Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது

இன்றைய சமூக அமைப்பின் சிந்தனைமுறையே ஏகாதிபத்திய சிந்தனை முறைதான். அதாவது முதலாளித்துவச் சிந்தனைமுறை தான். இப்படி இருக்க, இஸ்லாம் மட்டும் என்ன விதிவிலக்கா!? இதையா நாங்கள் மறுக்கின்றோம்;!? இப்படி புதிய ஜனநாயகக் கட்சிப் பின்னணியைக் கொண்டவர்கள், புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எதிரான அரசியல் அவதூறை முன்வைத்திருக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை, ஒற்றைப் பரிணாமம் மட்டும் கொண்டதாக நிறுவ முனைகின்றனர்.

இஸ்லாமிய மதக்கோட்பாட்டில் பயங்கரவாதமில்லையா? அது பயங்கரவாதத்தைக் கொண்டு இருக்கின்றது. இருந்தபோதும் சமூகம், பயங்கரவாத மதக் கூறுகளை நீக்கிய, நவீன ஜனநாயகக் கூறுகளை கொண்ட மதமாக இஸ்லாம் மதத்தை உருவாக்கியது. இந்த இஸ்லாமிய வாழ்வியல் முறையென்பது, ஏகாதிபத்திய நலனுக்கு முரணாக வளர்ந்தது. இதைத் தடுக்கவே ஏகாதிபத்தியம், இஸ்லாமிய மதக் கோட்பாட்டில் ஏற்கனவே இருந்த பயங்கரவாதக் கூறுகளை வளர்த்து இஸ்லாமாக முன்னனிறுத்தியதன் மூலம், சமூகத்தின் ஜனநாயகக் கூறுகளை அழித்தது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மீள்வருகை இப்படித் தான் அரங்கேறியது. பயங்கரவாத வன்முறை இஸ்லாமிய மதத்துக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது.

இப்படி இருக்க இஸ்லாமிய பயங்கரவாதத்தை நாங்கள் "இஸ்லாமிய சமூகத்துடன் பொதுமைப்படுத்துவதாக" கூறுவது என்பது, அரசியல் கற்றுக்குட்டிகளின் நகைச்சுவையான தர்க்கம். இது போலி இடதுசாரிய சிந்தனை முறையுமாகும். கூடிக் கும்மியடித்து இலக்கிய - அரசியல் பிழைப்பை நடத்துகின்ற கூட்டத்தின் பொது அங்கலாய்ப்பு. பொறுப்பை தட்டிக்கழிக்கின்ற தர்க்கங்கள்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்லாமியர் இல்லையென்று சொல்வது, தங்களுடன் கூடி கும்மியடிக்கும் கூட்டத்தை திருப்திப்படுத்தும் கூத்தை பொது அரசியலாக்க முனைகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர்வினையில் பாதிக்கப்படும் மக்களைச் சொல்லி, குளிர்காய்கின்ற தொடர் வக்கிரம்.

1980 களில் ஏகாதிபத்தியம் எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மத்திய கிழக்கில் கட்டியமைத்தது என்பது குறித்து, பல்வேறு கட்டுரைகள் மூலம் நாங்கள் அம்பலமாக்கி இருக்கிறோம். இப்படி இருக்க, இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஒற்றைப் பரிணாமம் மட்டுமே உண்டு, இஸ்லாமிய சமூகத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று கூறுவது எந்த வகையான அரசியல் கண்ணோட்டம்!?

உதாரணமாக புலிப் பாசிசம் என்பது ஏகாதிபத்திய நலன் சார்ந்த புலிச் சிந்தனையின் வெளிப்பாடே ஒழிய, யாழ் வெள்ளாளியச் சிந்தனையின் வெளிப்பாடு அல்ல என்று கூறுவதற்கு நிகரானது. அதாவது சமூகத்தின் பொறுப்பை மறுப்பது. தனிப்பட்ட குற்றங்கள், சமூகத்தின் குற்றங்களுக்கு.. பொதுப்படையான புறநிலைக் காரணங்கள் இருந்தாலும், தன்னளவில்சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்பு கூறக் கடமைப்பட்டவர்கள். நேரடியாக பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் கூட, இதற்கு நாங்கள் பொறுப்பில்லை ஏகாதிபத்தியம் தான் பொறுப்பு என்று கூறி தப்புவதற்கு நிகாரனதே, இந்த அரசியல் பித்தலாட்டங்கள்.

இஸ்லாமிய சமூகத்திற்கு பொறுப்பில்லை என்றால், இஸ்லாமிய அடிப்படைவாதம் தானாக தன்னியல்பாக சமூகத்தில் புகுந்ததா!? இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒன்றை வெளியில் இருந்து திணிக்க முடியாது. இஸ்லாமிய ஜனநாயகக் கூறுகளை மறுத்து, அடிப்படைவாத கூறுகளை ஏற்றுக் கொண்டதற்கு, அந்த சமூகம் தான் பொறுப்பு.

ஜனநாயகக் கூறுகளை முன்னிறுத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சமூகம் மறுதளித்து இருக்குமேயானால், இன்றைய இந்தப் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்த பொருளை நுகர்வது போல், அடிப்படைவாதம் சமூகத்தில் புரையோடிப் போக சமூகமே காரணம். இதற்கு எதிராக சமூகம் என்ன செய்திருக்கின்றது? என்ன செய்யப் போகின்றது? உங்கள் இலக்கிய-அரசியல் கூட்டாளிகள், இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் புளுத்துக் கிடக்கவில்லையா!

சமூகம் நோக்கிய கேள்வி என்பது, அவர்களை பொறுப்பாக்குகின்றது. அதேநேரம் நடந்த குற்றத்துக்கு, சம்மந்தப்பட்டவர்களே தனிப்பட்ட ரீதியில் குற்றவாளிகள். இஸ்லாமிய சமூகம் என்ற வகையில், இஸ்லாம் மதத்தின் பெயரில் பிற சமூகத்திற்கு எதிராக நடத்திய குற்றத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதென்பது, தன்னை இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து விடுவித்துக் கொள்வது தான். தன்னை ஜனநாயகப்படுத்துவது தான்.

இதற்கு முரணாக போலி இடதுசாரிய சிந்தனை முறை இயல்பாகவே, இஸ்லாமிய சிந்தனை முறையை பாதுகாக்க முனைகின்றது. 30 வருட யுத்தம், யுத்தத்தின் பின் 10 வருடங்கள் உருவாக்கிய மனித அவலத்திற்கு தீர்வை முன்னின்று வழிகாட்டாத போலி இடதுசாரிய சிந்தனை, இப்படித்தான் சமூகத்தை முடமாக்கி வைத்திருக்கின்றது. அதே உத்தியை இஸ்லாமிய சமூத்திற்கான தீர்வாக முன்வைக்கின்றது.

தமிழ் சமூகத்தின் முன்னால் வழிகாட்டியாக, நடைமுறையில் இருக்க முடிவதில்லை. எம்மை நோக்கி "களப்பணி" என்ன என்று கேட்கின்றனர். "களப்பணி" எங்கே என்று கேட்ட அடுத்த பந்தியில், "சிறுபான்மை இனப்பிரச்சனைகளை பொதுமைப்படுத்தி பார்க்கும்" கட்சியுடன், அதாவது முன்னிலை சோசலிசக் கட்சியுடன் நாங்கள் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் களப்பணியில் இருந்து இருக்கின்றோம் என்பதை, எம் மீதான அவதூறு குற்றச்சாட்டில் அடுத்த வரியிலேயே ஓத்துக் கொள்ளுகின்ற முரணைக் காண்கின்றோம்;. அதேநேரம் எம்மீது வைக்கும் குற்றச்சாட்டு "இனப்பிரச்சனைகளை பொதுமைப்படுத்தி" பார்க்கும் கட்சியுடன் களப்பணியில் இருப்பதாக, அதாவது முன்னிலை சோசலிசக் கட்சியுடன்

1."இனப் பிரச்சனைகளை பொதுமைப்படுத்தி" பார்த்தல் அரசியல் ரீதியாக மிகச் சரியானது. எங்கும் எப்போதும் இனப்பிரச்சனை என்பது பொதுமையானதே. அதுதான் சர்வதேசியம். பொதுமைப்படுத்தி பார்க்காத கண்ணோட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைவாதமாகும். இதுதான் போலி இடதுசாரிய சிந்தனை முறை. உங்கள் கருத்தை பகிர்ந்த, வரவேற்ற எல்லோரினதும் வங்குரோத்து அரசியலாகவும், சிந்தனை முறையாகவும் இருக்கின்றது.

2.முன்னிலை சோசலிசக் கட்சியுடன் தற்போது எங்களை விட நெருங்கிய உறவில் உங்கள் புதிய ஜனநாயகக் கட்சி தான் தற்போது உறவில் இருக்கின்றது. அவர்களிடம் "இனப் பிரச்சனைகளை பொதுமைப்படுத்தி" பார்ப்பதைப் பற்றிக் கேட்கவும். சுயநிர்ணயம் பற்றியும் கேட்கவும். "சுயநிர்ணயம் பற்றி கட்டுக்கட்டாக எழுதித் தள்ளிய …வற்றை தமது தளங்களில் இருந்து அழித்துவிட்டார்கள் ... என்னவொரு அரசியல் நேர்மை...." என இப்படி குற்றஞ்சாட்டும் நீங்கள், ஒரு பொய்யைச் சொல்லி "அரசியல் நேர்மையை" அளக்கின்ற, புதிய அரசியல் அளவுகோல் பிறரை முட்டாளாக்குவது. எந்தக் கட்டுரையும் அழிக்கப்படவில்லை. (வரலாற்றை புரட்டுகின்ற அனைவருக்கும் எதிரான, முழு ஆவணங்களும் இங்கு மட்டும் தான் உண்டு (tamilcircle.com) அவை கட்டுக்கட்டாகவே இணையத்தில் இருக்கின்றது, படியுங்கள்.

"மல்கம் ரஞ்சித் பேராயருக்கு இருக்கும் அறிவில் பாதி இவர்களுக்கு இருந்திருந்தால் நன்றாக இருக்கும்" என்ற, எங்கள் அரசியல் குறித்து கூற முனைகின்றனர். புதிய ஜனநாயகக் கட்சிக்கு, கிறிஸ்துவ பின்னணி கொண்டவர்களும், ஏகாதிபத்திய பின்னனி கொண்ட தன்னார்வலர்களுடனான உறவும், அரசியல் சங்கமிப்புகளும் அண்மைய போக்காக மாறியுள்ளது. அவர்களுடன் கொண்டுள்ள உறவு, இப்படித்தான் எமக்கு உபதேசிக்க வைக்கின்றது. இதனால் தான் எம்மையும் "பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களின் ஞாயிறு சுவிசேச பிரார்த்தனை கூட்டங்களுக்கு சென்றாவது அரசியல் பயில்க சட்டாம் பிள்ளைகளே....." என்று தங்கள் வழியை பின்பற்றுமாறு கூறுகின்றனர். இஸ்லாமிய மக்களே, ஏகாதிபத்திய இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போராட, ஏகாதிபத்திய எதிர்ப்பு "ஞாயிறு சுவிசேச பிரார்த்தனை" க்கு செல்லுங்கள், இது தான் அவர்கள் சொல்லும் வழி.

இந்த மல்கம் ரஞ்சித் பேராயர் யார்? வத்திகான் முதல் இலங்கை பிரதிநிதியான மல்கம் ரஞ்சித் வரை, ஏகாதிபத்திய எடுபிடிகள் தான். புலிகளை ஒடுக்கி பின், தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை மறுத்து, முழு தமிழ் மக்களையும், இராணுவ கெடுபிடியில் வைத்திருந்த மகிந்த – கோத்தபாயவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து பாராட்டியவர் தான் இந்த மல்கம் ரஞ்சித் பேராயர். முள்ளிவாய்க்கால் முடிவின் போது இந்த மல்கம் ரஞ்சித் பேராயர் யாரோடு கைகோர்த்திருந்தார்? ? இவர்களிடமும் அரசியல் கற்றுக் கொண்டு, எம்மையும் கற்கக் கோருவதையா, புதிய ஜனநாயகக் கட்சி இடதுசாரியமாக முன்வைக்கின்றது?