Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"தூய கரங்கள் - தூய நகரங்கள்"

சாதிய சமூகத்தில் "தூயது" என்பது, ஒரு பாசிசக் கருத்தியலே. தமிழன் என்ற "தூய" கருத்தியலும் - வாழ்வுமுறையும், பிற இன மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகத்துக்கு எதிரான மனித விரோதப் பண்பாட்டையும்  - நடைமுறையையுமே  முன்வைக்கின்றது.

"தூய" தமிழர் என்ற ஒடுக்கும் சாதிய கருத்தியலானது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சாதியத்தில் இருந்து சமூகத் தூய்மையைக் கோருகின்றது. இந்த தூய்மைவாதமே பிற பண்பாட்டு கூறுகளுக்கு எதிராக, கோயில்களில் புனிதத்தை முன்வைக்கின்றது. அந்தந்த சாதிக்குள்ளான சாதிய வாழ்க்கை முறைமையையே தூய்மைக் கோட்பாடு முன்வைக்கின்றது. மனிதன் உண்ணும் உணவில், புனிதத்தையும் தூய்மையையும் முன்வைக்கின்றது. எதைக் கடவுளுக்கு படைக்கலாம் என்ற, சாதிய வக்கிரத்தையும் சமூகத்தில் புகுத்துகின்றது.   

கூட்டமைப்பு மூலம் தமிழ் மக்களை அடக்கியாளும் அதிகாரத்தைப் பெறமுடியாத அணியினரின் கோசம் தான் "தூய கரங்கள் - தூய நகரங்கள்" என்பதாகும். யாழ் மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் மூலம் முன்வைத்திருக்கும் இக்கோசமானது, அவரினதும் - அவர் கட்சியினதும் கடந்தகால கொள்கையும் நடைமுறையுமாகும். இந்த பின்னணியில் அவர்கள் "மாற்றத்துக்காய் வாக்களியுங்கள்" என்று கோருகின்றார். சரி எந்த மாற்றத்துக்காக?

சுரண்டலற்ற மனித சமுதாயத்துக்காகவா!?, சாதிகளற்ற மனித வாழ்வுக்காகவா!?, நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான "தமிழ்" தேசிய பொருளாதாரத்தை உருவாக்கவா!?, இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராடவா!? மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்கவா!? யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான யாழ்மையவாத சமூகத்தை மாற்றி அமைக்கவா!? இல்லவே இல்லை. இருக்கின்ற பிற்போக்கான யாழ் மேலாதிக்க வெள்ளாளிய சாதிய சமூகத்தை தக்க வைக்கவும், அதற்கு தலைமை தாங்கவுமே வாக்கைக் கோருகின்றனர். அவர்கள் போடும் வேசங்களைக் கடந்து, இதுவே தான் உண்மை.

மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன வெள்ளாளிய இந்து சாதிய சமூக அடிப்படையில் இருந்தே, வேள்வித் தடையைக் கோரி வழக்கு தாக்கல் செய்தது முதல், சாதிய மயானங்களைத் தக்க வைக்கும் வண்ணம், அண்மைய போராட்டங்களுக்கு எதிராக சாதிய அடிப்படைகளை உயர்த்திப் பிடித்தவர். இது தான் அவர் நிற்கும் கட்சியின் வரலாறும் கூட.

 

தேர்தல் அரசியலை தங்கள் அரசியல் தேர்வாகக் கொள்ளும் போதே இது ஊழலானது.  இந்த தேர்தலானது, இன்றைய நவதாராளவாத பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் நவதாராளவாதக் கொள்கையானது, மக்களை ஏமாற்றுவதில் இருந்து தொடங்குகின்றது. மக்களின் தேசிய வாழ்வை சூறையாடுவதையே, நவதாராளவாதம் தனது சர்வதேசக் கொள்கையாகக் கொண்டது. இதற்கு வெளியில் இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. "தூய கரங்கள் - தூய நகரங்கள்" என்பது பொருளற்றது. நவதாராளவாதத்தினால் மாசடைய வைக்கப்படுவது. இந்த பின்னணியில் "மாற்றத்துக்காய் வாக்களியுங்கள்" என்பது போலியானது, புரட்டுத்தனமானது. தேர்தல் அரசியலானது சமூகப் பொருளாதாரத்தில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது. இங்கு மாற்றம் என்பது, கூட்டமைப்புக்கு மாற்றாக தமக்கு வாக்களிப்பதையே கோருகின்றனர். கூட்டமைப்பின் அதே சமூக பொருளாதாரக் கொள்கையைத் தாண்டி, எதையும் மாற்றாய் முன்வைக்க முடியாது. இதுதான் இந்த மாதிரியான தேர்தல் கட்சிகளின் மாற்ற முடியாத அரசியல் கொள்கையாகும்.

வேள்வி - சுடலை குறித்த சாதிய வக்கிரங்கள்

தேர்தல் தொடங்கியவுடன், வாக்குப்பெற்றுக்கொள்ள, வேள்வியை தடை செய்ததை நியாயப்படுத்தும் தர்க்கங்களை மணிவண்ணன் முன்வைக்கின்றார். யாழ் வெள்ளாளிய சாதியச் சுரண்டல் சமூகத்தின் சட்டத்தைக் கொண்டு வேள்வியை தடை செய்த, தனது ஒடுக்கும் சாதிய நடத்தையை மூடிமறைக்க முற்படுகின்றார்.

"நானும் வேள்வி நடைபெறும் ஆலயமும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள்…" என்கின்றார்.

நானும் நீயும் ஓரே சாதியாக இருக்காத போது, எப்படி ஓரே மதமாக இருக்க முடியும். நீ ஓடுக்கும் சாதி – மதத்தை பிரதிநிதித்துவம் செய்யும் போது, நான் ஓடுக்கப்பட்ட சாதி - மதத்தை சேர்ந்தவனாக இருக்கும் போது, நாம் ஒன்று என்று கூறுவதே வன்முறையிலான ஒடுக்கும் சாதியின் ஓடுக்குமுறை தான். "வேள்வி நடைபெறும் ஆலயப்" பண்பாடும் - வழிபாட்டு முறைகளும், உனது மதப் பண்பாட்டு வழிபாட்டு முறையில் இருந்தே வேறுபட்டது. இதற்கு என்று வெவ்வேறு வரலாறுகள் உண்டு.

உழைத்து வாழும் எனது பண்பாட்டையும் - உண்டதைப் படைக்கும் எனது வழிபாட்டு முறைமையை "புனிதத்துக்கு" முரணானது என்றும், அதை இறைச்சிக் கடையுடன் ஒப்பிடும் உனது ஓடுக்கும் சாதிய - மத அதிகாரம், ஒடுக்கும் வன்முறையிலானது. நான் உண்ணும் உணவை எனது கடவுளுக்கு படைப்பது எனது பண்பாடு, நீ உண்ணும் உணவை உனது கடவுளுக்கு படைப்பது உனது பண்பாடு. இது எப்படி ஓன்றாக முடியும். சாதி இருக்கும் வரை கடவுள் எப்படி ஒன்றாக இருக்க முடியும். இன்னும் எத்தனையோ கோயில்களுக்குள், நாங்கள் போகவே முடியாது.

"வேள்வியை நிறுத்த வேண்டும் என்று ஞானப்பிரகாசர், ஆறுமுகநாவலர் இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் உட்பட பலர் போராடினர் நானும் போராடினேன். ஒவ்வொருவரும் தமக்கிருந்த பலத்தை பயன்படுத்தி வெவ்வேறு வழிகளில் போராடினர். நானும் எனக்கிருந்த வசதியை பயன்படுத்தி நீதிமன்றை நாடினேன். .. மேலே உள்ளவர்கள் எமது சமூகம் முற்போக்கான நாகரீகமான சமூகமாக மாற வேண்டும் என்று போராடினார்களே தவிர வேறொன்றும் இருக்கப்போவதில்லை. அவர்கள் செய்தது தவறு எனின் மேலே உள்ளவர்களின் துரோகிகள் பட்டியலில் ஞானப்பிரகாசர், ஆறுமுக நாவலர், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் ஆகியோர் வரிசையில் நான் சேர்க்கப்படுவதை பெருமையாக கருதுகின்றேன்."

இப்படியாக கூறும் மணிவண்ணன் சாதியச் சமூகத்தின் வழித்தோன்றல்கள் வழியில் தன்னைத்தானே முன்னிறுத்துகின்றார். சாதிச் சமூகத்தை முன்னிறுத்துவதை தாண்டி, எதையும் புதிதாக இங்கு முன்வைக்கவில்லை. இவர்கள் சாதிய சமூகத்தை கட்டிப் பாதுகாத்தவர்கள், அதற்காக உழைத்தவர்கள் என்பதே உண்மை.

"சமூகம் முற்போக்கான நாகரீகமான" தாக மாற்றவே என்றிவர் கூறுவது என்பதே, காதுக்கு பூ வைக்க முனைவதாகும். இவர்கள் சாதிகளற்ற சமூகத்தைக் கோரவில்லை. சாதி அடிப்படையைக் கொண்ட சமூகத்தின், ஒடுக்கும் சாதியப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை அடக்கியவர்கள். ஓடுக்கும் சாதிய அடிப்படையிலான ஒற்றைப் பண்பாட்டை ஏற்று ஒழுகும் வண்ணம், பிற பண்பாடுகள் மீது ஒடுக்குமுறைகளையும் இழிவுகளையும்  சுமத்தியவர்கள்.

பிரபாகரனின் செயலுடன் ஓப்பிட்டுப் "பெருமையாக" காட்டி வாதிடுவது என்பது, பிரபாகரன் குறித்து சமூகத்தில் நிலவும் "புனித" விம்பத்தை தனது வாக்குகளாக மாற்றுவதே. பிரபாகரன் போன்ற இளைஞர்கள் தேர்தல் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்று கருதியவர்கள். மக்களுக்காக சுயநலமற்ற தியாகங்களைச் செய்யும் உறுதியுடனேயே, அவர்களின் அரசியல் ஆரம்பித்தது. உங்கள் அரசியல் மாற்ற முடியாத நவதாராளவாத தேர்தல் சாக்கடைக்குள் புளுத்து வெளிக்கிளம்புகின்றது. எப்படி உங்களை நீங்கள் பிபாகரனுடன் ஓப்பிட முடியும்? வாக்குப் பெற, மக்களை ஏமாற்றுவதை தாண்டி, நேர்மை எவற்றையும் உங்களிடம் காணமுடியாது.

ஓடுக்கப்பட்ட மக்களின் வேள்வியின் மரபை மறுக்க, "உடன் கட்டை ஏறுவதை அங்கீகரிக்கின்றீர்களா? மரபு என்று மாதவிடாயில் உள்ள  பெண்  கோயிலுக்குள் நுழைவதை தடைசெய்வதை அங்கீகரிக்கின்றீர்களா? என்றிவர் கூறி வேள்வித்தடையை நியாயப்படுத்தும்  தர்க்க ரீதியான வாதம் மூலம், தனது சாதிய சமூக வக்கிரத்தை நியாயப்படுத்துகின்றார்.

ஏதோ உடன்கட்டைக்கு எதிராக இந்து அடிப்படையில் நின்று தாங்கள் போராடிச் சாதித்தது  போன்றும், மாதவிடாய் பெண்களை கோயில்களில் நுழைவதை இந்துகள் முன்னின்று நடத்தியது போன்றும், வாதிட முனைகின்றார். உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் போராட்டம், மாதவிடாய் பெண்கள் கோயில்களில் நுழைவதற்கான போராட்டம் .. இந்து மதத்துக்கு எதிராகவும், உங்களைப் போன்ற இந்து வெள்ளாளிய – பார்ப்பனிய சாதிய சமூகத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தின் மூலமே சாத்தியமானது. அதை இந்துக்களாக இருக்கும் நீங்கள், உரிமையாக்கிக் கொள்ள முடியாது.

இன்று பூசாரியாக பிராமணப் பெண்கள் இருக்க முடிவதில்லை, அனைத்து சாதியைச் சேர்ந்த ஆண்கள் கூட பூசாரியாக முடிவதில்லை. இன்னமும் ஓடுக்கப்பட்ட சாதிகள் கோயிலுக்குள் நுழைய முடிவதில்லை. ஆக இங்கு மரபும், சாதியமுமே தொடருகின்றது. அதையே உங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளீர்கள். இதற்கு எதிராக நீங்கள் போராடியது கிடையாது. ஆனால்  ஓடுக்கப்பட்ட சாதிய மக்கள் மீது, வெள்ளாளிய இந்துத்துவ மரபை சாதிய அடிப்படையில் பின்பற்றக் கோருவதே வேள்வித்தடை.

இந்த வகையில் குடியிருப்பு மத்தியிலான சாதிய சுடலைப் போராட்டத்தையும் கையாண்டவர்கள் நீங்கள். சுடலையில் இந்து வெள்ளாளியச் சாதிய மரபைக் கோருகின்ற சுய முரண்பாட்டைக் கொண்டு, ஓடுக்கும் சாதியத்தை உயர்த்திப் பிடிப்பதையே உங்களில் காணமுடியும்.

இவர்கள் தேர்தலில் நிற்பது ஓடுக்கும் சாதிய - வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யத்தான். அதற்கான அதிகாரத்தைக் கோருவதன் மூலம், தங்கள் சுயபிழைப்புக்கு தேர்தல் அரசியல் உதவுகின்றது என்ற அடிப்படையிலேயே வாக்குக் கேட்கின்றனர். இந்த வகையில் எல்லா தேர்தல் கட்சிகளையும் தோற்கடிப்பதே சரியான அரசியல் தெரிவாக எம்முன் இருக்கின்றது.