Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…!

‘நாதா, என்ன ஆழ்ந்த சிந்தனையில் இருக்கின்றீர்கள். முகம் கவலையில் வாட்டமுற்றிருக்கிறது.”

‘வா தேவி, வந்து இப்படி உட்காரு. நீ நாள் முழுவதும் சமையலில் கழித்து விடுகிறாய். உனக்கு எதுவுமே தெரிவதில்லை. எல்லா பிரச்சனையும் என் தலையை தானே வந்து விழுகிறது.”

பக்கத்தில் உட்கார்ந்த படியே தேவி, ‘நீங்கள் எதை கூறுகின்றீர்கள். எனக்கு எதுவுமே புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்களேன்.”

 

‘நான் என்ன சொல்வது, சற்று நீயே குனிந்து பார் எனக்கு எல்லாமே புரியும்.”

கீழே பார்த்த படி, ‘யார் அந்த பெண் எதற்காக உங்களை திட்டுகிறாள்.”

‘நேற்று அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான். இன்று அவனை அடக்கம் செய்யப் போகிறார்கள். அவனோ ஒரு போத்தல் விஸ்கியை ஒரு மணி நேரத்துக்குள் குடித்து விடுவான். அதோடு சிகரட், கட்டையடி எண்டு எல்லா தீய பக்கங்களும் இருக்கு. அவனுக்கு கொலஸ்ரேல், சக்கரை வியாதி, இரத்த அழுத்த்தம்.., இப்படி எல்லா வியாதிகளும் இருக்கு. டாக்ரர் குடி, சிகரட்டை விடம் படி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் கேக்கேலை. கடைசியிலை படுக்கையிலை விழுந்தாப் பிறகு ஆண்டவனே என் புருசனை காப்பாற்று என்று கோவில் கோவிலாய் நேர்த்தி வைத்து விட்டு, கடைசியில் அவன் செத்த பிறகு கண் கெட்ட கடவுள் என்று என்னை திட்டுகிறாள். நான் என்ன செய்ய முடியும், டாக்ரரே கைவிட்ட பிறகு..!”

‘அங்கே பார் மற்றொரு பெண்ணை, உன்னைத் தான் திட்டுகிறாள்.”

‘என்னை எதற்காக திட்டுகிறாள்.”

‘அவள் தனது தாலியினை இலஞ்சமாக கொடுத்தும், நீ அவள் கணவனை காப்பாற்றவில்லையாம்.”

தேவி சற்று கோபமாக, ‘நான் எப்போது இலஞ்சம் வாங்கினேன். என்னக்கெதற்கு அவள் தாலி..?”

‘கோபப்படாதே தேவி, அவளுடைய தாலி பூசாரி வீட்டுப் பொட்டகத்திலே இருக்கிறது. அவளோ உனக்கு தந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கணவன் ஆறு நாட்கள் நினைவே இல்லாமல் கிடந்து ஆஸ்பத்திரியிலேயே மரணமாகிவிட்டான். அந்த வேதனை அவளுக்கு.”

‘அடபாவமே! அவனுக்கு என்ன நடந்தது.”

‘புது வீடு – புதுக் கார்கள் இரண்டு – பெட்டி நிறைய நகை, இப்படியெல்லாம் பணத்தை செலவு செய்து விட்டு, மூன்று நான்கு வேலை என்று ஓய்வில்லாமல் அலைந்து திரிந்ததால், மன அழுத்தம் வந்து பின்னர் இரத்த கொதிப்பும் அதிகரித்ததால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு நினைவினை இழந்து விட்டான். பல மாதங்களுக்கு முன்னரே டாக்ரர் சொல்லிவிட்டார், கொஞ்சம் ஓய்வு தேவையென்று.., அதை கேட்காமல் தான் விதம்விதமாய் சேலையும், நகையும் வாங்க அந்த மனிசனை முறித்தெடுத்து விட்டு, புருஷன் படுக்கையிலே விழுந்த பிறகு அம்மன் கோவிலில் போய் அழுதாள். பூசாரியும் இது தான் சாட்டு என்று தாலியை அம்மனுக்கு சாத்தி அபிஷேகம் செய்தால் உன் புருஷன் பிழைப்பார் என்று சொன்னதை நம்பி தாலியை கழற்றி கொடுத்து விட்டு இப்போது உன்னை திட்டுகிறாள்.”

‘நாதா! ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்…?”

‘அவசரப்படாதே தேவி. இன்னும் நிறையவே உண்டு. சற்று அந்த குடும்பத்தை பார். மூன்று பிள்ளைகளும் தகப்பனும் என்ன பாடுபடுகிறார்கள் என்று. மூன்று மாதங்களுக்கு முன்னர் மனைவி மார்படைப்பில் இறந்து விட்டாள். 8,10,13 வயதிலை பிள்ளைகளை வைத்து கொண்டு சிரமப்படுகிறான் அந்த தகப்பன்.”

‘என்ன சொல்கிறீர்கள் நாதா..? அந்த பிள்ளைகளைப் பார்த்தால் 20வயதை தாண்டியவர்கள் போல் அல்லவா தெரிகிறது.”

‘அது தான் அந்த குடும்பத்தின் பிரச்சனையே. எல்லாம் fast food சாப்பாடு. தாய்க்கும் தகப்பனுக்கும் கிழமையில் ஆறு நாளைக்கு இறைச்சி வேணும். ஒரு இறைச்சியும் கழிவில்லை. பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் fast food சாப்பாடு தான் வேணும். வேலை எதுவும் இல்லை. உடற்பயிற்சி ஒன்றுமில்லை. வட்டி காசை வாங்கி சாப்பிடுவதும் ரீவி பார்ப்பதும் தான் வேலை. ஊரிலை தங்கள் சொந்த செலவிலை முருகன் கோவில் கட்டுகிறார்கள். மனிசி செத்துவிட்டதால் முருகனிலை ஏறி விழுகிறான்.”

‘இது எங்கள் பையனுக்கு தெரியுமா..?”

‘அவனுக்கு எங்கை இதை பார்க்க நேரமிருக்கு. இரண்டு மனிசிமாரை வைத்துக் கொண்டு அவன் படுகிறபாடே பெரிய பாடு..!”

சிவன் பேசி முடிப்பதற்குள் தேவி அவசர அவசரமாக, ‘அங்கே அந்த சிறுவனை பாருங்கள், பிள்ளையார் கோவிலிலே நிறைய தேங்காயினை உடைக்கிறான்.”

‘ஆம் தேவி அவனுக்கு இன்று பரீட்சை. பிள்ளை பாஸ் பண்ண வேணும் என்று தேங்காய் வாங்கி கொடுத்துள்ளார்கள் பெற்றோர். அவன் புத்தகம் திறந்து பார்த்ததே இல்லை. தியட்டரில் விஜே, சூரியா, தனுசு.., இப்படி ஒருத்தருடைய படமும் தள்ளு படியில்லை. போதாதற்கு கம்பியூட்டரில் ஒரே படமும், பெட்டையளின்ரை படங்கள் வேறை. பிள்ளை என்ன செய்கிறான் என்பதை பற்றி தாய், தகப்பனுக்கு எந்த அக்கறையுமில்லை. பரீட்சைக்கு போகேக்கை மட்டும் தேங்காயை வாங்கி கொடுத்து விட்டுள்ளார்கள். இனி இந்த பழி பிள்ளையாற்ரை தலையில் தான்.”

‘தங்கள் மேல் தவறுகளை வைத்து கொண்டு இப்படி எல்லாப் பழியையும் எங்கள் சுமத்தினால் எங்களால் என்ன செய்ய முடியும்.”

‘எங்களுக்கு மட்டுமா பிரச்சனை. அங்கை பார் இயேசு படுகிறபாட்டை.”

‘யார் இவர்கள், எதனால் இயேசு முன்னால் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..?”

‘இவர்கள் இந்து சமயத்தில் இருந்து கிறீஸ்த்தவ சமயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆறு வயதாகியும் குழந்தைக்கு பேச்சு வரவில்லையாம். எல்லா கோவிலுக்கும் நேர்த்தி வைத்து பலனளிக்கவில்லை என்று இனி இந்த சமயத்தை நம்பி பிரயோசனமில்லை என நினைத்து கிறீஸ்த்தவ சமயத்துக்கு மாறிவிட்டார்கள். பாவம் இயேசு! அவன் பட்ட வேதனை போதாதென்று இந்த சனங்களிடம் மாட்டி கஸ்ரப்படுகிறான். அவனை யார் காப்பாற்றப் போகிறார்களோ…?”

‘நாராயணா… நாராயணா..!”

‘வாரும் நாரதரே. நல்ல நேரத்தில் தான் வந்துள்ளீர். உமது இறைவனை பாரும். ஊர் பிரச்சனையினை தலையில் தூக்கி வைத்து கொண்டு மண்டையை போட்டு உடைக்கிறார். இவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் என்ன செய்ய முடியும். பிள்ளைகளும் ஒவ்வொரு போக்கில் போய்விட்டார்கள்.”

‘அம்மையே, இப்ப என்ன நடந்து விட்டதென்று உணர்ச்சி வசப்படுகிறீர்கள். கொஞ்சம் அமைதியாக இருங்கள். இறைவா, தங்களுக்கு தெரியாததா..? இந்த மனிதர்கள் யார் சொல்வதை கேட்கிறார்கள். தாங்கள் செய்வது தான் சரி என்று அடம்பிடிப்பதே அவர்கள் பழக்கமாகி விட்டது. அவர்களுடைய மூட சிந்தனை தான் இவர்களுக்கு எதிரியாக இருக்கிறது. இவர்களை பற்றி சிந்தித்து உங்கள் நேரத்தினையும் வீணடித்து அம்மையையும் ஏன் கவலைப்படுத்துகிறீர்கள். நான் வந்தது வேறொரு காரியத்திற்காக. அதற்கு இந்த நேரம் உகந்தது இல்லை. எழுந்து வாருங்கள், அம்மையின் சமையல் மூக்கினை துளைக்கிறது. வந்ததுக்கு அதையாவது ஒரு பிடி பிடித்து விட்டு போகிறேன்.”

‘நாராயணா… நாராயணா..!”

-தேவன்.

24/12/2011