Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்கும் முஸ்லிம் இனவாதத்துக்கு துணை நிற்கும் போலி முற்போக்குகள் குறித்து!

இலங்கையின் இனவாத வரலாற்றில், ஒடுக்கும் இனவாதமானது காலத்துக்கு காலம் இடம் மாறி வந்திருகின்றது. இலங்கை அரசின் ஒடுக்கும் இனவாத கொள்கைக்கு அமைவாக, பிற இனங்களிடையேயான இனவொடுக்குமுறை ஒரே மாதிரி இருக்கவில்லை. இயக்கங்களும் - புலிகளும் ஆயுதப்பலம் பெற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த காலத்தில், முஸ்லிம் மக்கள் மேலான இனவொடுக்குமுறை இருந்தது. புலிகளின் அழிவின் பின் அரசு ஆதரவுடன் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம்-இஸ்லாமிய இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதமாக மாறி இருக்கின்றது.  

   

இனவாத அரசியலின் எதார்த்தம் இது. இப்படி உண்மை இருக்க, ஒடுக்கும் தன்மை கொண்ட இனவாதம் எது என்பது குறித்து, நடைமுறைரீதியான சமூக செயற்பாடுகளின்றியும், தத்துவார்த்த புரிதலுமின்றி இனவாத ஒடுக்குமுறைகளை மூடிமறைப்பதே இன்று அரசியலாகின்றது. "மார்க்சியவாதிகள் - இடதுசாரிகள் - முற்போக்குவாதிகள் - இலக்கியவாதிகள் - சமூக அக்கறையாளர்கள்" என்று தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றவர்களில் யார் இன்று ஒடுக்கும் முஸ்லிம் இனவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர்? இதற்கு எதிராக நடைமுறையில் யார் போராடுகின்றனர்?  

இன்று தமிழ் மக்களை ஒடுக்கும் இனவாதமானது, முஸ்லிம்-இஸ்லாமிய இன-மதவாத அதிகார வர்க்க சக்திகளால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து, எந்தக் குரலையும் கேட்க முடிவதில்லை. தமிழ் தரப்பில் இருந்தும், இதற்கு எதிராக எந்தக் குரல்களும் எழுவதில்லை. இனவாதத்தால் பாதிக்கபட்ட மக்களிடம் இருந்து குரல்கள் எழும் போது, அதை "இனவாதமாக" முத்திரை குத்தும் குரல்கள் மட்டும் எழுகின்றது. இதன் மூலம் ஒடுக்கும் இனவாதத்துக்கு மறைமுகமாக உதவுகின்றனர்.       

 

இனவாதத்தை சமப்படுத்தி அணுக முடியுமா?  

 

இனவாத சூழலில் உருவான சமூகம் இனவாதச் சிந்தனைமுறையில் சிந்திக்கவும் செயற்படவும் முனைகின்றபோது, அதை அம்பலப்படுத்துவதா இடதுசாரியம்? இல்லை. மாறாக இனவாதத்தில் இருந்து சமூகம் விடுபடும் வண்ணம், சமூகத்தை ஜனநாயகப்படுத்தி தலைமை தாங்குவதே இடதுசாரியம்;. 

இடதுசாரியமானது

1.ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

2.இனவாதத்தின் இரண்டு கூறுகளில் எது ஒடுக்கும் இனவாதம் என்பதை இனம் காட்டி, அதை முதன்மையான எதிரியாக முன்னிலைப்படுத்திப் போராட வேண்டும்.

3.ஒடுக்கப்பட்ட தரப்பு இனவாதம் மூலம் எதிர்க்கின்ற போது, அதை காயடிக்காது அறிவு மற்றும் நடைமுறைப்பூர்வமாக சரியான ஜனநாயகப் பாதையை விளக்கி, சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும். அதாவது போராடும் குணாம்சத்தை மழுங்கடிக்காது, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டும்;. போராடுபவர்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையுடன் இணைந்து நிற்க வேண்டும். 

 

இந்த அடிப்படையில் இனவொடுக்குமுறைகளை இடதுசாரியம் அணகவேண்டும்.                             

 

புலிகள் ஆயுதம் மூலம் அதிகாரத்தை வடகிழக்கில் கொண்டிருந்த காலம் வரை, தமிழ் இனவாதம் ஒடுக்கும் தன்மை கொண்டதாகவும், முஸ்லிம்  இனவாதம் தற்காப்பு கொண்டதாகவும் காணப்பட்டது. இக்காலகட்டத்தில் முஸ்லிம்களின் தற்காப்பு இனவாத வன்முறைகளை விட, ஒடுக்கும் தன்மை கொண்ட புலிகளின் இனவாத வன்முறையை முதன்மையாக எதிர்த்தே இடதுசாரியம் செயற்பட்டது. இதே போன்று தான் இலங்கை அரசின் பேரினவாதத்தின் ஒடுக்கும் இனவாதத்தை முதன்மையாக எதிர்த்தும், புலிகளின் தற்காப்பு இனவாதத்தை வேறுபடுத்தியுமே, இடதுசாரிய விமர்சனமும், நடைமுறையும் இருந்தது. 

அதேநேரம் புலியெதிர்ப்பு போலி இடதுசாரிகளும் - போலி முற்போக்குவாதிகளும் - போலி இலக்கியவாதிகளும் பேரினவாத ஒடுக்கும் இனவாதத்தை முதன்மைப்படுத்தாது, புலிகளின் தற்காப்பு இனவாதத்தை எதிர்த்துச் செயற்பட்டதன் மூலம், அரசின் ஒடுக்கும் இனவாதத்தை ஆதரித்தனர். இதுவே சர்வதேசியத்துக்கு முரணான போலியான தமிழ் முற்போக்கு இடதுசாரியத்தின் அரசியல் அடிப்படைகளின் ஒன்றாக இருந்தது.  

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலானது, ஒடுக்கும் இனவாதத்தையும் தற்காப்பு இனவாதத்தையும் சமப்படுத்திக் காட்டுவது அல்லது ஒடுக்கும் இனவாதத்தை விட்டுவிட்டு தற்காப்பு இனவாதத்தை முதன்மைப்படுத்தி எதிர்ப்பதன் மூலமே அரங்கேறுகின்றது.   

புலிகள் அற்ற - அரசு அதிகாரமற்ற இன்றைய சூழலில், தமிழ் இனவாதம் என்பது தற்காப்பு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்மக்களை ஒடுக்கும் இனவாதமாக முஸ்லிம்-இஸ்லாமிய இனவாதம் இருக்கின்றது. அரசு அதிகாரத்தைக் கொண்டும், அரசின் கூலிப்படையாக இயங்கும்  முஸ்லிம் இனவாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம். 

இந்த அரசியல் எதார்த்தத்தை இடதுசாரியம் கண்டுகொள்ளாது இருப்பது, தமிழ் போலி இடதுசாரியத்தின் சிந்தனைமுறையாக இருக்கின்றது. தமிழ் இனவாதத்தையே தொடர்ந்து ஒடுக்கும் இனவாதமாக முன்னிறுத்துவதன் மூலம், ஒடுக்கும் முஸ்லீம் இனவாதத்துக்கு உதவுகின்றனர்.             

தமிழ் போலி இடதுசாரியம் அல்லது போலி சர்வதேசியம் என்பது  நடைமுறைக்குள் இருந்து வராது, கோட்பாட்டுக் கற்பனைக்குள் தத்தளிக்கின்றது. போராட முனைகின்ற சக்திகளை தனிமைப்படுத்தும் வண்ணம் "இனவாத" முத்திரை குத்தி, தங்களை "அறிவாளியாக" முன்னிறுத்த முனைகின்றனர்.   

இனவாதத்துக்கு தலைமை தாங்குகின்ற தலைவர்களையும், தலைவர்களின் அரசியல் கோட்பாட்டுச் சிந்தாந்தங்களையும் எதிர்ப்பதற்குப் பதில், எதிர்த்துப் போராடுகின்ற சக்திகளை காயடிக்கின்றனர். 

உதாரணமாக கடந்தகாலத்தில் இதுதான் விடுதலை என்று நம்பிப் போராடி மடிந்தவர்கள் இனவாதத்தைக் கொண்டிருந்தவர்கள் என்பதால், அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்த முடியுமா எனின் முடியாது. ஆனால் இந்த இனவாத யுத்தத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் முன்வைத்து வழிநடத்திய தலைவர்களுக்கு, இந்த அளவீடு பொருந்தாது. 

இந்த வேறுபாடு என்பது, சமகால அரசியலுக்கும் அவசியமானது. சமூகத்தில் இருந்து எழும் எந்தக் குரலும், இருக்கின்ற இந்த சமூக அமைப்பில் இருந்து தான் எழும். இனவாத சூழலில் வாழ்ந்த சாதாரண மக்களின் சிந்தனைமுறை என்பது, இனவாதமாக இருப்பதே இயல்பு. இது தான் சமூக எதார்த்தமுமாகும். இதை மாற்ற நடைமுறைரீதியாக இடதுசாரியம் என்ன செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு, போராடுபவனின் தலையில் குட்டுவது தான் சமூகத்தை மாற்ற முனையும் அரசியல், இது தான் அறிவியலா?                 

சமூக எதார்த்தத்தை கொச்சைப்படுத்துவதென்பது, மக்களை குறித்தும் சமூகம் குறித்துமான வரட்டுத்தனமான அறியாமையாகும். சாதாரணமாக சமூகத்தில் இருந்து எழும் குரல் "இனவாதமாகவே" இருக்கும் என்பது கூட தெரியாது அதை விமர்சிப்பது அறிவியலாகிவிட முடியுமா? இனவாதமற்ற நடைமுறையான சமூக வாழ்வியலுக்கு மக்களை தயார் செய்யாத போலி இடதுசாரியமானது, மற்றவரை குற்றஞ்சாட்ட என்ன தகுதி இருக்கின்றது? பின்தங்கிய சமூகத்தில் நிலவும் இனவாதத்தை காட்டுவதன் மூலம், தங்கள் அறிவை நிலைநாட்டுவதா இடதுசாரியம்? இல்லை. இது தான் போலி இடதுசாரியம். 

இன்று தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் அதிகார வர்க்கத் தலைமை முன்னெடுக்கும் இனவாத ஒடுக்குமுறை குறித்து, போலி இடதுசாரியமும் - போலி முற்போக்கும் - போலி இலக்கியமும் கண்டுகொள்ளாத அதேநேரம், அதை எதிர்க்கின்ற சக்திகளுக்கு "இனவாத" முத்திரையைக் குத்துகின்றனர் என்பது தான் உண்மை. இதன் மூலம் ஒடுக்கும் முஸ்லீம் இனவாதத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது தான், எதார்த்தமாக இருக்கின்றது. 

ஒரு ஒடுக்குமுறையை எதிர்க்கவும், அதற்கு எதிராக நடைமுறையில் போராடவும் வழிகாட்டாத போலி இடதுசாரியம் என்பது, சமூகத்தை வழிநடத்தவும், கருத்துச் சொல்லவும்  தகுதியற்றது. அது "வெட்டித்தனமான" பொழுதுபோக்குக்கானது. இதன் மூலம் தங்களை முதன்மையாக்கி காட்ட முனைகின்ற, உதவாக்கரையான போலி விமர்சன அரசியல். 

தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று வாழும் தமிழ் தலைமைகள் போல், இடதுசாரியத்தின் பெயரில் வெற்றுக் கருத்தாடல்களே இவை. தமிழ் தலைமைகள் போல் இந்தப் போலி இடதுசாரியம் - போலி முற்போக்கும் – போலி இலக்கியமும் சமூகத்துக்கு எதையும் செய்வது கிடையாது. பாராளுமன்ற நவதாராளவாத கொள்கைக்கு ஏற்ப கூடிக் கும்மாளம் அடிக்கும் தமிழ் தலைமைகள் போல், சமூக வலைத்தளங்ளிலும்-கூட்டங்களிலும் நடைமுறையற்ற வெட்டி அரட்டைகளே இவை. தங்களை முதன்மைப்படுத்த, போராடும் சக்திகளை "காயடித்து" விடுவதன் மூலம், ஒடுக்கும் இனவாதிகளுக்கு உதவுகின்றனர்.  

அதாவது ஒடுக்குமுறைக்கு எதிராக தலைமையேற்று சமூகத்தையே வழிநடத்த முடியாதவர்கள், ஒடுக்குமுறையை எதிர்த்து தன் அளவில், தனது அறிவுக்கு ஏற்ப போராடுவதற்கு முனைகின்ற போது, அதை தவறானதாக விமர்சிப்பது என்பது, ஒடுக்குமுறைக்கு உதவுவது தான். இதைத்தான் இன்று அரசியல் விமர்சனத்தில் பரவலாக காணமுடிகின்றது.