Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிகளால் இனசுத்திகரிப்புக்குள்ளான முஸ்லீம்கள்: "தமிழ்த் தேசிய"த்தின் இருண்ட பக்கம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 66


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் - சமாதானத்துக்கான யுத்தம் - என்ற பெயரில் இலங்கை அரச படைகளினால் நிராயுதபாணிகளான மக்கள் கொன்றொழிக்கப்படுவதும், ஈழ விடுதலைப் போராட்டம் - தேசிய விடுதலைப் போராட்டம் - என்ற பெயரில் நிராயுதபாணிகளான முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் கோரத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தவேளை "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக்கரங்களிலிருந்து தம்மைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தென்னிலங்கையை வந்தடைந்து கொண்டிருந்தனர்.

தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் தாயகம் என அழைக்கப்பட்ட வடக்குக்-கிழக்குப் பகுதிகள் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் "தாயகமாக" மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன. வடக்குக்-கிழக்கில் வெகுஜனப் பத்திரிகைகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஏடுகளாக மாற்றம் பெற்றதுடன் முற்போக்கு ஜனநாயக சக்திகளைக் கொன்றொழித்து அல்லது வடக்குக்-கிழக்கிலிருந்து விரட்டியடித்து மாற்றுக் கருத்தை முழுமையாக வெளிவராது தடை செய்திருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எந்தவித விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் அப்பாற்பட்டு தொடர்ந்து கொண்டிருந்தன. தென்னிலங்கையைப் பொறுத்தவரை நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. "ராவய", "யுக்திய" போன்ற வெகுஜனப் பத்திரிகைகள் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் மக்கள் விரோதப் போரை விமர்சித்துக் கொண்டிருந்ததுடன் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் போருக்கெதிரான கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிட்டுக் கொண்டிருந்தன.

ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரப் பாதையில் முன்னெடுக்க விளைந்த "தீப்பொறி"க் குழுவினராகிய நாம் இத்தகையதோர் சூழ்நிலையில் நாட்டில் நடைபெறும் எந்த நிகழ்வுகள் குறித்தும் கருத்துத் தெரிவிக்காமல் மௌனமாகிக் கொண்டிருந்தோம். போருக்கெதிரான முற்போக்குக் கருத்துக்களைத் தாங்கி வெளிவந்த "ராவய", "யுக்திய" போன்ற பத்திரிகைகள் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு தமது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தன. பாராளுமன்ற அரசியல் பாதையை தேர்ந்தெடுத்திருந்த இடதுசாரி அரசியல்வாதிகள் இலங்கை அரசினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் மக்கள் விரோத அரசியலுக்கு எதிராக வெளிப்படையாக தமது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆயுத வழிமுறை மூலம் புரட்சிகரப் பாதையில் முன்னெடுக்கப் போவதாகக் கூறிக் கொண்ட நாம், வடக்குக்-கிழக்கு உட்பட இலங்கையில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எந்தவித கருத்துக்களையும் மக்கள்முன் எடுத்துச் சென்றிருக்கவில்லை. ஒரு புரட்சிகரக் குழு , ஒரு புரட்சிகர அமைப்பு மக்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டுமாயின் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தெளிவாகப் புரிந்துகொண்டு எதிரியின் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்தி அவர்களை சரியான அரசியல் வழிமுறையில் போராடுமாறு அறைகூவி அழைத்திருக்க வேண்டும். எமது கருத்துக்களை பகிரங்கமாக முன்வைப்பதன் மூலம் எமது கருத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இவையெதையும் செய்வதற்கு நாம் தவறியிருந்தோம். புரட்சிகரக் கருத்துக்களைக் கொண்டிருப்பது மட்டுமே புரட்சிகரக் குழுவாக விளங்குவதற்கு போதுமானதாகும் என்ற கருத்தின் அடிப்படையில் நடப்பு நிலைமைகளிருந்து அந்நியமாகி வெறும் அரசியல் விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். எமதும் எம்போன்றோரினதும் இத்தகையக பலவீனங்கள் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு உரமூட்டிக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தடைந்திருந்த ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பி யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருக்கும் ஏனைய "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களும் கொழும்பு வரும் பட்சத்தில் அவர்கள் கொழும்பில் தங்குவதற்கு வேண்டிய இடங்களை தயார்படுத்த வேண்டும் என்று கருத்து முன் வைத்திருந்ததால் கொழும்பில் வாடகைக்கு வீடு எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினேன். இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் கடுமையையும், மூர்க்க்ததனத்தையும் அதன் பெறுபேறுகளையும் அடிக்கடி கொழும்பு - காலி வீதியில் ஒலி எழுப்பிய வண்ணம் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில்   காயமடைந்த படையினரை அவசர சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதிலிருந்து அறியமுடிந்தது.    

வடக்குக் கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த போரினால் ஏற்பட்டிருக்கும் பதட்டத்தையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இலங்கையின் தலைநகர் கொழும்பில் காணக்கூடியதாக இருந்தது. இத்தகையதோர் நிலையில் கொழும்பில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமானதொரு விடயமாக இருந்திருக்கவில்லை. அத்துடன் சிங்கள மொழியில் சரளமாகப் பேச முடியாத என்னால் கொழும்பில் வாடகை வீட்டைப் பெற்றுக் கொள்வது என்பதும்கூட இயலாததொன்றாக இருந்தது. இதனால் கொழும்பில் தங்கியிருந்த, சிங்கள மொழியில் சரளமாகப் பேசக்கூடிய எனது நண்பர் ரமணனை அணுகி அவருடன் வாடகைக்கு வீடு தேடும் முயற்சியில் இறங்கினேன். ரமணனின் உதவியுடன் யாழ்பாணத்திலிருந்து தப்பி வருபவர்கள் தங்குவதற்கென வீடொன்றை வாடகைக்குப் பெற்றுக் கொண்டேன். இதே வேளை புளொட்டில் செயற்பட்டவரும், நாம் புளொட்டில் இருந்து வெளியேறி இருந்தவேளை எமக்குப் பாதுகாப்புத் தந்துதவியதுடன் எமது ஆதரவாளராகச் செயற்பட்டவருமான யுவி என்பவரை கொழும்பில் சந்தித்தேன். யுவியை சந்தித்ததிலிருந்து அவரது அறையிலேயே நானும் தங்க ஆரம்பித்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்தவர்களான சந்தியா, விஜயன், பாபு, சிறீ ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்திருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களின் தகவல்களின்படி இலங்கை அரசபடைகளுக்கு எந்தவகையிலும் தாம் சளைத்தவர்களல்ல என்பதை வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்திருந்தனர். இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை ஒரு காலகட்டத்தில் நல்கிய தமிழ் மக்கள் இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களின் தகவல்களின் மூலம் தெளிவாகியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் "இரண்டாவது ஈழப் போர்" தொடர்ந்து கொண்டிருந்தது. தமிழ் மக்களை இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைவதை நோக்கமாகக் கொண்டிராத தமிழ்  மக்களை அழிவுப் பாதையில் கொண்டுசெல்லும் தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக்குவதை நோக்கிய "இரண்டாவது ஈழப் போர்" தொடர்ந்து கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் "இரண்டாவது ஈழப் போர்" வடமாகாண முஸ்லீம் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்வதை ஆரம்பித்து வைத்தது.

அக்டோபர் 30, 1990 யாழ்ப்பாணத்தில் பூர்வீகமாக வசித்துவந்த 70,000 க்கு மேற்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் சிலமணி நேர அவகாசத்துக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிவிடவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் ஒலிபெருக்கிகள் மூலம் உத்தரவு பிறப்பித்தனர். முஸ்லீம் வர்த்தகர்கள் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேச முஸ்லீம்கள் 48 மணி நேரத்துக்குள் வடமாகாணத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தகைய செயற்பாடுகளை எதிர்த்துப் போராட முடியாத அல்லது அதற்கெதிராகக் குரல் கொடுக்க முடியாத நிலையில் தமிழ் மக்கள் நாதியற்று இருந்தனர்.  

தமிழ் இனத்துக்காகப் போராடுவதாகக் கூறிகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லீம் இனத்தை இனச் சுத்திகரிப்பு செய்ததன் மூலம் கூறிய செய்தி மிகத் தெளிவானது. இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராகப்  போராடுவதாகக் கூறிக்கொண்டு வடக்கில் சிறுபான்மை இனமாக வாழும் முஸ்லீம் மக்களை இனச் சுத்திகரிப்புச் செய்வதும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் மீதான கொலைவெறியாட்டங்களும் எமக்கு எடுத்துக் காட்டியதென்ன? "தேசிய விடுதலைப் போராட்டம்" அதன் இருண்ட பக்கத்தை முழுமையாக வெளிக்காட்டிவிட்டதென்பதேயாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கின் வளர்ச்சிக்  கட்டம் ஒரு இனத்தை, தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசும் சகோதர முஸ்லீம் இனத்தை இனச் சுத்திகரிப்புச் செய்வதில் முடிவடைந்திருந்தது. இத்தகையதோர் கைங்கரியத்தை செய்து முடித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை "தேசிய விடுதலைக்காகப் போராடுபவர்கள்" என்றோ அல்லது "தேசிய சக்திகள்" என்றோ எப்படிக் கூறமுடியும்?

"தமிழ்த் தேசியவாதிகள்" பலரும், இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பலரும் தமிழீழ விடுதலைப் புலிகள் பாசிசப் போக்குக் கொண்டவர்கள் என்று கூறுவது தவறானது என வாதிட்டுக் கொண்டிருந்தனர். முதலாவது உலகப் போரின் பின் ஜெர்மனியில் பதவிக்கு வந்த ஹிட்லர் ஆரிய இனத்தின் மேன்மைக்காக எனக்கூறி யூத இன மக்களுக்கெதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியதுடன் யூத இனத்தவர்கள் மேல் வன்முறையை ஏவி விட்டான். யூதர்கள் மீதான வெறுப்பு இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான யூதர்களை ஐரோப்பா முழுவதும் கொன்றொழிக்க காரணமாய் அமைந்தது. யூதர்கள் மீதான படுகொலைகள் மட்டுமல்லாது இடதுசாரிகள், ஜனநாயக வாதிகள், ஜிப்சிகள் மீதான படுகொலைகள் அனைத்தையும் செய்து முடித்திருந்த ஹிட்லரை ஒரு பாசிச வாதியாகவும், ஹிட்லரால் தலைமை தாங்கப்பட்ட நாசிக் கட்சியை பாசிசக் கட்சியாகவுமே சர்வதேசமும் நாமும் இனம் காணுகின்றோம். இரண்டாவது உலகப் போரின் முடிவில் ஹிட்லரினால் தலைமை தாங்கப்பட்டு நடாத்தி முடிக்கப்பட்ட இனச் சுத்திகரிப்பில் இருந்து தப்பிய யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. ஹிட்லரின் பாசிசத்தின் கோரமுகத்தையும், போரின் கொடுமைகளையும், லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட மரணத்தின் வலியையும் சுமந்து கொண்டிருந்த யூதர்கள், யூத இனத்தின் மேன்மைக்காக ஹிட்லரின் வழியில் பலஸ்தீன மக்களை அவர்களது பூர்வீக மண்ணிலிருந்து விரட்டியடித்திருந்ததுடன் பலஸ்தீன மக்களுக்கு நிரந்த அகதி வாழ்க்கையையும் கொடுத்திருந்தனர்.

பலஸ்தீனர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்த, சியோனிஸ்ட்டுகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட யூதர்கள் பலஸ்தீனர்களை அகதிமுகாம் வாழ்க்கைக்கு உட்படுத்தியிருந்தனர். ஜெர்மனியில் நாசிக் கட்சியும் ஹிட்லரும் யூத மக்களுக்கும், இடதுசாரிகள் ஜனநாயகவாதிகள் மற்றும் ஜிப்சிகளுக்கு செய்த கொடூரங்களுக்கும், இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களுக்குச் செய்த கொடூரங்களுக்கும் ஒப்பானதொரு செயலையே தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்திருந்ததுடன் முற்போக்கு சக்திகள், ஜனநாயவாதிகள், இடதுசாரிகள் என அனைவரையும் கொன்றொழித்திருந்தனர். இத்தகைய செயல்கள் அனைத்தையும் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளை பாசிசப்ப் போக்குக் கொண்டவர்கள் என இனங்காண்பதே பொருத்தமானதாகும். தேசிய விடுதலைக்காகப் போராடுவதாக சொல் அளவில் கூறிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நடைமுறையில் பாசிசப் போக்கு கொண்டவர்களாக விளங்கினர் என்பதே உண்மையாகும்

தெடரும்