Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர்களுக்கு நஞ்சை ஊட்ட முனையும் குறுகிய இன-மதவாத வக்கிரம்

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் - ஆசிரியர்கள் -  பெற்றோர்கள் உள்ளடங்கிய ஒரு பகுதியினர், முஸ்லிம் ஆசிரியைகள் "அபாயா" அணிந்து வருவதற்கு எதிரான இன-மதவாத போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இன-மத அடிப்படைவாதங்களுக்கு ஏற்ப பாடசாலைகள் சிந்திக்க வேண்டும் என்ற பொது உள்ளடக்கத்தை, இலங்கையளவில் கொண்டு சென்று இருக்கின்றனர்.

பௌத்த - இந்து - முஸ்லீம் - கிறிஸ்துவ.. பாடசாலைகளாக கல்விக்கூடங்களை வகைப்படுத்தவும், அவர்கள் அல்லாத பிற மத மாணவர்கள் - ஆசிரியர்கள் தம் மத பண்பாட்டை திணிக்கவும் கோருகின்ற, மனிதவிரோத வக்கிரத்தை போராட்டம் மூலம்  முன்னிறுத்தி இருக்கின்றனர்.

இந்த இன-மதம்  சார்ந்த போராட்டம் சமூகத்துக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் இன-மதவாதத்தை விதைப்பது எளிது என்பதையும், இனம்-மதம் கடந்த மனித பண்பாட்டை உருவாக்குவது தொடர்ந்து கடினமாகி வருவதையே எடுத்துக் காட்டுகின்றது.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வானது, இலங்கை கல்விக் கூடங்களை மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றுகின்ற பொதுப்பின்னணியிலேயே நடந்தேறி இருக்கின்றது. அரசு பாடசாலைகள் மதம் சார்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்  வண்ணம், மக்களை பிரித்தாளும் அரசினதும் - ஆளும் வர்க்கத்தினதும் கொள்கைகளே வழிநடத்தியிருக்கின்றது. இந்த வகையில் இலங்கை தளுவிய அளவில் பாடசாலைகளில் மதம் சார்ந்த கோயில்களைக் கட்டுவது, பாடசாலை முகப்புகளை மத அடையாளங்களாக மாற்றுவது, பாடசாலைப் பெயர்களை மதம் சார்ந்து நிறுவுவது.. என்று, இன்று பல்வேறுவிதமான மதச்செயற்பாடுகள் பாடசாலைகளில் அதிகரித்து வருகின்றது.

 

இதற்கு அரசின் நவதாராளவாத கல்விக் கொள்கையே காரணமாக இருக்கின்றது. அதாவது நவதாராளவாத கல்விக் கொள்கை என்பது, பாடசாலைகளை தனியார்மயமாக்கக் கோருகின்றது. இந்த வகையில்

1.கல்விக் கூடங்களை தனியார்மயமாக்கும் செயற்பாட்டுக்கு அதிக சுதந்திரத்தை நிர்வாகங்களுக்கு வழங்கி, மாணவர்கள இதற்கு எதிராக போராடாது இருக்க மதத்தை முதன்மையாக்கின்றது.

2.பாடசாலைகள் மத அடையாளங்களைப் பெறுவதன் மூலம் பிற மதங்களுக்கு எதிராக கல்விக்கூடங்களை மாற்றுவதன் மூலம்,  பிற மதங்கள் தனக்கான தனியார் பாடசாலைகளை தனித்தனியான உருவாக்கிக் கொள்ளக் கோருகின்றது. தனியார் மதப் பாடசாலைகளை அமைக்குமாறு, மறைமுகமாக அரசு அறைகூவல் விடுக்கின்றது. இனி மதம், இனம், சாதிக்கான தனியார் பாடசாலைகள் அமைக்கும் வண்ணம், அரசின் கல்விக்கொள்கை வழிகாட்டுகின்றது. 18ம் நூற்றாண்டில் இந்து – பௌத்த சாதிய அடிப்படைவாத பாடசாலைகளை நிறுவியது போன்று, இன்று தனியார் பாடசாலைகளை உருவாக்கும் வண்ணம் அரச பாடசாலைகளுக்குள் மத அடையாளங்களை புகுத்தி வருகின்றது.

சமூகத்தை மதமயமாக்கி மோதவைக்கும் ஆளும் வர்க்கங்களின் இன-மத-சாதிவாத கொள்கைகளுக்கு ஏற்ப, குழந்தைகளுக்கும் நஞ்சை ஊட்டத் தொடங்கி இருக்கின்றது.

இனம் மதம் சாதி கடந்து இயல்பாக கலந்து கூடி வாழக் கூடிய குழந்தைகளை, இன - மத - சாதி வாதத்துக்குள் கொண்டு வருகின்ற பொதுப் பின்னணியில், திருகோணமலை சண்முகா இந்துமகளிர் கல்லூரி ஒரு பகுதி  மாணவிகள் - ஆசிரியர்கள் - பெற்றோர்கள் பலியிடப்பட்டு இருக்கின்றனர்.

இன்று முஸ்லீம் அடிப்படை வாதம் மட்டும், இலங்கை மக்களை கூறு போடவில்லை. வெள்ளாளிய இந்து அடிப்படைவாதம் தொடங்கி பௌத்த அடிப்படைவாதம் வரை, சமூகத்தை கூறு போட்டு வருகின்றது. இந்து சிவசேனை தொடங்கி சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதியாகும் "வாஹாபிச" மதக் கலாச்சாரம் வரை, மக்களை மத அடையாளங்களுக்குள் திணித்து வருகின்றது. இது போல் பௌத்த, கிறிஸ்துவ.. அடிப்படைவாதங்கள் மக்களை பிளந்து வருகின்றது. மக்களிள் ஆடை அணிகலன்கள் தொடங்கி வாழ்வியல்முறை வரை, மத அடையாளங்களையும் – புதுப்புது பண்பாடுகளையும் திணித்து வருகின்றது. பொது அடையாளங்களையும் - பண்பாடுகளையும் அழித்து, குறுகிய பண்பாடுகளை புகுத்துகின்றது. கூடி வாழ்ந்த, கலந்து உண்ட மனிதப் பண்பை மத அடிப்படைவாதம் அழிக்கத் தொடங்கி இருகின்றது. மனிதனை ஒன்றாக்கும் சமூக வலைத்தளங்கள், தங்கள் இன-மத ஆணாதிக்க வக்கிரங்கள் மூலம் சமூகத்தை குதறுகின்றது.

நாணயத்தின் இருபக்கம் போல், உலகமயமாக்கம் புகுத்தும் பொதுவான நுகர்வுப்பண்பாட்டுடன் முரண்படக் கூடியவர்களுக்கு, அடிப்படைவாத நிலப்பிரபுத்துவ மதப் பண்பாட்டை அறிமுகம் செய்து வருகின்றது. அதாவது பிற்போக்கான மத அடிப்படைவாத நிலப்பிரபுத்துவ கூறுகளை உலகமயமாக்கி வருகின்றது.

மனிதன் அறிவுபூர்மாக – ஜனநாயகபூர்வமாக சிந்தித்து செயல்பபடுத்த முடியாத வண்ணம், மனிதப் பண்பாட்டை அழிக்கும் ஆளும் வர்க்கங்களின் தயாரிப்பே, திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பிரதிபலித்தது.

பாடசாலைகளும், மாணவர்களும் மத அடிப்படைவாத சிந்தனைக்கு வெளியில் சிந்திக்கவும், எந்த குறுகிய வாழ்வுக்குள் பலியாகாது வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். மத சார்பற்ற படசாலைகளைக் கோரவும், மதம் சார்ந்த அனைத்து அடையாளங்களையும் அகற்றக் கோரிப் போராடவும்  வேண்டும்.

"அபாயா" எப்படி முஸ்லிம் மத அடையாளமானதோ, அதே போல் பாடசாலையில் பெயர் "இந்து" மத அடையாளமாகி இருக்கின்றது. திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நடத்திய போராட்டம், இது சார்ந்த கருத்துகள் இதைத்தான் நிறுவி இருக்கின்றது. எல்லா  மத அடையாளங்களையும் எதிர்த்து போராடவும் குரல் கொடுப்பதன் மூலமும், மக்களை பிரிக்கும் மத - இன அடையாளத்ததை தகர்க்கும் வண்ணம், மனிதனாக தன்னை முன்னிறுத்தி வாழ்வதை மாணவ சமூகம் தனது தெரிவாகக் கொள்ள வேண்டும்;. மதமானது ஏன் எதற்கு என்ற கேள்விகளின்றி, சிறிய குறுகிய வட்டத்தில் வாழவும் - சிந்திக்கவும் கோருவதை வாழ்க்கையில் நடைமுறையாக்குகின்றது.

இதற்கு மாறாக எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் மாணவபருவமே, சமூகத்தின் வளர்ச்சிக்கான உயிர் நாடி. எங்கள் "தந்தையர்" சமூகம் போல் கேள்வி கேட்பதை கைவிட்டு குறுகிவிடும் போது, பின்தங்கிய சமூகமாகி பாதாளத்தில் வீழ்ந்துவிடுவதை, மாணவ சமூகம் அனுமதிக்கக் கூடாது. இதில் எது என்பதை மாணவர்கள் தெரிவு செய்தாக வேண்டும்.