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தினை சிதைக்கின்றது. வர்க்க அரசியலை முன்னேறிச் செல்லாது தடுக்கின்றது.

உயரிய கலாச்சாரத்திற்கு அப்பால் உழுத்துப் போன நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தினை பாதுகாத்து நிற்கின்றது. அரசியல் மேடைகளில் போலித் தேசியத்தின் பாதுகாலர்கள் மக்களை அழிப்பதை ஈழ விடுதலை அமைப்பு கண்டும் காணாது இருந்துள்ளது. இந்த சாதியக் கட்சிகளுக்கு களத்தினைக் கூட ஈழ விடுதலைப் போராட்டம் அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறான நிலைப்பாடு சமூக விடுதலை நோக்கிப் பயணிக்கும் சக்திகளுக்கும் பின்னடைவை கொடுத்துள்ளது.

நாம் அனைத்து சாதிய, முதலாளித்துவ கட்சிகளின் தயவில் ஈழ மக்களின் ஆதரவுத் தளத்தினை கட்டியெழுப்ப முடியாது. புதிய தலைமுறை புதிய சிந்தனையில் இருந்து சாதிய, முதலாளித்துவ கட்சிகளின் நிலைப்பாட்டை மக்களுக்கு அம்பலப்படுத்தியாக வேண்டும். சாதியக் கட்சிகளின் அடையாள அரசியல் என்பது பிற்போக்கு அரசியலே என்பதை உறுதியாக மக்கள் முன் கொண்டு செல்வோம்.

தலித்தியவாதிகள் சாதியம் என்ற அழுக்கடைந்த சாக்கடையில் இருந்து பூக்களை வளர்த்து பறிக்கும்படி ஆலோசனை கூறுகின்றார்கள். சாக்கடையில் இருந்து பூவினைப் பறிக்க முயற்சிக்கும் முயற்சியானது அழுகிய சமூக அமைப்பினை பாதுகாப்பது மாத்திரம் அல்ல. அந்த சமூக அமைப்பை தத்தம் இருப்பை பாதுகாக்கும் கயமைத்தனம் கொண்ட சிந்தனையாகும்.

மனிதர்கள் காதலிப்பது தனிமனித சுதந்திரம் ஆகும். தனிமனிதர்கள் சமயத்தினை, காதலை, வாழ்க்கை முறையை தெரிவு செய்யும் உரிமையை இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு உறுதிக செய்கின்றது. ஆனால் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய ஜனநாயக உரிமையைக் கூட மறுதலிக்கும் சமூக அமைப்பு என்பது சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து சமூகத்தினை ஆள்பவர்கள் வரை இருக்கின்றது.

மனிதர்களை கால்களில் விழ வைப்பது கூட ஜனநாயக விரோதமாகும். காதலிக்கும் மனிதர்கள், சரிசமானமான மனிதர்களாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும். நாம் மனிதர்களை சரிசமானமாக வாழ முடியும் என்ற நிலையை சமூகத்தின் அனைத்து தளத்தில் உள்ள மக்களுக்கு கற்பிக்க வேண்டும். நாமும் அந்த மக்களிடம் இருந்து புதிய சமூகத்திற்குகான மாற்றத்தினை நோக்கிய கல்வியை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது.