Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எம் வீட்டின் சொந்தக்காரன்……

கடந்தவிரு நாட்கள்
அப்பாவின் முகநூலில்
அரசியல் செய்திகள் எதனையும் காணவில்லை!

ஆம்!
"அடக்கி-ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காய்
தன் வாழ்நாளையே அர்ப்பணித்த
விடியல் சிவா எங்களிடம் இருந்து
இறுதி விடை பெற்ற" பெரும்துயரால்…

 

கடந்த இரு தலைமுறையாய்
அவர் எம்வீட்டின் சொந்தக்காரன்!
நாளை காலை வீட்டிற்கு வருவேன்
மாலை திரும்பிவிடுவேன் என்றிடுவார்
தொலைபேசியல்!...
வந்திட்டால் சென்றிட
இரண்டு நாட்களைத் தாண்டிடும்!
அதிலும் அப்பா வந்திட்டால்
எத்தனை நாட்களைத் தாண்டிடுமென
சொல்லிட முடியாது!

வரும்பொழுதும்
வெற்றிலைச் சரையுடன்தான் வருவார்
இருந்தாலும் அப்பம்மாவின்
வெற்றிலையைச் சாப்பிடுவதில்
அவருக்கொரு அலாதி!....


அவ்வலாதிகொண்ட ருசியின் உச்சலிருந்து
உரிமையுடன் கூடிய குடும்ப விசாரணை
அவ்விசாரணைப் பிடியிருந்து
எவரும் தப்புவதென்பதே அரிதிலும் அரிது!
அவர்தம் உரிமையுடன் கூடிய
அன்பான விசாரணை
எங்கள் படிப்பிலும் நோக்கும்!

மிகைப்படுத்தலல்ல
என்தன் உயர்கல்வி ஊக்கலுக்கும்
சமூகப்புரிதலுக்கும்--இச்சமூகவியலாளனின்
அன்பான அரவணைப்பின் ஆளுமையை
என் நினைவலைகளுக்கூடாக
நினைத்துப்பார்க்கின்றேன்!...

இம்மானிடவியலாளன்--என்
பெறுபேற்றின் முழுமையை
காண்பார் என்றிருந்தேன்…
இரத்தப் புற்றுநோய்--அவரின்
பிரதான எதிரியாயிற்று…

இருந்தும…
"கொடுங் கூற்றுக்கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல்--நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ"?
என்ற கேள்விக்கூடாகவே--அவர்
தன் மரணத்தை வென்றிருப்பார்.

இறுதியாக "இறப்பு இறகையும் விட லேசானது,
மக்களுக்காக இறப்பது மலையை விடப் பாரமானது"
என அவர் அடிக்கடி சொல்லும்
மாவோவின் மேற்கோளை
அவருக்கே சமர்ப்பணமாக்குகின்றேன்.

--லண்டன் விஜிதா