Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வானவில் தேசத்தின் சோகக்கதை


மரிக்கானா படுகொலைகள் தென்னாபிரிக்காவின் உள்ளாந்த நெருக்கடிகளைப் புலப்படுத்துகின்றன

கடந்த ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் மரிக்கானா எனும் பகுதியில் உள்ள லொன்மின் பிளற்றினம் சுரங்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை தென்னாபிரிக்க அரசின் காவல் துறை சுட்டுத்தள்ளியது. இது நெல்சன் மண்டேலாவின் வானவில் தேசம் இன்றுள்ள நிலையை மீண்டும் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப் பலம்வாய்ந்ததும், அதேவேளை பல்லின சமூகங்கள் அமைதியாகவும் மரியாதையாகவும் வாழுவதுமான தேசம் என்ற பிம்பம் மெதுமெதுவாக உதிர்கிறது.

மரிக்கானா சுரங்கத் தொழிலாளர்களை 34 பேர் போலிசாரால் சுற்றிவளைத்து நாயைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் காணொளிகளின் பின்னணியில் தென்னாபிரிக்கா இன்று எவ்வாறு இருக்க முடியும் என்பதை அனுமானிக்கச் சிரமம் இராது. இக் காட்சிகள் தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி இருந்தபோது இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஷார்ப்பவில், சொவெட்டோ (Sarpeille, Soweto) படுகொலைகளை நினைவுபடுத்தியது.

1994இல் நெல்சன் மண்டேலாவின் விடுதலையோடு தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிப்பீடம் ஏறியது. இந்த அதிகார மாற்றம் 1990களின் மிகச் சிறந்ததாக மெச்சப்பட்டது. மோதலின் பின்னரான வன்முறைகளெதுவுமற்று நிலைமாற்றம் நடந்த தேசமாகத் தென்னாபிரிக்கா போற்றப்பட்டது. வேறுபாடுகளை இனங்கண்டு எல்லோரையும் அரசியலமைப்பின் வழியாக உள்வாங்கிய தேசமாகையால், அது வானவில் தேசமெனப்பட்டது. அத்துடன், நவதாரளவாதத்தை முழுமையாக உள்வாங்கி வளர்ந்த ஒரு நாடாக அது இன்று காட்டப்படுகிறது. இப் பின்னணியிலேயே தென்னாபிரிக்காவின் இன்றைய நிலையைக் காணவேண்டியுள்ளது.

குறிப்பாகக், கடந்த பத்தாண்டுகளில் அபிவிருத்தி எனும் பெயராற் செய்யப்பட்டவை எவ்வாறு மக்களுக்கு விரோதமானவையாக மாறியுள்ளன என்பது கவனிப்புக்குரியது. மோதலின் பின்னரான அபிவிருத்தி சமூகத்தில் மிகவும் கீழ்நிலையிலுள்ள மக்களை எவ்வாறு வாழத்தகுதியற்றவர்களாக மாற்றுகிறது என்பதையும் பணக்காரர்கள் மேலும் பணக்காரராகவும் சாதாரண உழைப்பாளிகள் வறுமையில் வாடவும் அது எவ்வாறு வழியமைத்துள்ளது என்பதற்கு, தென்னாபிரிக்காவின் இன்றைய நிலை நல்ல உதாரணமாகும். கடந்த பத்தாண்டுகளில் தென்னாபிரிக்காவில்:

  • சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவர்களின் தேவைகட்காகப் புதிய கட்டுமானப் பணிகள் போகப், பழைய கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டன. விரைவுப் புகையிரதங்களும் புதிய வசதியான பெருந்தெருக்களும் அமைக்கப்பட்டன.
  • அரசுடன் நெருக்கமானவர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புக்களும் வணிகவசதிகளும் வழங்கப்பட்டன.
  • சுற்றுலாத் துறையை மையப்படுத்தி மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. (2020 ஒலிம்பிக்ஸ்)
  • காவல்துறைக்குப் புதிதாக ஆட்களைச் சேர்த்தலினதும் இராணுவத்தை சிவில் அலுவல்களில் ஈடுபடுத்தலினதும் மூலம் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்கட்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அத்துடன் எதிர்ப்புணர்வை முளையிலேயே கிள்ளி எறிய உதவியாக நாடு முழுவதையும் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க முடிகிறது.
  • வெளிநாட்டுக் கடன் மேலும் அதிகரிக்கப்பட்டு மேலும் கடன் வாங்கப்படுகிறது. 1994இல் 25 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வெளிநாட்டுக்கடன் இப்போது 85 பில்லியனாக (3400 மடங்கு) அதிகரித்துள்ளது.


இன்று தென்னாபிரிக்காவில் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழுகிறார்கள். 2010இல் உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டியைத் தென்னாபிரிக்கா நடாத்தியபோதும் அவ் வருடம் மட்டும் 1.5 மில்லியன் தென்னாபிரிக்கர்கள் தங்கள் வேலைகளை இழந்தார்கள். தாராளமயமாக்கல் தென்னாபிரிக்காவுக்கு பரிசாகக் கொடுத்திருப்பவை இவை மட்டுமல்ல. இன்று, தென்னாபிரிக்காவில் எல்லாம் தனியார்மயமாகி விட்டது. இன்று தண்ணீர், மின்சாரம், வீட்டுக்கான வரி என்பன மிக அதிகமான விலையில் மக்களுக்கு விற்கப்படுகின்றன. அதனால் மக்களால் அவற்றுக்கான விலையைக் கொடுக்க முடிவதில்லை. ஆண்டொன்றுக்கு சராசரியாக 1.5 மில்லியன் தென்னாபிரிக்கர்களுக்கு நீர் வழங்கல் துண்டிக்கப்படுகிறது. இது இன்றைய தென்னாபிரிக்க நிலவரம்.

அதே வேளை, உலக ஊடகங்கள் தொடர்ச்சியாக இருட்டடிக்கும் நிகழ்வுகள் தென்னாபிரிக்காவில் நிகழ்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்குச் சராசரியாக 2.9 அரச எதிர்ப்புக் கூட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ நடைபெற்றுள்ளன. இவை தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களாகவும் எதிர்ப்பு ஊர்வலங்களாகவும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அரசு மக்களுக்கு அடிப்படையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே இவை நடத்தப்படுகின்றன. இவற்றைப் ~பொப்கோன்| தன்மையான எழுச்சிகள் எனப் பத்திரிகையாளர்கள் குறிக்கிறார்கள். இவை, சரியான வழிநடத்தலின்றி, மக்கள் தமது அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்துத் தொடர்ச்சியாக எழுந்து அடங்கும் போராட்டங்களாக இருக்கின்றன. அவற்றுக்கு தலைமையேற்கப் பொருத்தமான தலைமைகளோ தொழிற்சங்கங்களோ அரசியல் அமைப்புக்களோ இல்லை என்பது ஒருபுறம் இருக்க, போராட்டங்கட்குத் தலைமையேற்கும் போர்வையில் என்.ஜீ.ஓக்கள் அவற்றைக் கூர்மழுங்கச் செய்கிறார்கள். இதுவும் கவனிப்புக்குரியதாகும். இப் பின்னணியிலேயே மரிக்கானப் படுகொலையைக் காணவேண்டியுள்ளது.

தென்னாபிரிக்கா இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. அங்கு சுரங்கங்களில் மிகக் கொடுமையான நிலைமைகளில் ஏழைத் தென்னாபிரிக்கர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களது உழைப்பு மிகையாகச் சுரண்டப்படுகிறது. ஆனால் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பெதையும் கறுப்புத் தென்னாபிரிக்காவின் காவலர்கள் எனப்படுகிற "ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ்" அரசு செய்து கொடுக்கவில்லை. மாறாகத், தாங்களும் தங்களுக்கு முந்திய வெள்ளை நிறவெறி ஆட்சியாளர்களைப் போல அல்லது அதற்கும் மேலாக மக்களைச் சுரண்டவும் கொடிய அடக்குமுறையின் மூலம் எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்தவும் வல்லவர்கள் என்பதைக் கடந்த பத்தாண்டுகளில் தனது நடவடிக்கைகளின் ஊடாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ்pன் தென்னாபிரிக்க அரசாங்கம் காட்டியுள்ளது.

ஓகஸ்ட் 16ம் திகதி மாரிக்கானாவிலுள்ள லொன்மின் பிளற்றினம் சுரங்கத்தில் வேலைநிறுத்தம் செய்துவந்த 34 தொழிலாளர்கள் படுகொலைக்குள்ளானமை அதன் ஒரு பரிமாணம் மட்டுமே. வழமைக்கு மாறாகத் தங்கள் வேதன உயர்வை முன்வைத்து திட்டமிட்ட வேலைநிறுத்தமொன்றை லொன்மின் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்தியது சுரங்க முதலாளிகளுக்கும் ஜேக்கப் ஸ_மா தலைமையிலான தென்னாபிரிக்க அரசுக்குப் பெரிய தலைவலியைக்கொடுத்தது. எனவே தான் அரசாங்கத்தின் தலைமையில் வேலைநிறுத்ததை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இப்படுகொலைகள் நடந்தேறின.

சுரங்கத் தொழிலாளர்களை அரசாங்கம் வன்முறையால் அடக்கியமை இனம், இனவழி போன்ற அடையாளங்களின் வழியாக இல்லாமல் வர்க்கம் என்ற அடிப்படையில் அமைந்தமை, தென்னாபிரிக்கச் சமூகம் மடடுமன்றி உலகம் முழுவதும் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் உணர்த்துகிறது.  ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ{ம் அதன் பங்காளிகளும் தமக்கு முன்பு இருந்த வெள்ளையர்களைவிட வேறுவிதமாக நடக்காததற்குக் காரணம், சுரங்கத் தொழிலாளர்களின் எழுச்சி இப்பொழுது சுரங்க நடவடிக்கைகளை மட்டுமன்றி அவர்களுடைய சமூக நலன்களையும் அச்சுறுத்துவதாலாகும்.

1994இல் மண்டேலா சமரசத்துடன் தான் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலன்கட்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதிமொழியை அவர் அளித்தார். அதைத் தவறாமல் இன்றும் அவரது ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைமையிலான அரசு பேணுகிறது. அன்று ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் முதலாளித்துவ சொத்து உரிமைகளை தக்க வைப்பதாக உறுதியளித்த அதே வேளை “கறுப்பினத்தவருக்கு பொருளாதார முறையில் சக்தியளித்தல்” என்னும் தன் கொள்கையையும் கூறியது: அது, அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து  அனைவருக்கும் வேலைகள் வழங்கி வாழ்க்கைத் தரங்களையும் உயர்த்தும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றுபோலவே இன்றும் கறுப்புத் தென்னாபிரிக்கர்கள் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கிறார்கள்.

மரிக்காணாவில் நடந்த படுகொலையின் எதிரொலியாக ஏனைய சுரங்கத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தங்களில் இறங்கியுள்ளனர். வேலை நிறுத்தங்கள் பிளற்றினச் சுரங்கங்களைத் தாண்டி தங்க, குரோமியச் சுரங்கங்களுக்கும் பரவியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தென்னாபிரிக்க ஜனாதிபதி ஸ_மா “ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் வகையில் விரலைக் நீட்டுவதைத் தவிர்க்க வேண்டும். எத்திசையில் இருந்து வன்முறை வந்தாலும் அதற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சமாதானத்திலும் உறுதிப்பாட்டிலும் மற்றும் ஒழுங்கிலும் நாம் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும், வன்முறை, குற்றம் அறவே இல்லாத அக்கறைகொண்ட ஒரு சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும்” என வேண்டினார். அவர் அவ்வாறு ஏன் வேண்டினார் என்றால் அவருக்குச் சுரங்க முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பது அவசியமாகிறது. எனவே அக்கறையுள்ள சமூகம் பற்றிப் பேசுகிறார்.

அதே வேளை, சுரங்க முகாமைத்துவம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்பவேண்டும் என அறிவிக்கிறது. தவறுமிடத்து அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்துகிறது. ஆனால் தொழிலாளர்கள் எதையும் பொருட்படுத்தாது வேலைநிறுத்தங்களைத் தொடருகிறார்கள். இன்று கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் “நாங்கள் எங்கள் சகோதரர்களுக்காகவும் தான் போராடுகிறோம்" என்ற பதாதகைகளைத் தாங்கியபடி பாடல்களை இசைக்கிறார்கள்.

ஸமா அரசின் முக்கிய அமைச்சரொருவர் “மாரிக்கானாவில் நடந்த பெரும் சோக நிகழ்வு தென்னாபிரிக்காவில் வணிகச் சூழலின் பிரதிபலிப்பு அல்ல. நிலைமையை அரசாங்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது, சட்டமும் ஒழுங்கும் தொடர்ந்து; நன்குள்ளன. நேரடி முதலீடடையும் அதற்குரிய வசதிவாய்ப்புகளையும் ஊக்குவிப்புக்களையும் அரசாங்கம் தொடர்ந்து முழுமையாக ஆதரிப்பதுடன், அவற்றைப் பாதுகாக்கச் சட்ட வடிவமைப்பும் இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் அஞ்சத் தேவையில்லை” என்ற உறுதிமொழியை அளிக்கிறார்.

மரிக்கானா படுகொலைகள் நடந்து எட்டு வாரங்கள் கழிந்தும் எதுவிதமான தீர்வையும் முன்வைக்க தென்னாபிரிக்க அரசாங்கம் தயாராக இல்லை. அதேவேளை அத் “தொற்றுநோய்” ஏனைய தொழிற்துறைகளுக்கும் பரவாமல் பார்த்துக்கொள்ளும்படி உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் தென்னாபிரிக்க அரசை எச்சரிக்கின்றன. எல்லோரும் தங்கள் இலாபங்களுக்கு பங்கம் வந்துவிடக்கூடாதென்று நினைக்கிறார்கள். இன்று அவர்களுக்காக எதையும் செய்வதற்கு தயாராகிறது தென்னாபிரிக்க அரசு. நெல்சன் மண்டேலாவின் வானவில் தேசத்தின் சோகக் கதை இது.

மாரிக்கானா படுகொலைகள் தென்னாபிரிக்காவின் வெகுஜன உணர்வுக்கு ஓரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. தமது கறுப்பின மக்கள் மீதே மீலேச்சத்தனமான தாக்குதலை சக கறுப்பினத்தவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்ற உண்மை முகத்தில் அறைகிறது. ஆண்டாண்டுக் காலமாக கறுப்பின மக்களின் விடுதலைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடிக் கண்டது இதைத்தானா என்ற கேள்வி இன்னொருமுறை கறுப்பினப் பெரும்பான்மைத் தென்னாபிரிக்கர்கள் மனதில் எழுகிறது. இது ஆபிரிக்கத் தேசிய காங்கிரசினதும் அதன் பிற்போக்கு அரசியல் கூட்டினதும் முகத்திரைகளைக் கிழிக்கிறது. இவை நல்ல அறிகுறிகள். மக்கள் விழிப்படைவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை உழைக்கும் தென்னாபிரிக்க மக்களுக்கு அது வழங்குகிறது.

நாடுகளினதும் தேசங்களினதும் பிற்போக்குத் தலைமைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஏகாதிபத்தியத்தின் மறைமுக அல்லது நேரடி நிகழ்ச்சி நிரலாக இருக்கும் போதோ ஏகாதிபத்தியத்தின் ஆசிர்வாதத்தை பெற்றிருக்கும் போதோ அவை முற்போக்கான விடுதலை அல்லது எதிர்ப்பு போராட்டங்களாக இருக்க முடியாது. ஏனெனில் நாடுகளை அல்லது தேசங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏகாதிபத்தியத்திடம் சரணடையச் செய்யும் போராட்டங்கள் முற்போக்கானவை அல்ல. ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அல்லது நாட்டுத் தலைமைகளுக்குமிடையேயான முரண்பாடுகளை ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாகவன்றி நாட்டினதும் நாட்டு மக்களின் ஐக்கியத்திற்கும் விடுதலைக்கும் சார்பாகவே கையாள வேண்டும்.

இக்கட்டுரை எழுதி முடிக்கப்படும் போது லொன்மின் சுரங்கத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. லொன்மின் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆனால் ஏனைய சுரங்கங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராடுகிறார்கள். இது ஒரு தொடக்கம் மட்டுமே.
 
இன்று தென்னாபிரிக்காவில் நடைபெறும்  போராட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முற்போக்குச் சக்திகள் தலைமைப் பாத்திரமேற்று அவற்றை வழிநடத்த வேண்டும். அல்லாவிடின் அவை இலகுவாக சிதைக்கப்படவியலும். இன்று தென்னாபிரிக்காவின் உழைக்கும் மக்களின் பரந்துபட்ட ஐக்கியத்தினூடான போராட்டமாக இந்தப் போராட்டம் விரிவடையவேண்டும். அதுவே உழைக்கும் மக்களின் விடுதலையைப் பெற்றுத்தரும்.

-  ஏகலைவா