Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்றைய இலக்கியப் போக்குக் குறித்து

இலக்கியப்போக்குக் குறித்த இந்த விவாதமானது, வணிக - வலதுசாரிய இலக்கியம் குறித்தல்ல. இலக்கிய உருவம் மூலம் சமூக வேசம் போடும் சமூக செயற்பாட்டை நடைமுறையாகக் கொண்டிருக்காத இயங்கியலற்ற இலக்கியங்கள் குறித்தானது.

இயங்கியலற்ற இந்த இலக்கியத்தின் வருகைகள் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் வெளிவரும் இலக்கியங்கள் குறித்து தெளிவும், புரிதலும் அவசியமாகின்றது. இலக்கிய உருவத்தை (கலை) முதன்மையாக முன்னிறுத்தி, அதை இலக்கியமாகப் பார்த்தல் பொது அறிவாக இன்று இருக்கின்றது. படைப்பாளி கொண்டிருக்கக் கூடிய சிந்தனையை மக்கள் இலக்கியமாகப் புரிந்து கொள்வதும், உருவ அலங்காரத்தைக் கொண்டு படைப்பை முற்போக்காகக் காட்ட முற்படுவதும் நடக்கின்றது. குறிப்பாக இலக்கியவாதியின் எதார்த்த சிந்தனையாக இருக்கக் கூடிய சாதியம் - ஆணாதிக்கம் - இனவாதம் - வர்க்கத் தன்மையை ...அடிப்டையாகக் கொண்ட இலக்கிய (எதார்த்த) உள்ளடக்கத்தை முடிமறைக்க, உருவத்தில் போலியாக எதிர்வினையாற்றுவது இலக்கியமாகின்றது. அதாவது உள்ளடக்கத்தில் பிற்போக்கான இந்தச் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் - உருவத்தில் பிற்போக்கை எதிர்ப்பதான பாவனைகள் மூலம், இலக்கிய மோசடிகள் நடந்து வருகின்றது. இன்றைய வாசிப்பு முதல் விமர்சனங்கள் வரை, இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் அணுகுவதையே பொதுவில் காண முடியும்.

மனிதன் சமூக சாரத்தை இயங்கியல் (உருவம் - உள்ளடக்கத்தின் ஒற்றுமையுடன்); தன்மையில் வெளிப்படுத்துவதே இலக்கியம். ஆனால் தமிழ் இலக்கியங்கள் உருவம் - உள்ளடக்கத்தை ஒன்றுக்கு ஒன்று முரணாக முன்வைப்பதே பொதுவாக நடந்தேறுகின்றது.

கலை-இலக்கியம் குறித்து நாம் பேசும் போது - இலக்கியம் என்றால் என்னவென்ற பொது அறிவு அவசியமாகின்றது. கலை குறித்த புரிதலை பெற்றுக் கொள்வதன் மூலம் - இன்றைய இலக்கியத் தன்மையை பகுத்தாய்வுள்ளாக்குவோம்.

கலை என்றால் என்ன?

மனித சமூகம் இரண்டு வகையான அறிதல் போக்குகளைக் கொண்டிருப்பதும் - அதை வெளிப்படுத்தும் இரு வேறு வடிவங்களும் காணப்படுகின்றது. இந்த வகையில் அறிவு - கலை எனஇ இரண்டாக அறிதல்ப் போக்கு பிரிகின்றது. அதே நேரம் இது ஒன்றுக்கு ஒன்று முரணானதல்ல. - ஒன்றை ஒன்று சார்ந்த இரு வேறு அறிதல் பிரிவுகளாகும். இந்த வகையில் அறிவியலறிஞன் - கலைஞன் தோன்றுகின்றான். அவர்கள் எழுத்து விடையங்கள் - அவை எந்த வகையில் வேறுபடுகின்றன என்ற புரிதலும் அவசியமானதாகின்றது.

மனிதன் தன் அறிதல் அனுபவங்களை ஒழுங்குபடுத்தி ஆராய்வதே அறிவியல். தன் உணர்வு அனுபவங்களை ஒழுங்குபடுத்தி ஆராய்தலே கலையாகும். இது சிந்தனைக்கும் - உணர்தலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டையும்இ அறிதல் - உணர்தல் முறையையும் எமக்குத் தெளிவாக்கின்றது.

இங்கு அறிவியலறிஞனுக்கும் - கலைஞனுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடானது, அவர்கள் செயற்படும் தளம் மற்றும் சமூகப் பாத்திரம் தான். அவர்கள் ஆராயும் விடயங்கள் முறையே புற - அக கூறுகள் சார்ந்ததுடன், அளவு - பண்புத் தன்மை கொண்டதுமான, வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. அதாவது

1. அறிவியலறிஞன் புறநிலை எதார்த்தத்தின் வெளிப்புற உலக நிகழ்வுகளைக் கொண்டு, பொருட்களின் அளவு ரீதியான அம்சத்தை முதன்மைப்படுத்தி ஆராய்கின்றான்.

2. கலைஞன் அகநிலை எதார்த்தத்தின் உட்புற உலக நிகழ்வுகளைக் கொண்டு, பொருட்களின் பண்பு ரீதியான அம்சத்தைக் கொண்டு ஆராய்கின்றான்.

இந்த வகையில் அறிவியலறிஞன் தர்க்கரீதியாக, புறநிலை யதார்த்தத்தைக் கொண்டு ஆராய்கின்ற போது கலைஞன் அகநிலைப்பட்ட யதார்த்தத்தினை தளத்துக்கும், இசைக்கும் ஏற்ப கலையாக்குகின்றான். கலை (இலக்கியம்) உண்மையான வாழ்விலும் பார்க்க, வாழ்க்கையைச் செறிவுள்ளதாக ஒருமுகப்படுத்தப்படுவதாக இலட்சியத்தை அண்மித்ததாகவும் காணப்படுகின்றது. இதைப் படைக்கும் ஒரு கலைஞன் புறநிலைத் தன்மை பற்றி சரியாகவும் தெளிவாகவும் அறிந்திருக்க வேண்டும். இதை தெளிவாகக் கொண்டிராத போதே - அறிவியலறிஞனின் விமர்சனத்தைப் பொதுவாக எதிர்கொள்கின்றான்.

கலை (இலக்கியம்) குறித்து பொதுப்புத்தி அறிவு

உருவம் மற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டது தான் இலக்கியம். உருவம் என்பது கலை வடிவத்தையும் - அதை அடிப்படையாகக் கொண்ட மொழியையும் ஆதாரமாகக் கொண்டது. உள்ளடக்கமானது நிலவும் சமூக எதார்த்தத்தில் இருந்து விலகி இதன் அகக் கூறுக்குச் சென்று - மீண்டும் முழுமையான எதார்த்தத்துடன் திரும்புதலாகும்.

'சிறந்த' இலக்கியங்களாக அல்லது இலக்கியமாகவோ எடுத்துக் காட்டுபவை எல்லாம் பொதுவான எதார்த்தத்தின் அகநிலையுடன் - அதன் ஒரு கூறை முதன்மைப்படுத்தி விடுகின்றவையாக இருக்கின்றது. இவையெல்லாம் எதார்த்தத்தை வெறும் காட்சிகளாகவோ, நிகழ்வுகளாகவோ குறுக்கிக் காட்டிவிடுகின்றது.

நிகழ்வு தோன்றுவதற்கான காரண காரியங்களைக் (உட்கூறுகளை) கொண்ட படைப்பாக இருப்பதில்லை. இதுவே எம்மைச் சுற்றி வெளிவருகின்ற படைப்பு இலக்கியமாகவும், அழகியலாகவும் மாறி இருக்கின்றது.

இலக்கியப் படைப்பு தன் கருவைச் சுற்றிய நிகழ்வுகள் (உண்மை - புனைவு) அனைத்தும் எதார்த்தத்தில் இருக்கின்ற போதுஇ அதை அப்படியே இயற்கையின் பொது அழகியலூடாகச் சொல்வதையே இலக்கியமாகக் காட்ட முனைகின்றனர். அதாவது உள்ளடக்கத்தில் இருக்கும் பொது எதார்த்தம் மீதும் - உருவத்தை அழகியலாக்கிவிடுதையே இலக்கியமாக்கி விடுகின்றனர். எதார்த்த உள்ளடக்கம் இயல்பிலேயே இந்தச் சமூக அமைப்பு சார்ந்து பிற்போக்கானதாக இருப்பதால் - உருவம் இயல்பாகவே போலியான வேசத்தை அணிந்து கொள்ள முனைகின்றது. உருவத்தில் வேசம் போடுவதன் மூலம் - சமூக எதார்த்தத்தின் அகக்கூறுகளை ஆராய்வதே அழகியல் மற்றும் கலை என்பதை மறுத்துவிடுகின்றனர்.

உருவத்தைக் கொண்டு இலக்கியமாக புரிந்து கொள்வது, உண்மையான இலக்கியமோ - அழகியலோ அல்ல. படைப்புக்குரிய நிகழ்வு நிகழ்வதற்குரிய அகக் கூறுகளை ஆராய்வதே இலக்கியம் என்பதும் - அந்த அகக் கூறுகளை முன்வைக்கும் விதமே அழகியலாகும்.

கருவைச் சுற்றிய இயற்கையை வர்ணிப்பது - சூழலை முன்னிறுத்துவதன் மூலம் தன்னை முன்னிலைப்படுத்த சமூகக்கேடுகளை எதிர்ப்பதாக உருவத்தில் பாவனை செய்வதையே இலக்கியமாகக் கருதுகின்றனர். எதார்த்தத்தினை இயக்குகின்ற அதன் அகக் காரணகாரியங்களை ஆராய்வதே இலக்கியம் என்பதையும் - அதுவே அழகியல் என்பதுவுமே உண்மை.

இன்றைய சமூக அமைப்பில் உண்மையும், அழகும் பகையுள்ள எதிர்மறைப் பொருளாகவும் - உண்மை அருவருப்பானதாகவும் - அழகு என்பது உண்மையல்லாததாகக் காட்சியளிக்கின்றது. இலக்கியவாதி இன்றைய இந்தச் சமூக அமைப்பின் சாரத்தைப் புரிந்து கொண்டு இதற்கு எதிராக சமூகத்தை ஆராயத் தவறினால் - மக்கள் இலக்கியமாக இருப்பதில்லை. இயங்கியல் தன்மையற்ற - தன்னை முதன்மைப்படுத்தும் நோக்கத்தை மைய்யப்படுத்தி - அதை இலக்கியமாக்குகின்றனர்.

உருவத்துக்கும் - உள்ளடக்கத்துக்கும் உள்ள அடிப்படையான ஒத்திசைவான முக்கியத்துவத்துக்குப் பதில் உருவத்தைக் கொண்ட இலக்கியமாகவும் - உருவத்தை அழகுபடுத்துவதையே (கலை) அழகியலாக்கின்றனர். உள்ளடக்கத்தை ஆராய்வதன் மூலமான அழகியலைக் காணமுடிவதில்லை. எதார்த்தத்தை அப்படியே எடுத்துக் கொள்வதும் - அக எதார்த்தத்தை ஆராயாது வெறும் உணர்ச்சியை முதன்மைப்படுத்திவிடுகின்றனர்.

உணர்வு வெறும் உணர்ச்சியாக வெளிப்படும் இலக்கியங்கள், சமூக நடைமுறையில் இருந்து விலகி விடுகின்றது. படைப்பாளி சமூக நடைமுறையில் இருந்த தன்னை விலக்கி விடுவதில் இருந்தே - படைப்பும் தன்னை விலக்கிக் கொள்கின்றது.

இந்தப் பின்னணியில் கலைக்குரிய அழகியல் பொதுப்புத்தியால் குறுக்கப்பட்டு புரிந்து கொள்வது நிகழ்கின்றது. அழகியலை மொழிச் சிற்பங்களாக - நிகழ்வைச் சுற்றி பிறவிடயங்களாக - இலக்கியத் தன்மையாகக் குறுக்கிவிடுகின்றனர். அழகியல் என்பது என்ன? வெளித்தெரியும் காட்சியின் (எதார்த்தத்தின்) உட்சாரத்தைக் கலையாக, இலக்கியமாக கொண்டு வருவதே அழகியல்.

அழகியல் என்பது 1. கலைக்குரிய தன்மை 2. மொழி 3. நிகழ்ந்த சூழல் .. இதை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நிகழ்வு நிகழ்கின்றதற்கான புறக் காரணங்கள் - எப்படி அக காரணகாரியங்களுடன் இயங்குகின்றது என்பதை வெளிக் கொண்டு வருவது தான் அழகியல் மட்டுமல்ல - அதுதான் கலையாகவும் இருக்கமுடியும்;. இது தான் மக்கள் கலையாகவும் இருக்கும்;.

உதாரணமாக புதிய நோயை எடுத்தால், மருத்துவர் நோய் தோற்றுவதற்குரிய புற சூழலை ஆராய்வதுடன் - நோயாளியின் உடற் (அகக்) கூறுகளை ஆராய்வதன் மூலம் தான் மருத்துவத்தை தொடங்குகின்றனர். இதை விட்டுவிட்டு நோயை - நோயாளியைச் சுற்றிப் பேசுவது மருத்துவமாகாது. இங்கு மருத்துவருக்கு பதில் கலைஞனை எடுத்தால் - அவனின் பணி மருத்துவர் போன்றது.

1980களில் வெளியான இலக்கியம் குறித்து

1980களில் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தேசியம் முதன்மை முரண்பாடாக மாறிய பின் - தேசியம் தமிழ் இனவாதமாகவும் - தமிழ் இனவாதம் புலியிசமாக மாறிய மூன்று வரலாற்றுப் போக்குக்குப் பின்னான, அக்கால இலக்கியம் குறித்தான பொதுப் புரிதல் அவசியமாகின்றது.

1970 களில் தொடங்கிய தேசியவாதம் 1980 களில் முதன்மை பெற்ற போது - இலக்கியத்திலும் அதன் தாக்கத்தைக் காணமுடியும். முற்போக்கான இடது தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கருநிலை இலக்கியப் படைப்புகள் தோன்றின. இயக்கச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், உதிரியான படைப்புகளில் இந்த இலக்கியப் போக்கைக் காண முடியும்.

1960 களில் தோன்றிய இடதுசாரி இலக்கியத்தின் வீச்சான அதன் மரபு வழியில், இந்த இடது தேசிய இலக்கியம் கருக்கொண்டது. அரசியலில் இந்த இடதுசாரிய தேசியம் ஏற்படுத்திய தாக்கம், இலக்கியத்திலும் பிரதிபலித்தது. கருத்தளவில் மக்களை சார்ந்தாகத் தோன்றிய இந்த இடதுசாரிய தேசியவாத இலக்கியப் போக்குகளுக்கு மக்கள் சார்ந்த இடதுசாரிய நடைமுறை இருக்கவில்லை. மறுபக்கத்தில் மக்களை ஒடுக்கும் வலதுசாரிய தேசியவாதப் போக்கு நடைமுறை கொண்டதாகக் காணப்பட்டது. இடது தேசியவாத கருத்துக்கும், வலது தேசியவாத நடைமுறைக்குமான முரண்பாட்டை வன்முறை மூலம் தீர்த்த வலதுசாரிய போக்கானது இடது தேசியவாத இலக்கியப் போக்கின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது.

இதனால் இடது தேசிவாதமாகக் கருக் கொண்ட இலக்கியம் வலதுசாரிய வன்முறைக்கு எதிரான இலக்கியமாக மாறியது. மக்கள் விரோத வலதுசாரிய தேசியவாத போக்கைச் சாடி, எள்ளி நகையாடும் இலக்கியமாக வெளிவந்தது.

1990 களில் வலதுசாரிய தேசியம் தன் அதிகாரத்தை முற்றாக நிறுவிக் கொண்டதன் மூலம், வலதுசாரிய தேசியவாதத்துக்கு எதிரான இலக்கியப் போக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் அது வெளிப்படத் தொடங்கியது. இந்த வகையில் பல சிறு சஞ்சிகைகள் வெளி வந்தன. புலம்பெயர் இலக்கிய மரபில் தொடங்கிய இடது தேசியவாத இலக்கியப் போக்கும் - கருத்துக்கும் நடைமுறை வாழ்கைக்குமான முரண்பாட்டால் மெது மெதுவாக மறையத் தொடங்கியது.

இதற்கு வலு சேர்க்கும் வண்ணம் வலதுசாரிய தேசியமானது புலித் தேசியமாகக் குறுகி, தன் தேசியக் கூறுகளை இழந்தது. தேசியதுக்குப் பதில் இனவாதத்தை தேசியமாக வெளிபடுத்தத் தொடங்கிய சமகாலத்தில் கருத்து நிலையில் இருந்த புலம்பெயர் இடதுசாரிய தேசியவாதமும் காணமற் போனது.

மாறாக இலக்கியமும் - அரசியலும்; படிப்படியாக புலி எதிர்ப்பு - புலி ஆதரவாக மாறிய சூழலில் இலக்கியமும் அதற்குள் முடங்கிப்போனது.

அதேநேரம் புலியல்லாத புலம்பெயர் இலக்கிய நோக்கம் என்பது, தன்னை முதன்மைப்படுத்தும் பிரமுகர்த்தன இலக்கியமாகக் குறுகியது. புலிக்கு வெளியிலான இந்த இலக்கியம் ஒன்றில் புலியெதிர்ப்பு இலக்கியமாகத் - தன்னை முதன்மைப்படுத்தும் இலக்கியமாக வெளிப்பட்டது. புலிகளின் அரசியலுக்கு மாறான மக்களை முன்னிறுத்திய இலக்கியத்தைப் படைக்கவில்லை. அரசியல் விமர்சனத்திலும் இது தான் நடந்தேறியது.

புலியெதிர்ப்பு - பிரமுகர்த்தனம் என்ற வட்டத்திற்குள் குறுகிப்போன புலம்பெயர் இலக்கியம் மற்றும் அரசியல் இயல்பாக தங்களை முதன்மைப்படுத்தி மக்களுக்கு எதிரான கருத்து நிலையை முன்தள்ளியது.

அதன் மறுபக்கம் புலியை வைத்து பிழைக்கும் புலி ஆதரவு இலக்கியமும் தோன்றியது. அது புலிகளின் வலதுசாரிய பாசிசத்தைப் பலப்படுத்தி பாதுகாக்கும் இலக்கியமாக மாறியது. இடதுசாரிய சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளின் தலைமையில், இந்த மக்கள் விரோதப் புரட்டு இலக்கியம் புலிகளுக்குள் தோன்றியது. மக்களை ஒடுக்கியபடி பாசிசத்தை நடைமுறையாக்கிய புலித்தேசிய இனவாதத்தை நியாயப்படுத்தியது இந்த இலக்கியப் போக்கு.

புலி இருந்த வரை புலி ஆதரவு - புலியெதிர்ப்பு என்ற இவ்விரண்டுக்குள்ளும், பிரமுகர்த்தன இலக்கியப் போக்கே காணப்பட்டது. இதை மூடிமறைக்க 'இலக்கியம் இலக்கியத்துக்காக' என்ற முகமூடி அணிந்து கொண்டு இலக்கியத்தின் சமூகக் கூறை மறுதலித்தன. அதே நேரம் மக்கள் சார்ந்த வாழ்வியல் இலக்கியத்தை நிராகரித்தபடி, அதை வெறும் பிரச்சார இலக்கியமாகவும் வறட்டுத்தன... இலக்கியமாகவும் காட்டி மக்கள் இலக்கியத்தை நிராகரித்தனர். தன்னை முதன்மைப்படுத்தும் நோக்கத்துக்கும் - தங்கள் குறுகிய சிந்தனை வட்டத்துக்குமான ஒன்றை இலக்கியமாக்கி - அதைக் இலக்கியமாகக் காட்டினர்.

புலிகள் அழிந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில் மக்கள் அரசியலை முன்வைத்து அரசியல் செய்யாத ஒரு உண்மை எப்படி எதார்த்தமானதோ, அது போல் மக்கள் நலன் சார்ந்த இலக்கியம் என்பது இலக்கியத்தில் இருந்ததில்லை. மக்கள் விரோத இலக்கியம், அதாவது இலக்கியம் இலக்கியத்துக்கே என்பதனைத் தாண்டி எதுவும் இருக்கவில்லை.

தங்களை பிரமுகராக முதன்மைப்படுத்தும் நோக்கில் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. படைப்பாளிக்குச் சமூக நோக்கம் - சமூக சாரம் இருந்ததில்லை. மக்களின் அவலங்கள், துயரங்கள், விடிவில் அக்கறையற்றவர்களின் படைப்புகளே படைப்புகளாக இருந்தன.

இந்தப் போக்குக்கு முரணான மக்கள் சார்ந்த நடைமுறையைக் கோரிய அரசியல் - இலக்கியப் போக்கு சிறியளவில் காணப்பட்டது. மக்களைச் சார்ந்து நிற்காத அரசியல் - இலக்கிய தனிநபர் வாதப் போக்கை எதிர்த்து மக்கள் நடைமுறையைக் கோரிய அரசியல் - இலக்கியப் போக்கு, இந்த வரலாறுக் காலத்தில் எதிர் நீச்சல் இட்டது. இந்த அரசியல் - இலக்கியத்தை முன்வைத்தவர்கள் - 2009 பிந்திய மக்கள் சார்ந்த போராட்ட நடைமுறையுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர்.

யுத்தத்துக்குப் பிந்தைய இலக்கியங்கள்

போருக்குப் பின்பாக போர் குறித்த இலக்கிய வருகைகள் அதிகரித்துள்ளது. அதே நேரம் தமிழ் மொழி பேசும் இலக்கியப் பரப்பு தான் கொண்டு இருக்கும் சமூக நோக்கற்ற அதன் பொது உள்ளடக்கம் காரணமாக - பரஸ்பரம் ஒருங்கிணைந்து பயணிக்கின்றது. அதாவது இந்த இலக்கியங்கள் பெரும்பாலும் சமூகத்தின் இயங்கியல் போக்கில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதும் - தம்மைத் தாம் முதன்மைப்படுத்துகின்ற போக்கில் முனைப்புக் கொண்டவையாகவே வெளிவருகின்றது.

இந்தப் பின்னணியில் போர் குறித்த இலக்கியங்கள் அடுத்தடுத்து வெளிவருகின்றது. போருக்கு பின்னான பல இலக்கியவாதிகள் பொது இலக்கியத் தளத்தில் அறிமுகமாகின்றனர். இந்த இலக்கியங்கள் - போர் குறித்து சரியான சமூகப் பார்வையை வெளிக் கொண்டு வருகின்றதா?

போர் குறித்த படைப்பாளிகளின் பொதுச் சிந்தனை என்ன? இலக்கியவாதிகள் தன்னை இனம், மதம், சாதி, பால்.. கடந்த மனிதனாக முன்னிறுத்துவதில்லை. மாறாக தமிழனாக முன்னிறுத்திக் கொள்வதும் - இனவாத தமிழ்த் தேசியவாதியாக வெளிப்படுத்திக் கொள்வதில் இருந்து தான், இத்தகைய படைப்புகள் வெளிவருகின்றது. சமூக இயங்கியலற்ற தங்கள் சமூக இருப்பிலிருந்து கொண்டு - தங்களின் செயலற்ற தன்மைக்கு ஏற்பவே சமூகத்தை காண்பவராக - காட்டுபவராகவும் இருக்கின்றனர். அதேநேரம் இவர்களின் சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டமானது - இருக்கின்ற இந்த முதலாளித்துவ அமைப்பு முறை சார்ந்து சிந்திக்கின்றனர். யுத்தம் நடந்த காலத்தில் ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட அடிப்படையில் காணப்பட்ட வர்க்கம்இ சாதிஇ பிரதேசவாதம் .. போன்ற முரண்பாடுகள் குறித்தோ, யுத்தத்தை நடத்திய தரப்பின் சமூகப் பொருளாதார வர்க்க நிலை குறித்தோ, இனமுரண்பாடு தோன்றிய சமூகக் காரணம் குறித்தான சமூக பார்வையற்ற தங்கள் சிந்தனை முறையிலான இலக்கிய உள்ளடக்கத்தை படைப்பாக்குகின்றனர். அதாவது எந்த இனவாதம் தேசியமாக இருந்தோ - இனவாதத் தேசியம் எதை உள்ளடக்கமாக கொண்டிருந்ததோ - அந்த எதார்த்தத்தை எதார்த்தமாக்கி - தமக்கு எந்தச் சமூக நோக்கமற்றதாக காட்டுகின்ற தங்கள் படைப்புகள் மூலம் - உண்மையிலிருந்து விலகி நிற்கின்றனர். இனவாத இலக்கிய சிந்தனை முறையே படைப்பாக வெளிவருகின்றது.

இந்த இலக்கியங்கள் பொதுவான இலக்கிய அங்கீகாரத்தைப் பெற ஒடுக்குமுறையை உருவத்தில் பயன்படுத்திக் கொள்வதும் - புதிய வகையான இலக்கிய மோசடியாக மாறி இருக்கின்றது. உள்ளடக்க இந்தச் சமூக ஒடுக்குமுறையைக் கொண்டதாகவும் - உருவம் சமூக ஒடுக்குமுறையுடன் முரண்படுவதான - நடைமுறையற்ற போலிப் பகட்டுத்தனத்தை இலக்கியமாகின்றனர். இலக்கிய உள்ளடக்கத்தின் சாரமும் - அழகியலும் சமூக ஒடுக்குமுறையை பற்றிதாக இருக்க, அதை உருவத்தில் பூசிவிடுவதும் - அதற்கு எதிராக பாவனை செய்வதும் இன்றைய இலக்கிய மோசடியாகும்.

மாற்றம் (மக்கள்) குறித்து சொந்த நடைமுறைக் கண்ணோட்டம் இல்லாத ஓரு இலக்கியவாதி - போர் குறித்து உண்மையைத் தரமுடியுமா? எனின் இல்லை. போராட்டம் குறித்தும் - அதன் தோல்வி குறித்தும், சமூக-பொருளாதார அடிப்படையில் விமர்சனத்தைக் கொண்டிராத எந்த இலக்கியவாதியாலும் - போர் குறித்த சரியான இலக்கியப் படைப்பைத் தரமுடியாது.

1980 களில் தோன்றிய பல பத்து இயக்கங்கள் போல் தான் - இன்று போர் குறித்து இலக்கியங்கள் வெளிவருகின்றது. அன்று தோன்றிய இயக்கங்கள் சாதியம், ஆணாதிக்கம், நிலப்பிரபுத்தவம்.. போன்ற பிற்போக்கான சமூகக் கூறுகளை தங்கள் விடுதலை இயக்கம் எதிர்த்து போராடும் என்று தங்கள் திட்டத்தில் மோசடியாக முன்வைத்தது போன்று - இன்று இலக்கியங்கள் சமூகக் கேடானவைகளை (சாதியம்இ ஆணாதிக்கம், சுற்றுச் சூழல் ..) தங்கள் உருவத்தில் (உள்ளடக்கதில் அல்ல) உள்ளடக்கி கொள்வதன் மூலம் - தங்கள் இலக்கியத்துக்கு சமூக மூலம் பூசி முற்போக்காகக் காட்டிவிட முனைகின்றனர்.

இலக்கியங்கள் மூலம் தமிழ் இனவாத தேசியத்தை நியாயப்படுத்த - போர் (புலிகள்) காலத்தில் நடந்த உதிரிச் சம்பவங்களை தவறுகளாக முன்வைப்பதே, இன்றைய இலக்கியத்தில் பொதுவாகக் காணப்படுகின்றது. யுத்த கால பற்றிய இலக்கியத்தின் சாரம் அரசியல் ரீதியானதே ஒழிய, சம்பவங்கள் ரீதியானதோ - புலிகளின் நடத்தைகள் தொடர்பானவையோ அல்ல.

எந்த மக்கள் விரோத அரசியல் புலியை உருவாக்கியதோ, அதற்குள் இலக்கியம் என்னும் குண்டுச்சட்டியை ஓட்டுவதே பொதுவாக நடக்கின்றது. அரசியல் ரீதியான விமர்சன இலக்கியத்திற்கு பதில், அதை நியாயப்படுத்தும் வண்ணம், சம்பவங்கள், நடத்தைகள் தொடர்பானதாகவும் - தனிமனித நலன் சார்ந்த இலக்கியங்களாகவே அண்மைய இலக்கியங்கள் வெளிவருகின்றன.

படைப்பு இலக்கியத்தில் புலிகள் மூடிமறைத்த புலிகள் காலம் குறித்தும் - அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த பதிவுகளை, முற்போக்காக பிரமிப்பாகவும் அனுகுகின்ற பொதுப் போக்கு காணப்படுகின்றது. உண்மையில் புலிகள் காலத்தில் மக்கள் சார்ந்த வர்க்க அரசியல் மூலமாக முன்வைத்த விமர்சனத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகளையே இவை அடிப்படையாகக் கொண்டது. முன்பே வெளிவந்த விமர்சன அரசியலில் - இவை அனைத்தையும் காணமுடியும். படைப்பில் இது புதிய விடயமுமல்ல. இன்று கடந்தகால வர்க்க ரீதியான விமர்சன அரசியலைத் திரிக்கும் வண்ணம் - வர்க்க ரீதியான அரசியல் உள்ளடக்க நீக்கம் செய்து - வெறும் சம்பவங்களாக புலிகள் காலத்தை திரித்துக் காட்டுகின்ற - அதையே கடந்தகாலத் தவறாகக் காட்டுகின்ற படைப்புகளே வெளி வருகின்றது.

இதன் மூலம் சம்பவங்களும் - நடத்தைகளுமே புலிகள் காலத் தவறாக காட்டும், தமிழன் என்ற அடையாளத்தை முன்னிறுத்துகின்ற இனவாத படைப்புகளாகவே வெளிவருகின்றது.

கடந்த சம்பவங்கள் - நடத்தைகள் மீதான மத்தியதர வர்க்க வலதுசாரிய தனிமனித அதிருப்தியையும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவைகளையே தங்கள் உள்ளடக்கமாக கொண்டு - போருக்கு பிந்தைய இலக்கியங்கள் படைப்பாகின்றது.

புலிகள் இருந்த வரை புலியெதிர்ப்பை முன்னிறுத்திய இலக்கிய உள்ளடக்கம் - தற்போது இனவாத தேசியத்தை முற்போக்காக முன்னிறுத்தி வெளிவருகின்றது. கடந்த காலத்தில் நடந்தவை தனிப்பட்ட மனிதர்களின் தெரிவல்ல, மாறாக ஒரு அரசியல் வழிமுறை. இந்த அரசியல் வழிமுறை மீதான விமர்சனமற்ற படைப்பாளியின் படைப்புகள் என்பதே - இங்கு பொதுவான உண்மையாகும்.

உண்மையை மறுதலிக்கும் புனைவு இலக்கியம்

யுத்தத்துக்குப் பின் யுத்தம் குறித்தான (இனவாத) அரசியலானது, நடந்தவைகளையும் - அதற்கான சமூகப் பொருளாதார அடிப்படைகளையும் மூடிமறைப்பது தான். இந்த அளவுகோலே இலக்கியத்திலும் காணப்படுகின்றது.

போர் குறித்த புனைவு இலக்கியமானது நடந்ததைப் போன்று ஒன்றை கற்பனை மூலம் சித்தரிப்பதானது - நடந்த உண்மைகளை மறுதலிக்கின்றது. நடந்த அனைத்தையும் - புனைவு போன்று கற்பனையாக்கி விடுகின்றது. எந்தச் சமூக நோக்கமற்ற இலக்கிய நோக்கமானது - நடந்ததை நடவாத ஒன்றாக்கி விடுவதுதான்.

உண்மையில் நடந்தவற்றிக்கான சமூகப் பொருளாதார இலக்கிய உள்ளடக்கத்தை - நிலவும் சமூகப் பொருளாதார எதார்த்தம் மூலம் மறுதலிக்கும் பொதுவான இன்றைய இலக்கிய போக்கில் இருந்து - நடக்காத ஒன்றை நடந்தது போன்ற புனைவதன் மூலம் நிலவும் சமூக பொருளாதார எதார்த்தத்தை கற்பனையாக்கி மறுத்துவிடுவதே நடக்கின்றது. போர் குறித்த புனைவு இலக்கியமானதுஇ இன்றைய சமூக பொருளாதார எதார்த்தத்தை அதன் நேர்கோட்டில் மறுதலிப்பதுடன் - போர் பின்னனியில் இயங்கிய சமூக பொருளாதார கூறுகளையும் மறுதளிக்கின்றது.

இந்தச் சமூக அமைப்பின் எதார்த்தத்தை தங்கள் உள்ளடக்கமாகக் கொண்ட இலக்கியமானது - உருவத்தைக் கொண்டு உள்ளடக்க உண்மைகளை மறைத்தல் நடந்தேறுகின்றது. இது போன்றதே - எதார்த்தம் போன்று உண்மைக்கு பதிலான போர் குறித்த புனைவு இலக்கியம் அனைத்தையும் கற்பனையாகி - போர் குறித்த உண்மைகள் அனைத்தும் பொய்யாகின்றது.

உண்மைகள் மீதான புனைவு - திரிபுக்கான அடிப்படையாகும். அரசியல் போல் இலக்கியத்தில் இது நடந்தேறுகின்றது. இந்த வகையான இலக்கிய வருகைகள் மூலம் - நடந்த அழிவுகர அரசியல் உள்ளடக்கத்தை மறுதலிக்கின்ற - இலக்கியப் போக்குகளாக இன்று காணப்படுகின்றது.

யுத்தத்தைச் செய்த தரப்புகள் - யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை மூடிமறைக்க முனைந்தது போல் - போருக்குப் பின்னரான இலக்கியம் அதையே அச்சொட்டாகச் இன்று செய்கின்றது.

1.அரசியல் ரீதியாக நடந்ததை நடத்தைகள் மற்றும் சம்பவங்கள் மூலம் திரிப்பது

2.அரசியல் உண்மையை மூடிமறைக்க - கற்பனையை உண்மை போன்று முன்வைப்பது.

இதன் மூலம் உண்மை ஏது? பொய் எது? என்ற இலக்கிய - அரசியல் இடைவெளியை இல்லாதாக்கிவிடுவதாகும். நடந்ததை ஏதுமற்றதாக மாற்றிவிடுவதாகும்.

இதன் பொது நோக்கமானது - நடந்தவைகளுக்கு அரசியல் அடிப்படை இருப்பதை பொதுவாக மறுப்பதாகும்.

முடிவாக

கலையில் இயங்கியல் வளர்ச்சி என்பது உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான ஒற்றுமையாகும்.உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் உள்ள முரண்பாட்டை உணராதவர்கள் - உருவவாத இயற்பண்பு வாதத்தைப் படைப்பாகி விடுகின்றது. உள்ளடக்கத்தைப் புறக்கணித்து உருவத்தை முதன்மைப்படுத்தி உருவத்லும் - எதார்த்ததை எந்த நோக்கமும் இன்றி உள்ளதை உள்ள படி வருணித்தல் மூலம் - இயற்பண்பு வாதக் குட்டையில் மூழ்கிவிடுகின்றனர். இவை இரண்டும் இயக்க மறுப்பியலாகும்;.

ஒரு பொருளின் அதன் ஸ்தூலமான - பருமையான எதார்த்தத்தைக் கணக்கில் எடுக்காமல், ஸ்தூலமற்ற நுண்மையான ஒன்றாகக் காட்டுவது கூட இயக்க மறுப்பியலாகும். இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை முறையானது - ஊகத்தின் பாலானது. உண்மைக்கு முரணாது. நடைமுறையில் இருந்து துண்டிக்கப்பட்ட கற்பனையிலானது.

இது போன்று மனம் - பொருளைத் தனித்தனியாக பார்த்தல், அகநிலை கருத்துமுதல் வாதமாக இயங்குகின்றது. மனதைப் பொருளாக சுருக்கிப் பார்க்கின்ற இயக்க மறுப்பியலாக வெளிப்படுகின்றது.

இங்கு சமூக நோக்கமற்ற இலக்கியக் கண்ணோட்டம் - விரும்பினால் படைப்பை பயன்பாடாக்கிக் கொள் என்ற சமூக விரோத அலட்சியம், இவை தனிமனிதனான தன்னை முதன்மையாக்கி முன்னிறுத்திக் கொள்வதையே முதன்மையாகக் கொள்கின்றது.

'படைப்பைப் படைத்தவுடன் படைப்பாளியை படைப்பில் இருந்து நீக்கம் செய்கின்ற இலக்கியக் கோட்பாடு' அதாவது படைப்பின் மீதான விமர்சனத்தில் இருந்து படைப்பாளியை தப்பிச் செல்ல வைக்கும் இலக்கிய கண்ணோட்டமானது - படைப்புக்குப் பின்னான சிந்தனை முறையை பாதுகாத்துக் கொள்வதாகும்.

இந்தச் சமூகப் பொறுப்பற்ற தன்னை முதன்மையாக்கும் உதிரித்தனமான இலக்கிய நடத்தைகளையே நோக்கமற்றதாகக் காட்டிக் கொள்வதையே கோட்பாடாக்கிக் கொண்டு - தனிமனித விளம்பரங்களுக்காக உருவத்தில் சமூகக் கேடுகளை அலங்கரித்துக் கொண்டு மோசடி செய்வதையே - இன்றைய தமிழ் இலக்கியத்தில் பொதுவில் காண முடிகின்றது. இந்த வகையில் இன்றைய இலக்கியங்கள் குறித்து பொதுப் புரிதல் - சமூகம் மீது அக்கறை கொண்டவர்களுக்கு அவசியமானது.

-நன்றி ஆட்காட்டி