Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்

1

இன்று காலை(03.03.2019), யாழ்ப்பாணம் சென்றேன். போகும் வழியில், வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நாதஸ்வர இசைக்கேற்ப மயிலாட்டம், குதிரை ஆட்டம் ஆடும் கலைஞர்கள் நடனமாடி வந்தனர். தெருக்கரையோரம் விடுப்புப் பார்த்தவரை விசாரித்தபோது,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேசமகளிர் தினத்தைக் கொண்டாடும் மாநாடு   நடக்கவிருப்பதாகவும், அதையொட்டியே இந்த மேளதாளங்களுடனான மகளிர்பேரணி  வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நிற்பதாக கூறினார். நாதஸ்வர வித்வான்கள் 

"ஒட்டகத்தைக் கட்டிக்கோ, கெட்டியாக  ஒட்டிக்கோ, வட்ட வட்டப் பொட்டுக்காரி...... பத்த வச்சாப்  பத்திக்கும், வாய் வெடித்த மொட்டுகாரி.....அதி காலை சேலை சொல்லுமடி மிச்சத்தை"

என்ற தமிழ் பெண்களின் சர்வதேச கீதத்தை உச்சஸ்தாயில் வாசிக்க, குயில் ஆட்ட கலைஞர்களும், குதிரை கலைஞர்களும் துள்ளித்துள்ளி ஆடினார்கள். மகிழ்ச்சி பொங்க, பெருமையாக நூற்றுக்கணக்கான பெண்கள் இசைக்கேற்ப அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

சனக்கூட்டத்துக்கு இடையில், உற்றுக் கவனித்த போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணன், குதிரைக் கஜேந்திரன்   போன்ற தலைவர்களுக்கு மண்டபத்தின் வாசலுக்கு அதியுச்ச மரியாதையாக அழைத்து வந்தார்கள் சில பெண்கள். கட்சியின் கொடியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார். பெண்கள் மாநாடு என்றால், அதுவும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  நடத்தப்படும் மாநாடு என்பதால், அம்மாநாட்டில் பேசப்படும் உரைகளை கேட்கும் ஆர்வத்தில்  நானும் உள்ளே நுழைந்தேன்.

உள்ளே மேடையில் மேற்படி தலைவர்களின் தலைமையில்- அவர்களாலேயே மாலை அணிவித்தல், விளக்கு ஏற்றுதல், போன்ற சம்பிரதாயங்கள் நிகழ்த்தப்பட்டன. ஆண் தலைவர்கள்  முன்னணியில் வீற்றிருக்க மாநாடு ஆரம்பித்தது. தலைமை உரையாற்றிய அக்கா ஒருவர் கவிதை நடையில் "இந்தியன் ஆமி தொடக்கம், ஓட்டுப்பட்டை, ஒத்தோடிகள், தமிழ் தேசியம், துரோகிகள்" எல்லாரும் எவ்வாறு தமிழ் பெண்களை மானபங்கம் செய்தார்கள்,  கற்பழித்தார்கள் என ஆக்ரோஷமாக விவரித்தார். இங்கு "கற்பழித்தார்கள்" என்று கூறப்படும் சொல் எனது சொல்லல்ல. அங்கு அவர்களால் உபயோகிக்கப்பட்ட சொல்.

இது மாதிரிதான், கடந்த வருடம் யாழ்ப்பாண நூல்நிலையத்தில் NGO-களின் கூட்டமைப்பினால் சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பங்குகொண்ட போது,  அங்கும் கற்பழிப்பு என்ற சொல் சரளமாக உபயோகிக்கப்பட்டது. தமிழ் பெண்களின் கற்பு பற்றிய கவலை எல்லோர் உரையின் அடி நாதமாகவிருந்தது. பெண்களுக்கான ஒழுக்கம்-  அதாவது பாலியல் ஒழுக்கம் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் போரின் பின் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது என்று அதில் பங்குபற்றிய பேச்சாளர்கள் எடுத்துரைத்தார்கள். ஒட்டுமொத்தத்தில், பெண்கள் திருந்த வேண்டும், என்பதே அந்த மாநாட்டின் ஆரம்பநாள் உரைகளின் உள்ளடக்கமாக விரிந்தது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூட தனது உரையில் கற்பு பற்றி அதிகமாக பேசினார். அதற்குமேல், பொறுக்க இயலாத நான்,  இதையெல்லாம் ஆட்சேபிக்க முனைந்து கிட்டத்தட்ட அழாக்குறையாக -  அடிவிழாத  குறையாக மாநாட்டை விட்டு வெளியேறினேன். அல்லது வெளியேற்றப்பட்டேன். (அம்  மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மைத்ரி விக்ரமசிங்க அவர்கள் மட்டுமே போரின் பின்னான தமிழ் பெண்களின் நிலை- மற்றும் பெண்ணொடுக்குமுறையின் அடித்தளம் என்பது பற்றி மார்க்சிஸ பெண்ணிய பார்வையில் உரையாற்றினார்.)

இது ஒரு பக்கம் இருக்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் மாநாட்டின் இரண்டாவது உரை முடிந்தபின் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாசலில் வந்து நின்று, கொஞ்சம் சத்தமாக மாநாட்டைப் பற்றி முணுமுணுத்தேன். "இது என்ன ஆண்கள் மாநாடா அல்லது அவர்களுக்காக வைக்கப்படும் பெண்கள் மாநாடா.?"  "... கற்பழிப்பு என்ற சொல்லே சமூகத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது என்று நினைத்தேன், இங்கு அடிக்கடி பாவிக்கிறார்கள்."? . "கஷ்டப்பட்ட வன்னி பெண்களைக் கொண்டு வந்து, அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்" ... "இதெல்லாம் நியாயமில்லாத வேலை"..... "தமிழ் தேசியம்  முக்கியம்தான், ஆனால், அதற்கு முன், நமது சமூகத்தால்- நமது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், ஒடுக்குமுறை, வன்முறை, பாலியல் சுரண்டல் பத்தி பேச வேண்டும்.... " .... இங்கு என்ன நடக்குது...... . ?? 

இந்த இந்த முணுமுணுப்பு முடிவதற்கு முன்பேயே, வாசலில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் படை-ஆண்கள் படை என்னை முறைத்துப் பார்த்தது. மரியாதையாக வெளியேறினேன்.

2

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், புளட் போன்ற இயக்கங்கள் பெண்ணொடுக்குமுறை பற்றி பேசின. EPRLF இயக்கம் அன்று பெண் விடுதலைக்கான, "செந்தணல்" என்ற மாதாந்த இதழை வெளியிட்டதாகவும் நினைப்பு.  எழுந்து வருகிறோம், அடுக்களையிலிருந்து, தீப்பிழம்பாக" என்ற தலைப்பிலான கவிதை ஒன்றை அவ்விதழில் வாசித்ததாக நினைவிருக்கிறது. அரசியற் குறை நிறைகளுக்கு அப்பால், மேற்படி இயக்கங்கள் இரண்டும், தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, சமகாலத்தில் பெண்விடுதலைக்கான போராட்டமும் நடைபெற வேண்டும். (ஈ.பி.ஆர்.எல்.எப், இதே போலவே சாதி ஒழிப்பு போராட்டமும் சமகாலத்தில் நடைபெற வேண்டும்) என்று பிரச்சாரம் செய்தார்கள். தமிழ் தேசியம் என்பது மிடுக்குடன் பலமாக இருக்க வேண்டுமெனில் அகமுரண்பாடுகள் களையப்படல் வேண்டுமென்பது இவ்வியக்கங்களின் கருத்தாக இருந்தது.

அதே காலத்தில், எனக்கு தெரிந்தமட்டில் புலிகள் இயக்கமும், உண்மையான மார்க்சிச லெனினிய இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக் கொண்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும், பெண் விடுதலைக்கான முன்னெடுப்பை கொச்சைப்படுத்தினார்கள். பெண்கள் தமது சுதந்திரத்துக்காக போராடுவதென்பது, தமிழ் சமூகக் கட்டமைப்பைக் குலைத்து விடும். சில குறைபாடுகள் தமிழ் கலாச்சாரத்தில் இருந்தாலும், அதை நாங்கள் தமிழீழம் உருவாகிய பின் சீர் செய்வோம், எனக் கூறினார்கள். சில இடதுசாரிகள், அதற்குமேல் போய், சோசலிச தமிழீழம் பெண்களுக்கு விடுதலை கொடுத்து விடும், இப்போ நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. பெண்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொள்ளத் தேவையில்லை, என்று பெண்விடுதலை பற்றிய தம் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தினார்கள்.

பிற்காலத்தில் காலத்தில், புலிகள் மற்றும் TELO போன்ற இயக்கங்களும், இடதுசாரியம் கதைத்த NLFT இயக்கமும் தமது அரசியல் -இராணுவ தேவைகளுக்காக பெண்களை இணைத்துக் கொண்டார்கள்.

எது எப்படி இருப்பினும், தமிழ் தேசிய இயக்கங்களின் ஆரம்பகாலத்தில், பெண்களை, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட தமது இயக்கங்களில் இணைத்து கொண்ட விடயமானது ஒப்பீட்டளவில் முற்போக்கானது. பெண்ணொடுக்கு முறை பற்றிய, இன்றுள்ள தமிழ் அரசியற் கட்சிகளின் அரசியற் -சமூக -பொருளாதார போக்குடன் ஒப்பிடுகையில் புரட்சிகரமானது.

3

2009-க்கு பின்னான காலகட்டத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் சமுதாயத்தை உற்று நோக்குவோமெனில், பெண்களின் நிலையானது மிகவும் பிற்படுத்தப்பட்டதாக- தாழ்த்தப்பட்டதாக-ஒடுக்கப்பட்டதாகவே உள்ளது. சாதனைகள் பல செய்த பெண்போராளிகளின் சமூகப் பொருளாதார நிலை மிகவும் கவலைக்குரிய விடயமாக- இரத்தம் சொரியும் சமூகக் காயமாக இருந்து வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், போராளிகள், குழந்தைகளின் ஒடுக்கப்பட்ட- ஒதுக்கப்பட்ட நிலையானது, இன்று, என்ஜிஓக்கள் மற்றும் தமிழ் தேசியம் கதைக்கும் அரசியல் கட்சிகளின் பொருளாதார, அரசியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்?, எத்தனை பெண்கள் விதவையாக வாழ்கிறார்கள்?, எத்தனை பெண்கள் குடும்ப பொருளாதார தலைமை வகிக்கிறார்கள்? போன்ற தரவுகள், NGO - கள் பாரிய நிதியை மேற்குநாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள வழி செய்கிறது. அதேபோன்று, மேற்படி தரவுகளை தமிழ் தேசியக் கட்சிகள் என்று தம்மை கூறிக் கொள்பவர்கள், "இலங்கை அரசாங்கத்தை சர்வதேச தேசத்தின் முன்நிறுத்தி முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு நியாயம் கோர" உபயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. என்னை பொருத்த அளவில், போர்க்காலத்தில் நடைபெற்ற பெண்கள் சார்ந்த  பாதிப்புக்களை- வன்கொடுமைகளை தமது அரசியல்- சமூக இருப்பை காப்பாற்றுவதற்காகவும்- தமிழ் மக்களை அரசியல் அடிப்படையில் ஏமாற்றுவதற்காகவும் மேற்படி தமிழ் தேசியக் கட்சிகள் உபயோகிக்கின்றன. எனது இக் கருத்து சரியானது தான் என்பதனை, நான், இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் மாநாட்டின் இரண்டாவது உரை முடிவுற முன்னமேயே - அவ் உரைகளினூடாக உறுதிப்படுத்திக் கொண்டேன்.

4

எண்பதுகளில் ஆரம்பத்தில், தமிழ்தேசிய விடுதலை சார்ந்த போராட்ட காலத்தில் முன்னெழுந்து வந்த பெண்விடுதலைக்கான சிந்தனை நிலை கூட,  இன்று நம் தமிழ் சமூகத்தில் இல்லை. பெண்கள் சார்ந்த சமுதாய வளர்ச்சி - போராட்டத்திற்கான சிந்தனை வளர்ச்சி- அது சார்ந்த செயற்பாடுகளின் முன்னெடுப்பு பல பத்து வருடங்கள் பின்தங்கியுள்ளனர்.

எந்த சக்தி ஒரு சமூகத்தில் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதன் சிந்தனை அடித்தளமே, அச்சமூகத்தின் ஆதிக்க சிந்தனையாய் இருக்கும். கிட்டத்தட்ட இப்படியான ஒரு வசனத்தை, ஐரோப்பிய தத்துவஞானி ஒருவர் கடந்த நூற்றாண்டில் கூறியதாக எங்கோ வாசித்ததாக ஞாபகம்.

பெண்விடுதலைக்கான முன்னெடுப்பின், பின்தங்கியுள்ள நிலையை மாற்ற வேண்டுமெனில், சமூக மாற்றத்திற்காக சிந்திக்கும் அனைவரும் எமது சமூகத்தில் புரையோடியுள்ள "ஆணாதிக்க சைவ சனாதன சிந்தனை முறையை" ஒழிப்பதற்கு முன்வர வேண்டும். இந்த ஆணாதிக்க சைவ சனாதன சிந்தனைக்கு எதிரான போராட்ட முன்னெடுப்பானது, இன்றுள்ள நிலையில் பெண்களின் விடுதலைப் போராட்டத்திற்கான ஆரம்ப புள்ளியாக உள்ளது.