Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாதர்கள் நாம், யார்க்கும் அடிமையல்லோம்!

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் பரவலாக காணப்படுகிறது. வன்முறைக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இது காலங்காலமாக தொடரும் தொடர்கதையாகும். இது இன்றோ, நேற்றோ தோன்றிய சூழல் அல்ல. சரித்திர காலம் முதற் கொண்டு பெண்களின் நிலை பாதுகாப்பற்றதாகவே பேணப்பட்டு-கடைப்பிடிக்கப்பட்டு-உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே இன்று காணப்படும் பாதுகாப்பற்ற சூழல் முன்னைய காலங்களை விட விகிதாசாரத்தில் சற்று அதிகமாக காணப்படுகிறதே அன்றி புதிய-வித்தியாசமான ஒரு விடயமல்ல.  

ஆனால் “நடுநிசிலும் அச்சமின்றித் தனியாக பெண்கள் நடமாடிய காலம்” ஒன்று நாட்டில் இருந்ததாக ஒரு ‘கதையாடல்’ எம்மிடையே உலாவ விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக எமது பெண் சமூகத்தினராலேயே அது பரவ விடப்பட்டுள்ளது. அதுவும் கல்வியறிவு கொண்ட பெண்களாலேயே அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக் ‘கதையாடல்’ உண்மையையோ அல்லது பெண்களின் வருங்கால நல் வாழ்வையோ கருத்தில் கொண்டு வலம் வரவில்லை. மாறாக ஒரு அரசியல் பின்னணியுடனேயே பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இந்தக் கதையாடலின் வெற்றுத் தன்மையை அதே காலகட்டத்தில் வாழ்ந்து பாதிக்கப்பட்ட பெண்களையும் அக்காலப் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் வைத்தே புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் எந்த ஒரு அரசாங்கத்தாலோ,  ஆட்சி முறையாலோ,  அரச நிர்வாகத்தாலோ அல்லது சட்டங்களாலோ மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கி விட முடியாது. பெண்ணை ஒரு பண்ட மாற்றுப் பொருளாக - ஆணுக்கு சேவகம் செய்வதற்காக படைக்கப்பட்ட ஒரு மனிதப் பிராணியாக மதிப்பிடும் ஒரு சமூகம் உள்ள வரை பெண்கள் வன்முறைக்கும் - அடக்குமுறைக்கும் - அடிமைத்தனத்திற்கும் ஆளாவது நிகழ்ந்தபடியேதான் இருக்கும். ‘பெண்ணும் ஒரு மனிதன் என்ற மதிப்பீடு கொண்ட சமூகம் ஏற்படாத வரை,   சுதந்திரம் என்பது பெண்ணுக்கும் உரிமையானது என்பதனை அவளைச் சார்ந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும் வரை அவள் பாதுகாப்புடன் - சம உரிமைகளுடன் வாழ்வது சாத்தியப்படாத ஒன்றாகும். இந்த நிதர்சனத்தை - உண்மையை - யதார்த்தத்தைப் பெண்களாகிய நாம் புரிந்துணர்ந்து கொண்டு அதன் அடிப்படையில் சிந்தித்து செயற்படாத வரை எமக்கு வாழ்க்கை என்பது சித்திரவதைதான். 

பிறந்தது பெண் என்றதுமே எமது பெற்றோர் குடும்பத்தினர் சுற்றத்தார் அதாவது அவளைச் சுற்றி வாழும் சமூகம் தனது சிந்தனையில் சில கணிப்பீடுகளை கட்டமைத்துக் கொண்டு விடுகிறது. அவளை ஒரு மனிதனாக மதிக்காமல் மற்றவர்களின் கருணையில் வாழவேண்டிய ஒரு பிராணியாக பழக்கப்படுத்தத் தொடங்கி விடுகிறது. ஆந்தப் பழக்கியெடுத்தல் என்பது பண்பாடு – பழக்க வழக்கம் - கலாச்சாரம் - சமய ஆசாரம் - குலப் பெருமை - இனப் பெருமை இன்னோரன்ன கதையாடல்களால் நம்ப வைக்கப்பட்டு, நடைமுறைப்பட்டு வருகிறது. 

எனவே நாம் நாமாகவே நம்மை பலவீனமான ஒரு பிராணியாக – இன்னொருவரை (ஆண்கள்) நம்பி வாழப் பிறந்த ஒரு பிறவியாக சிந்தித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இந்த சிந்தனையில் இருந்து நாம் விடுபட்டு “நாங்களும் வாழப் பிறந்தவர்கள்,  எங்களுக்கும் சுயாதீனமான – சுதந்திரமான வாழ்வுக்கான உரிமை உண்டு. நாங்களும் மனிதர்களே” என்று சிந்தித்துச் செயற்படாத வரைக்கும் ‘அச்சத்துடனும் - கூச்சத்துடனும் - குனிந்த தலையுடனும் அடிமையாக – ஆத்மா அற்ற மனிதர்களாக வாழ்ந்து மடியவேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

சமூகத்தில் எமது (பெண்களின்) வளர்ப்பு முறைமையும் - வார்த்தெடுப்பும் தான் எம்மை நாமே தற்பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாக்கி வருகிறது. எமது பாதுகாப்பை நாமே நமக்காக உருவாக்க வேண்டும். இன்னொருவரை நம்பி வாழவேண்டிய சூழலை அகற்ற வேண்டும். அதனையொட்டி நாம் நமக்குள் ஒரு உரையாடலை நடாத்த வேண்டும். அப்போதுதான் எம்மீதான அச்சுறுத்தலும் - அடக்குமுறையும் - ஆபத்துக்களும் நீங்குவதற்கான வழிவகைகளை கண்டடைய முடியும். 

பெண்கள் மீதான வன்முறை வீட்டுக்குள் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதன் நீட்சிதான் நடுத்தெருவில்-ஊருக்குள்-ஊர் எல்லையில்-காட்டில்-நாட்டில் வந்து நிற்கிறது. வீட்டுக்குள்-உறவுக்குள்-ஊருக்குள் இடம் பெறும் வன்முறைகள் பெரும்பாலும் அவற்றை ‘மூடிமறைக்கிற  நீதி – நியாயம் கொண்ட சமூகத்திலேயே’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ‘நீதி நியாயத்தை’ அடியொற்றிய சமூகத்தின்ம த்தியில் உருவாகும் அரசியலையே நாம் எமது வாக்குகளை வாரி வாரி வழங்கி ஆதரித்துக் கொண்டிருக்கிறோம். எமது வாக்குகள்தான் எமது அரசியலை (தலையெழுத்தை) தீர்மானிக்கும் சக்தியாக என்றென்றும் விளங்குகிறது. 1931ல் ஆங்கிலேயர்கள் ‘சர்வசன வாக்குரிமை’யை அமுலுக்குக் கொண்டு வந்தபோது பெண்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என எதிர்த்தவர்கள்தான் இந்த ஆண்கள். அதே ஆண் அரசியல் வாரிசுகளுக்குத்தான் நாம் இன்றும் ‘வோட்டு’ப் போட்டு எமது பிரதிநிதிகளாக சகல சபைகளுக்கும் தெரிவு செய்தபடி இருக்கிறோம். இந்தப் பிரதிநிதிகளால் எமக்கு பாதுகாப்பு உண்டா? அல்லது இவர்கள் எமது பாதுகாப்புக் கருதி ஏதாவது நடவடிக்கைகள் மேற் கொள்கிறார்களா? இந்தப் பிரதிகிருதிகள் சேர்ந்துதான் அண்மையில் நாடாளுமன்றத்திற்கு வரும் பெண் பார்வையாளர்களுக்கு உடையணிவதில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளனர். இன்னமும் நாம் விரும்பியவாறு உடையணியும் உரிமை வீட்டிலும் இல்லை. நாட்டிலும் இல்லை. 

பெண்களின் மீதான வன்முறைகள் இடம் பெறும் ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளும், பிழைப்புக்காக நடாத்தப்படுகின்ற ஊடகங்களும் ஏதாவதொரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். அப்போதெல்லாம் நமது சமூகம் நூற்றுக்கு நூறு சத வீதம் சுத்தமான தென்றும் வன்முறைக்கு காரணம் அரசாங்கம் அல்லது அரசபடை அல்லது அரசியல் கட்சி அல்லது சாதி அல்லது இனம் என ஏதாவதொன்றை முன்னிறுத்தி கூச்சல் போடுவதுடன் நிறுத்திவிடுவார்கள். பின்னர் அதை மறந்து விடுவார்கள். மறுபடி ஒரு சம்பவம் இடம் பெறும் போது மீண்டும் அதே கோஷம் போடத் தொடங்குவார்கள். ஆனால் அப்படியான சம்பவங்கள் மீண்டும் இடம் பெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் பற்றி சிந்திப்பதுமில்லை. நடவடிக்கைகள் மேற்கொள்வதுமில்லை. அதேவேளை பெண்களாகிய நாமும் அதுபற்றி அக்கறை கொள்வதுமில்லை. 

நாட்டில் உள்ள பிரச்சனைகளால் குடிமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது பெண்கள் இரண்டு மடங்கு பாதிப்புக்களுக்கு உட்படுகிறார்கள். இந்த உண்மையை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று அனுபவிக்கும் துன்பங்களை வைத்தே உணர்ந்து கொள்ளலாம். ஆனால் இன்று இவர்களைப் பற்றி நாம் தெரிந்தெடுத்த பிரதிநிதிகள் எவருமே கரிசனைப் படவில்லை. மாறாக அவர்களை வைத்து அரசியல் பேசி தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

எமத பாதுகாப்புக்கு உள்ள ஒரே ஒரு வழி நமது சிந்தனை மாற்றமே. நாங்களும் மனிதர்களே. நாமும் இந்த நாட்டின் குடிமக்களே. நாமும் நம்மை மாறவேண்டும். நம்மை நசுக்குகின்ற - அடக்குமுறை ஆணாதிக்க சமூக நடைமுறையை மாற்ற வேண்டும். நம்மை ஆளும் அரசியல் முறைமையை மாற்ற வேண்டும். இதன் வழியூடாகவே எமது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த முடியும். 

இன்றைய அரசு-அரசாங்கம்-அரசியல் யாவுமே எங்களை குடிமக்களாக மதித்துச் செயற்படவில்லை. மாறாக எம்மை ஆண்களுடைய ஒரு சொத்தாக – தயவில் வாழ்பவர்களாக – உல்லாசங்களுக்கு உரியவர்களாக - இச்சைகளைத் தீர்க்கும் கருவிகளாகவே கருதிச் செயற்படுகின்றன. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தான் உலகமயமாக்கலின் புதிய பொருளாதார நடைமுறையை மாறி மாறி வரும் அரசாங்கங்கள் நாட்டுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது நாட்டில் ஆளும் வர்க்கத்தினரான சிறிய கூட்டத்தினரை சுகபோகம் அனுபவிக்கும் தரகர்களாகவும் நாட்டின் குடிமக்கள் அனைவரையும் மனித இயந்திரங்களாகவும் ஆக்கியபடி முன் நகருகிறது. இது நமது நாட்டின் தனித்துவத்தை முற்றிலும் அழித்து எம்மை அடையாளம் அற்றவர்களாக – முகவரி இழந்தவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. உல்லாசத்துறை அபிவிருத்தியும் - கொழும்பு புதிய நகர் நிர்மாணமும் இலங்கைப் பெண்களை ஒரு “நுகரும் பண்டமாக” ஆக்குகின்ற முயற்சியின் ஒரு பகுதியே. 

குடிமக்கள் சுதந்திரம் - அவர்கள் வாழும் நாட்டின் சுதந்திரம் என்பது அந் நாட்டின் பெண்கள் சுதந்திரத்திலேயே தங்கியுள்ளது. இதனை வலியுறுத்தி 1930ல் “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” தனது 6வது அமர்வில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.

“நாட்டின் பொதுவாழ்க்கையில் பெண்கள் முன்னின்று பங்கு பற்றாதவரை எந்தவொரு நாடும் முழுமையான முன்னேற்றத்தை எட்டமுடியாது. எனவே நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்புக்களை ஆண்களோடு சேர்ந்து எமது நாட்டுப் பெண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்”

எனவே தோழர்களே உழைப்பதும் - சமைப்பதும் - உற்பத்தி செய்வதுமான இயந்திரங்களாக வாழ்ந்து வதங்கி மடிவதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என திடசங்கற்பம் செய்வோம். கல்வி-சுகாதாரம்-வேலைவாய்ப்பு-சமூக நீதி-நாட்டின் அபிவிருத்தி-தொழிற்துறை-போக்குவரத்து-சுற்றுப்புற சூழல்-நீர் காற்று மாசடைதல் பற்றி நாமும் சிந்திப்போம். கலந்துரையாடுவோம். குடிமக்கள் நலன் பெறும் கருத்துக்களை உருவாக்குவோம். அக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆற்றல் படைத்த மனிதர்களாக நாமே நம்மை மாற்றிடுவோம். அந்த மாற்றத்தினூடாக குடிமக்களை அணிதிரட்டுவோம். அதுவே நமது பலம். அதுவே நமது சுதந்திரம். அதுவே நமது சுயாதீன வாழ்வுக்கான ஒரேயொரு வழி.