Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொது வேலைத்திட்டத்திற்கான பகிரங்க கலந்துரையாடல்

மக்கள் தொழிலாளர் சங்கம் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பொது அடையாளத்துடன் பொது வேலைத்திட்டத்திற்கு அழைப்பை விடுத்துள்ளதுடன், அது பற்றிய பொது கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் 06.07.2014 அன்று மு.ப. 10.30 – 01.30 வரை ஹட்டன் சமூக நல நிறுவன (CSC) மண்டபத்தில் (இல.30, புகையிரதவீதி, ஹட்டன்) நடாத்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா குறிப்பிட்டுள்ளார். மலையகத்தில் செயற்படும் தொழில் சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் உட்பட பல தரப்பினருக்கும் இக்கலந்துரையாடலுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அதேவேளை ஏனைய துறைசார் தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் 0714302909/ 0716275459 என்ற தொலை பேசி இலக்கத்துக்கு அழைத்து அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் ஊடாக உறுதிசெய்யலாம். குறித்த கலந்துரையாடலுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணம் குறிப்பிடப்பட்டிருந்தாவது:

பின்னணி

இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் காணி, வீட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நிலவும் சமூக கட்டமைப்பினால் அப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாததாக தொடரும். எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் அவர்களது வழித்தோன்றல்களினதும் காணி, வீட்டு பிரச்சினை ஆரம்பநிலை தீர்வுகளைக்கூட எட்டவில்லை. அவர்களின் அப்பிரச்சினை வரலாறு, அரசியல், சமூக, பண்பாட்டு ரீதியில் வேறுபட்டதாகவும் தனித்துவமானதும் குறிப்பானதுமாக இருந்துவருவதால் அவை பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதாகிறது.

இந்தப் பின்னணியில் இன்று மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைக்கான குரல்கள் பொதுவில் அரசியல், தொழிற்சங்க தளங்களிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இது ஆரோக்கியமான முன்னகர்வு. எனினும் இந்த நகர்வு வெறும் வார்த்தை வீச்சுகளுக்கு மட்டும் அடங்கிபோவதாக இருக்ககூடாது என்பதே மலையக மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. மலையக மக்கள் பெருந்தோட்ட பொருளாதாரத்திற்கு உட்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் ஒரு தேசிய இனம் என்றவகையிலும் பல தனித்துவமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். முகம் கொடுத்து வருகின்றனர். அவ்வாறான தனித்துவப் பிரச்சினைகளில் காணி, வீட்டு உரிமை பிரச்சினை இன்று பிரதான இடத்தில் உள்ளது. மலையக மக்களின் காணி வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கு இன்று ஒரு பொது இணக்கப்பாட்டுடன், பொது வேலைத்திட்டத்துடன் மக்கள் சார்பு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள், தனிநபர்கள் ஐக்கியப்பட்டு பணியாற்றுவதற்கான தவிர்க்க முடியாத தேவை எழுந்துள்ளது. அந்த தேவையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ் வரைவை கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கும் அதனடிப்படையில் பொது உடன்பாடுகளுடன் பொது வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து பணியாற்றுவதற்குமான தொடக்க புள்ளியாக கொள்ளலாம்.

I.மலையகமக்களும்காணி,வீடுஉரிமையும்

பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்கள் பல்வேறு எதிரிடை வரலாற்று சூழ்நிலைகளைக் கடந்து இன்று இலங்கையின் பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர். வரலாற்றில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தினுடாக இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க வளம் சேர்த்த இந்த மக்கள் இன்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை மூலமும் அதனை கடந்து இன்னபிற துறைகள் ஊடாகவும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு வளம் சேர்த்து வருகின்றனர். எனினும் மனிதனின் அடிப்படை தேவையான வீடு, மனித இருப்பின் ஆதாரமான காணி ஆகிய உரிமைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மலையக மக்களுக்கு முழு சமூகத்துக்குமாக மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அதாவது, மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்ட இந்த உரிமையானது மலையக சமூகத்தின் அடுத்தக்கட்ட நகர்வின் வெளிப்பாடுகளாக இருந்த ஆசிரியர்கள், மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள், சுய தொழில் செய்பவர்கள், தனியார் துறைகளில் முறைசார் மற்றும் முறை சாரா துறைகளில் தொழில்களை செய்பவர்கள் என அனைத்துத் தரப்புக்கும் மறுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த உரிமை மறுப்பானது பெருந்தோட்ட மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் எவ்வித பேதமுமின்றி காணப்படுகிறது. அதாவது மலையக மக்கள் நுவரெலியாவில் வாழ்ந்தாலும் காலியில் வாழ்ந்தாலும் இப்பிரச்சினை நிலைபெற்றுள்ளது. எனவே, இது மலையக மக்கள் அனைவரினதும் பொதுப் பிரச்சினையாக இருந்து வருகின்றமை கவனிக்கத்தக்கது.

காணி வீட்டு உரிமை என்பது ஒரு புறத்தில் உறைவிடமான வீடு பிரத்தியேகமாக அதற்குரிய சுற்றுச்சூழலை ஏற்படுத்தக்கூடிய சிறு காணித்துண்டுடன் உரித்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் வசிக்கக்கூடிய உட்கட்டமைப்புகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படை உரிமைகள் எதுவுமற்றவர்களாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய மலையக மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர். மறுபுறத்தில் தற்போது வீட்டுத் தோட்டங்களையும் விவசாயத் தோட்டங்களையும் கொண்டிருப்பவர்களுக்கு அவற்றின் மீது எந்தவிதமான உரித்தும் இல்லாது, எந்த நேரத்திலும் அவை பறிக்கப்படும் அபாயத்தினையும் எதிர்நோக்குகின்றனர்.

மலையக மக்கள் லயன் வீடுகள், குடிசைகள், மாடி வீடுகள், இரட்டை வீடுகள், மற்றும் தனி வீடுகள் என்ற ஐந்து வகைப்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். மலையக மக்களின் குடியிருப்புகளில் லயன் குடியிருப்புகள் 70 வீதமாகும். இதில் லயன் வீடுகள் மனிதனின் சமூக வாழ்க்கைக்கு ஒவ்வாத பல்வேறு கூறுகளைக் கொண்டிருக்கின்றன. லயன் அறைகளில் சிறிய பரப்பும் அமைப்பும் ஆரோக்கியமான குடும்ப, சமூக வாழ்விற்கு பொருத்தமற்று இருக்கின்றமை இதன் முக்கிய பிரச்சினைகளாகும். குடிசைகளின் சிறிய பரப்பு, அமைப்பு முறையில் உள்ள தற்காலிகத் தன்மையோடு கலந்துள்ள பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. மாடி வீடுகள் லயன் அறைகளில் இருந்த பிரச்சினைகளை மீண்டும் புதிய வடிவில் நிலைபெற செய்துள்ளதுடன் காணி உரிமையை தொடந்து மறுப்பதனை உட்கிடையாக கொண்டுள்ளது. இரட்டை வீடுகள் மேற்குறிப்பிட்ட மூன்று குடியிருப்புகளைவிட முன்னேற்றகரமானதாக காணப்பட்ட போதும் அவை மிகவும் சிறிய எண்ணிகையிலேயே காணப்படுகிறன. தனி வீடுகள் குடியிருப்பு பிரச்சினைக்கான தீர்வாக அமைந்துள்ள போதும் அதில் காணி பரப்பு குறுகியதாக இருக்கின்றமையோடு ஏனைய குடியிருப்புகளுக்கும் உள்ள காணி உரிமை மறுப்பு இருந்து வருகிறது.

எனவே மலையக மக்களிடத்தில் ஆரோக்கியமான குடும்ப சமூக வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்கான வீட்டு வசதிக்கான தேவை ஒப்பீட்டளவில் தனி வீடுகளிலும் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் இரட்டை வீடுகளிலும் வசிப்பவர்களை தவிர மற்றைய அனைவருக்கும் இருந்து வருகிறது. அத்தோடு மேற்குறித்த எந்த குடியிருப்பில் வாழ்ந்து வந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை மறுக்கப்பட்டுள்ளமை பொது அம்சமாகும்.

ஆனால் பல்தேசிய கம்பனிகளுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி அரசாங்கத்தினால் காணிகள் விற்கப்படுகின்றன அல்லது குத்தகைக்கு கொடுக்கப்படுகின்றன.

II.. காணி வீட்டு உரிமை மறுப்பின் சட்டப் பின்னணி

1889ம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட முதலாவது சட்டமான தோட்டத் தொழிலாளர் (இந்தியர்கள்) கட்டளைச் சட்டம் குடியிருப்பு பற்றி எந்த ஏற்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. எனினும் அச்சட்டத்துக்கு 1941ம் ஆண்டு கொண்டவரப்பட்ட திருத்தத்தின் பிரிவு 24(I) பிரகாரம் குடியிருப்புகள் பற்றிய ஏற்பாடு சேர்க்கப்பட்டது. எனவே 1941ம் ஆண்டுக்கு முன்னர் தொழிலாளர்களின் குடியிருப்பு அதன் தரம் தோட்ட நிருவாகிகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டன. சேர்க்கப்பட்ட திருத்தமானது, தொழில் வழங்குனர் (தோட்ட நிருவாகம்) தோட்டத்தில் தொழிலாளி தானும் தனது துணையுடன் வசிக்கும்போது அவர்களுக்கு தனி அறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. அத்தோடு அந்த அறை 12 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் தவிர்ந்த ஏனையோருடன் பகிர்வதற்கு அனுமதிக்கப்படலாகாது என ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சட்ட ஏற்பாட்டில் இருந்து வெளிப்படுவது யாதெனில் கணவன் மனைவியான தொழிலாளர்களுக்கென தனி அறையை கொண்ட வீட்டை வழங்கும் கடப்பாட்டை தொழில் தருநர்கள் கொண்டிருந்தனர் என்பதாகும். இந்த அடிப்படையிலேயே ‘8X8’, ‘10X10’ அறைகள் சிறிய விராந்தையுடன் அல்லது விராந்தை, குசினியுடன் வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அவையே லயன் வீடுகள்.

குடும்பத்தில் அங்கத்தினர்கள் அதிகரித்த போதும் அதற்கேற்ப தனி அறைகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. பரம்பரை பரம்பரையாக வசிக்கும் தொழிலாளிகளின் பிள்ளைகள் தோட்டங்களில் தொழிலாளர்களாக பதியப்பட்டதால் அந்தக் குடும்பங்கள் அதே லய அறைகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டன.

பிரிட்டிஷ் கம்பனிகள் காலத்தில் மேலதிகமாக சில லயன் அறைகள் கட்டப்பட்டப் போதும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவை போதுமானவையாக இருக்கவில்லை. இதனால் ஒரே லயன் அறைகளில் பல குடும்பங்கள் வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. தோட்டத் தொழிலில் இருந்து ஓய்வுபெறும் போது அல்லது வேலை இழக்கும் போது அவரின் குடும்பத்தில் வேறு எவரும் தொழிலாளியாக இல்லாதவிடத்து அவர்கள் லயன்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். குடும்பத்தில் ஒருவர் மட்டும் வேலை செய்தால் ஒரு அறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

பெருந்தோட்டங்களில் உள்ள தோட்டத் துரை பங்களா, சின்னத்துரை பங்களா, ஏனைய உத்தியோகத்தர்களின் குவாட்டர்ஸ்களில் இருந்து குறித்த உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றப்பின்னர் அல்லது விலக்கப்பட்டப் பின்னர் வெளியேற வேண்டும். 1971ம் ஆண்டில் தோட்ட குவாட்டர்ஸ் (விஷேட ஏற்பாடுகள்) சட்டம் இதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது. உத்தியோகத்தர்கள் தொழிலை இழக்கும்போதும் அல்லது நீதிமன்றத்தினால் வெளியேற்றப்படும்வரை அவ் உத்தியோகத்தர் தன்னுடன் தங்கி வாழ்பவர்களுடன் இருக்கலாம் என்று அச்சட்ட ஏற்பாடுகள் கூறுகின்றன.

எனினும் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அல்லது வேலையில் இருந்து நீக்கப்படும் போது லயன் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவதில் வேறுபாடு காண்பது அவசியம். தோட்டத் தொழிலாளர்கள் வேலைத்தளங்களுடன் தொடர்புபட்டு தோட்டக் குடியிருப்புகளுக்குள்ளேயே அடைக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டு வந்தமையும் தொழிலாளர்களின் குடியிருப்பாக லயன்கள் எழுதப்படாத விதியாக இருந்து வந்தமையும் இக் குடியிருப்பு பிரச்சினையை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க முன்வராத நிலைமையும் அவர்களை லயன் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதில் நடைமுறை பிரச்சினைகளாக இருந்தன.

தொழிலை இழக்கும் போது தொழிலாளர்களை தோட்ட லயன் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை. அதேநேரம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஏற்பாடுகளும் இல்லை. அத்தோடு தோட்டத்தில் தொழிலாளர்களாக இல்லாதவர்கள் வசிப்பது தொடர்பில் எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை என்பது கவனிக்க அம்சமாகும்.

தோட்ட குவாட்டர்ஸில் வசித்தவர்களை வெளியேற்ற தோட்ட முகாமைத்துவங்கள் நடவடிக்கை எடுக்கின்றன. இது சட்டத்தின்படியான நடவடிக்கையாகும். இந்த நடைமுறை தற்போது தொழிலாளர்கள் தொடர்பில் நீதிமன்றங்களுக்கு வெளியில் இடம்பெறுவதோடு நீதிமன்ற உத்தரவின் பேரிலும் இடம்பெறுகின்றன. அத்தோடு தோட்டக் காணியில் குடிசைகளை அமைக்கும் போது, வசிக்கின்ற லயன் அறைகளை, இரட்டை வீடுகளை திருத்தும் போது, அல்லது விஸ்தரிக்கும் போது அவை நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் அகற்றப்படும் நிலைமை காணப்படுகிறது. பெருந்தோட்டக் காணிகள் தொடர்பில் ஒன்றில் பெருந்தோட்டக் கம்பனிகைக்கு குத்தகை உரிமையினை பெற்றிருக்கின்றமையும் அல்லது காணி மறு சீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமாக இருக்கின்றமையும் இந்நிலைக்கு காரணமாகும். இதன்காரணமாக குறிப்பாக பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் வாழும் மக்கள் தாம் நட்ட மரத்திற்குகூட உரிமை கோர முடியாதவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அரச தோட்டங்களிலும் நிலை இதுவே.

இந்தச் சட்டப் பின்னணியிலேயே குத்தகை காணியிலும் காணி மறு சீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியிலும் வாழுபவர்கள் என்ற அடிப்டையில் முகவரிகள் அற்றவர்களாக மலையக மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே முகவரி பற்றிய பிரச்சினை என்பது தனித்து வீடுகளுக்கு இலக்கங்கள் வழங்குதல் என்ற தீர்வை விட பாரதூரமானது என்பது விளங்கக்கூடியது. மலையக மக்களின் காணி வீட்டு உரிமையை பெற்றுக்கொள்வதிலேயே முகவரி பிரச்சினைக்கான தீர்வு தங்கியுள்ளது என்பது விளங்கப்பட வேண்டும்.

III. காணி வீட்டு உரிமை மறுப்பின் அரசியல் பின்னணி

சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் பிரித்தானிய கம்பனிகள் பெருந்தோட்டங்களை நிர்வகித்த காலத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் காணி, வீட்டு உரிமையை உறுதிப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது அதனை உறுதிப்படுத்த ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பிருந்த போதும் அதற்கான முயற்சிகள் இடம்பெறவில்லை. இக்காலத்தில் சிறு எண்ணிக்கையிலான இரட்டை குவார்ட்டர்ஸ்கள் கட்டப்பட்டபோதும் தோட்டங்களில் வேலையில்லாதோர் அரச காணிகளில் அத்துமீறி இருப்பதாக நீதிமன்ற கட்டளைக்கூடாக லயன் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்பட்டனர். தொண்ணூறுகளின்; பின்னர் பெருந்தோட்டங்களும் குடியிருப்பு காணிகளும் நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களுக்கான காணி வீட்டு உரிமை மறுப்பு தொடர்கின்றது. தொண்ணூறுகளின் பின்னர் ஏழு பேர்ச் காணி வழங்கப்பட்டு கடன் அடிப்படையில் தனி வீடுகள் (காணி உறுதிகள் எதுவும் இன்றி) கட்டிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்ட போதும் 1998ம் ஆண்டின் பின்னர் அது கொள்கையளவில் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. தனி வீடுகள் கட்டிக்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் (1994-1998) மாடி வீடுகள் அமைக்கப்பட்டு மலையக மக்கள் குடியேற்றப்பட்டனர்.

இன்றைய அரசாங்கமானது 50 ஆயிரம் மாடி வீடுகளை மலையக மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மக்கள் இதனை நிராகரிக்கின்ற போதும் மாடி வீடுகள் மலையகத்தில் அமைக்கப்படுவதனை நியாயப்படுத்தி எந்தவித காரணத்தையும் அரசாங்கம் கூறவில்லை. மலையகத்தில் காணி பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக இல்லாத போதும் மாடி வீட்டு திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. மாடி வீட்டு திட்டமானது மலையகத்தில் மேற்கொள்வதானது மலையக மக்களின் காணி உரிமையை மறுப்பதனை அடிப்படையாக கொண்டது என்பதுடன் அது லயன் குடியிருப்பு முறையை புதுமாதிரி கட்டிடங்களின் மூலம் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

மாடி வீட்டுத் திட்டத்தை அங்கீகரிக்கும் அரசாங்கம் மலையக மக்கள் காணி உரிமையை பெற்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறது. அத்தோடு மாடி வீட்டுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் மலையக தலைமைகள் மலையகத்தில் லயன் குடியிருப்பு முறையை இன்னொருவகையில் தொடர்வதனை விரும்புவதாகவே தோன்றுகிறது.

IV. தோட்டங்கள் கிராம, நகர குடியிருப்புகளில் இணைக்கப்படாமையும் காணி வீட்டு உரிமை பிரச்சினையும்

பெருந்தோட்டங்கள் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இருந்து அரசின் பொதுவான நிர்வாக கட்டமைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனி இராச்சியங்களாக ஆளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தோட்டங்கள் இன்றும் அரச நிர்வாக கட்டமைப்பின் அடித்தளமான கிராம சேவகர் பிரிவிற்கு உத்தியோகபூர்வமாக உட்பட்டதாக இல்லை. இதனால் சட்ட ரீதியாக பிரதேச சபைக்கோ, நகர சபைக்கோ உட்பட்ட குடியிருப்புகளாக பெருந்தோட்டக் குடியிருப்புகள் கருதப்படுவதில்லை. பெருந்தோட்ட பயிர் செய்கை காணிகளுக்கும் குடியிருப்புகளுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் வகுக்கப்படாது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பெருந்தோட்டக் காணி குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அரச தோட்டங்களின் காணியும் குடியிருப்புகளும் வேறுபடுத்தப்படாதிருப்பதுடன் அவைகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமானதாகவே இருக்கின்றன. அதாவது மக்கள் வாழும் குடியிருப்பு பிரதேசங்களை வரையறுத்து அவற்றை குத்தகை காணி மற்றும் அரச காணியில் (காணி சீர்திருத்த ஆணைக்குழு) என்பவற்றில் இருந்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இன்மையினால் தோட்டங்கள் கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்படுத்த முடியாதவாறு தடை காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பிரதேச சபைகளுக்கும் நகரசபைகளுக்கும் தோட்டக் குடியிருப்புகள் உட்படாதவைகளாக காணப்படுகின்றன. அதாவது பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகளும் பொருந்தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் வர்த்தகத்தோடு தொடர்புடைய காணிகளை போன்று வர்த்தக அல்லது வியாபார நிறுவனம் (Pசiஎயவந நுவெவைல ழச டீரளiநௌள நுவெநசிசளைநள) என்றே நோக்கப்படுகின்றன. (பிரிவு 33, 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்.)

மலையக மக்களுக்கு காணி வீட்டு உரிமையுடன் உறுதிப்படுத்தப்படும் போது மட்டுமே தோட்டங்கள் தனியான குடியிருப்புகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு தோட்டங்கள் குடியிருப்புகளாக மாற்றப்படும் போதே கிராம சேவகர் பிரிவுக்குள் தோட்ட குடியிருப்புகள் உட்படுத்தப்படுவது சாத்தியப்படும். எனவே இதனூடாகவே பிரதேச சபைக்குள் மலையக மக்கள் உள்ளீர்க்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.

V. காணி வீட்டு உரிமை பிரச்சினையும் மலையக தேசிய இன அடையாளமும்

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் வீடு என்பது மிகவும் அடிப்படையாகும். இலங்கையின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக இருந்த, இன்றும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வசிப்பதற்கு ஏற்ற விதத்தில் வீடு இல்லை என்பது ஜீரணிக்க முடியாததாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீடு, காணி பற்றிய பிரச்சினையானது ஒருபுறம் இந் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியை முடக்கும் பிரச்சினை என்பதுடன், வீடு காணி பிரச்சினையின் தனித்தன்மைகள் மலையக மக்களின் பண்பாட்டு (குடும்பம், சமூக) வாழ்வியல் அம்சங்கள் பலவற்றிலும் எதிரிடையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறன. மறுபுறமாக மலையக மக்களின் இருப்பை அச்சுறுத்தி வருகிறது. பெருந்தோட்டத்தில் நிரந்தரமாக வாழ்ந்த ஒரு குடும்பம் தொழில், வியாபாரம், பொருளாதாரக் காரணிகளுக்காக நகரங்களுக்கு இடம்பெயரும்போது மலையக தொழிலாளர் வர்க்கத்தின் பலம் சிதைக்கப்படுவதுடன் மலையகத்தை சார்ந்தவர்கள் என்ற அடையாளம் அழிக்கப்படுகின்றது. இதனூடாக மலையக தேசிய இன அடையாளம் பலவீனப்பட்டுச் செல்கிறது. இவ்வாறு பெருந்தோட்டங்களில் பரம்பரை ரீதியாக வாழ்ந்தவர்கள் தமது அடையாளங்களை இழந்து விடுகின்றனர். தமது வாழ்விடத்தில் தாம் வாழ்ந்ததற்கான அடையாளமாகவும் வாழ்விடத்துடனான உறவு பாலமாகவும் இருக்கும் வீடு, காணி என்பன மறுக்கப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது. அதாவது கட்டமைப்புசார் சமத்துவமின்மையை அடிப்படையாக கொண்ட பெருந்தோட்டக் கட்டமைப்பால் இந்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான அடையாள அழிப்பு மலையக மக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒருவகை இன சுத்திகரிப்பாகும். ஏனையவர்கள் தாங்கள் வாழும் பூர்வீக பிரதேசத்தில் தரம், அளவு எதுவாயினும் தமக்கான சொந்த வீட்டையும் காணியையும் கொண்டிருக்கின்றமையினால் அவர்களின் இருப்பும் அடையாளமும் உறுதி செய்யப்படுகிறது. எனினும் மலையகத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாகும்.

எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ற திரளமைப்பின் சிதைவிற்கும் மலையக மக்கள் என்ற தேசிய இன அடையாளம் மறைமுகமாக இழக்கச் செய்யப்படுவதிலும் காணி வீட்டு உரிமை மறுப்பு நேரடி காரணியாக இருந்து வருகிறது.

VI. மலையக மக்களின் சேனைத் தோட்டம் மற்றும் விவசாய காணிகள் பற்றிய பிரச்சினை

வீடு, வீட்டுக்கான காணி உரிமை என்ற பிரச்சினைக்கு அப்பால் மலையக மக்கள் மேற்கொண்டு வந்த சேனைத் தோட்டங்கள் மற்றும் விவசாய காணிகள் எப்போதும் பறிபோகும் அபாயமும் இருக்கிறது. இந்நிலையில் சுய தொழிலுக்காக காணிகளைப் பெற்றுக் கொள்வது பற்றி சிந்திக்கவும் முடியாத நிலையிலேயே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

VII. காணி வீட்டுப் பிரச்சினையின் வெளிப்பாடுகள்

* லயன் அறைகள், குடிசைகள் வீடுகள் என்ற வரையறுப்புக்கு உட்படுத்தமுடியாதவையாக இருப்பதுடன் இரட்டை குவாட்டர்ஸ் மற்றும் மாடி வீடுகள் அவைக்குரிய சிறப்பு பிரச்சினைகளை கொண்டிருக்கின்றன. அத்தோடு அவைகள் சொந்தமான குடியிருப்புகள் அல்ல.

* ஏழு பேர்ச் காணியில் அமைக்கப்பட்டுள்ள தனி வீடுகளின் காணி அளவு மிகவும் குறைவாக காணப்பட்டபோதும் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமானதே. எனினும் காணி உரித்து வழங்கப்படாமையினால் இவ்வீடுகளும் சொந்தமற்றவைகளே.

* வெளியேற்றப்படும் அச்சுறுத்தல் குறிப்பாக லயன், குடிசைகள் மற்றும் இரட்டை குவார்ட்டஸ் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு காணப்படுகிறது.

* இலங்கையில் அரச அல்லது சட்ட அங்கீகாரத்திற்குட்பட்ட வகையில் குடியிருப்பு என்ற வரையறைக்குள் தோட்டக் குடியிருப்புகள் உள்ளடக்கப்படவில்லை. இதனால் தனி வீடுகள் அமைக்கப்பட்டவர்களுக்கும் விலாசம் என்பது சாத்தியமற்றதே.

*தோட்ட வசிப்பிடங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளாக கருதப்படாமையினால் உட்கட்டமைப்பு வசதிகளை அரச கட்டமைப்பில் இருந்து பெற்றுக் கொள்வதில் சட்ட ரீதியான தடைகள் காணப்படுகின்றன.

* சேனை காணிகள், விவசாய காணிகளுக்கான உரிமையற்றவர்களாக இருக்கின்றமை.

VIII. நம் முன் உள்ள பணிகள்

1. தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கையை தீர்மானித்தல்.

2. எவ்வாறான வீடமைப்புத் தேவைஃ ஏற்புடையது என்பதை தீர்மானித்தல். (தற்போது கட்டப்பட்டுள்ள தனி வீடுகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும் உள்ளடக்கி)

3. ஒவ்வொரு வீட்டிற்குமான காணியின் பரப்பளவை தீர்மானித்தல்.

4. அதற்கான காணியை எங்கிருந்து எப்படி பெற்றுக் கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தல்.

5. வீடுகளை நிர்மாணிப்பது யார், எவ்வாறு என்பதை தீர்மானிப்பது.

6. காணிக்கு எவ்வகையான உறுதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை தீர்மானித்தல்.

7. குடியிருப்புகளை தோட்ட நிர்வாக கட்டமைப்பில் இருந்து நீக்கி எவ்வாறான (நகர, கிராம) குடியிருப்பிற்குள் அடக்குவது என தீர்மானித்தல்.

8. அக்குடியிருப்புக்கான உட்கட்டமைப்பு வழிவகைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என தீர்மானிப்பது.

9. சேனை, விவசாய காணி பற்றிய பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதை தீர்மானித்தல்.

10. வீட்டு, காணி உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை தீர்மானித்தல்.

a. கோரிக்கைகளை வெளிப்படுத்தல், பிரசாரங்கள்.

b. வெகுஜன நடவடிக்கைகள்

c. அரசாங்க நிறுனங்களினூடாக முன்னெடுக்கப்பட வேண்டியவை. (பாராளுமன்றம், அமைச்சரவை)

d. அரசாங்கத்திற்கு வெளியில் ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்ளல்.

மலையக மக்களின் காணி வீட்டு உரிமை பற்றிய கொள்கைளையும் அபிப்பிராயங்களையும், மற்றும் வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் எழுத்துவடிவில் அறிக்கையாக கொண்டுவரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கம் விடுத்தாலும் பொது அமைப்பு அடையாளத்துடன் செயற்பட எம்மை தயார்படுத்திக் கொள்வோம்.