Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போர்க்களத்தில் வாழ்வதைப் பற்றி.....

மனிதத்தின் கண்ணில் திட்டமிட்டே முட்கள் துளைத்தாலும்
எங்கள் கண் வரை அவை வரவில்லை என்றே
கணப்பொழுதும்
களிப்போடு இருக்கும் என் சகலமானவர்களுக்கும்.

இதுவரை யாரும் பேசாத ஒன்றைப்பற்றியோ
யாரும் காணாத ஒன்றைப்பற்றியோ
நான் இங்கே
பேசப் போவதில்லை.

எங்கள் வாழ்வையும்
எங்கள் இருப்பின் தவிப்பையும்
பற்றியே என்றும் என் பேச்சிருக்கும்
என் கவியிருக்கும்.

*****

நீல வானத்தின் வனப்பையும்,
பச்சை மரங்களின் அழகையும் ரசித்திருந்த எங்கள் மத்தியில்
பெரிய பற்களுடனும் நீண்ட நாக்குடனும் கொடியவன் ஒருவன்
அன்றொருநாள் வந்து நின்றான்.

“நாங்களே அவனைச் செய்தோம்” என்று எங்களில் சிலர் பேசிக்கொண்டார்கள்
கொடியவனோ தானே கடவுளின் உச்சமான படைப்பு என்று ஊரெல்லாம்
பறையடித்தான்.

வானத்தின் அழகை ரசிக்கும் எங்கள் நாகரீகத்தை
குறை சொன்னான் கொடியவன்,

கூடி வாழ்ந்த எங்களை
தேசங்களாயும் சாதிகளாயும்
நிறங்களாலும் மொழிகளாலும்
மேடுகளிலும் பள்ளங்களிலும்
பிரித்துக் குடி வைத்தான்.

ஒரு தேசத்துக்கு இன்னொரு தேசத்தை பிடிக்காது என்றும்
ஒரு சாதி உயர்வென்றும் மற்றது தாழ்வென்றும்
உன் நிறம் மேலானது என்றும் அவன் நிறம் அடிமைக்கானது என்றும்
மேடுகளில் இருப்பவர்கள் ஆள்பவர்கள் என்றும்
பள்ளங்களில் கிடப்பவர்கள் ஆளப்படுகிறவர்கள் என்றும்
பாடம் சொல்லிக் கொடுத்தான்.

கடவுளின் பெயரால் பருந்துகளை எங்கள் மத்தியில்
காவலுக்கு வைத்தே
எங்களிடையே சில தலைவர்களையும்
செய்தான்.

இனித் தலைவர்கள் வழியே எங்கள் வழி எனத் திரும்பத் திரும்பச்
சொல்லித்தந்தன கொடியவனின் பருந்துகள்.

எங்கள் புன்னகை முகங்களை வாங்கிய ஏவலாளித் தலைவர்கள்
தங்களுக்கு தேவையான கொடியவனின் முகச் சாயலில் முகங்களைச்
செய்தும் தந்தார்கள்.

எங்களில் இருந்து அந்நியப்பட்டே இருந்தன அந்த முகங்கள்
விரும்பியோ விரும்பாமலோ அதை நாங்கள் அணித்து கொண்டோம்.

எல்லாப் பிரிவினரிடமும் புதிய குருஷேத்திரக் களங்களை
உருவாக்கினார்கள் அந்த ஏவலாளித் தலைவர்கள்

கொடியவனின் ஆசீர்வாதம் எனச்சொல்லியும்
கடவுளின் கட்டளை எனப் புகழ்ந்தும்
தங்களின் தேவைகேற்பப்
பொல்லாத காரணங்களைக் கற்பித்தும்
போர்களைத் தொடங்கி வைத்தார்கள்.
ஏவலாளித் தலைவர்கள்!

****

போரில்...

ஏன் என்ற கேள்வி இல்லாமலே
எங்களுக்குள் நாங்கள் செத்து மடிந்தோம்.
எங்களை நாங்களே எதிரியாகப் பார்த்தோம்
எங்கள் இரும்புச் சப்பாத்துக்களில் மிதிபட்டே
போர்க்களத்தில் அகப்பட்ட பூக்கள் எல்லாம் வேரோடு
எறிந்தழிந்தே போயின.


இருந்தும் நாங்கள்
கொடுமையாகப் போர்செய்தோம்
நீல வானமும் அதன் வனப்பும்
பச்சை மரங்களும் அவற்றின் அழகும்
இன்று எங்களுக்கு ரசிக்கும்படியாக இல்லை
எங்கள் பேச்சுகளில் எல்லாம் ரத்தமே எச்சிலாக தெறித்தது.

 
போர் பற்றியே எங்கள் பேச்சிருக்க
கொடியவன் தன் நீண்ட நாக்கினால்
எங்கள் இருப்பிடங்களையும் கடவுளின் சொத்துக்களையும்
மெல்ல மெல்லவும்
சிறிதாயும் பெரிதாயும் தன் வாய்க்குள்
போட்டுக்கொண்டே இருந்தான்.

எங்கள் பிள்ளைகளின் பிஞ்சுக் கரங்களிலும்
விளையாட்டாகப் போர்க்கருவிகள் வைக்கப்பட்டன
எதிர்காலத்தின் வாழ்வைச் சந்திக்கவே
அவை
எனப் பெருமை கொண்டோம் நாம்.

எங்கள் மத்தியில் இருக்கும் போர்கள் ஓய்ந்து போவதைக் கொடியவனும்
எங்கள் தலைவர்களும் என்றும் விரும்புவதில்லை
புதிய போர்களை இலக்க அடிப்படையிலும்
அழகிய பெயர்களிலும் மீண்டும்மீண்டும்
தொடங்கி வைப்பார்கள் அவர்கள்.

மீண்டும்மீண்டும் நாங்கள் காரணம் தெரியாமலே
போர்செய்வோம் - மாண்டும் போவோம்
எங்கள் பிணங்களை எரிக்கக் கூட நேரமில்லாமல்
பிணங்களின் மேல்நின்று
இரவுகளின் நிசப்தங்களை எல்லாம் கலைத்து
எங்களை நாங்களே கொன்று கொண்டிருப்போம்.

எங்கள் தலைவர்களைத் துதி பாடிக்கொண்டே
எங்களை நாங்களே சிதைப்போம்.
பெண்டுகள், சிறார்கள், முதியவர்கள் என்று யாரும்
எங்கள் கண்களுக்கு தெரிவதில்லை
எதிரிகள் என்று எங்கள் தலைவர்களால்
யார் யாரெல்லாம் சுட்டப்படுகிறார்களோ!
அவர்களின் குருதிச் சூட்டிலேயே திளைத்திருப்போம்.

வரவர எங்கள் முகங்கள் கறுத்தும்
கொடிதாயும் மாறிக்கொண்டே வந்தன
இப்பொழுதெல்லாம் எங்கள் முகங்களை கண்ணாடிகளில்
நாங்கள் பார்ப்பதில்லை,
ஒருவேளை பார்த்து விட்டால்
அது எங்கள் தலைவர்களுக்கு நாங்கள்
செய்யும் துரோகம் என்றாகும்.

தலைவர்கள் புனிதமானவர்கள்,
அவர்கள் எது சொன்னாலும்
நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம்
பெரும்பாலும் நாங்கள் பேசவேண்டியதையும் சேர்த்து
எங்கள் தலைவர்களே பேசிவிடுகிறார்கள்
அதனால் நாங்கள் பேச எதுவும் இருப்பதேயில்லை,

கொடியவனின் கட்டளையும் அதுவே தான்.

*****

கனாப்பொழுதில் எங்கள் காதலைக் காணவும் - கூடவும்
கலவியில் சுகிக்கவும்
நாற்சந்தியில் கூடிப் பேசவும்
எங்களுக்கான வாழ்கையை வாழவும்
எங்கள் போர்க்களங்களில் என்றும்
எங்களுக்கு அனுமதி
இருப்பதில்லை.

வெறும் போருக்கானதில்லை நமது உலகு

என்றேனும் ஒரு காலமுடிவில்
மனிதம் செத்த இந்தப் போர் வேண்டாம் என
நாங்கள் முடிவு செய்வோம்
கொடியவனின் திட்டங்களை உடைத்து அவனைக்
கொன்றே எங்கள் போர் முடிப்போம்.

அன்றே எங்களுக்கான
உண்மையான வாழ்வைத் தேடிய எங்கள்
பயணம் தொடங்கும்.

த.வி.ரிஷாங்கன் 

17.06.2012

(தேசிய கலை இலக்கியப் பேரவையின் மாநாட்டு கவியரங்கில் கவிதை