Fri09172021

Last updateSun, 19 Apr 2020 8am

வைரமுத்து அண்ணாந்து விட்ட கொட்டாவி எல்லாம் ஈழ காவியமாக வரப்போகிறது

"பண்ணென்பார் பாவமென்பார் பண்பு மரபென்றிடுவார்

கண்ணைச் செருகிக் கவியென்பார் - அண்ணாந்து

கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே

முட்டாளே இன்னமுமா பாட்டு"

புதுமைப்பித்தனின் நக்கல் இது. வைரமுத்து அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் தமிழ் சினிமாப் பாட்டாச்சு. தமிழ்ச் சினிமா என்கின்ற மூன்றாந்தர கேலிக்கூத்தும் அதன் பாடல்களும் எப்படி வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதில் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையின் வடமாகாணசபை வைரமுத்துவை பொங்கல் விழாவிற்கு எதற்காக கூப்பிட வேண்டும்?. வைரமுத்து உணர்ச்சிவசப்பட்டு "நான் ஈழ காவியம் பாடியே தீருவேன்" என்று ஒற்றைக்காலில் நிற்கிறாரே; இலங்கைத்தமிழர்கள் பட்ட கஸ்டம் எல்லாம் போதாதா? இவரின் காவியத்தையும் காது கிழியக் கேட்க வேண்டுமா? அவர் ஜிப்பாவில் கையைச் சொருகிக் கொண்டு, கண்ணைச் செருகிக் கொண்டு சொல்வதையெல்லாம் கவிதை என்று கேட்க வேண்டுமா?

"எச்சாமம் வந்து எதிரி அழைத்தாலும்

நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்

குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்

சங்கானை மண்ணுள் மலர்ந்த மற்ற வியட்நாமே

உன் குச்சுக் குடிலுக்குள் குடியிருந்த கோபத்தை மெச்சுகிறேன்"

என்று சாதிவெறிக்கு எதிராக போராடிய ஏழை மனிதர்களை பாடினார் கவிஞர் சுபத்திரன். இவ்வாறு தம்முடைய வாழ்நாள் முழுவதும் போராட்டங்களின் பக்கம், மக்களின் பக்கம், உண்மையின் பக்கம் நின்று மறைந்த கவிஞர்களின் வரிசை, இன்றும் வாழ்கின்ற கவிஞர்களின் வரிசை மிக நீண்டது. அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், மஹாகவி, நீலாவணன், சுபத்திரன், பசுபதி, சண்முகம் சிவலிங்கம், வில்வரட்னம், நுஃமான், சிவசேகரம் என்று நீண்டு கொண்டு போகும் அந்த வரிசை. இவர்களில் பலரது கவிதைகள் நூலாக வரவில்லை. போரின் கொடுமையினாலும், முதுமையின் தனிமையினாலும் வறுமையில் வாழ்கிறார்கள் பலர். மறைந்த கவிஞர்களை நினைவு கொள்ளாத, வாழ்கின்ற கவிஞர்களைக் கண்டு கொள்ளாத வடமாகாணசபை, பெரும் பணம் பெற்றுக் கொண்டு முகத்துதி செய்து பாட்டெழுதும் வைரமுத்துவைக் கூப்பிட்டு பொங்கல் வைக்கிறது.

மக்கள் எழுத்தாளன், டொமினிக் ஜீவா தனது மல்லிகை சஞ்சிகைகையை தலையில் சுமந்து கொண்டு தெருத்தெருவாக அலைந்து திரிந்து விற்றதாக குறிப்பிடுகிறார். 1966 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நானூறுக்கும் அதிகமான மல்லிகை இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தமிழ், சிங்கள எழுத்தாளர்கள் முற்போக்கு சிந்தனைகளை எழுதினார்கள். படைப்பாளிகளின் படங்களை மல்லிகையின் அட்டையில் போட்டு அவர்களின் எழுத்துகளிற்கு ஜீவா மரியாதை செய்தார். மல்லிகைப் பந்தல் பிரசுரம் என்னும் பதிப்பகத்தை நிறுவி அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை வெளிக் கொண்டு வந்தார். இந்த மகத்தான மனிதன், மக்கள் எழுத்தாளன், சமவுடமைப் போராளி வடமாகாண சபையின் கண்களிற்கு தெரியவில்லை.

இவர்கள் கூப்பிட்டிருக்கும் "கவியரசரை" ஒரு கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரிக்கு பேச அழைத்த போது தமது புத்தகங்களை குறிப்பிட்டளவு வாங்க வேண்டும் என்றும் நிபந்தனை போட்டாராம். அவர்கள் ஒப்புதல் அளித்து விட்டு வந்த பிறகு மறுநாள் தொலைபேசியில் அழைத்து முதலில் சொன்னதைப் போல் இருமடங்கு புத்தகங்கள் வாங்கினால் தான் வருவேன் என்று வட்டியுடன் மறுநிபந்தனை போட்டாராம் காசுக்கவிஞர். மாணவர்கள் மறுத்து விட்டு தமது கோபத்தை பொதுவெளியில் பதிவு செய்தனர். இவரைத் தான் உழைப்பாளிகளின் பொங்கல் விழாவிற்கு கூப்பிட்டிருக்கிறது வடமாகாண சபை.

தனிப்பட்ட வாழ்வு என்ற ஒன்று இல்லாமல் தமிழ்மக்களின் விடுதலை என்ற இலட்சியத்தை நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்த டேவிட் அய்யா அண்மையில் மறைந்தார். அந்த மனிதருக்கு ஒரு நினைவு அஞ்சலியைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யவில்லை. அதன் அதிகாரத்தில் உள்ள வடமாகாண சபை செய்யவில்லை. மக்களிற்காக வாழ்ந்த மனிதர்களின் நினைப்பு இல்லாத இவர்கள், அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நேரம் இல்லாத இவர்கள் அரிதாரம் பூசும் அவதாரங்களிற்கு அந்தாதி பாடுபவரை அழைத்து வந்து ஆரத்தி எடுக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சினிமா கோமாளிகளின் படவெளியீட்டின் போது மண்டை கழண்ட கூட்டம் ஒன்று பால் ஊற்றி தமிழரின் மானத்தை கழுவி ஊற்றியது. அதன் போது வடமாகாண சபையின் அமைச்சர் பெருமகன் ஒருவர் "அறிவிருக்கா உங்களிற்கு எல்லாம்" என்று அவர்களை திட்டினார். இன்று அதே அமைச்சர் பெருமக்கள் தமிழ்ச்சினிமா காசுக்கவிஞரைக் கூப்பிட்டு கவிதை பாட வைக்கிறார்கள். பால் ஊற்றியவர்கள் வீணாப்போன விடலைப்பொடியன்கள். நீங்களோ நாங்கள் தேர்ந்தெடுத்த அமைச்சர் பெருமக்கள். எதைக் கொண்டு எம்மை அடிப்போம்.

அரசியலில் தான் எம் மக்களை கொன்ற இலங்கை அரசுடன் கூடிக் குலாவுகிறீர்கள். இலங்கைத் தமிழ் மக்களை அழித்து இலங்கையை இந்தியாவின் இன்னொரு மாநிலமாக அடிமைப்படுத்த துடிக்கும் டெல்லிவாலாக்களின் காலில் விழுகிறீர்கள் என்று பார்த்தால் உழவர்களின் திருநாளை தமிழ்ச்சினிமா காசுக்கவிஞரைக் கூப்பிட்டு உழைப்பையும், கவிதையையும் கேவலப்படுத்துகிறீர்கள். யாரிடம் நோவோம், யார்க்கெடுத்துரைப்போம்.