Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அர்த்த, ஆதார, ஆழமில்லா வெற்றுக்குடுவையே விமர்சனப் புலம்பலாக……!

நாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டதுக்காக நிற்கிறோம். காரணம்அது நமது போராட்டத்திற்கு உதவியாக, கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கும் ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், ஒவ்வொரு புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தாராளவாதம் சித்தாந்தப் போராட்டத்தை நிராகரித்து கோட்பாடற்ற சமமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உளுத்துப் போன, பண்பற்ற கண்ணோட்டம் தோன்றி கட்சியிலும் புரட்சிகர அமைப்புகளிலுமுள்ள சில பிரிவுகளையும் தனிநபர்களையும் அரசியல்ரீதியாக சீர்குலைக்கின்றது.... மாவோ சேதுங்

விமர்சனக் குளறுபடிகளுக்குப் பதில் எழுதுதல் என்ற விடயம் சம்பந்தமாக கலந்துரையாடிய போது முன்நிலைத் தோழர்களிடமிருந்து ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிப்பட்டன. ஆளுக்கொரு இணையத்தளம், மற்றும் Facebook வைத்துக்கொள்வதோடு மட்டும் நின்று கொண்டு அதாவது எந்தவொரு அரசியல் இயக்கத்தையும் சாராமல் மு.சோ.க. (முன்னிலை சோசலிச கட்சி) போன்று அரசியல் செயற்பாட்டை கொண்டிருப்போர் மீது எந்த அவதூற்றையாவது வீசியெறிவதினூடாக தமது சுயநலனுக்கிசைவாக தப்பித்தலை நாடி ஓடுகிறார்கள். அதாவது இணைந்து பணியாற்றுவதிலிருந்து தப்பிக் கொள்ளும் தந்திரமாக விமர்சனம் என்பதை தூக்கிப்பிடிக்கிறார்கள். இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்போர் எவ்வாறான பொருத்தமான அரசியல் நிலைப்பாடு இன்று இலங்கை தேசிய இனப்பிரச்சனைக்கு தேவை என்பதை முதலில் முன்வைக்க வேண்டும். அதை தனித்தனி நபர்களாக இல்லாமல் (கட்சியில் உறுப்பினரான தனிநபர்கள் பற்றியதாக இதைக் கருத வேண்டாம்) அமைப்பு சார்ந்து முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அரச உளவாளிகளுக்கும், எந்த அரசியல் அமைப்பும் சாராமல் தமது சுயநலன்களுக்காக அரசியற்கட்சி ஒன்றில் இணைந்து பணியாற்றுவதில்லை என்ற முடிவோடு, ஆனால் தமது இடதுசாரி வேடத்தை தற்கவைப்பதற்காக விமர்சனங்களைச் சொல்வோர்க்கெல்லாம் பதிலளிப்பதென்பது, தேவையற்ற விடயமமாகவே பார்க்கப்பட வேண்டும். என்ற கருத்து நியாயமானதேயாகும்.

இதை ரசிய கம்யூனிஸ்கட்சி வரலாற்றில் அறியும் போது அங்கு கட்சிகளுக்கிடையிலான விமர்சனங்களும், அரசியற்குழுக்கள் பற்றியதான விமசர்சனங்களுமே இடம் பெற்றிருப்பதை பார்க்க முடியும். அதாவது போல்சிவிக்குகள், மென்சிவிக்குகள், காடேட்டுக்கள், நரோதினிக்குகள் போன்றவற்றுக்கிடையில் தான் விமர்சனங்கள் நடைபெற்று இருக்கின்றது.

முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம் மீதான விமர்சனங்களை பலரும் இன்று முன்வைக்கின்றனர். அவற்றில் காணப்படும் முன்னுக்கு பின்னான முரண்பாடுகள் குழப்பத்தின் உச்சம் போன்றவற்றை கவனத்தில் கொள்வது அவசியமானது. முதலாவதாக சமவுரிமை இயக்கமானது தமிழ், முஸ்லிம் மக்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளும், அதை மதிக்கும் நிலைமையினை ஏற்படுத்தப்போரடும் என்ற வேலைத்திட்ட பகுதியை விமர்சனம் செய்வதற்காக, அவர்கள் எடுத்துக் கொள்ளும் விடயமானது, பண்பாட்டு தேசியத்துறைகளில் சுயாட்சி என்பதாகும். ஆனால் இவ்விடயம் பற்றி புரிதல் இல்லாமல் குழப்புவதைப் பார்க்கின்றோம். அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்! (லெனின் இதை சுயிநிர்ணயத்தை நிராகரிப்பதற்கான மொழியப்படும் தந்திரம் எனக் கூறியதாக)

பண்பாட்டு தேசியத் துறைகளில் சுயாட்சி என்ற விடயம் அவர்களால் பண்பாட்டு சுயநிர்ணயம் எனப் புரட்டி எழுதப்பட்டிருப்பதை முதலில் குறிப்பிட வேண்டும். தேசியப் பிரச்சனை சம்பந்தமான ஒரு வேலைத்திட்டம் 1890- 1900 ஆண்டுகளில் ஓட்டோ பௌவர், கா.ரென்னர் இவ்விருவராலும் முன்வைக்கப்பட்டது. இவர்கள் ஒஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். அவ் வேலைத் திட்டப்படி பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரே தேசிய இனத்தைச் சேர்தவர்கள் வெவ்வேறு தேசியஇனப் பிரதேசங்களுக்குள் வெவ்வேறு காரணங்களுக்காகச் சென்று வாழும் நிலைமையில் அங்கெல்லாம் அரசானது குட்டி சுயாட்சி அமைப்புக்களை உண்டு பண்ணி அதாவது வெவ்வேறு தேசிய இனத்தினரின் குழந்தைகளுக்கு தனித்தனி பள்ளிகள் பிற பண்பாட்டுத் துறைகளையும் உருவாக்கி அந்த சுயாட்சி அமைப்பிடம் அதற்கமைய நிர்வாகங்களை ஒப்படைப்பது என்பதைத்தான் அது சொல்லுகிறது.

“சோசலிசத்தின் குறிக்கோள் மனித சமுதாயம் சின்னம் சிறு அரசுகளாக பிரிந்துள்ளதையும் தேசங்களின் எல்லாவிதமான தனிப்பட்ட நிலைமையையும் முடிவுக்குக் கொண்டு வருவது, தேசங்களை மேலும் நெருங்கி வரச்செய்தல் என்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை ஒருமைப்படுத்துவதும் அதன் நோக்கமாகும். ஆனால் பண்பாட்டு- தேசியத்துறைகளில் சுயாட்சி என்ற இவ் வேலைத்திட்டம் நடைமுறையாகும். பட்சத்தில் ஒவ்வொரு தேசியக் குழுவுக்குள்ளும் மதகுருமாரின் செல்வாக்கும் பிற்போக்கு தேசியச் சித்தாந்தத்தின் செல்வாக்கும் வலுப்பட வகை செய்திருக்கும். இவ்வாறான தனிப்பிரிவான அரசாங்க நிறுவனங்களின் வாயிலாக எல்லா தேசிய இனங்களையும் வலுவாகவும் நிலையாகவும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறாக பிரித்து விடுவதே அதன் கருத்து" என்பதைச் சுட்டிக்காட்டியே லெனின் கடுமையாக இதை விமர்சனம் செய்தார். ஆனால் இவர்களோ சுயநிர்ணயத்தை நிராகரிக்கும் தந்திரமாகவே லெனின் இதைப் பார்த்தார் என்கின்றனர். மேலும் இவ்விடயமாக லெனின் கூறியதைப்பார்போம். “அர்த்தமற்ற வாய்வீச்சுக்களில் அல்ல, சோசலிசத்தை அடைந்த பின்னர் கவனிக்க வேண்டிய பிரச்சனை என்று அதை ஒதுக்கி வைத்துவிடும் முறையிலும் அல்ல, ஒடுக்கும் தேசங்களில் உள்ள சோசலிஸ்ட்களின் பாசாங்குத்தனத்தையும், கோழைத்தனத்தையும் தனிவகையில் கவனத்தில் கொண்டு தெளிவாகவும், துல்லியமாகவும் வரையறுக்கப்பட்ட அரசியல், வேலைத்திட்டத்தினூடாக ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலையைக் கோர வேண்டும் என்கிறார். (இதைத்தான் மு.சோ.க வேலைத்திட்டமாக முன்வைத்து செயற்படுகிறது. இதில் மாற்றங்களைக் கோரும் நேர்மையான விமர்சனங்களை ஏற்று அதை மாற்றவும் சம்மதிக்கிறது) மதம், மற்றும் கலாச்சார விடயங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதற்கும், பண்பாட்டு-தேசியத் துறைகளில் சுயாட்சி என்பதற்கும், மடுவிற்கும் மலைக்குமுள்ள வித்தியாசமுண்டு. ஆனால் இவ்வகையான விமர்சனங்கள் குறுட்டுப்புரிதலா?. அல்லது லெனினின் விமர்சனத்தை திரித்து விடும் தந்திரமா?

அடுத்த விடயமானது சாதி வெறிபிடித்த பாட்டாளிக்கும் அவனால் ஒடுக்கப்படும் தலித் பாட்டாளிக்கும் நடுவில் சுவராகச் சாதியமிருப்பதால் உண்மையான ஐக்கியம் அவர்களுக்கிடையே ஏற்படாது. அதேபோல் தான் இன ஒடுக்கமுறையை ஆதரிக்கும் பாட்டாளிக்கும், இன ஒடுக்குமுறைக்குள்ளாகும் பாட்டாளிக்கும் உண்மையான ஐக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர்.

சாதியம் என்ற சுவரை பலமிழக்கச் செய்வதற்காக பெரியார் சாதிமறுப்பு திருமணங்களை ஏற்பாடு செய்து நடத்தினார். சாதி மறுப்புக்காதலுக்கு அரிவாள் கொண்டு கையையும், காலையும் துண்டு போடும் அச்சமூகத்தில் பெரியாரும் துணிவுமிக்கோரும் முன்னின்று இருக்கிறார்கள். அனைத்துச் சாதியின் பெயரால் தெரு, குளம், கோயில், தொழில், கடவுளின் பிரதிநிதிகள் என்ற அடையாளங்களை வைத்துக்கொண்டு, சாதியப் பெருமை பேசிக் கொண்டு எப்படி ஒரு சாதிய எதிர்ப்பு போராட்டமென்பது சாத்தியமில்லையோ. அதே போல்தான் இனவாதத்தை கூர்மைப்படுத்தும் இன அடையாளங்களை அதன் இரும்புப்பிடியை எதிர்க்காமல் அதற்கெதிரான கோசங்களாக இலங்கையர், தேசியப்பிரiஐகள் என்ற பதங்களை முன்வைக்காமல் இனவாத வீச்சைக் குறைக்க முடியாது. இவ்விடயமானது இன்றைய வளர்ந்த பெரிய மனிதர்களை மட்டும் கருத்தில் கொண்டு கூறப்பட்டிருக்கும் கருத்தல்ல. தோன்றப் போகும் புதிய தலைமுறைகளையும் இனவாதத்தில் இருந்து விடுவிக்க துணை நிற்கப்போகும் தீர்க்கதரிசனம் மிக்க சொற்பதங்கள் என்பதே உண்மையாகும். இவ்வடிப்படையில் தான் மு.சோ.க.யானது. இக்கோசங்களை முன்வைத்து போராடுகிறது. இவ்வாறான கோசங்களை மகிந்த ராஜபக்ஸ எப்பவோ தொடங்கிவிட்டாரே பேரினவாதத்தை மறைக்கும் அவரைப்போல் மு.சோ.க. இனவாதத்தை மறைத்துக்கொள்ளவே இப்பதங்களை பயன்படுத்தலாம். என்பது அருமையான கண்டுபிடிப்பா? அல்லது ஆய்வா? எழுந்த மானமா? குதர்க்கமா? குளறுபடியா?....இதை அரசியல் அறிவுள்ளவர்களிடம் விட்டுவிடுவோம்.

இவ்விடயம் பற்றிய ஒரு தெளிவிற்காக லெனின் கூறிய ஒரு விடயத்தை குறிப்பிடுவது மிக அவசியமாகப்படுகிறது. "மாக்சியத்தத்துவத்தின் வெற்றிகரமான முன்னேற்றமானது அதன் பகைவர்களை மார்க்சிய வேடம் பூணுமாறு நிர்பந்திக்கிறது". ஒரு தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளை அதன் அரசியல் தீர்வுத்திட்டங்களை மறுத்துக் கொண்டு பெரும்தேசிய இனவாதத்தில் மூழ்கியிருக்கும் மகிந்தாவின் “எல்லோரும் இலங்கையர்“ என்ற கோசம், வெறும் கபடநாடகம். இது லெனின் குறிப்பிட்டிருப்பதைப்போல் சோசலிச வேடம் பூணும் முதலாளிகளின் செயலையொத்த தந்திரமாகும். மாறாக மு.சோ.கயினர் இலங்கையர் எனச்சொல்வது இனவாதத்தை வலுவிழக்கச் செய்யவேயாகும். அதன் உறுப்பினர்கள் கைதாகும் சந்தர்பத்தில் விசாரணையின் போது, பௌத்த சிங்களவரா? தமிழரா? முஸ்லிமா? என்ற கேள்விகளுக்கு தாம் இலங்கையர் என்கின்றனர். இதற்காக பொலிஸ் அதிகாரிகளின் எச்சரிக்கைகளும் வசைகளுமே அவர்களுக்கு கிடைக்கின்றன. அடையாள அட்டைகளில் இலங்கையர் எனக்குறிப்பிடும்படி அரசியல் கோசமாக அதை முன் வைக்கின்றனர். மகிந்தாவும் நாம் இலங்கையர் என்ற கோசத்தை முன்வைக்கலாம் அதைவிட மேலும் அதிகமாகவும் வாயால் அள்ளிப்போடலாம். இவர்கள் ஆண்டால் என்ன ஆழாவிட்டால் என்ன இவற்றுக்காக தெருவில் இறங்கி செயற்படவா போகிறார்கள்? அல்லது தமது ஆட்சியதிகாரத்தினூடாக மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தை அறிவித்து செயற்படுத்தவா முனைகிறார்கள்?.

இவ்விடயமாக சுவீஸ் நாட்டைப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஏன்னெனில் அந்நாட்டின் தேசிய இனங்களுக்கான அரசியல் தீர்வுபற்றி நாமும் பேசியிருக்கிறோம் அல்லவா? இந்நாட்டில் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதல்களில் தேசிய அடையாளம் என்ற இடத்தில் எமது நாட்டில் இருப்பது போன்று மொழி, மதம் சார்ந்த அடையாளப்படுத்தல்கள் இருப்பதில்லை. தேசிய அடையாளம் என்ற இடத்தில் சுவீஸ் என்றே குறிப்பிடுகிறார்கள். சுவீஸ்சில் நகர்புற உருவாக்கமும் அதனை மையப்படுத்திய அதன்அடையாளத்தைக் கொண்ட யுத்தங்களும் உள்நாட்டுச் சண்டைகளும் மிக மோசமாக தலை விரித்தாடிய வரலாறு இருக்கிறது. அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் என மதங்களின் பெயராலும் மத அடையாளச் சண்டைகள் எனக் குருதி பீறிட்டமண்ணாகும். இவ்வாறு தமது நலனுக்காக சண்டைபோட்ட அரசர்களைப் பற்றியோ, மதவெறியர்கள் பற்றியோ ஆண்ட பரம்பரைக் கோசம் எழுப்பி அவர்கள் அடம்பிடிப்பதேயில்லை என்பது கற்பனையல்ல நடைமுறையில் நாம் காண்பதாகும்.

நல்லெண்ன ரீதியில் ஐக்கியம் ஏற்படுவதைக் காட்டிலும் தெளிவான அரசியல் புரிதலுடன் அது ஏற்படுவதே சரியானதாக இருக்கும். இவ்வாறு அல்லாவிடில் அது நரகத்திற்கு வழிவகுக்கும் என லெனின் கூறியதாகவும் பெரிய போடு போடுவோர் பலருண்டு, ஆனால் லெனின் சமரசங்கள் பற்றிய விடயங்களில் கூறுவதாவது: “தத்துவார்தம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமுறைகள், தந்திரோபாயம் என்ற ரீதியில் நாம் நரோதினிய சார்பு கொண்டோர். அத்தோடு மென்சிவிக்குகள் இப்படி பல்வேறு வகையான முரண்பாட்டாளர்களோடு 1905-ம் ஆண்டு தொடக்கம் அதாவது புரட்சிக்கு முன்னரும் அதன் பின்னரும் நாம் பல உடன்பாடுகளையும், சமரசங்களையும் செய்து கொண்டே முன்னேறினோம்" என்கிறார். இவ்விடயமாக விமர்சனங்களை முன்வைத்தோர்க்கு அவர் மேலும் கூறியதைப் பார்போம். “போல்சிவிக் கட்சியானது எப்போதும் அரசியல் தெளிவுடனும், பாட்டாளிவர்க்கத்தின் நலனை விட்டுக்கொடுக்காத ஒருநிலையில் நின்று கொண்டு அவ்வாறான இணக்கப் பாடுகளுக்கு போகலாம் எனச் சொல்லுகிறார். இதைத்தான் அரசியல் தெளிவு இல்லாவிட்டால் நரகத்தில் கொண்டு விடும் என லெனின் சொல்லிவிட்டாரே எனப் பலரும் திரித்துப் புரட்டுகின்றனர்.

மேலும் எல்லோருக்கும் பொது நீதி என்று மு.சோ.க சொல்லும் கோசம் மீதான விமர்சனத்தைப் பார்போம். பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கே சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் மு.சோ.க ஆனது இதை அலட்சியப்படுத்தி எல்லோருக்கும் பொது நீதி என்பது எவ்வகையில் நியாயம் என்கிறார்கள். மேலும் “ஐயோ இவர்கள் பொல்லாதவர்கள்„ என்றும் புலம்புகிறார்கள். பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கே சிறப்புரிமை என்பதில் எந்த மாக்சியவாதிக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. நடமுறை ரீதியாக தற்போது சமவுரிமையில்லாத இனப்பாகுபாட்டை கருத்தில் கொண்டே சமவுரிமையெனக் குறிப்பிட வேண்டியதாகிறது. ஒரு சோசலிச புரட்சியின் பின்னர் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக சிறப்புரிமைகள் வழங்கப்படும் என்பதுதான் சோசலிசத்தின் அடிப்படையாகும். ஆனால் இதைப் புரியாமல் விமர்சனம் செய்வதென்பது குழப்பிவிடும் விதண்டாவாதமும், அவதூறுமாகும்.

அடுத்ததாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பலம் தாய்கட்சியின் (JVP)  பலமே தவிர அது அக்கட்சியின் தனியான உழைப்பல்ல என்றும், அதற்காக கருணா புலிகளில் இருந்து வெளியேறிய போது 6000 பேர் கொண்ட புலிகளின் பலத்தையே தனதாக்கினார். என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

கருணாவின் பலம் பெருவாரியான கிழக்கு போராளிகளிடம், புலிகளின் யாழ் தலைமையின் கிழக்கு புறக்கணிப்பு என்ற பிரச்சாரத்தினூடக கைமாறியது. ஆனால் மு.சோ.க.வின் பலம்பற்றிக் கூறுவதென்றால் மாக்சியத்தின் நேர்மைக்கு, அதன் முரண்பாடற்றதன்மைக்கு, அதன் ஆழமான சமூகப்பார்வைக்கும் இடையில் முரண்பட்டுக்கிடந்த JVP–யை விம்சனத்திற்கு உட்படுத்தியவர்களின் பலம், அதனை ஏற்றுக்கொண்டவர்களின் பலம், இங்கு பலம் தாய்க்கட்சியான JVP-யின் என்பதோ, மு.சோ.க. உரியதென்று கூறுவதைவிட இது மாக்சியத்தின் பலம் என்பதே பொருத்தமானது.

ஆதாரநூல்- நூல்திரட்டு-1.4 (லெனின் )

-திலக்