Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை இயக்கத்தின் பெயரில், மக்களை ஏமாற்றி வாக்குப் பெற முனையும் இன-மத-சாதி வாதிகள்

யார் "தூய கரங்கள் தூய நகரங்கள்" என்ற கோசத்தை முன்வைத்து வாக்கு கேட்கின்றனரோ, அவர்கள் சமவுரிமை இயக்கத்தின் பெயரிலும் இன்று வாக்கைக் கோருகின்றனர். (பார்க்க அவர்களின்  துண்டுப்பிசுரங்களை) இவர்கள் எப்படிப்பட்ட போலியான மோசடிப் பேர்வழிகள் என்பதும், கறைபடிந்த அரசியல்வாதிகள் என்பதும், இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது. இவர்கள் முன்வைக்கும் "தமிழ் தேசியம்" கூட, இதைப் போன்ற வாக்குப் பெறுவதற்கான பித்தலாட்டத்தாலானதே. மக்களை ஏமாற்றி வாக்குப் பெறுவதற்காக எதையும் செய்யவும், மக்களை ஏமாற்றவும் முனைகின்ற முடிச்சு மாறிகளே இவர்கள்.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்காக சமவுரிமை இயக்கத்தின் நேர்மையான கடந்தகால போராட்டத்தைத் தமதானதாகக் காட்டி அறுவடை செய்ய எண்ணும் போது, அவர்களிடம் நேர்மையான அரசியல் எதுவுமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. பிறர் மக்களுக்காக நடத்திய போராட்டத்தைத் திருடி, அதை தமதானதாக இட்டுக்கட்டிக் காட்டுவதைத் தவிர, மக்களுக்காக நடைமுறையில் போராடுகின்ற எதையும் அவர்களால் முன்வைக்கவும் - காட்டவும் முடிவதில்லை. இங்கு சமவுரிமை இயக்கத்தின் போராட்டம், மக்கள் மத்தியில் தனித்து நிற்பதுடன்;, சமூக ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தி நிற்பதால், அதை தமதானதாகக் காட்ட முற்படுகின்றனர்.

 

சமவுரிமை இயக்கத்தின் தனித்துவமான போராட்டத்தையே அரசியலில் நேர்மையற்ற யாழ் மேலாதிக்க வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான மேலாதிக்கத் திமிருடன் கூடிய ஒடுக்கும் "தமிழ் தேசிய" வக்கிரமே, அனைத்தையும் தமதானதாக காட்டி வாக்குக் கோர வைக்கின்றது.  இதன் மூலம் ஒடுக்கும் "தமிழ் தேசிய"த்தைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை காயடிக்கவும், மக்களுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தை ஒழித்துக்கட்டவும் முனைகின்றனர்.

சமவுரிமை இயக்கம் ஒடுக்கப்பட்ட தமிழ் - சிங்கள -  முஸ்லீம் - மலையக மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களை ஓன்றுபடுத்தி போராடும் வெகுஜன இயக்கம். இடதுசாரிய அரசியல் கண்ணோட்டத்தைக் கொண்டதுடன், தனிப்பட்ட எந்தக் கட்சியினதும் இயக்கமல்ல. பல்வேறு இடதுசாரி மற்றும் தனிநபர்களை உள்ளடக்கிய வெகுஜன அமைப்பாகும். மக்களைச் சுரண்ட உதவும் நவதாராளவாத எந்த வலதுசாரிய அமைப்பையோ, மக்களை பிரிக்கும் இனவாத - மதவாத – சாதியவாதத்தையும் சார்ந்த எந்த கட்சிகளுடனோ இணக்கம் காணமுடியாத வெகுஜன இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களை இன, மத, சாதி, பால் ரீதியாகப் பிரித்து ஒடுக்குவோரை மக்களின் எதிரியாக அடையாளப்படுத்தி, எதிர்த்துப் போராடுவதே சமவுரிமை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. இதுதான் சமவுரிமை இயக்கத்தின் கடந்த-நிகழ்கால வரலாறாகும்.

தமிழ் காங்கிரஸ் போன்றன நவதாராளவாத ஏகாதிபத்திய பொருளாதாரத்தையே, தமது கட்சி மற்றும் வர்க்கக் கொள்கையாகக் கொண்ட வலதுசாரிய கட்சியாகும். அதற்காக தமிழ் இனவாதத்தையும், வெள்ளாளிய சாதியச் சிந்தனையையும், இந்துத்துவ மத அடிப்படை வாதத்தையும் மூலதனமாகக் கொண்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற "தமிழ் தேசியவாதக்" கட்சியாகும். ஒடுக்கப்பட்ட (தமிழ்) மக்களின் எதிரிகள்.

இந்த வகையில் சமவுரிமை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானவர்கள், சமவுரிமை இயக்கத்தின் பெயரில் வாக்குக் கேட்கின்றனர். சமவுரிமை இயக்கம் தேர்தல் போன்ற அரசியல் செயற்பாட்டில் செயற்படும் கட்சியே கிடையாது. சமவுரிமை இயக்கம் நவதாராளவாத சுயநல அரசியல் கடந்து நடத்திய போராட்டங்கள், அது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளை தமதாகக் காட்டி, வாக்காக அதை அறுவடை செய்ய நினைக்கின்றவர்கள், இனவாத – மதவாத - சாதிவாதக் கும்பல்கள். சமவுரிமைக்காக குரல் கொடுப்பதாகவும் - போராடுவதாகவும் பல்வேறு கட்சிகள் (மகிந்தா, மைத்திரி, விக்கினேஸ்வரன், சம்மந்தன் ..) முன்வைத்த அரசியல் பித்தலாட்டங்களைத் தொடர்ந்து, தமிழ் காங்கிரஸ் தலைவர் சமவுரிமை இயக்கத்தின் பெயரில் வாக்குக் கோருகின்றார்.

"தமிழர் சமவுரிமை இயக்கம்" என்றும் "சமவுரிமை இயக்கம்' என்றும் பெயரைச் சுவீகரித்து மக்களின் முதுகில் குத்தி அரசியல் செய்யும்; தமிழ் காங்கிரஸ்சின் அரசியல் வரலாறு என்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது.

இப்படிப்பட்டவர்கள் முன்வைக்கும் "தூய கரங்கள் தூய நகரங்கள்" என்பது போலியானது, புரட்டுத்தனமானது. "தூயது" என்பதே, சாதித் தூய்மை, தீட்டு, சடங்குகள், ஆகமம் .. என்று அனைத்தும் சாதி, மதம், ஆணாதிக்கம் சார்ந்து மக்களை ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கோசமாகும்.

இப்படிப்பட்ட மோசடிக் கும்பலை இனம் காணவும், இவர்கள் முன்வைக்கும் நவதாராளவாத  பொருளாதாரத்தையும், இனவாத-சாதிவாத-மதவாத கொள்கைகளையும், நடைமுறைகளையும்; தோற்கடிப்பதுமே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இன்றைய செயற்பாடாக இருக்க முடியும்.