Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கொடுமை..!

அவனுடைய நெஞ்சு உச்சவேகத்தில் பட்டுப்பட்டென்று அடித்தது. கைகால்கள் படபடக்க.., ஆத்திர ஆத்திரமாக வந்தது. அழுகை.., கத்தல்.., ஒப்பாரி.., சத்தம் கூடக்கூட அவனது இரத்தக் கொதிப்பும் மேலும் மேலும் ஏறிக் கொண்டிருந்தது. எல்லோரையும் விலத்திக் கொண்டு போய் அங்கே இருக்கும் உலக்கையினை எடுத்து அந்த இருவரதும் மண்டையினைப் பிளந்து விட வேண்டும் போலிருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு சிந்தனையையும், பார்வையினையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

ஓய்ந்து கொண்டிருந்த அழுகைச் சத்தம் இரண்டாவது தடவையாக திடீரென உச்சத்திற்கு வந்தது. பார்வையினை அந்தப் பக்கம் திருப்பினான்.

 

ஒருவர் பட்டுப் சேலையினை எடுத்துக் கொடுக்க மற்றவர் வாங்கி அந்த பெண்ணிடம் நீட்டுகிறார். அந்தப் பெண்ணே அதை விலத்திக் கொண்டு சற்று முன்னுக்கு வந்த படி இருகைகளாலும் தலையிலே அடித்து அடித்து என்ரை ராசா.. என்ரை ஐயா.., என்று சத்தம் போட்டு கதறிக் கதறி அழுகிறாள்.

அவன் அந்த சேலையால் பொண்ணாடை போர்த்துவது போல் அந்தப் பெண்ணின் தோளிலே போட்டு மீண்டும் அதை எடுத்து பெட்டியில் கிடக்கும் சிவத்தின் மேல் அந்த சேலையினை போட்டான். அருகில் நின்ற உறவுகள் எல்லாம் அதைப் பார்த்து கத்தத் தொடங்கினார்கள்..!

இவனாலே வெளியிலும் வர முடியவில்லை. இடையில் சனங்களுக்குள் மாட்டிக் கொண்டான். அங்கே பார்க்காமல் இருந்தாலும் அழுகுரல் நெஞ்சினை பிளந்துவிடும் போலுள்ளது. இரண்டு மூன்று நிமிடங்கள் தான் திடீரென உறவினர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் கத்த தொடங்கினார்கள். நிமிர்ந்து பார்த்தால், பெண்ணினடைய தாலியினை வாங்கி பெட்டியில் போடும் இறுதிச் சம்பிரதாய சடங்கு நடக்கிறது.

பாவம் அந்தப் பெண்..! இளம் வயதில் கொடிய புற்று நோய்க்கு தன் கணவனை பறி கொடுத்து விட்டு, இரண்டு பிள்ளைகளோடு அனாதையாக நிற்கிறாள். எந்த தீயபழக்கமும் இல்லாத சிவம் மிகவும் இரக்க குணம் கொண்டவன். மற்றவர்களின் துன்பத்திற்கு உதவுவதில் அவன் பின் நிற்பதில்லை. சமுதாயத்தின் ஒடுக்கு முறைகள் அவனையும் விட்டு வைக்கவில்லை. வெளியிலே ,சிரித்துப் பழகுபவர்கள் மனதிலே அவனை விலத்தி வைத்திப்பது அவனுக்குள் பெரியதொரு கவலை..! மனைவி பிள்ளைகளில் மிகவும் பாசம் கொண்ட அவன் அவர்களை தவிக்கவிட்டு விடுவேனோ என்று இறுதி நேரத்தில் மிகவும் மனமுடைந்துவிட்டான்.

என்ரை ராசா எனக்கு வேணும்.., என்ரை செல்வம் எனக்கு வேணும்.., இந்த இரண்டு பிள்ளைகளையும் இனி நான் எப்படி வளர்க்கப் போகிறேன்..? என்ற அந்தப் பெண்ணின் கதறலும் கத்தலும் எல்லோர் கண்களையும் கலக்கிவிட்டது. அந்தப் பெண்ணின் வேதனையினை பல மடங்கு அதிகரித்து விடுகிறது இந்த சம்பிரதாய சடங்கு. ஆணாதிக்க சிந்தனையின் வெறிப்பிடித்த ஆட்டம் தான் இந்தச் சடங்குகள்.

ஒரு பெண் “தாலி போடுவதும் கழற்றுவதும் அந்த பெண்ணிணுடைய சுய விருப்பம். பட்டுச் சேலை கட்டுவதும் கட்டாததும் அந்தப் பெண்ணின் முடிவு..!” அதைப் பறிக்கவும்.. தடுக்கவும் இவர்களுக்கு எவன் அதிகாரம் கொடுத்தது..?

இந்து சமய ஆணாதிக்க வெறிக் கும்பல்கள் தொடக்கி வைத்ததை.., மந்தைக் கூட்டங்களாக தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் இந்த வெக்கம் கெட்ட கூட்டம் எப்பதான் மாறப் போகுதுகள்..? எந்தப் புருசன் தன்ரை மனைவி தாலி கழற்ற வேண்டும், பட்டுச் சேலை கட்டக் கூடாது என்று விரும்புவான்..?

எரியுற நெருப்பிலை எண்ணை ஊற்றுவது போல இந்த வெறிச் சடங்குகள் ஒரு பெண்ணை கதற வைக்கிறது.

‘ஒரு பெண்ணுக்கு இழைக்கும் கொடுமை இது..!”

இது மாற வேண்டும்.., சம்பிரதாயம் சடங்கு என்ற பெயரிலே இந்த ஆணாதிக்க வெறியர்களின் ஆட்டத்தை அடக்க வேண்டும்..! உள் உணர்விலே எழுந்த தன்ரை ஆத்திரத்தை அடக்க அவர்களிடம் இரண்டு வார்த்தையாவது கேட்க வேண்டும் போலிருந்தது. அந்த ஈமைக்கிரியை சடங்கினை முன்னின்று செய்த ஓருவன் இவனுடைய நண்பன் தான். போய் தன்னுடைய ஆதங்கத்தினை அவனிடம் கொட்டிவிட்டு வந்து காரிலே ஏறிக் கொண்டான்.

-தேவன்.

28/08/2011