Sun05242020

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 15

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 15

 

“திரிபுகள், மோசடிகள், இடதுசாரியாக வேடம் போடுவது, வலது சாரிகளுக்கு உதவுவது. இது தான் டிராட்ஸ்கி.!!” என்றார் லெனின்

சோவியத்தின் ஏற்றத் தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டே, டிராட்ஸ்கி போல்ஸ்விக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டான். கட்சியில் இணையும் படி லெனின் விடுத்த கோரிக்கையை முதலில் நிராகரித்தவன்தான் டிராட்ஸ்கி. போல்ஸ்சுவிக் அல்லாத வகையில் தனது அதிகாரத்தை நிறுவும் தன்னெழுச்சியான மாற்றங்களுக்காக காத்துக் கிடந்தான். இவை அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், போல்ஸ்சுவிக்களுடனான இணைவை டிராட்ஸ்கி நாடினான். அப்போதும் தனக்கு சாதகமாக இருக்க கூடிய வகையில், போல்ஸ்விக் அல்லாத ஒரு குழுவுடன் இனைந்த பின், ஒரு குழுவாகவே இணைந்தான். இந்த குழுவை அவன் கட்சியில் இணைந்த பின்பு கலைக்கவில்லை. மேலும் போல்ஸ்விக்குகளுடன் முரண்பட்ட பலரையும் உள்ளடக்கிய வகையில், தன்னை ஒரு தனிக் குழுவாக கட்சிக்குள் உருவாக்கியபடி செயல்படத் தொடங்கினான். அந்த குழுவை போல்ஸ்சுவிக்கு பதிலாக அதிகாரத்தில் கொண்டுவரவே, தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினான். இது பகிரங்கமான சதிப் பாணியிலான ஒரு மோதலாக வளர்ச்சி பெற்றது. டிராட்ஸ்கி தனது குழுவை இடது குழுவாக அறிவித்துக் கொண்டான். இதன் போது வலது குழுக்களும் தனது சொந்த அரசியலுடன் செயல்படத் தொடங்கியது. லெனினின் மார்க்சிய பார்வைக்கு எதிராக வலது இடது எதிர்ப்புகள் அரங்கில் சுறுசுறுப்பாக செயல்பட்டன. ஒவ்வொரு விடையத்திலும் மூன்று விதமான பார்வை போல்ஸ்விக் கட்சியில் பிரதிபலித்தது. இதன் மூலம் வலது இடது பிரிவினர் முதலாளித்துவ மீட்சிக்கான அரசியல் விலகல்களை முன் தள்ளினர். தமது அதிகாரத்தை நிலைநாட்ட முனைப்புப் பெற்றனர். இது படிப்படியாக ஜனநாயக மத்தியத்துவத்தை துஸ்பிரயோகம் செய்து, சதிப்பாணியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில் இரகசிய குழுக்களை, இரகசிய சந்திப்புகளை நடத்தின.

 

புரட்சிக்கு முன்பே சோவியத் புரட்சியை நடத்துவது என பெரும்பான்மை எடுத்த முடிவையே எதிர்த்த காமனேவும், ஜினோவீவும், எதிர் பிரச்சாரம் செய்ததுடன் அதை பகிரங்கமாக பத்திரிகை மூலம் எதிரிக்குத் தெரியப்படுத்தினர்.

இப்படி இந்த வலது, இடது குழுக்களின் நடவடிக்கை வெறும் நபர்களின் சதியல்ல. மாறாக ஒரு வர்க்கக் கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு அரசியல் சதியாகும். இவைகளை மேலும் நாம் புரிந்து கொள்ள டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில் இருந்து பார்ப்போம். இப் புத்தகம் டிராட்ஸ்கியை உயர்த்தி அவரையும் அவரின் சதியையும் கூட நியாயப்படுத்துகின்றது. அந்த நியாப்படுத்தலில்

“அன்று (1918ல்) தென்பிராந்தியமே எதிரிகளின் (வெண்கலர் படைகளின்) கோட்டையாக இருந்தது. தென் திசையில் நிறுவப்பட்டிருந்த செம்படைகளின் வலிமை மிகுந்த தளபதி வரரோஹிலாலின் 10வது இராணுவமே. வாரோஹிலால் தனது படைகளை டிராட்ஸ்கியின் இராணுவ அமைப்புத் திட்டப்படி சிரமைக்க மறுதலித்துவிட்டார். …ஸ்டாலின் சில மாதங்கள் இந்த தலைமையகத்தில் தங்கியிருந்து வாரோஹிலாக்கு முழு ஆதரவையும் அளித்து வந்தார். …சிறிது காலம் ஸ்டாலின் தென்மண்டல அரசியல் கொமிஸராக தற்காலிகமாகப் பணியாற்றினார். …இந்த வாரோஹிலால் தகராறுக்கு முடிவு காணவேண்டும் எனக் கருதிய டிராட்ஸ்கி இரானுவ ஜெனரலான தளபதி சைட்டினை தெற்குப் போர்முனையில் தளபதியாக அக்டோபர் 1918ன் ஆரம்பத்தில் நியமித்தார். அவர் கீழ் செயலற்றும் படி வாரோஹிலாவைப் பணித்தார். அத்துடன் தென் மண்டலப் போர்முனைக்கும் புதிய புரட்சிகர இராணுவக் கவுன்சில் ஒன்றையும் நியமித்து, தென் மண்டலத்துக்குப் பிரதம கொமிஸாராக ஸ்டாலினுக்கும் பதில்… ஸ்லையப்நிக்கோவை நியமனம் செய்தார். இராணுவக் கட்டுப்பாடுகளை மீறும் தளபதிகளும் கொமிஸார்களும் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிறுத்தப்படுவார்களேன்றும் (ஸ்டாலினையும் மற்றவர்களையும்) எச்சரித்தனர். …இதையடுத்து லெனின் ஸ்ராலினை மஸ்கோவுக்கு அழைத்து வந்தார். .. டிராட்ஸ்கி வாரோஹில்லாவைக் கண்காணிக்க 10வது இராணுவத்தின் தலைமையகத்தில் ஒகுலாவ் என்பவரை நியமித்தார். …பின்னர் வாரோஹிலாவைப் பதவி இறக்கம் செய்து உக்கிரேனுக்கு மாற்றும் படியும், 10வது இராணுவத்துக்கு புதிய கொமிஸர்களை நியமிக்கும் படியும் டிராட்ஸ்கி லெனினைக் கேட்டுக் கொண்டார். லெனின் இணங்கினார். வாரோஹிலால் உக்கிரேனுக்கு மாற்றப்பட்டார். இங்கு ஸ்டாலின் வாரோஹிலால் கோஸ்டி முழு இராணுவ நடவடிக்கைகளையும் குற்றுயிராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக டிராட்ஸ்கி 19.1.1919 இல் லெனினுக்கு தெரிவித்தார்.

அடுத்து வாரோஹிலால் தலைமையில் உக்கிரேன் படைப்பிரிவொன்றை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக்கையை லெனின் டிராட்ஸ்கிக்குத் தெரிவித்தார். அவர் அதற்கு இணங்கவில்லை. …டிராட்ஸ்கி எதிர்ப்பதால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கட்சியின் அரசியல் குழு வாரோஹிலாலுக்கு தெரிவித்தது. ஸாரிட்சைனில் செய்வதைப் போல உக்கிரேனிலும் எதிர்ப்படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட இராணுவ சப்பிளைகளை வாரோஹிலால் தனது படைகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றார் என்றும், அதன் சப்பிளைகளை இதர போர் முனைகளுக்கும் வினியோகிப்பதற்காக …செய்யும்படி கட்சி மத்திய குழுவிடம் டிராட்ஸ்கி கேட்டுக்கொண்டார். 1919 இல் செம்படையின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கிய பிலிப் குஸ்மிச் மிரோனோவ் சோவியத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய டிராட்ஸ்கி அவர் மேல் இராணுவ விசரானையை நடத்தினர். இவர் அப்பாவி விவசாயிகள் மேல் தாக்குவதை எதிர்த்தால், கட்டுப்பாடின்மை, விசுவசமின்மை என்ற காரணங்களைக் கூறியே இராணுவ நிதிமன்றத்தில் நிறுத்தினார் ….எஸ்.காமனேவ் என்பவர் கிழக்குப் போர் முனையின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் எப்ரலில் கிழக்குப் போர்முனையில் ஒரு திடீர் தாக்குதலை நடத்தி கோல்சாக்கின் வெண்காலன் படைகளை பின்னடையச் செய்தார். அந்தப் படைகளை ஊரலை நோக்கி சிதறி ஓடின. பின்வாங்கும் கோல்சாக் படைகளைச் சைபிரியாவுக்கும் துரத்திச் செல்லும் ஒரு திட்டத்தை தயாரித்தார் எஸ்.காமனேவ். ….ஆனால் பிரதம தளபதி வட்ஜெட்டிஸ் எஸ்.காமனேலின் திட்டத்தை இரத்து செய்தார். ஆனால் எஸ்.காமனேவ் பிரதம தளபதியின் கட்டளையை மீறி தனது திட்டத்தை வற்புறுத்தியதால், அவரைப் பதவி நீக்கம் செய்தார் டிராட்ஸ்கி. கிழக்குப் போர்முனையில் பணியாற்றிய மூன்று தளபதிகள் அவரைப் பதவியில் அமர்த்த வேண்டும் எனவும், திட்டத்தை அமுல்படுத்தக் கோரியும் கிளர்ச்சி செய்தனர். அவர்களை ஸ்டாலின் ஆதரித்து நிற்கின்றனர். ஸ்டாலினின் ஆட்கள் சில சதிகள் செய்து (டிராட்ஸ்கி கூறுகின்றார்) லெனினின் சம்மதத்துடன் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இப் படை நடவடிக்கை அப்படைகளை முற்றாக ஒழித்துக்கட்டி எதிரிகளும் முற்றாக ஒழித்துக்கட்டப்பட்டனர். இது டிராட்ஸ்கிக்கு ஏற்பட்ட ஒரு தோல்வியாகும்.” என்று இந்த டிராட்ஸ்கிய வரலாறு கூறிச் செல்லுகின்றது.

டிராட்ஸ்கி ஜார் மன்னனிடம் கைகட்டிச் சேவை செய்த இராணுவத் தளபதிகளைச் சார்ந்தே நின்றார். அத்துடன் முதலாளித்துவ இராணுவ கண்ணோட்டங்களையும், அதன் ஒழுக்கங்களையும் செம்படையின் ஒழுக்க கோவையாக்கினார். போல்ஸ்சுவிக் கட்சியில் உருவான தளபதிகளை திட்டமிட்டே ஒடுக்கினார். தனக்கு அடிபணிந்து போகக் கோரினார். இல்லாத எல்லா நிலையிலும் பதவி பறிப்பு, இராணுவ நிதிமன்ற விசாரனை என பல வழிகளின் கட்டுப்படுத்தினார். கட்சி கடுமையாக இதற்கு எதிராக டிராட்ஸ்கியுடன் போராட வேண்டியிருந்தது. திரோஸ்கிய வரலாற்று நூல் மேலும் இது தொடர்பாக “கட்சி டிராட்ஸ்கியை எதிர்ப்பவர்களுடன் சேர்ந்து எடுத்த சில சதி நடைவடிக்கைகளின் விளைவாக (இச்சதியில் லெனினும் கலந்து கொண்டார் என டிராட்ஸ்கிகள் கூறுகின்றனர்.) மத்திய குழு வடஜெட்டிஸை பிரதம தளபதிப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, எஸ்.காமனேவை அப்பதவிக்கு நியமித்தது என்று குற்றம் சாட்டுகின்றது. அத்துடன் யுத்தக் கவுன்சில் உறுப்பினர்களில் டிராட்ஸ்கி ஆதரவாளர்கள் மூவரை நீக்கிவிட்டு எஸ்.காமனேவின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

… இந்த நடிவடிக்கையை அடுத்து டிரொஸ்ட்கி கட்சி அரசியல் குழுவிலிருந்தும், யுத்த மக்கள் கமிஸர் பதவியிலிருந்தும், புரட்சிகர யுத்தக் கவுன்சில் தலைமைப் பதவியிலிருந்தும் விலகிவிட்டார். …சோவியத் அரசாங்கம் டிராட்ஸ்கியின் பணியை இழக்க முடியாதென்றும், எக்காரணத்தை முன்னிட்டும் அவரது ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்றும் லெனின் அரசியற் குழுவை வற்புறுத்தினார். அரசியற் குழு அவரது இராஜினாமாவை நிராகரித்து விட்டது. …ராஜினாமா சம்பந்தமாக மிகவும் மனவேதனை அடைந்திருந்த லெனின் டிராட்ஸ்கி மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஓர் அடையாளமாக டிராட்ஸ்கி பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் தான் முற்றாக ஏற்று அங்கீகரிப்பதற்கான (எழுதி நிரப்பப்படாத) தமது “எற்பு -இசைவுப் பத்திரத்தை” டிராட்ஸ்கியிடம் கொடுத்தார். (இதன் மூலமே டிராட்ஸ்கியின் பிளவை அன்று லெனின் தடுத்தார். கையெழுத்திட்ட வெள்ளைக் காகித்தை பெற்றே பதவியில் டிராட்ஸ்கி நீடித்துக் கொண்டான்.) இந்த நிரப்பப்படாத கையெழுத்துள்ள வெள்ளைக் கடிதத்தின் ஆதாரத்தின் மீதே டிராட்ஸ்கி பதவிகளில் நீடிக்க இணங்கினார். (இந்த கடிதம் அமெரிக்காவில் டிராட்ஸ்கி ஆவணங்களை உள்ளடக்கிய நுதானசாலையில் உள்ளதாக அந்த வரலாற்று நூல் கூறுகின்றது.) …டிராட்ஸ்கி பெட்ரோகிராடுக்குச் சென்றபோது, ஸ்டாலின் தெற்குப் போர் முனைக்கு பொறுப்பாக இருந்தார். 

டிராட்ஸ்கிய வரலாற்றுச் சார்புக் கட்டுரை உள்நாட்டு யுத்தம் நடந்த காலத்தில் அங்கு இருந்த சில உதிரியான முரண்பாடுகளை தமக்குச் சார்பு நிலையில் நின்று முன்வைக்கின்றனர். ஆனால் இவை அனைத்துக்கும் அரசியல் அடிப்படை உண்டு. அதை டிராட்ஸ்கியம் விவாதிப்பதில்லை. நீண்ட அரசியல் பாரம்பரியத்துடன் புரட்சியை நடத்திய போல்சுவிக்குகளின் கட்சியில், ஒரு வருடத்தில் முன்பே இனைந்திருந்த டிராட்ஸ்கி தனது ஆட்சியை எப்படி நிறுவ முயன்றான் என்பதையே இந்த யுத்தகால நிகழ்வுகள் தெளிவாக்கின்றது. நீண்ட விடாப்பிடியான போராட்டம் மூலம் உருவான கட்சியும், அதன் தலைவர்களின்; பாரம்பரியமான போர் குணாம்சத்திற்குப் பதில், தனக்கு சார்பானவர்களை கட்சி மற்றும் முன்னணி அமைப்புகளில் நிரப்புவதன் மூலம் ஒரு பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான ஒரு ஆட்சியை மேலிருந்து கைப்பற்ற முயன்றான் டிராட்ஸ்கி. ஸ்ராலினுக்கு இராணுவ தொடர்புகளோ, அல்லது உள்நாட்டு யுத்தத்தில் பங்கு பெற்றவில்லை என்ற கடந்தகால டிராட்ஸ்கிய பொய்பித்தலாட்டங்களையே, இந்த டிராட்ஸ்கிய வரலாறு ஒரளவுக்கு தம்மையும் தமது சதிகளையும் நியாயப்படுத்த முனையும் போது ஒத்துக் கொண்டுள்ளது. இராணுவ தலைமையகத்தை போல்ஸ்சுவிக்களிடம் இருந்து முற்றாக டிராட்ஸ்கி கைப்பற்ற முனைந்தான். இது தோல்வியுற்ற போது தனது பதவியையும், கட்சி பொறுப்பையும் விட்டு வெளியேற முயன்றான்;. இதன் மூலம் போல்ஸ்விக் கட்சியில் இருந்து வெளியேறி, புரட்சிக்கு எதிரான தனது குழுவை உருவாக்க முனைந்தான். புரட்சியை மேலிருந்து கைப்பற்றி எதிர்புரட்சியை உருவாக்கும் நிலைமை உருவானது. லெனின் இந்த இடத்தில் அதை தவிர்க்க, தனது கைப்பட எழுதிய எங்கும் பயன்படுத்தக் கூடிய நிபந்தனையற்ற உத்தரவுக் கடிதத்தை வழங்கியே, டிராட்ஸ்கி தனியாக ஒரு குழுவை அமைத்து புரட்சிக்கு எதிராக செயல்படுவதை தடுத்தார். இதே போன்றே அயல்துறை அமைச்சர் பதவியை கூட, டிராட்ஸ்கி துறந்தவர். லெனின் முன்வைத்த ஐர்மனியுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து டிராட்ஸ்கி முன்வைத்த கருத்தை அழுல்படுத்த கட்சி மறுத்த நிலையில், தனது பதவியை துறந்து தனியாக சென்று போஸ்சுவிக் கட்சியை எதிர்க்க முற்பட்டவர்.

இந்த டிராட்ஸ்கி எப்படி போல்சுவிக் கட்சியில் இனைந்தான்? அவன் தனக்கான ஒரு குழுவை ரூசியாவில் கண்டறிந்து கட்சிக்கு இட்டுச் செல்ல முன்பு, எந்த ஒரு கட்சியையும் சோவியத்தில் கொண்டிராத அங்கும் இங்கும் இடை நடுவில் ஒரு நூலையில்; தொங்கி கருத்துக் கூறிய படி தன்னை நிலைநாட்டிய தனியாளாகவே திரோத்ஸகியின் அரசியல் நீடித்தது. இதை லெனின் மிகத் தெளிவாக 1917 ஆம் பிப்ரவரி 19 திகதி பின்வருமாறு எழுதினார் “டிராட்ஸ்கி வந்த சேர்ந்தார். வந்த சேர்ந்த உடனேயே இந்த அயோக்கியர் இடது ஸிம்மர்வால்டினருக்கு எதிராக “நோவிமிர்” பத்திரிகையில் இருந்த வலதுசாரியுடன் கோஸ்டி சேர்ந்து கொண்டார்!! இது தான் டிராட்ஸ்கி.!! பார்த்துக் கொள்ளுங்கள்!! அவர் தனது சுயரூபத்தை எப்போதும் வெளிப்படுத்துகிறார் – திரிபுகள், மோசடிகள், இடதுசாரியாக வேடம் போடுவது, வலது சாரிகளுக்கு உதவுவது, தன்னால் இயன்ற வரை இதைச் செய்வது… என்று லெனின் சோவியத் புரட்சிக்கான சூழல் நிலவிய காலத்தில், திரோஸ்கியின் மோசடிகளை அம்பலம் செய்தார். 1917களில் சோவியத்துக்கு திரும்பியபோதும், கட்சியில் இணையும் படி லெனின் விடுத்த ஒன்றுக்கு மேற்பட்ட வேண்டுகோளை நிராகரித்தான் டிராட்ஸ்கி. மாறாக தன்னெழுச்சியான புரட்சியின் போக்கில், அதில் யார் அதிகாரத்துக்கு வருவார் என்பதை அனுசரித்து, அவர்களுடன் இணையவும், இணையும் போது குழுவாக இனைவதன் மூலம் அதிகாரத்தில் பங்கு பெறவும், தனது அதிகாரத்தை நிறுவும் முயற்சியுடன் தான் செயல்பட்டான். இறுதியாக போல்ஸ்சுவிக் அல்லாத வழியில் தனது தலைமையை நிறுவும் சாத்தியம் அற்ற நிலையில், தனக்கான குழுவை கண்டுபிடித்ததுடன் போல்சுவிக் கட்சிக்குள் இணைந்தான். இதை டிராட்ஸ்கிய வரலாறு நூல் எப்படி நியாப்படுத்தி கூறுகின்றது எனப் பார்ப்போம். “டிராட்ஸ்கி 1917 ஆண்டு ருசியா வந்து சேர்ந்தார். பின் அவர் தனக்கென அணியை தேடிச் சென்றார். மெஸராயொன்ட்ஸ என்ற அமைப்பு ஒரு கட்சியாக அல்லாது ஒரு அமைப்பாக இருந்தது. அதனுடன் இணைந்த டிராட்ஸ்கி தனக்கென ஒரு அணியை அமைக்கத் தொடங்கினார். இதற்கிடையில் லெனின் டிராட்ஸ்கியைக் கட்சியில் இணையக் கோரிய போது மறுத்தார். “மெஸராயொன்ட்ஸ” அமைப்பின் சார்பில் முன்னேற்றம் என்ற ஒரு பத்திரிகையை வெளிக்கொண்டு வந்தார். இக்காலத்தில் டிராட்ஸ்கி தனக்கான அணியைத் திரட்ட சோவியத்தில் தீவிரமாக முயன்றார். அனைத்து விதத்திலும் போல்சுவிக் அல்லாத வழிகளில் எழுச்சியை திசை திருப்ப முயன்றார். இது சாத்தியம் அற்றுப்போகவே இதன் தொடர்ச்சியில் யூலைமாதம் ஆரம்பத்தில் கட்சியில் இணைய இருந்த டிராட்ஸ்கி யூலையில் ஏற்பட்ட எழுச்சியுடன் இணைப்பைக் கைவிட்டார். பின் யூலை 23ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, போல்சுவிக் மத்தியகுழு அவரை தனது மத்திய குழுவிற்கு அவர் இன்றித் தெரிவு செய்தது. டிராட்ஸ்கி சோவியத்தின் தலைவர் ஆனதுடன், அத் தலைமையின் கீழ் எழுச்சி நடைபெறும் எனவும் அறிவித்தார். இதன் தொடர்ச்சியில் லெனின் ஆயுத எழுச்சியை கட்சியின் பெயரிலும், அதுவும் தனது சொந்தப் பெயரிலும் நடத்தும் படி மத்திய குழுவில் கோரினார். ஆனால் டிராட்ஸ்கி சோவியத்தின் பெயரால் நடத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் முன்மொழிந்தார்.

இந்தவகையில் நீண்ட காலமாக லெனினும், அவரின் தோழர்களும் கட்டிய ஒரு கட்சியையும் அதன் புரட்சியையும் டிராட்ஸ்கி ஒரே நொடியில் முறியடித்து விட சோவியத் பெயரால் புரட்சியை தலைமை தாங்கக் கோரினான். சோவியத் அன்று பல்வேறு அணிகளின் ஒரு கதம்பக் கூட்டமாக இருந்தது. அதன் பெயரால் நடைபெறும் புரட்சியும், அதிகாரமும் மார்க்சியத்தை முன்வைத்த போல்சுவிக்குகள் அல்லாத மற்றைய பிரிவுகள் கைப்பற்றுவதையே டிராட்ஸ்கி விரும்பினான். இதன் மூலம் போல்சுவிக்குகளைப் பயன்படுத்தி டிராட்ஸ்கி மார்க்சியமல்லாத தனது ஆட்சியை நிறுவ முனைந்தான். ருசியா வந்த டிராட்ஸ்கி, தனியான பத்திரிகை ஒன்றை நடத்தியதுடன், தனக்கான குழுவையும் கூட உருவாக்கினான்;. லெனின் சுட்டிக் காட்டியது போல் அங்கம் இங்கும் அலைந்தான். மார்க்சியத்தை முன்வைத்து போராடிய போல்ஸ்விக்களுக்கு வெளியில் மார்க்சியமல்லாத கோட்பாட்டை, மார்க்சியத்தின் பெயரில் ஒரு அதிகாரத்தை கைபற்ற முயற்சியில் ஈடுபட்டான். யூலையில் எற்பட்ட எழுச்சியுடன் போல்ஸ்விக்குகள் அல்லாத போஸ்விக்குகளின் ஆதாரவுடன் தனியான பாதையில் ஆட்சியை கைப்பற்ற முயன்ற நிலையில், யூலை எழுச்சி ஒடுக்கபட்டது. இதன் போது டிராட்ஸ்கி கைதான நிலையில், போல்ஸ்விக் கட்சி அவர் இன்றி கட்சியின் மத்திய குழுவக்கு தெரிவு செய்தது தன்பக்கம் இழுத்தது. இப்படிதான் டிராட்ஸ்கி போஸ்விக்குடனான தனது வாழ்வை தொடங்கினான்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14