Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்

சிவராசா வாத்திக்கு பொம்பிளைகளை பிடிக்காது. அதனாலே பட்டினத்தாரை பிடிக்கும். வாத்திக்கு கர்ணகடூரமான குரல். இப்ப இருந்துதென்றால் கட்டாயம் இந்தக்கால தமிழ்படங்களில் பாட சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். அவ்வளவிற்கு சகிக்க முடியாத குரல் ஆனாலும் தாளம் போட்டுக் கொண்டு பட்டினத்தார் பாடல்களை பாடும்.

கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே !

சாந்தி தியட்டருக்கு பக்கத்திலே இருந்த ஒரு ரியுட்டரியில் தான் வேலன், விஜயன், தேவன், லோகன் எல்லாம் சிவராசா வாத்தியிட்டை கெமிஸ்ட்ரி படித்தார்கள். சிவராசா வாத்தியை யாழப்பாண தனியார் கல்வி நிலையங்களில் பாணியிலே சொல்வதென்றால், யாழ் பிரபல இரசாயனவியல் ஆசிரியர் என்று சொல்லலாம். தீவிர இடதுசாரி, ஆனால் அந்த நேரத்தில் காட்டுத்தீ போல கனன்றெழுந்த ஈழத்தேசிய விடுதலைக்குப் பிறகு தான் தமிழ்தேசமும், சிங்கள தேசமும் பொதுவுடமையை நோக்கி பயணிக்க முடியும் என்ற சிந்தனையைத்தான் அவரும் கொண்டிருந்தார். பிரசுரங்கள் எழுதுவது, அரசியல் வகுப்புகள் எடுப்பது, உழைப்பதில் பெரும்பகுதியை அவர் சார்ந்த இயக்கத்திற்கு கொடுப்பது என்று தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருடைய நெல்லியடி ஊர்ச்சனம் நல்ல மனிசன் ஆனால் என்று ஒரு இழுவை இழுப்பார்கள். அந்த இழுவைக்கு மண்டை கழண்டு போச்சு என்பது தான் அர்த்தமாக இருக்கும். வாத்திக்கு ஏன் பெண்களை பிடிக்காமல் போனது என்று இவனுகளிற்கு தெரியாது. கேட்கவும் துணிவில்லை.

பட்டினத்தார் பாடல் முடிய குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் என்று இரத்தக் கண்ணீர் படப்பாட்டை பாடும். பாட்டின் நடுவில் அடி காந்தா என்று ராதா கூப்பிடும் வசனத்திற்கு வாத்தியின் குரல் அப்பிடியே ராதாவின் குரலிற்கு ஒத்து போகும். வாத்தி பாடும் போது இவனுகளும் சேர்ந்து பாட வேண்டும். தொடக்கத்தில் லோகன் பாடாமல், தாளம் போடாமல் இருந்தான். இவன் பெட்டைகளை விரும்புகிற கட்சியோ என்று வாத்திக்கு சந்தேகம் வந்து விட்டது. "ஏண்டா நடிக்கிறாய்" என்று லோகனை கேட்டது. "தாளம் போட்டதால் அடி வாங்கினேன். அது தான் பேசாமல் இருக்கிறேன்" என்றான் அவன். "ஏண்டா தாளம் போட்டதுக்காக யாராவது அடிப்பாங்களா" என்றான் விஜயன். நான் தாளம் போட்டது பக்கத்திலே இருந்த பெட்டையின்ரை துடையிலே என்றான் லோகன் அமைதியாக. "அட நாசமாய் போனவனே உன்னை கொல்லாமல் விட்டது பெரிய விசயம்" என்றான் தேவன்

வகுப்பு முடிந்த பிறகு வாத்தி பக்கத்து தேனீர்கடையில் இவங்களோடை இருந்து சிகரட் இழுத்துக் கொண்டு கதை பேசும். பீடிக்கே கஸ்டப்படுகிறவனுகள் வாத்தி கொடுக்கிற கோல்ட்லீஃப் சிகரட்டிற்காக தங்களிற்கும் பெட்டைகளை பிடிக்காதது போல நடிப்பானுகள். வாத்தி எப்பவும் இரண்டு விசயங்களை தான் கதைக்கும். ஒன்று பெண் வெறுப்பு, இரண்டாவது அரசியல். அல்லது இரண்டையும் கலந்து கதைக்கும். அதாவது அரசியல் ஏன் பெண்களால் அழிந்து போகிறது என்பதை உதாரணங்களுடன் விளக்கும். அந்தக் கதைகளில் உண்மை இருக்கிறதா இல்லையா என்றோ அல்லது பெண்கள் தான் அந்த இயக்கங்களின் பிரச்சனைகளிற்கு காரணமா என்றும் தப்பித்தவறியும் கேட்கக் கூடாது. பிறகு உதாரணங்கள், விளக்கங்கள் அருவி மாதிரி கொட்டும். ஜே.வி.பியில் பிரிவு வந்ததுக்கு காரணம் மஞ்சு என்ற பெண். ரோகண விஜயவீராவும், லயனல் பொபகேயும் அதனால் தான் மனஸ்தாபப்பட்டார்கள். பிரபாகரனிற்கும், உமாமகேஸ்வரனிற்கும் சண்டை வந்து புலி உடைந்தது ஊர்மிளாவினால். ராசதுரை கூட்டணியை விட்டு வெளிக்கிட்டது யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்காக இல்லை பொம்பிளை பிரச்சனை தான்.

வாத்தி வேறு இயக்கத்தில் இருந்தாலும், காதலிக்க கூடாது கலியாணம் கட்டக் கூடாது என்று இயக்கவிதிகளை வைத்திருந்த பிரபாகரனை தான் தனது மானசீக தலைவனாக வைத்திருந்தார். வாத்தியின் பெண் வெறுப்பு தான் அதற்கு காரணம் என்று தனியே எடுத்து விளம்ப தேவையில்லை. என்ன செய்யிறது அவையள் வலதுசாரிகள் அதனாலே தான் அவையளோடை சேரவில்லை என்று சொல்லும்.

ஒரு நாள் வாத்தி வகுப்பிற்கு வரப்பிந்திய போது இவனுகள் தங்களினுடைய குரங்குச்சேட்டைகளை தொடங்கி விட்டான்கள். மேசையிலே தாளம் போட்டு பெட்டைகள் பக்கம் அசடு வழிய பார்த்துக் கொண்டு "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" என்று பாடினார்கள். ஏண்டா, நீங்க கதைச்சாலே குரலை சகிக்கேலாது. இதிலே பாட்டு வேறேயா என்பது போல அவளுகள் காதை பொத்திக் கொண்டு கடுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்கள். "என்றும் உனக்காக உயிர் வாழும் துணையில்லையா" என்று பாடும் போது கணக்காக வாத்தி உள்ளே வந்தது. துரையப்பாவிற்கு அடுத்த துரோகிகள் இவனுகள் தான் என்பது போல ஒரு பார்வை பார்த்தது. இன்றைக்கு கோல்ட்லீஃப் இல்லை என்ற கவலையோடு இவனுகள் இருந்தார்கள். ஆனால் வாத்தி வகுப்பு முடிய சிகரட்டை எடுத்து நீட்டியது. பிறகு ஒரு சிரிப்போடை தன் கதையை சொன்னது.

யாழ்ப்பாண வழக்கப்படி வாத்திக்கும் தாய், தகப்பன் பேசிச் செய்த கலியாணம். இரவு அத்தனை நாள் மனது முழுக்க அடக்கி வைத்திருந்த கனவுகள் நனவாகப் போகும் கணத்தை எதிர்நோக்கி அறைக்குள் நுழைந்தார். உள்ளே அந்த பெண் அழுது கொண்டிருந்தது. வாத்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அந்தப் பெண் விம்மிக் கொண்டே நான் ஒருவரை காதலிக்கிறேன், வாழ்ந்தால் அவரோடு தான் வாழ்வேன், இல்லையென்றால் வாழ்வை முடிப்பேன் என்றது. இந்த இடத்தில் வேறு யாராவது என்றால் நூறு கோடி மின்னல்கள் மின்னியிருக்கும். இரு பெரு மலைகள் மோதியது போல இடி முழங்கியிருக்கும். ஆயிரம் வயலின்கள் முகாரி பாடியிருக்கும். ஆனால் வாத்தி கசப்பு மருந்தை விழுங்க வேண்டுமென்றால் விழுங்கித் தான் ஆக வேண்டும் என்பது போல வேதனையை விழுங்கிக் கொண்டது. விருப்பம் இல்லாதவளோடு எப்பிடி வாழ முடியும். அதனால் அவளை கூட்டிக் கொண்டு போய் அவளது காதலனிட்டை கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன்.

அம்மா அழுதா, பெரியமாமா உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிட்டுதா என்று கத்தினார். ஆனா எனக்கு நிம்மதியாக இருந்தது. அம்மா, அய்யாவின்ரை கட்டாயத்துக்காகத் தான் கலியாணம் கட்ட சம்மதிச்சனான். இனி பிரச்சனையில்லாமல் இயக்க வேலைகளை பார்க்கலாம் என்ற சந்தோசம் தான் எனக்குள்ளே இருந்தது. இவ்வளவு சனமும் சாகும் போது நான், என்ரை குடும்பம் என்று சுயநலமாக வாழ வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நிம்மதி.

இனவெறுப்பு, மனிதப்பலிகள், அதிகாரத்தின் ஆணவம், மழை தந்து வாழ்வு தந்த காட்டை அழித்து மரத்தை வெட்ட மழை பொய்த்து மண் வரண்டு போன தீவில் தமிழரை வெட்ட குருதிமழை பெய்தது. ஆயுதப்படைகளை கட்டவிழ்த்து விட்டு விட்டு போர் என்றால் போர் என்று அதி உத்தம ஜனாதிபதி அப்பாவி மக்களிடம் போர்பிரகடனம் செய்த ஒரு நாளில் வாத்தி வீட்டை விட்டு, வகுப்புகளை விட்டு, இவனுகளை விட்டு காணாமல் போனார்.

எத்தனையோ காலங்களிற்கு பிறகு தேவன் யாழ்ப்பாணம் போனான். வேலன் மட்டும் ஊரிலிருந்தான். அவனிடம் வாத்தியை பற்றி விசாரித்தான். எல்லா இயக்கங்களை போல வாத்தியின் இயக்கமும் மக்கள் விரோத கொலைவெறிக் கூட்டமாகவே இருந்தது. போராளிகள் என்று போட்டிருந்த முகமூடிகள் கழன்று விழுந்து கொலையாளிகள் என்ற உண்மை முகங்கள் வெளிப்பட்டன. மக்களிற்காக போராடுகிறோம் என்றவர்கள் அந்த மக்களையே ஆயுதமுனையிலே அச்சுறுத்தினார்கள். இலங்கை அரசு, இந்திய அரசு, ஏகாதிபத்தியங்கள் என்று எதிரிகளிடம் சரண் அடைந்தார்கள். வாத்தியைப் போன்று மக்களை நேசித்தவர்கள், மனச்சாட்சி கொண்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது தப்பியோடினார்கள். இயக்கத்தை விட்டு விலகி வந்த வாத்திக்கு யாருமே மிஞ்சியிருக்கவில்லை. வாத்தியின் லட்சியங்கள் சிதைந்து போயின. நம்பிக்கைகள் அழிந்து போயின. சொந்த மனிதர்கள்  இறந்து போயினர். வாத்திக்கு மனநிலை குழம்பி போயிற்று.

"சொன்னால் நம்ப மாட்டாய், சுயநினைவின்றி, அகதியாய், அநாதையாய் சுற்றி திரிந்த வாத்தியை அந்த பெண் தான் இப்ப ஒரு தாய் மாதிரி பாத்துக் கொள்ளுது". அடுத்த நாள் நெல்லியடிக்கு வாத்தியை பார்க்க போனார்கள். அந்த பெண்ணுக்கும் புருசனிற்கும் பின்னாலே வாத்தி ஒரு சிறு குழந்தையை போல தத்தி தத்தி போய்க் கொண்டிருந்தது.{jcomments on}