Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"சுதந்திரம்" குறித்த கலை - இலக்கிய அபத்தங்கள்

மனிதவியல் என்பது சமூகத்தன்மையிலானதே ஒழிய தனிநபரியமல்ல. மனிதனின் சமூகத் தன்மையை உயிர்ப்பூட்டுவதும் ஒளியேற்றுவதும் தான், கலையின் சாரமாக இருக்க முடியும். தனிமனித ஆத்ம திருப்திக்கானதோ, செயலற்ற சுய நடத்தையை செயலாகக் காட்டுவதற்கான கவசமல்ல கலை. இப்படிப்பட்ட கலை தனிநபரியத்தை முன்னிறுத்தியதாகவும், பணம் புகழ் சம்பாதிக்கும் முதலாளித்துவக் கலையின் பொது சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டதே.

தனிநபரியவாத கண்ணோட்டத்தை முன்னிறுத்தி நிற்பவர்கள், கலைஞன் சுதந்திரமானவன் என்கின்றனர். கலை சுதந்திரமானது என்கின்றனர். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட "சுதந்திரம்" குறித்த இந்தப் பொது அளவுகோலானது, முதலாளித்துவக் கலை வரை பொருந்தும். இங்கு "சுதந்திரம்" குறித்தான தனிநபரியவாத அபத்தங்கள், கலையை உழைக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்து பிரித்துவிடுவதையே "சுதந்திரமாகக்" கருதுகின்றனர்.

கலை இலக்கியத்தை வர்க்க சமூக அமைப்பில் இருந்து "சுதந்திரமானதாக" கருதி படைப்பது முதல் அதை தர்க்கம் செய்வது வரை, தனிமனித "சுதந்திரம்" குறித்த முதலாளித்துவ சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டதல்ல. "சுதந்திரம்" என்பது எதிலிருந்து என்ற கேள்வியை இயல்பாக எழுப்பிவிடுகின்றது.

அனைவருக்கும் "சுதந்திரம்" இருக்கும் போது, "சுதந்திரம்" என்பது பொருளற்றது. சுதந்திரத்தைப் பற்றி பேசும் போதும் - கோரும் போதும், அனைவருக்குமான சுதந்திரத்தை முன்வைப்பதும் - அதற்காகவும் வாழ வேண்டும். கலை இலக்கியம் "சுதந்திரமானது" என்று கூறுகின்றவர்களும் - கோருகின்றவர்களும், கலை இலக்கியம் அரசியல், வர்க்கம்.. அடிப்படையில் இருந்து "சுதந்திரமானது" என்ற பொருளில் தான் முன்வைக்கின்றனர். அதாவது சமூகத்தில் இருந்தும் சுதந்திரமானது என்று கருதுகின்ற அதேநேரம், இது கருத்துமுதல்வாத சிந்தனை முறையாகும். சாராம்சத்தில் நிலவும் சமூக அமைப்புமுறை சார்ந்த, தனியுடைமைவாத முதலாளித்துவக் கண்ணோட்டமாகும்.

 

தன்னை "சுதந்திரமானவனாக" உணருகின்ற தனிமனித உணர்வும் வாழ்க்கை முறையும் - எவ்வளவுக்கு எவ்வளவு கற்பனையானதாகவும் பொய்யானதாகவும் நடிப்பாகவும் இருக்கின்றதோ - அதே போன்றதுதான் கலை இலக்கியம் குறித்த கண்ணோட்டமுமாகும். சமூகத்தில் இருந்து விலகி "சுதந்திரமானவனாக" கற்பனையில் வாழ்ந்தபடி, கலை இலக்கியத்தை படைத்தலென்பது, அனைவருக்குமான சுதரந்திரத்தை மறுக்கும் முதலாளித்துவக் கொள்கையும்  நடைமுறையுமாகும்.

கலை இலக்கியமானது மக்களுக்கானதே ஒழிய, தனிநபருக்கோ வேறு எந்தக் கும்பலுக்குமானதல்ல. மக்களில் இருந்தும் - நடைமுறை வாழ்க்கைப் போராட்டத்திலும் இருந்து, கலை இலக்கியத்தை பிரித்துவிடுகின்ற போது தான், கலை கலைக்காக என்ற இலக்கியக் கும்பலைத் தோற்றுவிக்கின்றது. மக்களுக்கு வெளிச்சத்தைக் காட்டாது, இருண்ட பக்கத்தை கொண்ட அம்பலப்படுத்தல்களையே இலக்கியமாக்குவதன் மூலம், தங்களை முதன்மையாக்கிக் கொண்டு முன்னிறுத்துவதையே கலை இலக்கியமாக்குகின்றனர்.

வாழ்வின் இருண்ட பக்கத்தை எழுதுவதா அல்லது பிரகாசமான பக்கத்தை பற்றி எழுதுவதா என்பது, கலை-இலக்கியத்தில் அடிப்படையான கேள்வி. இன்று பெரும்பாலான கலை இலக்கியவாதிகள், வெளிச்சமான பக்கத்தைக் கண்டடைவதேயில்லை, மாறாக இருளை மட்டும் அம்பலப்படுத்துவதுடன், அவ்வாறு அம்பலப்படுத்துவதை கலை-இலக்கியமாகவும் குறுக்கி விடுகின்றனர். இந்த வகையில் அம்பலப்படுத்தும் இலக்கியங்கள் எதிர்மறைவாதத்தையும், விரக்தியையும் முன்வைப்பதையே இலக்கியமாக்கி விடுகின்றனர். வெளிச்சத்தை காட்டுவதை படைப்புகளின் காண முடிவதில்லை. மனித வாழ்க்கையில் வெளிச்சத்தையே மறுதலிக்கின்ற - குட்டிபூர்சுவா வாழ்க்கையை உன்னதமானதாக கருதும், காரியவாத அற்பத்தனத்தை வாழ்க்கை முறையாக கொண்டவர்களின் படைப்பில் - ஒளியை இருட்டாக காட்டுவது நடக்கின்றது.

இந்த வகையிலான இலக்கியப் போக்கானது வெளிச்சத்தை இருளாகக் காட்டுவதன் மூலம், தங்களை புனிதர்களாக முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொள்கின்றனர். மக்களின் அறியாமையை போக்குவதற்கு பதில், மக்களின் குறைபாடுகளை அம்பலப்படுத்துவதை இலக்கியமாக்குகின்றனர்.

சமூக அறியாமையை போக்கி வெளிச்சத்தைக் காட்டாத அம்பலப்படுத்தல்களின் நோக்கமானது - தம்மை வேறுபடுத்தி புனிதர்களாக முன்னிறுத்தி முதன்மைப்படுத்துவதை குறிக்கோளாகக் கொள்கின்றது.

மக்களின் அறியாமையை விலக்கி வெளிச்சத்தை காட்டாது குறைபாடுகளை முன்னிறுத்தி தங்களை "முற்போக்காக" முன்னிறுத்துகின்ற பின்னணியில் தமிழ் இலக்கியங்கள் வெளிவருகின்றது. இங்கு கலை இலக்கிய உள்ளடக்கம் படுபிற்போக்கானதாகவும், கலை நயம் மிக உயர்வானதாக இருக்கும் வண்ணம் படைப்புகளை படைப்பதன் மூலம், அதைக் கொண்டாடுவதன் மூலம், மக்களுக்;கு அதிகளவு நஞ்சிட முனைகின்றனர்.

கலை கலைக்கானது வர்க்கத்தைக் கடந்தது, அரசியலில் இருந்து பிரிந்தது, அரசியலில் இருந்து சுதந்திரமானது... என்று கூறுகின்ற, கருதுகின்ற தமிழ் இலக்கியப் போக்குகள் யுத்தத்தின் பின்பாக வக்கிரமடைந்து வருகின்றது. யுத்த காலத்தில் ஏகாதிபத்தியங்கள்  தங்கள் நோக்கத்துக்காக தன்னார்வக் குழுக்கள் மூலம் உருவாக்கிய "அறிவுஜீவிகள்" - யுத்தத்திற்கு பின்னான கலை இலக்கியத்தை மக்களில் இருந்து தனிமைப்படுத்தி, அதை தனிமனித - கும்பல்களின் கொண்டாட்டமாக மாற்றிவிட முனைகின்றனர்.

வர்க்க ரீதியான சமூக அமைப்பு பற்றி அக்கறையற்ற குட்டிபூர்சுவா எழுத்தாளர்களின் நடத்தைகளை அனுசரிப்பது, அவர்களையே படிப்பது, அவர்களின் அற்பத்தனத்தை அனுசரிப்பது என்று - தமிழ் இலக்கிய உலகம் குறுகிய சந்துக்குள் முடங்கிவிடுகின்ற போக்கு - சமூக அவலங்களிள் மேலான கெக்கலிப்பாக வெளிப்பட்டு நிற்கின்றது.

இன்று இனவாத தமிழ் அரசியல் (பாராளுமன்ற அரசியல் வரை) எப்படி மக்களைக் கண்டுகொள்வதில்லையோ - அதே போல் கலை இலக்கியமும் மக்களில் இருந்த விலகியே பயணிக்கின்றது.

கலை கலைக்காக என்ற இலக்கியப் போக்கை இனம் காணுதல்

உதாரணமாக புகைப்படக் கலைஞனான கெவின் காட்டர் (Kevin Carter), 1994 இல் சூடானில் எடுத்த புகைப்படம் ஒன்று சர்வதேச விருதைப் பெற்றுக் கொடுத்தது. இதனால் குறித்த புகைப்படக் காட்சி உலகெங்கும் அறிமுகமானது.

கெவின் காட்டர் உணவின்றி மரணத்தின் விளிம்பில் வெட்டவெளியில் கிடந்த ஆபிரிக்கக் குழந்தையை - கழுகு உண்ண முனைந்த எதார்த்தமான காட்சியை தத்துரூபமாக புகைப்படக் காட்சியாக்கினான். இதன் மூலம் சிறந்த புகைப்படத்துக்கான சர்வதேச விருதையும் பெற்றான். இப்படி வாழ்க்கையே இருண்டுபோன மனிதர்களின் காட்சியை - உலகெங்கும் காட்சியாக்கியதன் மூலம் - உன்னதமான கலையாகியது. அதேநேரம் அந்தப் புகைப்படத்தை எடுத்த பின் - அந்தக் குழந்தைக்கு வெளிச்சத்தைக் காட்டாத - தனது பொறுப்பற்ற கலைத்தனத்துக்காக தற்கொலை செய்து கொண்டான்.

படைப்பாக்கியவுடன் (பணத்தை, புகழ்;.. அடைவதுடன்) தனது பணி முடிந்துவிட்டது என்ற முதலாளித்துவ தனிமனிதவாத குட்டிபூர்சுவா வர்க்க அலட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கலைஞனின்; "சுதந்திர" கலைத்தன்மையை - அந்தக் குழந்தைக்கு என்ன நடந்தது என்று பொதுவான சமூகத்தின் கேள்வியால் - அவனின் தன்னிலைவாத முதலாளித்துவ கண்ணோட்டத்தையே ஆட்டம் காணவைத்தது. அந்தக் குழந்தைக்கு வெளிச்சத்தைக் காட்டாத - சமூகத்துக்கு முன்மாதிரியாக நடக்காத - சுயநலமான தன் கலை நடத்தையை மனசாட்சி கொன்றுவிட - தற்கொலை செய்து கொண்டான்.

சர்வதேச விருது பெற்று - இறுதியில் தன்னைத்தான் அழித்துக் கொண்டதன் மூலம் - குறித்த புகைப்பட்ட கலைஞன், கலை இலக்கியத்துக்கு சொல்லும் செய்தி மிகத் தெளிவானது. படைப்புடன் உனது பணி முடியவில்லை. படைப்பைச் சுற்றிய பாத்திரங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதும், அதில் உனது சமூகப் பாத்திரம் என்ன என்பதை உள்ளடக்கியது தான் கலை இலக்கியம். படைப்பை படைத்தவுடன் படைப்பாளியின் கடமை முடிந்துவிட்டது - படைப்புக்கு சம்பந்தமில்லை என்று கூறி தப்பித்துச் செல்லும் படைப்பாளியின் தன்னலம் சார்ந்த அற்பத்தனத்தை (இதைத்தான் கலைச் "சுதந்திரம்;" என்கின்றனர்.) - தமிழ் இலக்கியத்தனமாக இன்று முன்னிறுத்தப்படுகின்றது.

வெறுமனே மருந்துச் சீட்டை எழுதும் மருத்துவர்கள், மருந்தைப் பெற்றவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்று எந்த அக்கறையற்றுக் கிடக்கும் சுயநலப் பேர்வழிகள் போல், நடந்துகொள்வதா கலை இலக்கியவாதிகளின் கொள்கையும் கோட்பாடுகளும்?. இதையே தங்கள் கோட்பாடாக முன்வைக்கின்ற - கலை கலைக்காகவே என்று கூறுகின்ற - கலை இலக்கியவாதிகளைக் கொண்டதே இன்றைய "தமிழ்" இலக்கியப் போக்கு.

கலை இலக்கியவாதிகளின் இன்றைய அற்பத்தனத்துக்கு நிகராகவே, மருத்துவ உலகம் உள்ளது. மருந்தை வாங்கக் கூடிய நிலையில் நோயாளி இருக்கின்றாரா என்பதை அலட்டிக் கொள்ளாத மருத்துவராக இருத்தலே, மருத்துவமாகி வருகின்றது. மருத்துவர் முதல் மருத்துவமனை வரை, இதுதான் கொள்கை. எழுதும் மருந்தானது நோய்க்கு அவசியமானதா? குறித்த மருந்து பக்கவிளைவுகள் அற்றதா? மருந்துகள் தொடர்பான உலக அறிவை உள்வாங்கி மக்களுக்கு பயன்படுத்துகின்றனரா? ... இப்படி எதையும் அலட்டிக் கொள்ளாது, மருந்துக் கம்பனியின் கொள்ளையடிக்கும் வியாபார நோக்கத்துக்காக, அதன் ஊக்கத் தொகைக்காகவும் மருந்தை எழுதுவது, தனியார் மருத்துவமனையின் கொள்ளை லாபத்தை உறுதிசெய்ய மருந்துகளை எழுதுவது, பணத்துக்காக தேவையற்ற சிகிச்சைகளைச்  செய்வதும், உடல் உறுப்பை களவாக எடுத்து விற்பதுவும் ... மருத்துவ பணியாகி இருக்கின்றது.

இது போன்று கலைஞர்கள் - இலக்கியவாதிகளும் சமூகம் பற்றிய பொது அக்கறையின்றி தனிப்பட்ட சுயநல நோக்கத்தை அடைய படைப்பாக்குவது, சமூகம் மீதான தனது சுய பங்களிப்பை மறுத்து அல்லது அலட்டிக் கொள்ளாது கலை - இலக்கியங்களை படைக்கின்ற வக்கிரத்தை படைப்புலகில் இன்று காண முடிகின்றது.

இனவாத தமிழ் தேசியவாதத்தைக் கொண்டு இயங்கும் சுயநலவாத அரசியல் போல் - கலை இலக்கியம் என்ற குண்டுச் சட்டிக்குள் பட்டம் கட்டி பறக்க விடுகின்றனர்.

மனித வாழ்க்கை இதற்கு மாறானது. இனம் மதம் சாதி .. கடந்த முன்னோக்கிய வளர்ச்சியான சமூகத்தை முன்னிறுத்தும் - முன்னேறிய கலை இலக்கியத்தை சமூக நடைமுறைகள் கோருகின்றது. பொது சமூக அறியாமையைப் போக்கி - முன்னேறும் ஒளியையே சமூகம் கோருகின்றது. இந்த தனியுடமை அமைப்பில் - தனிமனிதர்கள் இருக்கும் இன்றைய தமது நிலையில் இருந்து முன்னேறிச் செல்லுகின்ற வாழ்க்கை போராட்டத்தை நடத்துகின்றனர் என்பது  பொது உண்மையாகும்;. கலை இலக்கியம் சமூகம் சார்ந்தது என்ற வகையில் - சமூகம் முன்னேறிச் செல்லும் ஒளியைக் காட்டுவதாக இருக்க முடியுமே ஒழிய -  தன்னலத்துக்கானது அல்ல.

கலை - இலக்கியம் குறித்தான் பொது அறிவை பெற்றுக் கொள்வதற்காக, கலை இலக்கியம் என்றால் என்ன என்பதைக் குறித்து ஆராய்வோம்.

கலை - இலக்கியம் வர்க்கம் கடந்த ஒன்றா?

கலை இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை, எண்ணங்கள், உணர்வுகளின் வெளிப்பாடாகும். இங்கு படைப்பு கொண்டிருக்கக் கூடிய மொழி, பாத்திரம், பின்னணி முன்னேறிய நடைமுறை மாற்றத்துடன் முன்னோக்கியதாகவும் - அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சார ரீதியாக முன்னோக்கி இயங்கியல் வளர்ச்சியூடாக சமூகத்தை அணுகுவதாக இருக்கவேண்டும்;. சமூகம் சார்ந்த (வர்க்கம்) கலை இலக்கியம் இப்படித்தான் வெளிப்படும்.

சமூகக் கட்டமைப்பின் இறுகிய மூடியை அகற்றுவது, மூடப் பழக்கத்துக்கு எதிராக அறிவூட்டுவது, மனித முன்முயற்சியை தட்டிவிடுவது கலை இலக்கியத்தின் சாரமாக இருக்க வேண்டும்.   உணர்வு ரீதியாக கிளர்ச்சியைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அதிதீவிரமாக இயங்குவதற்கான உணர்வு எட்டுவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். துணிச்சலாக செயற்படும் ஆற்றலை வழங்குவதாக இருக்க வேண்டும். கலை - இலக்கியம் மனித தன்மையை மேல்நோக்கி நகர்த்த வேண்டும்.

இங்கு வெறுமனே தனிமனித அனுபவம் சார்ந்ததாக கலை-இலக்கியம் வெளிப்படும் போது, புறநிலை சார்ந்த உண்மைகளை இயல்பாகவே மறுதளித்துவிடும். படைப்பு என்பது பொதுவான உண்மையைக் கொண்டதாகவும் - பருமையான நடைமுறை சார்ந்ததாகவும் இருக்கவேண்டும். படைப்பானது இயங்கியல் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும. இயக்கமற்ற வெறும் கண்ணாடியாக படைப்பு இருக்கின்ற போது - அது இருக்கும் வர்க்க அமைப்பின் பிரதிபலிப்பாகிவிடுகின்றது.

இங்கு கலை இலக்கியம் பொருளின் பண்பில் இருந்து தொடங்குவதா அல்லது எதார்த்தத்தில் இருந்து தொடங்குவதா என்ற கேள்வி அடிப்படையானது. அரூபமான பண்பில் இல்லாமல் புறவய உண்மையில் இருந்து அணுகாத படைப்புகள் வாழ்க்கையை குறுக்கி அதற்குள் முடக்கிவிடுகின்றது. படைப்பாளி சமூகத்தின் வாழ்வியல் நடைமுறையில் இருந்து விலகி நிற்கும் போது, புறவய உண்மைகளில் இருந்து தீர்வுகளை காணமுடியாத ஒட்டுண்ணிகளாகிவிடுகின்றனர்.

"சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்ற பழமொழி ஒன்று உண்டு. கலை இலக்கியத்தைப் படைக்கின்றவர்களுக்கும் இது பொருந்தும்;. படைப்பாளி படைப்பின் கருவுடன் ஒன்றிய பொது நடைமுறையில் வாழாமல், அதற்கு முன்னேறிய (சொந்தத்) தீர்வைக் கொண்டு இருக்காத ஒருவரால் - வெறும் அகப்பையைத்தான் காட்ட முடியும். அதாவது படைப்பாளி கருவுடன் ஒன்றி வாழாமல் - தீர்வைக் கொண்டு இருக்காத வரை, படைப்பு என்பது வாழ்க்கைக்கு முரணான - கற்பனையை படைப்பாக்கி விடுகின்றது. சமூகப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முன்னேறிய தீர்வைக் கொண்டு இருப்பதும் - தீர்க்காமல் இருப்பது, படைப்பில் இரு வேறு முரண் நிலை படைப்புகளைக் கொண்டதாகவும், சாராம்சத்தில் இயங்கியல் - இயங்கியல் மறுப்பாகியும் விடுகின்றது.

இன்று தமிழ் கலை - இலக்கியம் சமூகத்திலிருந்து அன்னியமாகி இருப்பதுடன், மக்களின் பொது வாழ்க்கை நடைமுறையில் இருந்து விலகிய - லும்பன்தனமாக மாறி வருகின்றது.

அதாவது பாராளுமன்ற இனவாத தமிழ் அரசியல் எப்படி மக்களின் வாழ்க்கை நடைமுறையில் விலகி நிற்கின்றதோ - அதேபோன்று தமிழ் கலை இலக்கியமும் மக்களில் இருந்து அன்னியமாகிக் கிடக்கின்றது. அரசியல் போல் கலை இலக்கியம் மக்களில் இருந்து விலகி நிற்பதை, தனிமனித சுதந்திரமாகவும் - கலை இலக்கியத்தின் சுதந்திரமாகவும் காட்டுகின்றனர்.

அறிவை இரண்டாக்கும் இலக்கியப் போக்குகள் குறித்து

அறிவை இரண்டாக்குவது என்றால் - வாழ்க்கையை இரண்டாக மாற்றுவது. வாழ்க்கை ஒன்றாக இருந்தாலும் - அதை இரண்டாக்கிவிடுகின்ற சிந்தனை முறையானது - இலக்கியத்தை நடைமுறை வாழ்க்கையில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் பிரித்து விடுவது நிகழ்கின்றது. இது போன்று படைப்பாளி படைப்பை படைத்தவுடன், படைப்பாளியின் கடமை முடிந்துவிட்டது என்ற தர்க்கமானது,  இங்கிருந்துதான் தோன்றுகின்றது. இதற்கு அடிப்;படையாக இருப்பது - அறிவு பெறும் வடிவம் தான்.

மனித சிந்தனையிலான அறிவு என்பது ஒன்றாக இருந்தாலும் - அது இரண்டு வகைப்படக் காணப்படுகின்றது.

1.தனிப்பட்டதும் - குறிப்பானதையும் அடிப்படையாகக் கொண்ட எதார்த்தம் சார்ந்த அறிவு

2.பொதுத் தன்மையிலான எதார்த்தம் சார்ந்த அறிவு

பொதுவில் இவ்விரண்டும் தன்னியல்பாக பிரிக்க முடியாததாகவே காணப்படுகின்றது. ஆனால் வர்க்க அமைப்புக் காரணமாக, இதைப் பிரித்து அணுகிவிடுவது நிகழ்கின்றது. இந்த வகையில் இதைப் பிரித்துவிட்டால், புறவகையான உண்மையில் இருந்து விலகிவிடுவது நிகழ்கின்றது.

இந்த வகையில்

1.பொதுவானதில் இருந்து குறிப்பானதைப் பிரிப்பது. உதாரணமாக

1.வர்க்க அமைப்பு முறை சமூகம் சார்ந்த எல்லாவற்றிலும் இருக்க, அதை விட்டுவிட்டு குறிப்பான ஒன்றை மட்டும் பிரித்து முன்னிறுத்துவது.

2.சமூகத்தில் இருந்து காதலை, அன்பை மட்டும் பிரித்துப் பார்ப்பதும் - காட்டுவதும்

2.பொதுவானதையே புறவயமான எதார்த்தமாக பார்ப்பது, உதாரணமாக

1.தேசியம் பொதுவானதாக இருக்கும் போது - அதை மட்டும் புறவயமான எதார்த்தமாக பார்ப்பதும், காட்டுவதும்

2.சமூகத்தை பொதுவாக்கி, காதலை, அன்பை பொதுவில் இருந்து அகற்றுவது

3.குறிப்பானதை வெறுமனே பொதுவான இருத்தலுக்கான ஒன்றாகக் காண்பது. உதாரணமாக

1.தேசியம் பொதுவானதாக இருக்கும் போது - பெண்ணியம், வர்க்கம் .. என்று குறிப்பானதை  பொதுவானதாக முன்னிறுத்தி அணுகுவது

2.காதலை, அன்பை சமூகத்தின் இருப்புக்கான பொதுக் கூறாக காட்டுவது, அணுகுவது

இப்படி வாழ்க்கையை பிரித்து அணுகுகின்ற அடிப்படை, கருத்து முதல்வாத முறையாகும்;. இந்த வகையிலான சிந்தனை முறையிலான கருத்துமுதல்வாத இலக்கியங்கள், இறுதியில் சிந்தனையை முதன்மையானதாக முன்வைக்கின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இருந்து பிரிந்த சிந்தனை - அதாவது சிந்தனை மூலம் (கலை - இலக்கியம் மூலம்) சமூகத்தை அணுகுகின்ற முறைமையானது, கருத்துமுதல்வாதமாகும்.

இந்த கருத்துமுதல்வாதமானது, சிந்தனை செய்யும் செயலை முதன்மையானதாகவும், மாற்றத்துக்கான நடைமுறையாகவும், துடிப்பு வாய்ந்ததாகவும் கருதுகின்றது. சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதே இலக்கியம் என்று கருதுவதும், செயற்படுவதும் கருத்துமுதல்வாத முறையாகும். சிந்தனை செய்வதன் மூலம், அதை படைப்பாக்குவதே செயல் என்ற அளவுக்கு, கருத்துமுதல்வாதம் முன்னேறுகின்றது. இன்றைய கலை இலக்கியவாதிகள் இதை தான் தங்கள் கொள்கை மற்றும் நடைமுறையாகக் கொள்கின்றனர். இது சாராம்சத்தில் கருத்துமுதல்வாதமாகும்.

சிந்தனையை செயலாகக் கருதுகின்ற கோட்பாடு - மனித (பருப்பொருளின்) செயற்பாட்டை மந்தமானதாக, செயலற்றதாக, பல தரப்பட்ட உட்பொருளாலான ஒன்றாகவும் காட்டி விடுகின்றது. (சமூக) இயக்கத்தை மாற்றமற்றதாக, ஓய்வானதாகவும் காட்டிவிடுகின்றனர். இந்த கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமானது - இலக்கியத்தில் இயங்கியல் மாற்றத்தை மறுத்து -  வெறும் பொருள்முதல்வாதமாகக் குறுக்கிவிடுகின்றது. அதாவது இயங்கியல் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கையை, இயங்கியலற்ற பொருள் முதல்வாதமாக மாற்றி விடுகின்றனர். சமூக மாற்றத்தை நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாக, சமூக இயங்கியலை மறுக்கின்ற செயற்பாடு அடிப்படையில் கருத்துமுதல்வாதமாகும்.

இலக்கியத்தில் இயங்கியலற்ற பொருள்முதல்வாதத்தை உள்ளடக்கமாகக் கொண்டு, தங்களை வெறும் பொருள்முதல்வாதிகளாகக் காட்டிக் கொள்ளும், மாற்றத்தை மறுக்கும் இலக்கியத்தை முன்வைக்கின்றனர்.

இதற்கு ஏற்ற வகையில் மனித சிந்தனையை மிகைப்படுத்தி, அதை ஊதிப்பெருக்கி .. தவறான ஒரு தலைப்பட்சமான நோக்குநிலையை முன்னிறுத்திய - இலக்கியத்தை படைப்பாக்கி விடுகின்றனர்.

இயங்கியலை மறுக்கும் பொருள்முதல்வாத இலக்கிய போக்கு

ஆதி பொருள்முதல்வாதம் (இயங்கியலான) இயங்குமுறையை முன்வைக்கவில்லை. இயற்கை பிரதிபலிக்கும் கண்ணாடி போல் - செயல்பாட்டை குறியிலக்க சிந்தனையாகக் கருதியது. பொருளை பொருளாகப் பார்ப்பது, காட்டுவது. பொருள் முரண்பாட்டால் இயங்குகின்றது என்பதை முன்வைக்கவில்லை. இன்றைய தமிழ் இலக்கிய போக்கில் இது வெளிப்படுகின்றது.

இதில் இருந்த இயங்கியல் பொருள்முதல்வாதம் - இயக்கத்தை பொருளின் அக முரண்பாட்டில் காண்கின்றது. இந்த வகையில் நடத்தைகள், சிந்தனைகள் சமூக நடைமுறையில் இருந்து தோன்றும் போது தான் இயங்கியல் தன்மை கொண்டதாக வெளிப்படும். நடைமுறை மூலமான கருத்து தான், இயங்கியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையாகும். இந்த வகையில் பொருள்முதல்வாத இயங்கியல் முறைக்கும் - அறிதல் முறைக்குமான துல்லியமான ஒற்றுமை, நடைமுறையில் இருந்து தோன்றுகின்றது.

இங்கு கலை இலக்கியத்தில் படைப்பில் இயங்கியல் குறித்து கேள்வியை எழுப்புவோமாயின், இயக்கம் என்பது அக முரண்பாட்டிலானதா? அல்லது புற முரண்பாட்டிலானதா? இயக்கம் அதாவது இயங்கியல் என்பது அகமுரண்பாட்டிலானதே ஒழிய புற முரண்பாட்டிலானதல்ல.

கலை இலக்கியவாதிகள் அக முரண்பாட்டை மறுத்து புறமுரண்பாட்டைக் கொண்டு படைப்பை முன்னோக்கியதாக அலங்கரிக்க முனைகின்றனர்.

புற உலகம் என்பது விஞ்ஞான விதிகளால் ஆளப்படுகின்றது. மனித மனங்களால் ஆனதல்ல. மனம் இதை துல்லியமாக புரிந்து கொண்டு வகுக்கும் அகவயமான செயற்பாடு தான் அறிவு.

அறிதல் என்பது வளர்ச்சிக்கான போராட்டத்தாலானதுமாகும். இந்த வகையில் தத்துவம் என்பது எதிர்மறைகளுக்கு இடையிலான போராட்டத்தை உள்ளடக்கியது. பிரபஞ்சவியல் என்பது கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதத்துக்கு இடையிலான போராட்டத்தாலானது. ஆய்வுமுறை என்பது இயக்கவியல், இயக்க மறுப்பியலுக்கும் இடையிலான போராட்டத்தாலானது. கலை இலக்கிய படைப்பாளிகள் அறிதல் முறை குறித்த வாழ்க்கை என்பது போராட்டத்துடன் கூடியதாக அமையும் போதுதான் - அது உண்மையை பிரதிபலிக்கும்.

இயங்கியலே (வெளிச்சம், வளர்ச்சி..) இலக்கியத்தின் சாரமாகும். நடைமுறையை, மாற்றத்தை, வளர்ச்சியை மறுதளிக்;கின்ற இலக்கியம் - இயக்கமற்ற, மாற்றமற்ற, வளர்ச்சியற்ற உலகத்தை முன்வைக்கின்றது. உலகம் மாறாததாகவும், மாற்ற முடியாத ஒன்றாக கருதுவதன் மூலம் - தனியுடமையிலான அமைப்பை மாற்ற முடியாத ஒன்றாக காட்டுகின்றது.

இந்த வகையில் இலக்கிய உள்ளடக்கத்தை மாற்றமற்றதாக, அதற்குள்ளான முரண்பாட்டிலான இயக்கத்தை மறுக்கின்ற, இலக்கிய உருவத்தில் (இயக்கத்தை வெளியில் நிகழ்வதாக கருதுவது) மாற்றத்தை முன்வைக்கின்ற இயங்கியலற்ற படைப்புகளாக முன்வைக்கின்றனர். இந்தப் பின்னணியில் தங்கள் கலை இலக்கிய (கருத்து) செயற்பாட்டையே, இயக்கமாக மாற்றமாக முன்னிறுத்துகின்ற கருத்துமுதல்வாதத்தையே முன்வைக்கின்றனர். இயங்கியல் இல்லாத பொருள்முதல்வாத படைப்புகள் மூலம், கருத்துமுதல்வாத (இயங்கியல் அல்லாத பொருள்முதல்வாதம்) அல்லாத தங்கள் நிலையை முற்போக்காக முன்னிறுத்துவதன் மூலம், கலை கலைக்காக என முன்னிறுத்துவது நடந்தேறுகின்றது. இந்த இலக்கிய பின்னணியில்

1.தங்கள் இலக்கியம் மதம் சார்ந்த கருத்துகளைக் கொண்டு இருக்காத வரை, அதை பொருள்முதல்வாதமாக கருதுகின்ற பொதுப்புத்திப் போக்கு - இலக்கியத்தில் முதன்மை பெற்று இருக்கின்றது.

2.சாதியம், பால் .. போன்ற சமூக ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்துவதை படைப்பில் தவிர்த்துக் கொள்வது அல்லது அதற்கு எதிரானவராகக் காட்டிக் கொள்வது இலக்கிய அடையாளமாகி இருக்கின்றது.

இயங்கியலற்ற படைப்புகள் - இப்படி பொருள்முதல்வாத இலக்கியமாக வேஷம் போடுகின்றது. அதேநேரம் அகநிலையிலான கருத்துமுதல்வாத இலக்கியமாவும் இயங்குகின்றது.

1.இலக்கியத்தில் கருத்துமுதல்வாதச் சிந்தனைக்கு அடிப்படையாக இருப்பது தன்னிலைவாதம் சார்ந்த உணர்வு, கருத்து, அகநிலை.. தன்மையிலான சிந்தனையிலான படைப்புகள்.

2.இலக்கியத்தில் பொருள்முதல்வாத சிந்தனைக்கு அடிப்படையாக இருப்பது இயற்கை, சமூகம், புறப்பொருள்.. அடிப்படையாகக் கொண்ட படைப்புகள்.

சமூகத்தில் இருந்தும் தங்களை தனிமனிதர்களாக முன்னிறுத்தி - தனிமனிதர்களாக தங்களை தக்கவைக்கின்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கின்றவர்களின் சிந்தனைமுறையிலிருந்து தோன்றும் படைப்புகள் - அடிப்படையில் தனிநபரியம் சார்ந்த தன்னிலைவாத  கருத்துமுதல்வாதமாகும்.

இங்கு சமூகத்துடன் (சமூக அமைப்புகள்..) இணைந்து படைப்பாக்குதல் என்பது, கலை இலக்கியத்தின் தனித்தன்மையை அங்கீகரிக்காது (தனிமனித தனத்தை அங்கீகரிக்காது)  என்று முன்வைக்கின்ற கலை இலக்கியவாதிகளின் தர்க்கத்தின் சாரம், கருத்துமுதல்வாத அகநிலைவாதக் கோட்பாடாகும்;. சமூகம் என்பது தனிமனித இருப்புக்கு (படைப்புக்கு) முரணானது என்ற கலை இலக்கிய வாதம் - தனியுடமை சிந்தனையின் பொது வெளிப்பாடாகும்.

இந்த வகையில் இயங்கியலை மறுக்கும் பொருள்முதல்வாத படைப்புகளாகின்றது

1.அகநிலைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாதம், இது இயக்கத்தை மறுக்கின்றது. தன் சொந்த நடைமுறை செயற்பாட்டை - தனது வாழ்க்கை நடைமுறையில் இல்லாதாக்குகின்றது. இந்த வகையில் படைப்பை இயக்கமற்ற, அதாவது ஓய்வாக அல்லது சமநிலையாக காண்பதுடன் - அதை படைப்பாக முன்வைக்கின்றது.

2.இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாதம்.

2.1.இது இயக்கம் உள் முரண்பாட்டில் இருப்பதை மறுத்து, வெளியில் இருந்தான இயக்கத்தையே இயக்கமாக முன்வைக்கின்றது. இது இலக்கியத்தில் உள்ளடக்கத்தில் இயக்கத்தை மறுத்து, உருவத்தைக் கொண்டு இயக்கத்தை நடத்திக் காட்டுவது. இதேபோல் இலக்கியவாத செயற்பாட்டை (எழுத்தை), இயக்கமாகவும் - மாற்றமாகவும் காட்டுவது.

2.2.இயந்திரவியல் இரண்டாவது தன்மையானது, அனைத்தையும் மாறாத ஒரேமாதிரியான இயக்கமாகக் காண்பதும் - காட்டுவதும்.

இந்த இரண்டு போக்குகளும் கருத்துமுதல்வாத அடிப்படையில் - இயக்கமற்ற (இயங்கியலற்ற) பொருள்முதல்வாதத்தை ஆதாரமாகக் கொண்டு இலக்கியத்தை படைப்பாக்குகின்றது. கருத்துமுதல்வாதமானது பொருள்முதல்வாதம் வேஷம் போடுவதன் மூலம் இயங்குகின்றது.

பொருளை முதன்மையாகக் கொண்ட உலகில் கருத்துமுதல் சிந்தனை

கலை இலக்கியத்துக்கு அடிப்படையான மனித சிந்தனை எப்படி தோன்றுகின்றது என்பதிலான முரண்பாடு வெற்றிகொள்ள முடியாத வண்ணம் - சமூகம் வர்க்கங்களாகத் தொடருகின்றது. இந்த வகையில் கருத்துமுதல்வாதம் - பொருள்முதல்வாதம் என்ற இரு நேர் எதிரான தத்துவ மோதலில், இதுவரை எந்த அணியும் வெற்றிபெறவில்லை. இதற்கு அடிப்படைக் காரணமானது - சமூகம் பல்வேறு வர்க்கங்களாக பிரிந்து இருப்பதும், ஒடுக்கும் வர்க்கம் தன் வர்க்க நலனுக்காக கருத்துமுதல்வாதத்தை தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பது தான்.

கருத்துமுதல்வாத சிந்தனை சார்ந்த படைப்புகளானது, வர்க்க அமைப்புடன் தொடருகின்றது என்பதும், வர்க்க அமைப்பை பாதுகாக்கின்ற வகையில் படைப்புகள் தன்னை வர்க்கமற்றதாக காட்டிக் கொள்கின்ற வேஷத்தை அணிந்து கொள்ளத் தவறுவதில்லை. இந்த வகையில் வர்க்க அமைப்பை எதிர்த்து - மாற்றத்தைக் கோராத இயங்கியலற்ற கலை இலக்கியப் படைப்புகள், கருத்துமுதல்வாத இலக்கியங்களாக - தனியுடமையைப் பாதுகாக்கின்ற இலக்கியமாக இருக்கின்றது.

கருத்துமுதல்வாத சிந்தனையானது ஆதிகாலத்தில், மனிதனின் அறியாமை - மூடநம்பிக்கையால் தோன்றியது. இன்று அது வர்க்க அமைப்பை பாதுகாக்கின்ற நோக்கில் முன்வைக்கப்படுகின்றது.

மனித அறிவு கருத்துமுதல்வாதம் மூலம் எப்படி கற்பனை பண்ணுகின்றது என்பதை, மனித நடத்தை சார்ந்த உதாரணம் மூலம் பார்ப்போம். உடல் உழைப்புக்கு கூலியாக அல்லது சம்பளமாக உழைப்பாளிகள் பெறும் செல்வத்தை, உடல் உழைப்பு தருவதில்லை என்று கருதும் மூளை உழைப்பு சார்ந்த கண்ணோட்டமானது - கருத்துமுதல்வாதம் சார்ந்தது. உடல் ரீதியாக உழைப்பவனுக்கு மூளை உழைப்பு சார்ந்த தாங்களே கூலி வழங்குவதாக கருதுகின்ற மூளை உழைப்புக் கண்ணோட்டமானது, உழைப்பை இழிவாக கருதும் கருத்துமுதல்வாதத் தத்துவமாக வளருகின்றது. இங்கு கருத்துமுதல்வாதம் என்பது உண்மைக்கு எதிரானதும் - நிலவும் சமூக அமைப்பு முறையை ஏற்றுக்கொள்ளும் முறையிலேயே இயங்குகின்றது.

இந்த வகையில் மூளை சார்ந்த ஒன்றாகவே வாழ்க்கையை, கருத்துமுதல்வாதம் கற்பனை செய்கின்றது. இதே போன்று தான் கலை - இலக்கியத்தைக் கூட மூளை சார்ந்த சுய தன் அறிவாக, மக்களின் வாழ்க்கை சார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பல்ல என்ற கருத்துமுதல்வாதம், அகலநிலைவாத சார்ந்த இலக்கியத்தைப் படைப்பாக்குகின்றது.

மூளை உழைப்பு - உடல் உழைப்பு என்று உழைப்பு இரண்டாகப் பிரிய முன்பு, கலை இலக்கியம் அனைவரினதும் பொது சமூகக் கூறாக இருந்தது. அனைவரும் பாடவும், ஆடவும் .. கலையை படைக்கவும் முடிந்த சமூகத்தின், கலை இலக்கியம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் இருந்து பிரிந்து இருக்கவில்லை. உழைப்பு பிரிந்து - உழைப்பு பிரிவினை முரண்பாடாக தோன்றிய பின்னணியில் தான் - கலை இலக்கியம் மக்களில் இருந்து பிரிந்து கிடக்கின்றது.

உழைப்பு பிரிவினை தோன்றியதன் பின், கலை இலக்கியத்தை மக்களில் இருந்து பிரிக்கின்ற - இடைவெளியை அகல வைக்கின்ற வகையில், கருத்துமுதல்வாத செயற்பாடுகள் அமைகின்றது.

உடல் - மூளை உழைப்புக்கு இடையில் முரண்பாட்டை வர்க்க அமைப்பு பாதுகாக்கின்றதன் அடிப்படையில், கலை இலக்கியப் போக்குகள் மக்களில் இருந்து பிரிந்து நிற்கின்றது. அதற்கு ஏற்ற கலை இலக்கிய கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றது.

மிக அடிப்படையான கேள்வி, கலை இலக்கியம் மக்களில் இருந்த பிரிந்து இருப்பதை பாதுகாப்பதா? அல்லது அந்த இடைவெளியை அகற்றி ஒன்றாக்குவதா? கலை இலக்கியத்தை மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றாக்குவது, கலை இலக்கிய படைப்பாற்றலை உழைப்பு பிரிவினையிலான வேறுபாட்டை இல்லாதாக்குவது நோக்கி, கலை இலக்கியம் அமைய வேண்டும்.

கலை இலக்கியவாதியின் நோக்கம் மக்களின் வாழ்வுடன் இணைந்து பயணிப்பதை நோக்கமாகவும் - மக்களின் வாழ்க்கையை கலை இலக்கியமாக்கவும் வேண்டும். இது தான்  இடைவெளியை இல்லாதாக்குகின்றது. மக்களில் இருந்து அன்னியமான படைப்புகள் - பிரிவினையிலான கருத்துமுதல் படைப்புகள், தன்னை சமூகத்தில் பிரிந்து கலை இலக்கியவாதியாக தங்களைத் தக்கவைக்கின்ற முதலாளித்துவ தனிமனிதவாத தர்க்கத்தையே கலை இலக்கியமாக முன்னிறுத்துகின்றது.

இயங்கியல் (மனிதனின்) வளர்ச்சியென்பது என்ன? 

முரண்களில் இருந்து முன்னேறிய நிலைக்கு வளர்ச்சி பெறுதலே. இதுதான் இயங்கியலின் வளர்ச்சிக் கோட்பாடாகும். கலை - இலக்கியப் படைப்பானது, உள்ளடக்கத்துக்குள்ளான   (தனக்குள்ளான) முரண் கூறுகளில் இருந்து - வளர்ச்சியாக முன்னோக்கிச் செல்லுதலே. ஒரு முரண் கூறை முன்னிறுத்தி நிற்றல், முரண் கூறுகளை காண மறுப்பது, முன்னேறிய நிலைக்கு செல்ல மறுப்பது, சமூகத்தை இறுகிய நிலையில் இயக்கமற்று காண்கின்ற போக்கு இயங்கியல் மறுப்பாகும்.

இயக்கத்தின் ஒரு கூறு ஓய்வு அல்லது சமநிலையில் இருப்பது என்பது, இயக்கமற்றதல்ல. மாறாக இவை இயக்கத்தின் குறிப்பிட்ட சூழ்நிலையுடன் இயங்குகின்றது. ஓய்வு, சமநிலை.. என்பது - முதலாளித்துவத்தை முரண்பாடற்ற மாற்றமற்ற - நிலையான ஓன்றாகக் காட்டுவதாகும்.

இயக்கம், மாற்றம் என்பதே, முரண்பாடு தான். முரண்பாடு இல்லாத இடமே கிடையாது. முரண்பாடு எங்கும் காணப்படுகின்றது. கலை -  இலக்கியம் என்பது, 

1.படைப்பைச் சுற்றிய எல்லா முரண்பாடுகளையும் தனக்குள் கொண்டது.

2.முரண்பாடு தொடர்பாக சமூகத்தில் எல்லா தரப்பும் (வர்க்கம், சாதி, இனம், பால், நிறம்) எப்படி வேறுபட - தமக்குள்  முரண்பாட்டுடன் அணுகுகின்றது என்பதையும் அடிப்படையாகக் கொண்டது.

3.முரண்பாடுகளை கடந்த முன்னேறிய வளர்ச்சியை படைப்பாக்கும் போது தான் - சமூகத்தின் படைப்பாகின்றது.

இங்கு எதிர்மறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் இயங்கியல். எதிர்மறையை பிரித்து வைத்திருப்பது, எதிர்மறைகளில் ஒன்றை முன்னிறுத்துவது இயங்கியலை மறுத்தலாகும்;. சமூக மாற்றத்தை மறுத்தல். சமூகத்தை இயக்கமற்றதாக, மாற்றமுடியாத ஒன்றாக கருதுவது,  தனது நடைமுறை மூலம் சொந்த மாற்றத்தை மறுத்தலாகும்.

இலக்கியம் மூலம் மாற்றத்தை மறுக்கின்ற சிந்தனை செயல் - சாராம்சத்தில் தனது மாற்றத்தையே மறுத்தலாகும்;. தன்னை நிலவும் சமூக அமைப்பின் பிரதிநிதியாக - முதன்மைப்படுத்தி முன்னிறுத்துவதாகும்.

இயக்கம் - மாற்றம் என்பன வெளியில் இருப்பதில்லை, மாறாக தனக்குள் கொண்டு இருக்கின்றது. வெளித் தூண்டுதல் மூலம் நடப்பதில்லை. மாறாக அதற்குள் (தனக்குள்) இருக்கக்கூடிய முரண்பட்ட கூறுகளுக்கு இடையிலான போராட்டத்தில் இயக்கமும் - இதில் இருந்து வளர்ச்சிக்குமானதாக இயக்கம் இருக்கின்றது.

முரண்பட்ட போராட்டத்தில் வளர்ச்சியை நோக்கி படைப்பாளியால் காணமுடியாத ஒன்றை -  இலக்கியத்தில் காணவும், காட்டவும் முடியாது. படைப்பாளி அப்படி ஒரு வளர்ச்சியை அடைவதற்கு - அந்த நிலையில் தானும் ஒருவனாக வாழ்ந்தாக வேண்டும்;. "சட்டியில்  இருந்தால் அகப்பையில் வரும்" அகப்பையில் இருப்பது போன்று வருணத்தைப் பூசி, அகப்பையில் இருக்கு என்று காட்டுகின்ற ஏமாற்றை - மோசடிக்காரர்கள் மட்டும் தான் செய்யமுடியும்.

தங்கள் இலக்கியத்தில் மக்கள் பிரச்சனை இருக்கின்றது என்று காட்டுகின்ற மோசடிகள் - உண்மையில் மக்களுடன் மக்களாக மாற்றத்தை நோக்கி உண்மையாக நேர்மையாக வாழ மாறுகின்ற பித்தலாட்டத்தில் இருந்து தொடங்குகின்றது.

வர்க்க சமுதாயத்தில் வர்க்கத்தன்மை நிறைந்ததாகவே மனித இயல்பு இருக்கும். வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட இயல்பு, பார்வை என்பது கிடையவே கிடையாது. பெரும்பாலான கலை இலக்கியம் முன்வைக்கும் மனித இயல்;பு என்பது தனிநபரியமாகும். சாராம்சத்தில் முதலாளித்துவ இயல்பாகும்;. இதனால் தான் வர்க்கமற்ற சமூக இயல்பு மனித இயல்புக்;கே முரணானதாக முன்னிறுத்திய கோட்பாட்டை - கலை இலக்கியமாக்க முன்வைக்கின்றனர்.

தொகுப்பாக

வாழ்க்கை நடைமுறையில் இருந்துதான் கலையென்பது பொருள்முதல்வாதப் பார்வை கொண்டதாகவும், நடைமுறையற்ற கற்பனையில் இருந்து படைக்கும் கலை கருத்துமுதல்வாத பார்வை கொண்டதாகவும் இருக்கின்றது.

கலை இலக்கியம் முதல் விமர்சனம் வரை, பழைய (இறந்த அல்லது இறந்து கொண்டு இருக்கும் மரபுகள், சடங்குகள், வாழ்க்கையின் அறநெறிகள், ஒடுக்குமுறைகள் .. ) சமூகக் கூறுகளை எதிர்ப்பதன் மூலமான அறிவியல் ஜனநாயக அடிப்படையாகக் கொண்டு  இருக்கின்றது. அதே நேரம் நடப்பு நிலையில் கேடானதை நல்லதாகக் காட்டுவது - கேடானதில் தலையிடாது இருப்பது நடந்தேறுகின்றது.

கலை இலக்கியம் சமூக சார்ந்ததாகவும் - தங்கள் அறிவு சார்ந்த நடத்தையைக் காட்டிக் கொள்கின்ற செயற்பாடு, மக்களின் வாழ்க்கை நடைமுறையுடன் இணைந்திருப்பதில்லை. இந்த வகையில் கலை இலக்கியத்தை நடைமுறை சமூக செயற்பாட்டில் இருந்து விலகிய தனிமனித ஆத்ம திருப்திக்கானதாகவும் - கும்பல்களின் அறிவுசார்ந்த புலமைக்கானதாகவும் கருதுமளவுக்கு தமிழ் கலை இலக்கியம் மாற்றி வருகின்றனர்.

தங்கள் இந்தச் செயற்பாட்டை செயலாகவும், மாற்றமாகவும் காட்டுகின்ற கருதுகின்ற தனிமனித தனிநபரியவாதமானது, சமூகத்தின் வாழ்வியல் நடைமுறைச் செயற்பாட்டிற்கே முரணானதாக இருக்கின்றது.

வெளிச்சத்தைக் காட்டாத தமிழ் இனவாத பாராளுமன்ற அரசியல் போல், கலை இலக்கியம் தொடர்வது என்பது சமூகத்தின் அவலத்தை வைத்து பிழைப்பதாகும். இதற்கு மாறாக மக்களின் நடைமுறையுடன் கூடிய - முன்னேறிய ஒளியைக் காட்டுவதாக கலை இலக்கியம் முன்னேறிய ஒன்றாக முன்னேற வேண்டும்.