Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானதால் உலகம் அழியப் போகின்றதா!?

வழமைக்கு மாறாக அமெரிக்கத் தேர்தலானது, உலக மக்களின் கவனத்தைக் குவிய வைத்தது. அமெரிக்க ஊடகங்கள் முதல் உலக ஊடகங்கள் வரை, "அபாயகரமான மனிதனாக" வருணிக்கப்பட்ட டொனாலட் ட்ரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாகியுள்ளார். கிளாரி கிளின்ரன் வெல்வார் என்று கூறிய கருத்துக் கணிப்புக்கள் முதல் அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வுகூறல்கள் வரை சமூக அறிவியல் பினாத்தல்கள் அனைத்தும் புஸ்வாணமாகியுள்ளது. ஊடகங்கள் முதல் முதலாளித்துவ அறிவுத்துறை வரை, மக்களில் இருந்து விலகிச் சென்று இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து சென்றது மற்றொரு எடுத்துக்காட்டு. 

தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் முருகனுக்கு தேங்காயை உடைத்ததன் மூலம் கிளாரி கிளின்ரன் வெற்றியை பீற்றிக் கொண்ட பின்னணியில் தேசியம், கடவுள் அனைத்தும் டொனால்ட் ட்ராம்ப்பினால் பொய்யாகி வெளுத்துப் போனது. டோனால்ட் ட்ராம்ப்பினால்  உலகம் அழியப் போவது பற்றி தமிழ் ஊடகங்கள் சாத்திரத்தை துணை கொண்டு மக்களை மூடர்களாக்க முனைகின்றனர். 

டொனாலட் ட்ரம்ப் வெற்றியை அடுத்து உடனடியாக பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஜரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறியது போன்று உலக அளவிலான மூலதனத்துக்கு பொது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.      

மறுபக்கம் பாசிச இந்து வெறி அமைப்புகள் தொடங்கி ஐரோப்பிய நாசிய அமைப்புகள் வரை, டொனாலட் ட்ரம்ப் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகம் தொடக்கம் அமெரிக்காவின் பல பாகங்களில் அரசியல் ஆர்ப்பாட்டங்களும், அங்குமிங்குமாக வன்முறைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றது. அமெரிக்க சமூகத்தின் பிளவானது என்றுமில்லாதவாறு வன்முறை வடிவம் பெற்று இருக்கின்றது.

டொனாலட் ட்ரம்ப் வெற்றிக்கு எதிரான மக்களிடையே ஜனநாயகம் குறித்தும், தேர்தல் குறித்துமான சுய அனுபவங்கள் மூலம் புதிய அரசியலை உள்வாங்கி இருக்கின்றனர். எப்படிப்பட்ட சமூக விரோதிகளும், தேர்தல் ஜனநாயகம் மூலம் ஆட்சிக்கு வரமுடியும் என்ற உண்மையை உணர வைத்திருக்கின்றது. 

2ம் உலக யுத்தத்தின் பின்பாக அண்மைக் காலத்தில் மூலதனத்திற்குள்ளான முரண்பாடுகள் ஆழமாகி வந்த பதற்றமானது, டொனாலட் ட்ராம்ப் வெற்றியுடன் கூர்மையாகி இருக்கின்றது. உலகமயமாக்கம் மூலம் உருவாகியுள்ள பொருளாதாரச் சந்தையை மீள பங்கிடக் கோரும், ஒரு கெடுபிடி உலக யுத்தத்துக்குள் நகருமளவுக்கு பதற்றங்களுடன் கூடிய இராணுவ தயாரிப்புகள் நடந்துவருகின்ற பொதுப் பின்னணியில் நெருக்கடியை இசைக்கும் இசை அமைப்பாளராக டொனாலட் ட்ராம்ப் தெரிவாகி இருக்கின்றார். இது வாக்களித்த மக்களின் விருப்புடன் கூடிய தெரிவா!?         

டொனால்ட் டிரம்ப் வெற்றியைத் தீர்மானித்த மக்கள் யார்?    

டொனாலட் ட்ரம்ப் குறித்து பேசுகின்ற ஊடகங்கள் அவர் முன்வைத்த அல்லது அவரின் தனிப்பட்ட நடத்தை சார்ந்த இனவாதம், நிறவாதம், வெளிநாட்டவருக்கு எதிரான கொள்கைகள்,  ஆணாதிக்க நடத்ததைகள் போன்றவற்றைச் சார்ந்தே வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் இதுவொரு பகுதியளவே உண்மை. இதன் மூலம் வெற்றிக்கான அடிப்படை உண்மையை மூடிமறைத்து விடுகின்றனர். உண்மையில் உலகமயமாதலின் மூர்க்கமான சுரண்டல் தான் தீர்மானகரமாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்து இருகின்றது. 

அமெரிக்காவில் தொழிற்றுறைகள் மூடப்படுதலும் அதனால் அதிகரிக்கும் வேலையின்மையும் தான், தேர்தல் முடிவைத் தீர்மானித்தது. அமெரிக்க மூலதனம் உலக மூலதனத்தினால் திவாலாகவில்லை. மாறாக அமெரிக்க மூலதனம் தான் அமெரிக்க மக்களை திவாலாக்கி வருகின்றது. இந்த உண்மையை டொனாலட் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் முன்னெடுக்கவில்லை. 

அமெரிக்க மூலதனமானது அதிக லாபம் கருதி குறைந்த கூலி உள்ள நாடுகளில் முதலிட்டதும், குறைந்த கூலிக்காக வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்குள் கொண்டுவரும் மூலதனத்தின் கொள்கை தான் அமெரிக்க மக்களின் வேலையின்மைக்கான அடிப்படைக் காரணம்.   

உதாரணமாக டொனாலட் ட்ரம்ப் உலக பணக்கார வரிசையில் 324 இடத்திலும், அமெரிக்க பணக்கார வரிசையில் 113 இடத்திலும் இருக்கின்ற அளவுக்கு, 3.7 பில்லியன் (370 கோடி டொலர்) சொத்தை எங்கிருந்து பெற்றார்? அமெரிக்க மக்களின் செல்வத்தை திவாலாக்கி தான், தனிநபர்கள் சொத்தைக் குவிக்க முடியும்.        

குறைந்த கூலிக்காக தொழில்;துறைகள் மூடப்படுகின்ற போக்குகள், அமெரிக்காவுக்குள் குறைந்த கூலிக்காக வெளிநாட்டவர்களை உள்வாங்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், இதில் இருந்து மீள "மீட்பாளர்களை" தேர்தல்முறை மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். அது இனவாத, நிறவாத, வெளிநாட்டு எதிர்ப்புவாத அரசியலாக அதுவே தேசியவாதமாக மாறி வெற்றி பெறுகின்றது. 

டொனாலட் ட்ரம்ப் வாக்களித்த மக்களில் பெருபான்மையானவர்கள் உலகமயமாதலின் விளைவால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்களித்திருக்கின்றனர். இங்கு இனவாதம், மதவாதம், நிறவாதம் எதுவாக இருந்தாலும், இதன் பின் அணிதிரட்டப்பட்ட மக்கள் மூலதனத்தால் வாழ்விழந்தவர்கள். இதில் இருந்து மீள தேர்ந்தெடுக்கப்பட்ட தெரிவு தான் தாம் அல்லாத பிற மனிதர்களுக்கு எதிரான வன்மங்கள்.    

உலகமயமாதல் என்பது உலகத்தை மலிவாகச் சுரண்டும் பொருளாதார உறுப்பாக இருப்பதுடன் அதில் அதிகமாகச் சுரண்டி லாபம் அடைந்தது அமெரிக்க மூலதனம் தான் என்பதை மக்கள் உணராத வண்ணம் இருக்கவே கிளாரி கிளின்ரன் முன்னிறுத்தப்பட்டார்.            

கிளாரி கிளின்ரன் முன்னிறுத்திய உலகமயமாதல் 

இன்றைய உலகமயமாதல் கிளாரி கிளின்ரன் வெல்ல வேண்டும் என்பதற்காகவே உலகெங்கும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. அமெரிக்க ஊடகங்கள் டொனாலட் ட்ராம்ப்மை (அவரின் சொந்த ஊடகங்கள் தவிர) அபாயகரமான அரசியல் அனுபவமற்ற ஓருவராகக் காட்டியது. 

உலகமயமாதல் நலன்களை அனுபவிக்கும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரான தேசியவாத கோசங்களை மழுங்கடிக்க டொனாலட் ட்ரம்ப்னின் வெளிப்படையான பணக்கார திமிரிலான வாழ்க்கை முறையிலான வக்கிரங்களை முன்வைத்து பிரச்சாரத்தை செய்தது. 

பணக்காரர்களின் வாழ்க்கை முறை எதுவோ அதைத்தான் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக முன்வைத்தார். பணக்காரர்களின் ஆடம்பரமான வக்கிரமான நுகர்வுவெறி வாழ்க்கை முறையானது தமது அடிப்படை தேவைக்காக இந்த பணக்கார வாழ்க்கைக்காக உழைக்கும் 90 சதவீதமாக மக்களின் வாழ்க்கைமுறைக்கு முரணானதும், இழிவானதுமாகும். உழைப்பைச் சுரண்டி வாழும் வாழ்க்கைமுறையும், அதன் வக்கிரங்களும் வெளியில் தெரிவதில்லை. ஆடம்பரமான நுகர்வே வாழ்க்கை முறையாக சந்தை வடிவமாக பரிணமித்து வரும் பொதுச் சூழலில், அதை தமது சமூகத் தகுதியாக பெருமையாக பீற்றிக் கொள்ளும் போக்கை, டொனாலட் ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தி அதை வெளிப்படையாக முன்வைத்ததன் மூலம் இவை ஒழுக்கக் கேடுகளல்ல மாறாக வாழ்க்கைமுறையாக முன்வைத்திருக்கின்றார்.

பெண்கள் குறித்து அவரின் பார்வை ஆணாதிக்கத்தின் பொதுப் பார்வையில் இருந்தும்  மிதமிஞ்சியதல்ல. பெண்ணையும், பெண் உடல் உறுப்புகளையும் நுகர்வுப்பொருளாக, சந்தையும் விளம்பரமும் காட்டுகின்ற பொது எதார்த்தம் தான். டொனாலட் ட்ரம்ப்புவினால் அதனின்றும் வேறுபடுத்தி நடிக்க முடியவில்லை. இந்த நுகர்வுச்சந்தை அமைப்பில் வாழ்கின்ற ஆண் - பெண் இருவரும், இந்த வாழ்க்கை தெரிவை தாண்டி சிந்திக்காத, செயற்படாத எல்லா தருணங்களிலும் டொனாலட் ட்ரம்ப் வழியிலேயே வாழ்கின்றனர். இதை வெளிப்படையாக முன்வைப்பதை கொண்டு உருவாக்கிய எதிர்ப்பிரசாரம் என்பது, வெற்றிபெறாது என்பதை டொனாலட் ட்ராம்ப் வெற்றி எடுத்துக் காட்டுகின்றது.          

பெண்கள் குறித்து அவரின் பார்வை மற்றும் நடத்தைகளை முன்னிறுத்தி, பெண்களுக்கும் சமூகத்துக்கும் கேடான ஓருவராக காட்டியதும், ஓரினபாலினருக்கு எதிரான கத்தோலிக்க கிறஸ்துவ மத காட்டுமிராண்டித்தனக் கோட்பாடுகளை காட்டியும்.. டொனாலட் ட்ரம்ப் தோற்கடிப்பட வேண்டியவராக முன்னிறுத்திய போதும் அவரை தோற்கடிக்க முடியவில்லை. அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள், முஸ்லீம் மக்கள், தென் அமெரிக்க மக்கள், செவ்விந்திய மக்களுக்கு எதிரான டொனாலட் ட்ராம்ப்பின் மனிதநாகரீகமற்ற காடடு;மிராண்டித்தனத்தை கொண்டு அவரை தோற்கடிக்க முடியவில்லை. உண்மையில் இவை டொனாலட் ட்ரம்ப் வெற்றியை கணிசமாக குறைத்தது என்பதைத் தாண்டி, கிளாரி கிளின்ரனின் அரசியலும் இதனால் ஆனாது என்பதே உண்மை. 

இனவாதம், மதவாதம், நிறவாதம், ஆணாதிக்கவாதம் அனைத்தும் டொனாலட் ட்ராம்ப்பிற்கு எதிராக முன்னிறுத்திய கிளாரி கிளின்ரன் அரசியலிலும் காணப்படுவது தான். அமெரிக்க சமூகமே இதற்குள் இருக்கும் போது, டொனாலட் ட்ரம்ப்பினை மட்டும் எதிராகக் காட்டி ஊடக பயங்கரவாதம் மூலம் வாக்கைப் பெற்று வெல்ல முனைந்து தோற்றிருக்கின்றனர்.               

வெற்றிபெற்ற டொனாலட் ட்ராம்ப்பின் பொருளாதாரக் கொள்கை உலகமயமதாலுக்கு ஆபத்தான தேசியவாதமாக உலகமயமாதல் கருதியது. இந்த வெற்றியை தடுக்க, டொனால்ட் ட்ராம்ப்பின் வெளிப்படையான இனவாதம், ஆணாதிக்கவாதம், நிறவாதம் தொடங்கி சூழல் அழிப்புக்கு ஆதரவான அவரின் கொள்கையை முன்னிறுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர் என்பதே இதன் பின்னான அரசியல் சூக்குமம். 

உலகமயமாதல் பொருளாதாரமும் டொனாலட் ட்ரம்ப்பின் தேசியவாத பொருளாதாரமும்        

டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தலின் போது சீன உற்பத்திக்கு எதிராக அமெரிக்க உற்பத்தி கொண்டு வருவதன் மூலம், அமெரிக்கர்களின் வேலை உத்தரவாதத்தை வழங்கி இருக்கின்றார். அதாவது இன்றைய உலகமயமாதல் பொருளாதாரத்துக்கு பதில் தேசிய பொருளாதாரம் முன்னெடுக்கப்படும் என்று கூறி இருக்கின்றார். இதேபோன்று பாரிசில் கையெழுத்தான வெப்பமடைதலைக் குறைக்கும் ஒப்பந்தத்தை, தாம் கைவிட உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்கரின் வேலை பெருகும் வறுமை ஒழியும் என்று கூறியதன் மூலம்  வெற்றி பெற்று இருக்கின்றார்.   

இந்த இரு விடையமும் தான் உலகமயமாதல் மூலம் உலகை ஆளும் வர்க்கங்களைக் கலக்கத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது. இதனால் தான் தேர்தல் மூலம் டொனால்ட் ட்ராம்ப் வெற்றி பெறுவதை தடுக்க, எதிர்ப்பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தன. இதை மீறிய தேர்தல் முடிவுகளை அடுத்து, உலகமயமாதல் மூலதனத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் பரவி வருகின்றது. தேர்தல் வெற்றியின் பின் டொனால்ட் ட்ரம்ப்பின் குத்துக்கரணமான கருத்துகளை கடந்தும் இந்த அச்சம் என்பது எங்கும் வியாபித்து வருகின்றது.

ஏற்கனவே உலகப் பொருளாதார நெருக்கடி என்பது இராணுவமயமாகிவரும் பொது சூழலில்,  டொனால்ட் ட்ராம்ப்பின் தேசியவாதக் கொள்கை நடைமுறைக்கு வருமாயின் பாரிய உலக நெருக்கடிhயக மாறும். இது உலக யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்; அல்லது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா ஆளும் வர்க்கத்தால் கொல்லப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும்;.

டோனால்ட் ட்ரம்ப் முன்வைக்கும் அமெரிக்கா தேசியவாதக் கொள்கை, அமெரிக்க மூலதனத்தின் கொள்கையல்ல. இதுதான் இதில் சூக்குமமாகும். அமெரிக்க தேசியவாதமானது அமெரிக்கா மூலதனத்தால் வாழ்விழந்த மக்களின் வாக்குகளால் தெரிவானது. அதேநேரம் டொனால்ட் ட்ரம்ப்பின் மூலதனமானது தேசியம் சார்ந்ததாக இருப்பதாலும் கடந்த வருடங்களில் அவரின் மூலதனத்துக்கு ஏற்பட்ட பொதுச் சரிவுகளும் இணைந்து தான் அமெரிக்க தேசியவாதமாக முளைவிட்டு இருக்கின்றது. அமெரிக்கரைச் சுரண்டும் அமெரிக்க தேசியவாத  மூலதனக் கொள்கை என்பது இன, மத, நிறவாதமாக வெளிப்பட்டு நிற்கின்றது. 

டோனால்ட் ட்ரம்ப்பின் அமெரிக்க தேசியவாத மூலதனத்துக்கு முரணான உலக மூலதனம் என்பது, அமெரிக்காவின் நலன் சார்ந்ததாக இருப்பதை நாம் காணமுடியும்;. 2016ம் ஆண்டு ஒரு பில்லியன் டொலருக்கு (100 கோடி) அதிகமான சொத்து கொண்ட 1826 பேரில், 540 பேர் அமெரிக்கர்கள். முதல் 100 பேரில் 56 பேர் அமெரிக்கர்கள். முதல் 10 பேரில் இல் எட்டு பேர் அமெரிக்கர்கள். 

இதைப் போல் 540 பேரில் 65 பேர்கள் பெண்கள். இன்று உலக மூலதன குவிவு என்பது, ஆண் பெண் வேறுபாடு கடந்த ஒன்றாக பரிணமித்துள்ளது. மூலதனக் குவிவுக்கு பின்னால்   ஆணாதிக்க தடைகள் எதுவும் இன்று கிடையாது. உலகமயமாதல் என்பது அமெரிக்கா நோக்கி செல்வத்தை குவிக்கின்றது என்பதே இதன் பின்னுள்ள பொது உண்மை.    

உலகில் முதல் 100 பேரின் சொத்துப் பெறுமதி 892 பில்லியன் (89200 கோடி) டொலர். இது 2015யை விட 2016 6 சதவீதம் அதிகமாகும். 1826 பில்லியனரின் மொத்தச் சொத்து 6.5 ரில்லியன் (650000 கோடி) டொலர். செல்வம் தனிநபர்களை நோக்கி குவிகின்றதன் அர்த்தம் அமெரிக்கா நோக்கி செல்வம் செல்லுகின்றது என்பதே. 

குறிப்பாக உலகின் ஒரு சதவீதமான பணக்காரர்களின் சொத்தானது 99 சதவீதமான மக்களின் செல்வத்தை விட அதிகமாகும்;. இந்தச் செலவு அதிகரிப்பு என்பது 2009 இல் 44.1 சதவீதத்தாலும், 2014 இல் 48.1 சதவீதத்தாலும், 2016 இல் 50 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. அதாவது 2014 இல் ஒரு சதவீதமான செல்வந்தர்களின் செல்வத்தின் சராசரி  அதிகரிப்பு  2.7 மில்லியன் (27 லட்சம்) டொலராhகும். செல்வம் அமெரிக்காவில் குவிகின்றது என்பதும், இந்த உலகமயமாதல் "தேசியவாத" டொனால்ட் ட்ரம்ப்பினை தெரிவு செய்யவில்லை.    

அதேநேரம் செல்வக் குவிப்பு தான் அமெரிக்கா முதல் உலக மக்கள் வரையான வேலையின்மைக்கும், வறுமைக்குமான காரணமாகும். செல்வம் குவிகின்றது. குறிப்பாக உலகமயமாதல் மூலம் அமெரிக்காவில் அதிகரித்த அளவில் குவிகின்ற  செல்வமானது அமெரிக்காவில் வேலையின்மையை உருவாக்குகின்றது. 

உதாரணமாக அப்பிள், மைக்ரோசொவ்ற் முதல் அனைத்தும் சீனாவில் உற்பத்தி  செய்வதன் மூலம் தான், செல்வம் அமெரிக்காவில் குவிகின்றது. டோனால்ட் ட்ராம்ப்பின் குவியும் செல்வத்தை வரிகள் மூலம் அமெரிக்கருக்கு பகிரக்கூடிய முதலாளித்துவ கொள்கையைக் கூட முன்வைக்கவில்லை. 

அமெரிக்கர் நுகரும் சீனாப் பொருளை அமெரிக்காவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதும் குறைந்த கூலியை பெறும் வெளிநாட்டவர் அல்லாத அமெரிக்கரைக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தேசியவாதக் கொள்கை (டொனால்ட் ட்ரம்ப்பினதும் கூட) என்பது, அதிக லாபத்தைக் கைவிட்டுவிட்டு வருமாறு உலக (அமெரிக்கா) மூலதனத்திடம் கோருவதாகும். அதாவது உலகமயமாதலை கைவிடக் கோருவது.  

சுரண்டுவதை கொள்கையாகக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட மூலதனக் கொள்கைக்கு முரணானது கூட. அதிகமாகச் சுரண்டுவது தான் மூலதனக் கொள்கையாக இருக்க, அதை உலகமயமாதல் மூலதனத்திடம் (மட்டும்) கோருவது என்பது சாத்தியமற்றது. 

அதேநேரம் சில தடைகள் மூலம் தன்னை ஒத்த தேசியவாத மூலதனத்துக்கு வாய்ப்பாக சந்தையை மாற்றுவது என்பது, மூலதனத்துக்கு இடையிலான கெடுபிடி யுத்தமின்றி சாத்தியமில்லை. 

சீனப் பொருட்கள் உலக சந்தையையும், அமெரிக்கா சந்தையையும் ஆக்கிரமித்துள்ளதான பொதுக்கருத்துக்கு பின்னால் அந்த மூலதனம் யாருடையது என்றால் 1800 க்கு மேற்பட்ட பில்லியன் சொத்துக்களை குவித்துள்ளவர்களின் மூலதனமே. அதாவது பெரும் பகுதி அமெரிக்கர்களினது சொத்து. அமெரிக்க மூலதனம் சீனாவில் வைத்து உற்பத்தி செய்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக சந்தையில் விற்பனை செய்கின்றது. இங்கு சீனாப் பொருள்கள் என்பது பொய். அமெரிக்கா உள்ளிட்ட பெரு மூலதனங்கள், சீனாவில் வைத்து உற்பத்தி செய்த பொருட்களே இவை. சீனப் பொருட்களை அமெரிக்காவில் விற்பதற்கு தடை என்பது அமெரிக்காவின் உலக மூலதனத்துக்கு எதிரான தடை என்று தான் அர்த்தம்.  

சீனா மீதான டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுக்கு அதிக கடன் கொடுத்த நாடான சீனா உள்ளடங்கிய உலக கட்டமைப்பிற்கு எதிராக மாறும். இன்று அமெரிக்காவானது ஒரு செக்கனுக்கு 15670 டொலர் வட்டியாக செலுத்துமளவுக்கு 20 ரில்லியன் (2000000 கோடி) கடனை கொண்ட ஒரு நாடு. உலகில் மொத்தக் கடனான 230 ரில்லியன் (23000000) டொலர் கடனில், அமெரிக்கா கடன் 9 சதவீதமாகும். அமெரிக்கா வாங்கிய மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனாவின் பங்கு 1.3 ரில்லியன் (130000 கோடி) டொலாகும். இதுதான் அமெரிக்கா வாங்கிய வெளிநாட்டுக் கடனில் அதிகமாகும். அமெரிக்காவின் உள்நாட்டு கடனில் 5.1 ரில்லியன் (510000 கோடி) டொலர் செல்வந்தர்களுடையது.

கடன், சந்தை அனைத்தும் உலமமயமாதல் அமைப்புமுறையை மீறிவிட முடியாத அளவுக்கு, அமெரிக்கா முதல் சீனா மூலதனம் வரை அமெரிக்காவை சுற்றி வேலியை கொண்டு இருக்கின்றது.                    

டொனாலட் ட்ராம்ப்பின் கற்பனையான பொருளாதார கொள்கை மூலம் தேர்தலை வெல்வதற்காக வீம்புக்கு அமெரிக்க தேசியவாதம் முன்வைத்ததாக இருந்தால் அமெரிக்க சமூகத்தை பிளக்கும் இன - நிற - மத வன்முறையை கிளறிவிட்டு அதன் மூலம் ஆதாயமடைவதையே டொனாலட் ட்ராம்ப் முன்வைக்கின்றார் என்பதே அர்த்தம். அதாவது சமூகத்தை பிளந்து லாபம் அடையும் தேசிய மூலதனத்தின் வக்கிரமாகவே அரங்கேறும். 

உலக மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடுகள் தேசங்கள் சார்ந்ததாக குவியும் போதுதான், உலக யுத்தத்துக்கு இட்டுச்செல்லும்;. அமெரிக்காவின் உலக மூலதனத்துக்கு எதிரான, அமெரிக்காவின் தேசியவாத பொருளாதாரமானது உலக யுத்தத்துக்கு இட்டுச்செல்லாது. மாறாக தேசியவாத பொருளாதார அடிப்படை அழிக்கப்பட்டு, அமெரிக்காவிற்குள்ளான இன நிற மதவாதமாகவே மேலெழும்.