Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதமும் யாழ் பல்கலைக்கழகமும்

இனவாதம் என்றால் சிங்கள இனவாதமாகக் கருதுகின்ற யாழ் மையக் கருத்தியல், யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை திரித்துப் புரட்டுகின்றது. யாழ் பல்கலைக்கழக வன்முறையில் தமிழ் இனவாதமே முதன்மையான பங்கைக் கொண்டு செயற்பட்டதுடன், இன வன்முறையைத் துண்டியது. இந்த பின்னணியில்

1. இன ரீதியாக தமிழர்கள் கொழும்பில் தாக்கப்பட்டால் அதை இனக்கலவரம் என்றோ, இனவன்முறை என்றோ கூறுகின்ற தமிழர்கள்;, அதை சிங்கள இனவாதமாகக் கருதுகின்றனர். தமிழ்மொழி பேசும் பிரதேசத்தில் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டால், அது சிங்கள இனவாதமல்ல, அது தமிழ் இனவாதமாகும்.

 

2. எந்தப் பிரதேசமாக இருந்தாலும், இன வன்முறை நடத்தியவர்கள் காரண காரியத்தைச் சொல்லி நியாயப்படுத்துவது தங்கள் இனவாதத்தை மூடிமறைக்கும் மனிதவிரோத நடத்தையாகும்.

3. "பல்கலைக்கழகம்" என்ற பெயரே பல்விதமான கலைகளை உள்ளடக்கிய ஒரு கழகம் என்பது தான் பொருள். பல்கலையை அங்கீகரிக்கவும், ஒரு கழகமாக சேர்ந்து இருக்கவும், மாறுபட்ட பண்பாட்டையும் கலாச்சாரங்களையும் கொண்டவர்களை உள்ளடக்கியது தான் பல்கலைக்கழகம். இதற்கு முரணாக பல்கலைக்கழகத்தில் எப்படி கற்க முடியும்! எதைத்தான் கற்க முடியும்!!

சமூகத்தை, பல்வேறு சிந்தனைகளை பெற்று முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் முன்னின்று வழிநடத்தக் கூடியவர்களை உருவாக்க வேண்டிய யாழ் பல்கலைக்கழகம், படுபிற்போக்கான நிறுவனமாக இருக்கின்றது. இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் யாழ் பல்கலைக்கழகம் பிற்போக்கான பாத்திரத்தை வகித்து வருகின்றது. யாழ் பல்கலைக்கழகம் தன் வரலாற்றில் 1985-1987 ஆண்டுகள் மட்டும் முற்போக்கான சமூக வரலாற்றை முன்னெடுத்திருந்தது. அண்மையில் விஞ்ஞான பீட மாணவர்கள் சிங்கள மாணவர்களுடன் இணைந்த முன்னெடுப்புகளை முறியடிக்க கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் இனவாத வன்முறையில் ஈடுபட்டனர்.

4. கிராமப்புறங்களில் இருந்து வரும் சிங்கள மாணவர்கள் இனவாதச் சூழலில் வாழ்ந்தவர்கள் அல்ல. இதனால் அவர்கள் இனவாதத் தன்மை கொண்டவர்களல்ல. தமிழர்கள் இனவாதச் சூழலில் வாழ்ந்ததுடன் அனைத்தையும் இனவாதமாக காண்பவர்கள், கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர். அனைத்தையும் இனவாதமாக சிந்திப்பவராக இருக்கின்றனர். இந்தப் பிற்போக்கான சிந்தனை தான் பல்கலைக்கழத்தில் நடந்த வன்முறைக்கு காரணம்.

5. "சிங்களவன்" என்றால் எதிரி என்பது தொடங்கி பண்பாடு மொழி அனைத்தையும் எதிராகவும் எதிரியாகவும் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழ் இனவாதம் போல், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் இருப்பதில்லை. அங்கு இனவாதம் அரசு மற்றும் கட்சிகள் வடிவில் இருக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடிகின்றது. இனவாதம் கொண்ட தமிழர் தங்கள் சொந்த சாதிய கண்ணோட்டத்தில் சிங்கள மக்களை அணுகுகின்றனர்.

6. வன்முறையை நடத்தியவர்கள் சிங்கள மாணவிகளை பாலியல்ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர். அதை மூடிமறைத்து, முன்னிறுத்தும் தமிழ் ஆணாதிக்க இனவாத கலாச்சாரத்தை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?

7. வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் சிங்கள மொழி பேசும் மாணவர்களாக இருக்க, காட்சிகள் படங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டு திரிக்கப்பட்டு காட்சிப்படுத்தும் இனவாத பின்னணியும், ஊடக விபச்சாரமும் இந்த வன்முறையின் பின்னால் முழுமூச்சாக செயற்பட்டு வருகின்றது என்பதே உண்மை. தற்காப்புக்காகத் திருப்பி தாக்கிய படங்களை முதன்மைப்படுத்தி, தமிழ் இனவாதம் கிளறிவிடப்பட்டதே காட்சிப் படங்களாக ஊடகங்களில் பின் அரங்கேறியது.