Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்

கீழ்வரும் பதிவை சில நாட்களாக எழுதவேண்டுமென நினைத்தேன். ஒரு பயம். "கும்பல்ல கோவிந்தா" என, எல்லோரும் முகப்புத்தகத்தில் பெண்களுக்காக குரல்கொடுக்கின்றனர். இது இப்போ "ட்ரெண்ட்" ஆக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் உள்ள "சிறு" தவறொன்றை சுட்டுவதென்பது, போராளிகள் என்னை ஆணாதிக்கவாதிகளுக்கு சார்பாக குரல் கொடுப்பவனாக- தமது போராட்டத்தை திசைதிருப்புபவனாக என்னை முத்திரைகுத்த வசதியாக போய்விடுமே என்ற பயம்.  ஆனாலும் இதை பதிவுசெய்தே ஆகவேண்டும்:
1.
தற்போது நம்மில் பலர் பெண்களுக்கு எதிரான மொழிசார்ந்த வன்முறையை முகப்புத்தகத்தில் நிகழ்த்துவோருக்கு எதிராக போராடி வருகிறோம். வெற்றியும் அடைந்துள்ளோம் என்ற அறிவிப்புகள் வருகின்றன. சந்தோசம் அல்லது மகிழ்ச்சி.


எனது ஆதங்கம் என்னவென்றால்: இந்த பெண்களுக்கு எதிராக மொழியியல் -மற்றும் பலவகை தாக்குதல்களை நிகழ்த்தும் ஒடுக்குறையாளர்களுக்கு எதிராகப் போராடும் நாம் சரளமாக "மண்டை கழண்டவர்கள்", "மனநோயாளிகள்", "விசரர்கள்", "வருத்தம் முத்தினவங்கள்", "ஓரினசேர்க்கையாளர்கள்", "சைக்கோக்கள்", "அருவருப்பான மனப்பிறழ்வு கொண்டவர்கள்" போன்ற சொற்களை போராடும் "உற்சாகத்தில்" போராட்டக்களத்தில் - விதைக்கிறோம்.


பெண்கள் மீதோ அல்லது சிறுபான்மைத் தேசியஇன மக்கள் மீதோ அல்லது ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீதோ யாராவது - அவர்களுக்கு சம்பந்தமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோமா??? இல்லையே.
"அந்த சாதிய சேர்ந்தவர்கள் தான் கொலைகள் செய்கிறார்கள்" .... "இந்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் பொய் சொல்லுகிறார்கள்", "ஆண்களை விட பெண்கள் இந்த இந்த விடயத்தில் வீக்" ....இப்படி யாராவது குற்றம் சாட்டினால், முற்போக்காளர்களான நாம் அதைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டா போகிறோம்??? இல்லையே.

அப்போ, மனநோயாளர்களை, பாலியல் சிறுபான்மையினரை குற்றம்சாட்டுவதை- சமுகக் களங்கத்துக்கு- social stigma- அவர்களை ஆளாக்குவதை நாமே செய்கிறோமே?. சில ஆணாதிக்கவாதிகள், முகப்புத்தகத்தில் பெண்களுக்கு எதிராக கருத்துக்களை எழுதும்போது - நாம் அவர்களை மனநோயாளர்களாகவே முத்திரை குத்துகிறோமே? இது எந்த வகையில் நியாயம்?.
உளவியல் கல்வியை 5 வருடங்கள் பல்கலைக்கழகம் வரை பயின்றிருக்கிறேன். அக் கல்வி சார்ந்து எனக்கு 25-வருட தொழில் அனுபவமுண்டு. ஆனால், இன்றுவரை மனநோயாளர்கள், "உளவியல் வருத்தமற்ற" -வர்களை விட அதிகளவில் பெண்ணொடுக்குமுறையில் ஈடுபடுகின்றனர் என்ற தகவலை- கருத்தை-தகவல்-ஆதாரத்தை நான் எங்கும் காணவில்லை.
எனக்குத் தெரிந்த மொழிகள் மற்றும் சமூகங்களில் தமிழ் மொழிசார் சமூகங்களில் மட்டுமே நாம் பாலியல் குற்றவாளிகளை - பெண்ணொடுக்குமுறையாளர்களை மனநோயாளிகள் என முத்திரை குத்தும் "கலாச்சாரத்தை" கொண்டுள்ளோம். இதை சமூகத்தை மாற்றப் போவதாக கூறிக்கொண்டு "கருத்தியல் போராட்டம்" முகப்புத்தத்தில் நடத்தும் நாமே பெரும்பாலும் செய்கிறோம்.
2.
2004- இல் இருந்து இன்றுவரை வடமாகாணத்தில் உளவியல் வருத்தம் சார்ந்த நிலைமை பற்றி மட்டுமல்ல பெண்கள்- சிறுவர்கள்-சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை பற்றியும் கொஞ்சம் ஆழமாக நானறிவேன். இங்கு நடைபெறும் பாலியல் குற்றங்கள் எதுவும் மனநோயாளர்கள் செய்ததற்கான எந்தப் பதிவுமில்லை. குற்றம் செய்பவர்கள், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக, சித்தப்பாவாக, பெரியப்பாவாக, மாமாக்களாக, குடும்ப நண்பராக, வேலைத்தளத்திலுள்ள அதிகாரியாக, நண்பராக, காதலனாக- வே உள்ளனர். அதாவது, பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் ஏதோ ஒருவகையில் தெரிந்த நபர்களே இக் குற்றங்களைச் செய்கின்றனர். பாதிக்கப்படும் பெண்கள், மற்றும் சிறுவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களே இக் குற்றங்களை நிகழ்த்துகின்றனர். இவர்களெல்லாம், உளவியல் பாதிக்கபட்டவர்கள் என்றால்; தமிழ் பேசும் சமூகத்தில் அரைவாசிக்கும் மேலான ஆண்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகும். அப்படியானால், இந்த தமிழ் பேசும் சமூகம் எப்படி இயங்குகிறது??. ஆகவே, பெண்ணொடுக்குமுறை-பெண்கள் மீதான வன்முறை நிகழ்த்துவோர் சாதாரண-வழமையான மனநிலையைக் கொண்ட ஆண்களே.
ஐரோப்பிய குற்றவியல் சட்டத்துறையில், ஒருவர் பாரிய சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் உளவியல்நிலை குற்றம் புரிவதற்குக் காரணமாக இருந்ததா என ஆராய்வது வழமையான ஒரு விடையம். இதுவரை ஐரோப்பாவின் இதயத்தையே உலுக்கிய கொலைக் குற்றங்களைச் செய்த எவரும் உளவியல் பாதிக்கப்பட்டவர்கள் என நிரூபிக்கப்படவில்லை. உதாரணமாக: நோர்வேயில் தொழிலாளர் கட்சியின், கோடைகால இளையோர் சந்திப்பில் புகுந்து பலரைக் கொலை செய்த ப்ரய்வீக், உளவியல் பாதிப்பினாலேயே அக் கொலைகளைச் செய்தார் என்ற விவாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


அதே நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், குனுத் காம்சுண், இரண்டாம் உலகப் போரின் போது கிட்லரின் நாஜி அரசை ஆதரித்தார். அதற்கு காரணம், அவர் உளவியல் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அப்படி செய்தார் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால், உளநிலை தெளிவான நிலையில்- சுயவிருப்பில் அடிப்படையில் - தான் நம்பும் கோட்பாட்டிற்கிணங்கவே நாஜி அரசுக்கான ஆதரவைத் தான் வழங்கியதாக குனுத் காம்சுண் கூறினார். தான் மனநிலை பாதிக்கபட்டவரல்ல என நிரூபிக்க ஒரு முழுநீள நாவலையே எழுதினார்.


ஏன், நம் தமிழ் சமுகத்தில் பிரபலமான தமிழ் அரசியல்வாதிகளாக - தேசியவாதிகளாக - எழுத்தாளர்களாக- வலம்வரும் பலரைப் பார்க்கிறோம். இவர்களின் பலர் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்து ஆயிரக்கணக்கான மனிதர்கள் கொலை செய்யப்பட நேரடியாகவோ-மறைமுகமாகவோ காரணமாக இருந்தவர்கள். அல்லது கொலைகளை இன்றும் நியாயப்படுத்துபவர்கள். இவர்களில் எவரையாவது, நாம் மனநோயாளிகள் என்று கூறுகிறோமா? இல்லையே. காரணம், இவர்கள் தமது அரசியல் -மற்றும் அதிகாரம்-சார்ந்து கொலை செய்தார்கள் என்பதே நமது நிலைப்பாடாக இருக்கிறது. சரியான நிலைப்பாடே! இதே போன்று தானே இந்த சமூகத்திலிலுள்ள பெண்ணொடுக்குமுறையாளர்களும்???? !
உளவியல் சார்ந்த பல கோட்பாடுகள் உள்ளன. சமுகம், உடலியல் மரபு, வேதியியல் சார்ந்து, சமூக பொருளாதார -கலாச்சர அடிப்படை சார்ந்து எனப் பலவகை உளவியல் கோட்பாடுகளுள்ளன.

எனக்குத் தெரிந்தவரையில்; ஒருவரின் பெண்ணொடுக்குமுறை சார்ந்த நடைமுறையின் அடிப்படையென்பது சமூக-பொருளாதார -கலாச்சார பின்னணி சார்ந்தது. ஒருவர் மனநிலை பாதிக்கப்படும் போது அவரின் நடத்தை என்பது சமூகப்-பொருளாதார -கலாச்சார பின்னணி சார்ந்து உருவாக்கப்பட்ட மனநிலையிலிருந்தே வெளிப்படும். அதாவது, வருத்தமில்லாத ஒரு "சாதாரண" நபரின் நடத்தையின் அடிப்படை எப்படியோ அதேபோன்றதே உளவியல் பாதிக்கப்பட்டவரின் நடத்தையுமாகும். சிசோபிரெனி - மனச்சிதைவு போன்ற வருத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மட்டுமே நடத்தை "பிறழ்வாக" காணமுடியும். அந்த நடத்தைப்பிறழ்வு கூட பல சந்தர்ப்பங்களில் தங்களைத் தாங்களே பாதிக்கச் செய்யும்-காயமடையச் செய்யும் நடத்தையாகவே இருக்கும். இவ்வகை வருத்தம் இருப்போர், பார்வை அல்லது கேள்வி சார்ந்த உளவியல் கோளாறால் (psychosis நிலை) கொலைகள் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பெண்ணை கொலை செய்யும் வேளை திட்டமிட்டு "பெண்ணொடுக்குமுறையை" நிலைநாட்ட செய்வதில்லை.


அநேகமான சந்தர்ப்பங்களில், அன்பும், நேசிப்பும், அரவணைப்பும் தேவையான மனிதங்களாகவே உளவியல் பாதிக்கப்பட நபர்கள் நமது சமூகத்தில் உள்ளனர். என்னை கேட்டால்: உலக அளவில் அதியுச்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகும் ஒரே ஒரு சமூக மனிதங்கள் உளவியல் பாதிக்கப்பட்டவர்களே! அதன் பின்பே, சிறுவர் -சிறுமிகள், வயோதிபர், பெண்கள், பாட்டாளிவர்க்கம்,....... தமிழ் தேசியஇனம் என வரிசைப்படுத்தலாம்.


இந்நிலையில், உளவியல் பாதிக்கப்ட்ட மனிதங்களின் உரிமைக்காக அவர்களில் வாழ்வியல் மேம்பாட்டுக்காக போராட வேண்டிய இடதுசாரிகளான நாம், பெண்ணொடுக்குமுறையாளர்களை, ஆணாதிக்கவாதிகளை "சைக்கோ" "மண்டை கழண்டவர்கள்" மனநோயாளிகள்" என முத்திரை குத்துவதன் மூலம் சமூகத்தில் உண்மையாகவே உளவியல் நோய்களால் பாதிக்கப்பட்ட மனிதங்களை social stigma- சமூகக் களங்கத்துக்கு ஆளாக்குகிறோம்.


3.
அடுத்ததாக, பெண்ணொடுக்குமுறையில் ஈடுபடும் ஆண்கள் ஓரினச்சேரக்;கையாளர்கள் என்ற கருத்தும் எம்மில் பலரால் பிரச்சாரப்படுத்தப்படுகிறது. ஓரினச்சேரக்;கையில் ஈடுபடும் ஆண்கள் தமது பாலியல் இச்சைக்கு ஆண்களை தெரிவு செய்வதனால், அவர்கள் பெண்களை வெறுக்கின்றனர் என்ற கருத்தும் - கண்டுபிடிப்பும்; காரணமாக கூறப்படுகிறது.
இடதுசாரிகள், மார்க்சிஸவாதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் பலர் மார்க்சிஸ தத்துவ அடிப்படையில் தாம் ஓரினச்சேர்க்கையை எதிர்ப்பதாக கூறுகின்றனர். நவதாராளப் பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்பின் எச்சமே சுயபாலின தேர்வு என்றும் கூறுகின்றனர். இவர்கள் இதை எவ்வாறு நிரூபிக்க முடியுமென்பது எனக்கு பலகால அங்கலாய்ப்பை இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களைக் கொண்ட மனிதகுல வரலாற்றில் தொடர்ச்சியாக இருந்துவரும் ஓரினச்சேர்க்கையை 200வருட வரலாறு கொண்ட முதலாளித்துவத்தின் விளைபொருள் ( consequences of capitalism) என்று எப்படி இலகுவாக கூறிவிட முடிகிறது?


நான் விபரிப்பதை விட மிகவும் பிரபலமான இலங்கையின் மார்க்சிஸவாதி ஒருவரின் கூற்று, இந்த வகை "இடதுசாரிகள், மார்க்சிஸவாதி"களின் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள உதவியாயிருக்கும்.


“பெண் என்பவள் தாயாய், தாரமாய், சகோதரியாய், நண்பியாய், தோழியாய் என ஒவ்வொரு கட்டத்திலும் ஆணுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய உறவாக இருக்கிறாள். இப்படி பல அவதாரங்கள் எடுக்கும் பெண்ணை எந்த சந்தர்ர்ப்பத்திலும் வேண்டாமென ஒதுக்கும் மனிதன் என்னதான் உன்னதமான மனிதனாய் இருந்தாலும் அவன் மனநோயாளியாகவே இருப்பான். மேலும் உலகின், அல்லது மானுட, சமூக இயங்கியலின் பொதுவிதிகளை மீறுபவனாகவே இருப்பான். குறிப்பாக பெண்களை வெறுப்பவன் ஒரு சேடிஸ்ட்டாகவோ அல்லது ஓரினச் சேர்க்கையில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாகவோ இருப்பான். இவர்களால் பெண்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கே சீர்கேடுகள் வரலாம்.”


என்னைப் பொறுத்தளவில் எனக்குத் தெரித்த உளவியலோ அல்லது சமூகவியலோ ஓரினச்சேர்க்கையை மனநோயாகவோ, பெண்வெறுப்பாகவோ, "சேடிஸ்சமாகவோ" கருதவில்லை. ஓரினச்சேர்க்கையை மனநோயாக கூறிய காலம் இருந்ததென்றால் இன்று அது பாலியல் தெரிவிலுள்ள பன்மைத்துவமாகவே (sexual pluralism) கருதப்படுகிறது. இன்று படுபிற்போக்கான மதவாத சக்திகளே ஓரினச்சேர்க்கையை உளவியல் வருத்தமாகவும், சாத்தானின் செயலாகவும் பார்க்கின்றனர். செப -தவம், மந்திரங்கள் மூலம் குணப்படுத்தலாம் என நம்புகின்றனர். இப்படியான மதவெறி சார்ந்த -பிற்போக்கு சக்திகளின் பார்வையை மார்க்சிசவாதிகள் எனக் கூறிக் கொள்வோரும், மேற்படி பதிவுகளுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையும் நம் சமூகத்தில் மார்க்சிஸத்தின் கவலைக்கிடமான நிலையை அப்பட்டமாக பறை சாற்றுகிறது.


எனக்குத் தெரிந்த மார்க்சிச அடிப்படை இதுதான்: யாரெல்லாம் இந்த உலகத்தில் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களின் விடுதலைக்காக, விமோசனத்துக்காக, உரிமைக்காக, மேம்பாட்டுக்காக, வலுப்படுத்தலுக்காக, சுதந்திரத்துக்காக போராட வேண்டியது மனிதகுல விடுதலைக்கு-சமூக மாற்றத்துக்காக போராடும் சமூக நேசம் கொண்ட ஒவ்வொருவரின் கடமையுமாகும்.
இதனடிப்படையிலேயே நான் சுயபாலின உறவை விரும்பும் மனிதங்களை பார்க்கிறேன். இன்றும் ஒடுக்கப்படும் பாலின சிறுபான்மையினராகவே இவர்கள் பெரும்பாலான நாடுகளில் உள்ளனர். ஆகவே, ஒடுக்கப்படும் இவர்களுக்கு -இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதே ஒரு சரியான மார்க்சிஸ பார்வையாக இருக்கமுடியும் என்பதே என் நிலைப்பாடு.
இதனடிப்படையில்: மார்க்சிஸவாதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள், பெண்ணொடுக்குமுறையாளர்களை, ஓரினச்சேர்க்கையாளர்களாக- மனநோயாளர்களாக சித்தரிப்பதென்பது மனிதநேயம்-உலக அன்பு சார்ந்த விடயமல்ல. மாறாக ஒடுக்கப்படும் மனிதங்களை இன்றுள்ள சமூக ஆதிக்கம்- அதிகாரம் சார்ந்து மென்மேலும் ஒடுக்குவதேயாகும்.