Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மனித பிணங்களின் மேலான மூலதனத்தின் கொண்டாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பன்னாட்டு மூலதனமானது, மனிதர்களை பலியெடுக்கின்றது. மக்கள் தமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட, மூலதனம் சுரண்டுவதற்காக மக்களை கொல்லுகின்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலதனம் சூழலை நஞ்சாக்கி, உழைக்கும் மக்களைச் சுரண்டும் மூலதனத்தின் குவிப்புக்காக, போராடும் மக்களையே அரசு கொன்று வருகின்றது.

சுரண்டும் வர்க்க உணர்வுடையவர்கள், மக்களை கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றனர். மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூலதனத்தை பாதுகாப்பதே, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்கின்றனர். இப்படி கொல்வது அரசின் சட்ட உரிமை என்கின்றனர். வர்க்க அரசின் மெய்நிலைத் தன்மையை முன்னிறுத்தி, மக்களை மூலதன ஆட்சிக்கு அடங்கி போகக் கோருகின்றனர்.

இப்படி சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் வர்க்க சர்வாதிகாரமே அரசு என்பதை, தூத்துக்குடி சம்பவம் உலகறிய பறைசாற்றி இருக்கின்றது.

அமைதியாக 100 நாட்கள் ஜனநாயக வழிகளில் போராடிய தமிழ்நாட்டு மக்கள், தங்கள் வரலாற்றில் காணாத அரச வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். மக்களைப் பிளக்கும் சாதி – மதம் - இனம் - பால் கடந்து தமது சொந்த வாழ்வுரிமைக்காக, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக அணிதிரண்டு நின்ற போராட்டத்தை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை, அனுபவ ரீதியாக எதிர்கொண்டு நிற்கின்றனர்.

குறி பார்த்துச் சூடும் மூலதனத்தின் கூலிப்படைகள் நடத்திய வெறியாட்;டத்தில், பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்னணியாளர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

 

சூழலை நஞ்சாக்கி மெல்ல மெல்ல கொன்று வந்த மூலதனத்தை எதிர்த்து போராடியவர்களை, இலக்கு வைத்து கொன்று இருக்கின்றது அரச பயங்கரவாதம். மூலதனத்தை எதிர்த்து போராடாவிட்டாலும் கொல்லும், போராடினாலும் கொல்லும். இலாபம் மட்டும் தான் மூலதனத்தின் அறம்.

இந்த சுரண்டும் வர்க்க அறம் வர்க்கம் சாதி - மதம் - இனம் - பால் பார்த்துக் கொல்வதில்லை. வர்க்க இடைவெளி தான், கொல்வதற்கான அளவுகோல். மூலதனத்திற்கு சேவை செய்யும் கூலிப்படையாகத்தான், தேர்தல் ஜனநாயகமும், அது  தேர்ந்தெடுக்கும் அரசும், மக்களால் தெரிவு செய்யப்படாத அரசு இயந்திரமும்; இயங்குவதை ஐயம் திரிபட அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கின்றது.

அதாவது அரசு பற்றியும், அரசு இயந்திரம் பற்றியும், தேர்தல் பற்றியுமான அனுபவக் கல்வியை, மூலதனம் தன் பயங்கரவாதம் மூலம் மக்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கின்றது.

தங்கள் சந்தையை முன்னிலைப்படுத்தும் மூலதனப் போட்டியில், தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் காட்டிய அரச பயங்கரவாத கொலை வெறியாட்டக் காட்சிகள், சுரண்டும் வர்க்கம் எப்படிப்பட்டது என்பதை தமிழ்நாடு எங்கும், அந்தக் கணமே அம்பலமாக்கி இருக்கின்றது.     மக்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் போராட்ட உணர்வுக்கும் வழிகாட்டி இருக்கின்றது. சமூக வலைத் தளங்கள் மூலம், உலகெங்குமாக மூலதனத்தின் மனித விரோதத்தைத் தோலுரித்துக் காட்டி இருக்கின்றது.

தூத்துக்குடி நிகழ்வானது தமிழன் தமிழன் என்று ஈழத்தமிழனின் பன்னாடைத்தனமான இனவாத சிந்தனையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது. மக்களைப் பிரிக்கும் இன – மத – சாதியவாதிகளை, சந்திக்கு இழுத்துப் புரட்டிப் போட்டு இருக்கின்றது. திடீர் அரசியல்வாதிகளை வங்குரோத்தாக்கி இருக்கின்றது. ஜனநாயகம் மீதும், சட்டம் ஒழுங்கு மீதும் கொண்டு இருந்த மத்தியதர வர்க்க பிரமைகளைக் கவிழ்த்துப் போட்டு இருக்கின்றது. இணையம் மூலம் கருத்துச் சொல்லி புரட்சி பேசும் முண்டங்களை, முகமற்ற மனிதராக்கி இருக்கின்றது. தொழிற்சாலைகள் மக்களிற்கு வேலை வழங்கவும், மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யவும் உருவாக்கப்படுகின்றது என்று கூறும் அரசியல் பொய்களையும் -  தர்க்கங்களையும் தகர்த்து இருக்கின்றது. ஆக சிந்தனைத் தளத்தில், வர்க்க சிந்தனைக்கான புரட்சியை நடந்தியிருக்கின்றது.

வர்க்க உணர்வற்று அணிதிரண்ட ஜல்லிகட்டு மக்கள் கூட்டமல்ல. மூலதனத்துக்கு எதிராக அணிதிரண்ட மக்கள் கூட்டம்;. மக்கள் வர்க்க ரீதியாக அணிதிரளும் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி இருக்கின்றது. சர்வதேசியவாதிகளுக்கு, சர்வதேசிய உணர்வை ஊட்டி இருக்கின்றது. மக்களுக்காக போராடி மரணித்த புரட்சிகர சக்திகளின் வர்க்க உணர்வை எமது வர்க்க உணர்வாக ஏந்தி, போராடும் மக்களுடன், நாங்களும் சர்வதேசியவாதிகளாக அணிதிரண்டு எழுந்து நிற்கின்றோம். உங்கள் போராட்டம் தான், எங்கள் போராட்டமும். மூலதனத்தை கருவறுக்க, சர்வதேசியவாதிகளாக ஓரணியில் அணிதிரள்வோம். புரட்சிகர வாழ்த்துக்கள்.