Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பழைய மாணவர் சங்கங்களும் - தனியார் கல்விமுறையும்

அனைவருக்குமான இலவசக் கல்வி, அனைவருக்குமான சம வாய்ப்பு என்ற அடிப்படைக் கல்வி கொள்கைக்கு, பழைய மாணவர் சங்கங்கள் உதவுகின்றதா அல்லது வேட்டு வைக்கின்றதா என்பது குறித்தான சுயவிசாரணை இன்று அவசியமாகின்றது. 

சமுதாயரீதியான சமூகப் பங்களிப்பு என்றால் என்ன? பணத்தைக் கொடுப்பதா சமுதாயப் பணி? பணரீதியான உதவிகள் சமுதாயத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றது? நேர்மையையும், அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் கொண்டிராத சூழலில், உதவிகள் எதைச் சாதிக்கும்? சமுதாய ரீதியான விளைவுகளை பற்றி அக்கறையற்ற சடங்குத்தனமான "பண ரீதியான" சமூக கடமைகள் குறித்தெல்லாம், இன்று சுயவிசாரனை அவசியமாகின்றது. 

சமுதாயரீதியான உதவிக்கு என்ன நடக்கின்றது? அதன் எதிர்கால விளைவு என்ன? 

கல்விக்கான உதவிகள் அனைத்தும், இலங்கையின் கல்விமுறைக்குள் வைத்து ஆராய்ந்தாக வேண்டும். இலங்கையின் கல்வி தொடர்பாக உலக வங்கி என்ன கொள்கையை முன்னெடுக்குமாறு, இலங்கையிடம் கோருகின்றது என்பதைத் தெரிந்தாக வேண்டும். 

கல்விக்கு உதவ முனையும் நாங்கள், அனுபவித்த கல்விமுறை என்ன என்பதை தெரிந்து இருக்க வேண்டும். 

அனைவருக்குமான இலவசக் கல்வியும், அனைவருக்குமான சம வாய்ப்பே எங்களுக்கான கல்விமுறையாக இருந்தது. இது தான் எம்மை எமது இன்றைய நிலைக்கு உருவாக்கியது. இன்றும் இந்தக் கல்விக்கொள்கை கொள்கையளவில் இருக்கின்றது என்று நம்புகின்றதாலேயே நாம் உதவுகின்றோம், உதவ முன் வருகின்றோம். 

ஆனால் உண்மை என்ன? கொள்கையளவிலான உண்மை என்பது, நடைமுறையில் இல்லை. அரசு தனியார்கல்விக் கொள்கையைக் கொண்டு வருவதற்கு அமைவாகவே, வெளியார் உதவிகளை அல்லது பணத்தை மாணவர்களிடம் பெற்று இயங்குமாறு பாடசாலைகளை வழிநடத்துகின்றது. இந்த வகையில் இலங்கையின் கல்விமுறை மாறி வருகின்றது.  

இந்த வகையில் பழைய மாணவர் சங்கம் கொடுக்கும் பணத்தை, சமுதாயத்தை முதன்மையாக்கி செலவு செய்வதை விரும்புவதில்லை. மாறாக தனிநபர்களின் வெற்றியை முன்னிலைப்படுத்தும் கல்விக்கும், அதை விளம்பரங்களாக்கும் முயற்சிக்குமான உதவிகளையே கோருகின்றனர், அதை மட்டும் செய்யுமாறு நிர்பந்திக்கின்றனர். கல்வியைச் சந்தைப்பொருளாக மாற்றும் செயற்திட்டத்துக்கு அமைவான கொள்கைகளையே, பழைய மாணவ சங்கங்கள் முன்னனெடுக்குமாறு பாடசாலைகள் வழிநடத்தப்படுகின்றது. இது அரசின் கொள்கை மட்டுமல்ல, உலகவங்கி கல்வி தொடர்பாக வழிகாட்டும் செயற்திட்டமுமாகும். அரசு பாடசாலைகளை தனியார்மயமாக்கும் வண்ணமே  

1.தனியார்மயமாக்குவற்கு அமைவாக, பாடசாலைகளில் அபிவிருத்திச் சங்கங்களை அரசு உருவாக்கியுள்ளது. அபிவிருத்திச் சங்கத்துக்கு அரசு ஒரு பகுதி நிதியைக் கொடுத்து, மிகுதியை சுயமாக திரட்டிக் கொள்ளுமாறு கோருகின்றது. இதன் மூலம் இலவசக் கல்விக்கான தனது பொறுப்பில் இருந்து, அரசு விலகிக் கொள்கின்றது. அபிவிருத்திச் சங்க வேலைத்திட்டங்களையே பழைய மாணவர் சங்கங்கள் முன்னெடுக்குமாறு  நிர்ப்பந்திக்கும் அதேநேரம், பழையமாணவர்களின் நிதி உட்பட மாணவர்களிடம் அறவிடப்படும் நிதி அனைத்தும், அரசின் தனியார் கல்விக் கொள்கைக்கு ஏற்பவே கையாளப்படுகின்றது. இதை மீறி அதிபர்கள் சுய ஆளுமையும், சமூக நோக்கும் கொண்டவராக இருந்தால் மட்டுமே, அங்கு சமூகப் பணி ஆற்ற முடியும். இதற்கு அமைவாக பழைய மாணவர் சங்கங்கள் தங்கள் வேலைத்திட்டத்தை முன்வைத்து, அதிபர்களை உற்சாகப்படுத்தவும் அல்லது அதை நோக்கி வழிநடத்தவும் முடியும்.   

அரசின் இந்த தனியார்கொள்கையின் நடைமுறையை விளங்கிக் கொள்ளும் உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். அண்மைய அனுபவத்தில் இருந்து விளங்கிக் கொள்ள, யுத்தத்தின் பின் மீள்குடியேற்றத் திட்டம் நல்லதொரு உதாரணமாகும். மீள்குடியேற்றத்தின் போது அரசு ஒரு பகுதி நிதி அல்;லது பொருளைக் கொடுத்து, மிகுதியை நீயே பார்த்துக் கொள் என்ற நடைமுறையைக் கையாண்டது. இதன் மூலம் மீள் குடியேறியவன் தன் (பொருளாதார) சுயத்தை தக்கவைக்க முடியாத வண்ணம், அவனிடம் எஞ்சி இருந்த ஒட்டுமொத்த உடமைகளையும் உறிஞ்சியது. இந்தக் கொள்கை மூலம் விவசாயத்தையே கைவிட்டு, நிலத்தை விற்றுவிடுமாறு ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அதேநேரம் பெரும் விவசாய பண்ணைகளை உருவாக்கியுள்ளதுடன், சுய தொழில் ஆற்றலை இழந்த விவசாயிகளை கூலிகளாக உள்வாங்கி வருகின்றது. அரசு மற்றும் உலகவங்கியின் திட்டங்கள், வன்னியை பெரும் விவசாயப் பண்ணையாக மாற்றவுள்ளது. நிலத்தைக் கைப்பற்ற நடத்திய மீள் குடியேற்றத் திட்டம் போல், கல்வியைத் தனியார்மயமாக்கும் வண்ணம் நிதி சார்ந்த செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.     

2.கல்வி விற்பதற்கு ஏற்ப, கல்வியை சந்தைப்பொருளாக்க வேண்டும். எங்கும் எல்லா இடமும்  ஒரேவிதமான கல்வித்தரம் இருந்தால், கல்வி சந்தைக்குரிய பொருளாகும் தரத்தை ஒரு நாளும் எட்டாது. ஒரேவிதமான கல்வித்தரத்தையும், சமவாய்ப்பையும் தகர்க்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு அமைவாக பாடசாலைகளைத் தரப்படுத்தி வருகின்றது. போட்டியிட்டு தரத்தை மேம்படுத்துவதற்குரிய, சுய நிதியை உருவாக்குமாறு கோருகின்றது. மற்றைய பாடசாலைகளில் இல்லாத கல்வியும், வசதியும், வாய்ப்பும் எம்மிடம் உண்டு என்பதை ஒவ்வொரு பாடசாலையும் சுயமாக நிறுவியாக வேண்டும். இதன் மூலம் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் போட்டி சமூகத்தில் ஏற்பட வேண்டும். இதன் மூலம் அந்த பாடசாலையில் கல்வியை பெறுவதற்கு, பெற்றோர்கள் பணத்தைக் கொடுக்கக் கூடிய தயார் நிலைக்கு பாடசாலைகள் தம்மை உயர்த்த வேண்டும். இதை அடையும் வண்ணம், ஒரேவிதமான கல்வித்தரத்தையும், சமவாய்ப்பையும் இல்லாதாக்கி, குறித்த பாடசாலையில் கற்பதற்காக போட்டியை சமூகத்தில் உருவாக்க வேண்டும். பணத்தைக் கொடுத்தாவது கல்வியை வாங்கும் போட்டி முலம், தனியார் கல்விமுறை படிப்படியாக கொண்டு வரப்படுகின்றது.   

3.கல்வி சந்தையில் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும் போட்டியில், போட்டிப் பரீட்சைமுறை புகுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் வகுப்புகள் தரப்படுத்தப்படுகின்றது. தரங்குறைக்கப்பட்ட வகுப்புகள், திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, கழித்துக் கட்டப்படுகின்றது. இதன் மூலம் சம கல்வி, சம வாய்ப்பை மறுக்கும் வண்ணம், குழந்தைகளை தரப்படுத்தி விடுகின்றனர். இதன் மூலம் போட்டிப் பரீட்சையில் சித்தி பெறும் "தரமான" கல்விக்கு பணம் தேவை என்பதால், இலவசக் கல்விக்கு இடமில்லை. இந்தப் போட்டி மூலம் தனியார் ரியூசன் முறை ஊக்குவிக்கப்படுகின்றது. போட்டிப் பரீட்சை மூலம் தரப்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவனில் பணம் உள்ளவன், பணத்தைக் கொடுத்து தரமான பாடசாலையை தேர்ந்தெடுக்குமாறு, அங்கு தரமான முதல் தரமான வாய்ப்புள்ள வகுப்புகளை பெறுமாறு வழிகாட்டப்படுகின்றது. பணத்தைக் கொடுக்க முடியாத போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்றவனுக்கு மானியம் அல்லது அரசு உதவி என்ற தனியார்மய நாடகங்கள் மூலம், முழுமையாக தனியார் கல்விமுறை கொண்டு வரப்படுகின்றது. இந்தியாவின் தனியார் கல்விமுறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.  

இந்த அடிப்படையிலேயே கல்வித் திணைக்களம், பாடசாலை நிர்வாகங்கள், அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் .. என அனைத்தும் இயங்குகின்றன. இதற்கு முரணாக சுயமாக இயங்கவும், இருக்கவும் கூடிய பழைய மாணவர் சங்கங்கள், இதற்குப் பலியாகி வருகின்றது. பழைய மாணவர் சங்கங்களில் உள்ள அகக் குறைபாடுகள், இதற்கு துணைபோகின்றது. சமூகப் பார்வையற்ற உதவிக் கொள்கைகள், விளம்பரப்பிரியர்களின் சுயநலங்கள், பதவி மோகங்களுடன் கூடிய போட்டி, மாலை மரியாதைகளை விரும்புகின்ற சுயதம்பட்ட பேர்வழிகளின் நடத்தைகள்… அனைவருக்குமான இவவசக் கல்வி மற்றும் சம வாய்ப்புக்கு எதிரான அரசின் கொள்கைக்கு துணைபோவதாக இருக்கின்றது.         

இந்த பின்னணியில் இன்று மிக பெரிய பாடசாலைகள் அனைத்தும், தனியார் கல்விமுறைக்கு  ஏற்ப தரப்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் மாணவர்களிடம் இருந்து பணத்தை திரட்டும் வண்ணம், எல்லாத் துறையிலும் தங்களை முதன்மையான கல்விச் சந்தைக்குரிய தகுதியான பாடசாலையாக முன்னிறுத்திக் காட்ட வேண்டி இருக்கின்றது. இந்த வகையில் இன்று திடீரென விளையாட்டுத் துறை, கலைத்துறையில் கூடிய கவனத்தை குவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். விளையாட்டையும, கலையையும் விற்க, தனிச் சந்தையை அரசு உருவாக்குகின்றது. இதற்கு அமைவாக பாடசாலைகளில் கல்வி செயற்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றது. 

உதாரணமாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி வருடாந்த உதவியாக கோரும் தொகையில், 30 இலட்சத்துக்கு (60, 70 சதவீதம்) மேற்பட்டவை விளையாட்டுத்துறையை முன்னிறுத்தியதாக இருக்கின்றது. அதுவும் உடல் உளவியல் சார்ந்த அனைருக்குமான விளையாட்டை அல்ல, மாறாக சந்தைக்குரிய விளையாட்டை மட்டும் முன்னிறுத்துகின்றது. 

இதற்காக இன்று பழைய மாணவர்கள் மற்றும் மாணவ சங்கங்கள் மூலம் திரட்டும் பெருந்தொகைப் பணம், நாளை அங்கு கல்வி கற்கும் மாணவர்களால் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். இதற்கு நல்ல உதராணம் யாழ் இந்துக் கல்லூரியாகும். மாணவர்களிடம் 50000 ரூபா பணத்தை பெறுவது உதாரணம். பணத்தைக் கொடுத்தால் தான் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்க முடியும் என்பது பொது உண்மையாகும். இதை விட அங்குமிங்குமாக பணம் வாங்குகின்ற எத்தனையோ நடைமுறைகள், எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் காணப்படுகின்றது.  

இலவசக் கல்விமுறைக்கும், அனைவருக்கமான பொதுவான சம வாய்ப்புக்கும் வேட்டு வைக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பணம் சார்ந்த கல்விமுறையால் முதலில் பாதிக்கப்படப்போவது  யார்? ஏழை எளிய மக்களும், சமூகரீதியாக இரண்டாந்தரப் பிரஜையாகக் கருதப்படும் பெண்களும், ஒடுக்கப்பட்ட சாதிகளுமே. சமூகரீதியாகவே இவர்களுக்கு கல்வியை மறுக்கும் சமூக இயல்பு, இந்த தனியார் கல்விமுறையின் கூறாக இயங்கும் என்பது வெளிப்படை உண்மையாகும். பணம் இல்லாதவர்கள் இன்று யாழ் இந்து கல்லூரியில் கல்வி கற்க முடியாது எப்படியோ அப்படிதான். யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் 50000 ரூபாவைக் கொடுத்து, ஏழை எளிய மாணவனுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திவிட முடியுமா!?  

அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் சம வாய்ப்பு கொண்ட கல்விமுறைமையை பாதுகாக்கும் கொள்கையை, பழைய மாணவ சங்கங்கள் தங்கள் அடிப்படைக் கொள்கையாகக் கொள்ள வேண்டும். இதை பாதுகாக்கும் அடிப்படையில் நிதிகளை சுயமாக கையாள வேண்டும்;. இதற்காக முன்னின்று உழைப்பதன் மூலம், சமூக உணர்வுள்ள புதிய சமூகத்தை உருவாக்குவதன் மூலம், இலவசக் கல்வி மற்றும் அனைவருக்குமான சம வாய்ப்பை பாதுகாக்க முடியும்;. இதை நோக்கி ஒவ்வொரு மாணவனையும் தயாரிக்கும் ஒரு கல்விமுறைக்கு உதவ வேண்டும்;. அதை இனம் காண்பதும், அதை உருவாக்குவதற்கு உதவுவது என்ற கொள்கைகள் மூலம், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.                     

இதைப் புரிந்து கொண்டு அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் நின்று, பழைய மாணவ சங்கங்கள் உதவிகளை வரையறுக்க வேண்டும். செய்யும் உதவிகள் மீது சங்கத்தின் கட்டுப்பாட்டையும், இதன் சமுதாய விளைவையும் சங்கம் உறுதி செய்தாகவேண்டும்.    

நேர்மையையும், அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் கொண்டிராத சமுதாயத்தில் உதவிகள் ஏற்படுத்தும் விளைவுகள்    

25 வருட வரலாறு கொண்டதே, புலம்பெயர் பழைய மாணவர் சங்கங்களின் செயற்பாடுகள். தங்கள் உழைப்பில் இருந்து பல கோடி ரூபா பணத்தை, கல்வியின் வளர்ச்சிக்காக கொடுத்து இருக்கின்றனர். இப்படி கல்விக்காக கொடுத்தவர்களின் நோக்கமென்பது, சமூதாயத்தின் பாலானது.   

கல்விக்காக கொடுத்த பணமானது, சமுதாயத்திற்கு எதைக் கொடுக்கின்றது என்பதை, கொடுத்தவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதில்லை. பணம் எப்படி, எந்த வகையில், எதற்காக செலவு செய்யப்படுகின்றது என்பது தொடங்கி, கொடுத்த பணம் சமுதாயத்துக்கு எந்த விளைவை ஏற்படுத்தி வருகின்றது என்ற பொதுக் கணக்கைக் கேட்பதில்லை. கோயில் உண்டியலில் போடுகின்ற பணம், "கடவுளுக்கு" செல்வதான அதே மூட நம்பிக்கை தான் இங்கும்.  

இந்த வகையில் அமைப்;புகள், சங்கங்கள், தனிநபர்களின்.. பொறுப்பற்ற சமுதாயக் கண்ணோட்டமானது, எதிர்மறையான சமுதாய விளைவுகளை உருவாக்கி வருகின்றது.  

2009 பின் கணக்குக் கேட்பவர்கள் கூட, அவசியமற்ற செலவுகளைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. சமுதாயத்துக்கு கிடைத்தது என்னவென்ற பொதுக் கணக்கை கேட்பதில்லை. சமூக நோக்குள்ள சமூகத்தை உருவாக்குவதற்காக உழைப்பதில்லை. கோயில் உண்டியலில் போட்ட பணமே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது என்று நம்பும் அதே கற்பனை போன்று, பணத்தைக் கொடுத்தால் சரி சமுதாயம் முன்னேறிவிடும் என்று நம்புகின்றனர்.       

என்ன நடக்கின்றது பணத்துக்கு!? உதாரணமாக பாடசாலைகளில்; தனிநபர்களை முன்னிறுத்திக் கட்டப்படும் பெரிய பனர் விளம்பரங்கள், விளம்பரத் துண்டுப்பிரசுரங்கள், தனிநபரைப் புகழ்பாடும் அல்லது முன்னிலைப்படுத்தும் சிறிய விளம்பர நூல்கள்.. இவை எல்லாம் நீங்கள் கொடுக்கும் பணத்தில் தான் வெளியிடப்படுகின்றது என்பது, எத்தனை பேருக்குத் தெரியும்? வருடாந்தம் பல இலட்சங்கள் இதற்காகவே செலவு செய்யப்படுகின்றது. விளையாட்டு, கல்வி, கலை சார்ந்து வெளியிடங்களுக்கு செல்லும் போது, தங்கும் இடங்கள்;, உண்ணும் உணவு எல்லாம் உயர்தரமானதாகவே தெரிவுசெய்து, அதைத் தொகுத்து  கணக்காக தருவது வரை எத்தனையோ கூத்துக்கள் நடக்கின்றது.  

கணக்கு காட்டப்படாதவை ஒருபுறம் இருக்க, மறுபக்கம் விபரங்கள் இன்றி மொத்தமாக பொதுக் கணக்கு முடிக்கப்படுகின்றது. சங்கங்களுக்கு வெளியில் தனிநபர்களிடம் நேரடியாக அதிபர்களால் பெறப்படும் இலட்சக்கணக்கான பணங்களுக்கு, வெளிப்படையான பொதுக் கணக்கு இருப்பதில்லை.  

ஊழல், லஞ்சம், ஆடம்பரம், அதிகாரம், அலட்சியம்..  எல்லாம் செழித்து வாழ்வதற்கு ஏற்ப, கொடுத்த பணத்தின் மீதான பொது அக்கறையற்றிருக்கும் போக்குகளை அனுமதிக்கின்றோம். இப்படி கண்டுகொள்ளாது இருக்க, அடிப்படைக் காரணமாக இருப்பது 1980க்கு முந்தைய பாடசாலைக் கனவுகளுடன், கற்பனையுடன் வாழ்வதுதான். அன்று இருந்த நேர்மை, அhப்பணிப்பு, தியாகம் .., இன்றும் பாடசாலை சமூகத்தில் இருப்பதான எமது பொது மனநிலை எம்மை கண்ணை மூடிக்கொண்டு செயற்பட வைக்கின்றது.                      

25, 50 வருடத்துக்கு முந்தைய பாடசாலைக் கனவுடன் கற்பனையுடன் வாழ்ந்தபடி, கண்ணை மூடிக் கொண்டு உதவுவது அறியாமையாகும்;. எல்லாமே மாறுகின்றவை என்பதையும், எல்லாம் மாறிவிட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டால் மட்டும் தான், என்ன மாற்றம் நடந்துள்ளது என்பதையும், கொடுக்கும் பணத்துக்கு என்ன நடக்கின்றது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும். இதைவிட்;டுவிட்டு அன்று போல் இன்று யோசிப்பது, நாம் புலம் பெயர்ந்த போது இருந்த அடிப்படையில் பாடசாலைகளை காண்பது என்பது, உண்மையுமல்ல அங்குள்ள எதார்த்தமுமல்ல. 

 பணத்தைக் கொடுத்து சமுதாய உணர்வை வாங்க முடியுமா!?       

பணத்தைக் கொடுப்பதுடன் உனது கடமையை முடித்துக்கொள். இது தான் புலம்பெயர் "தமிழனின்" புதிய பகவத்கீதை. இதைச் சொல்லவும், செய்யவும் தயங்காத பொதுப் புத்தியை, சமூக அக்கறையாகவும், தங்கள் சமூகக் கடமையாகவும் கருதுகின்ற அளவுக்கு புலம்பெயர் சமூகம் மாறி இருக்கின்றது. இந்தப் பணத்தை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதே, அங்கு உள்ளவர்களின் செயற்பாடுகளாக மாறி இருக்கின்றது. பணம் அனைத்துமாகி இருக்கின்றது. அதிகாரம், "சமூக சேவை", இலஞ்சம், ஊழல், கற்பிக்கும் முறை.. என்று எல்லாம் பணத்துக்குள் புளுக்கின்றது.            

அதேநேரம் புலம்பெயர் சமூகத்தில் பணத்தைக் கொடுப்பதே சமூகப் பணி என்ற வரையறையானது, பணம் உள்ளவர்களின் அமைப்புகளாகவும், சங்கங்களாகவும் மாறி வருகின்றது. பணம் தான் எல்லாம் என்று நம்புகின்ற, பணத்தால் எல்லாம் வாங்க முடியும் என்று கருதுகின்ற அளவுக்கு, சமூகம் தன்னைத்தானே வரம்பிட்டு, தன்னை குறுக்கி வருகின்றது. மனித அன்பு, நேசிப்பு, மனிதாபிமானம் .. தொடங்கி எல்லாவிதமான மனித உணர்வுகளையும் பணம் மூலம் வாங்கவும், கொடுக்கவும் முடியும் என்று புலம்பெயர் அமைப்புகளும் தனிநபர்களும் கருதுகின்றனர். இந்த அடிப்படையிலேயே சங்கங்களிலும்;, அமைப்புகளிலும்; பணம் இல்லாதவனுக்கு இடமில்லை என்ற அடிப்படைக் கொள்கை இந்த அமைப்புகளின் பொது விதிகளாகின்றது. உதாரணமாக பணம் இல்லாதவனுக்கு வாக்குரிமையில்லை, ஆணின் "அடிமையான" பெண்ணுக்கு வாக்குரிமையில்லை என்ற, அன்றைய அதே ஜனநாயக விரோதக் கொள்கைகளையே, புலம்பெயர் சமூகங்களின் அடிப்படைக் கொள்கையாகி வருகின்றது.      

பணம் இல்லாது சமூகப் பணி என்ன? பணம் இல்லாத அடிப்படையில் சங்கங்களினதும், அமைப்புகளினதும் சமுதாயப் பணி என்ன என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்துதான், உண்மையான, நேர்மையான, வெளிப்படையான சமூகப் பணியைச் செய்ய முடியும்;. இந்த அடிப்படையில் சிந்தித்து செயற்படாத வரை, பணம் சரியான முறையில் சமூகத்துக்கு பயன்படுத்தப்படமாட்டது என்பதே உண்மையாகும்.           

"இலங்கை பாடசாலைகளும் புலம்பெயர் உதவிகளும்" குறித்த இந்த கருத்தரங்கின் தலையங்கமே, இந்த உண்மையை போட்டுடைத்திருக்கின்றது. "உதவிகள்" என்று, பணத்தைக் கடந்து சங்கங்கள், அமைப்புகள் இருக்க முடியாது என்ற தவறான பொதுப் புத்திக் கருத்தையும், பொது உளவியலையும் முன்வைத்திருக்கின்றது. உதாரணமாக பாடசாலைகள் மீதான எமது அக்கறையும், சமூக உணர்வும், பணத்தில் இருந்து உருவானதா!? எனின் இல்லை. சில தனிப்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் .. பாடசாலைகளில் ஆற்றிய சமுதாயப்; பணிகளே, எமக்கு முன்மாதிரியாக வழிகாட்டியாக இருந்து வருகின்றது. இவையே எம்மையும் அதன்பால் செயலாற்ற வைக்கின்றது. சமூகப் பணியை அவர்கள் செய்த போது, பணத்தைக் கொண்டு செய்யவில்லை. பணம் தீர்மானிக்கும் காரணியாகவே இருக்கவில்லை. மாறாக மனித உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, பொது அக்கறை, வெளிப்படைத் தன்மை, சமூகத்தை அறிவியல் ரீதியாக வழிநடத்தும் உயர் பண்பு .. இவையே எமக்கும், சமூகத்திற்கும் முன்மாதிரிகளாக இருந்தன. இவைதான் எம்மையும், அதைச் செய்யுமாறு தூண்டுகின்றது.  

எமது இந்த அடிப்படைக்கும் உணர்வுக்கும் முரணாக, பணச் சங்கங்களாக, அமைப்புகளாக குறுகி, பணமுள்ளவனுக்குச் சங்கம் என்று வரையறுக்கின்றோம். உதாரணமாக பாடசாலை மாணவன் என்பவன், எப்போதும் எங்கும் பழைய மாணவனே. பணம் கொடுத்தாலே சங்கத்திலும், அமைப்பிலும் இருக்கலாம் என்று கூறுவது, எந்த வகையில் நியாயமானது? பணம் இல்லாதவனுக்கு இடமில்லை என்பது, சங்கங்களினதும், அமைப்பினதும் விதியாகும் போது, அனைத்தையும் பணம் தீர்மானிக்கத் தொடங்குகின்றது. பணம் உள்ளவன் தீர்மானிக்கின்றவனாக மாறி, படிப்படியாக அதிக பணம் கொடுப்பவனின் கட்டுப்பாட்டுக்குள் சங்கமும், அமைப்புகளும் சென்று விடுகின்றது.   

இதற்கு உதாரணமாக போராட்டக் காலத்தில் போராடியவனை விட பணம் கொடுத்தவன் போராட்டத்தை தீர்மானிக்கத் தொடங்கி, இறுதியில் அதிக பணம் கொடுத்தவன் முடிவு எடுக்கத் தொடங்கினான். போராட்ட அழிவில் கணிசமான அளவுக்கு, பணமும் அதன் அடிப்படையிலான முடிவுகளும் காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்று சங்கங்கள் மற்றும் அமைப்புகளில், இந்தப் போக்கை காண முடியும்;. பாடசாலைக்கான பழைய மாணவர் சங்க நிதியில் ஒரு பகுதி, அனைவருக்குமான அடிப்படைக் கல்வியை மறுக்கின்ற செயற்பாட்டுக்காக மாறிச் செல்வதை புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு, பணம் சார்ந்த சிந்தனைமுறை காணப்படுகின்றது.    

பணத்தை முதன்மையாகக் கொள்ளாத சமுதாயப் பணி என்ன என்பதை முதன்மையாக கொண்டு செயலாற்றும் வண்ணம் சங்கங்கள், அமைப்புகள் மாறியாக வேண்டும். இது மட்டும் தான் சமூகத்துக்கு எது தேவை என்பதை கண்டறிய வைக்கும். சமூகரீதியான உணர்வுடன் கொடுக்கும் உதவியை, சமூக உணர்வு பெறாது பெற்றுக்கொள்ளும் முறைமை என்பது, எங்கள் உணர்வுக்கே முரணாது.     

கடந்தகால அனுபவத்தில் இருந்து, இன்று உதவிகளுக்கு கணக்கை கேட்கின்ற அளவுக்கு முன்னேறியுள்ள போதும், உதவிகள் சமூகத்துக்கு என்ன பயனைக் கொடுக்கின்றது என்பதை கேட்டபதுமில்லை ஆராய்வதுமில்லை. எந்தச் சமூக உணர்வோடு கொடுக்கின்றோமோ, அதைப் பெறுகின்றவர்கள் அதே சமூக உணர்வை பெறுவதை உறுதிசெய்யாத வரை, உதவிகள் எவையும் பயனற்றவை. இங்கு உதவி செய்வது மட்டுமல்ல, சமூக உணர்வை கொண்ட சமூகத்தை மீள உருவாக்கும் பணியை கொண்டதாகவே, உதவிகள் சீரமைக்கப்பட வேண்டும்.  

மற்றவர்களிடம் இல்லாத சமூக உணர்வு எமக்குள் உண்டு என்பதை முதலில் தெரிந்து கொள்வதன் மூலமே, அதை மற்றவர்களுக்கு ஊட்டும் வண்ணம் எம்மை புரிந்து கொள்வதன் மூலமே, சமூகத்தை வளப்படுத்த முடியும். இதற்குத் தடையாக இருப்பது உதவியை பணம் சார்ந்ததாக கருதுகின்ற கண்ணோட்டமேயாகும்;. இது ஒட்டுமொத்த சமூகத்தை தடம்புரள வைக்கின்றது. பணம் இல்லாத சமூக சேவையை மீள எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு, எமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள்!? அவர்கள் எந்த பணத்தைக் கொண்டு சமூகத்தை வழிநடத்தினார்கள்!?  

ஊர்களில் இருந்த வாசிகசாலைகள், கோயில்கள், சிரமதானங்கள்.. என்று பொதுவாழ்வில் ஈடுபட்ட எங்களை எல்லாம், பணம் தான் தீர்மானித்ததா? இல்லை. அப்படி இருக்க, இன்று அவைகளை மறுத்து நிற்பது ஏன்?         

சமுதாய உணர்வை பணம் தீர்மானிப்பதில்லை. அதாவது பணத்தைக் கொண்டு மனித உணர்வைக் கொடுக்கவோ, வாங்கவோ, தீர்மானிக்கவோ முடியாது என்பதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். இதுவே சமூக பற்றிய உண்மையான நேர்மையான செயற்பாடாக, எம்மை முன்னின்று வழிநடத்தும்.