Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் மேலாதிக்க சிந்தனையின் பிரதி தான் "லண்டன்காரர்"

"மனித குலத்தின் வரலாறு முழுவதுமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறே" என்றார் கார்ல்மார்க்ஸ். இதற்கு முரணாகவே சேனனின் "லண்டன்காரர்" நாவல், லண்டன் கலவரத்தை வர்க்கம் கடந்த கலகமாகக் காட்ட முற்படுகின்றது. "விளிம்புகளின்" கலகமாம்! இந்த நாவல் கலவரத்துக்கு காரணமான வர்க்க உறவுகளை காண மறுப்பதில் இருந்து பாத்திரங்களை இயங்கியலற்ற தனிமனித இயந்திரமாக காட்டுகின்றது. அதாவது கதையில் வரும் மனிதர்களை வர்க்கமற்றவராகவும், நிகழ்வுகளை வர்க்க அமைப்பிற்கு சம்மந்தமில்லாத மனித ("விளிம்புகளின்") நடத்தையாகவும் காட்டுகின்றதும், அதனையே லண்டன் கலவரமாக காட்டுகின்ற அரசியல் பின்னால் இருப்பது யாழ் மேலாதிக்க சிந்தனை முறைதான். யாழ் மேலாதிக்க சமூகம் எப்படி லண்டன் கலவரத்தை பார்க்கின்றதோ, அதை அப்படியே "லண்டன்காரன்" நாவல் மூலம் தரிசிக்க முடியும். கட்சியில் சேர்ந்தால் சரி என்று கருதும், யாழ் மேலாதிக்க வெள்ளாளத்தன "மார்க்சியம்", இப்படித்தான் சமூகத்தை பார்ப்பதுடன் காட்டவும் செய்கின்றதுக்கு "லண்டன்காரர்" நாவல் உதாரணமாக இருக்கின்றது.

சமூகத்தைப் புரிந்து கொள்வதென்பது, சமூகத்தின் சிந்தனைமுறை பற்றியது. சமூக நிகழ்வுகள் குறித்தும், அது குறித்தான சிந்தனை என்னவென்பதை நாம் கேட்பதன் மூலம் தான் "லண்டன்காரர்" எந்த சிந்தனைமுறையில் எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும்.

எம்மைச் சுற்றிய நிகழ்வுகளை எப்படி, எதன் அடிப்படையில் அணுகுகின்றோமோ, அது கருத்துக்களாகவும், அதுவே சிந்தனையாகவும் மாறுகின்றது. உதாரணமாக "பயங்கரவாதம்" குறித்து ஐரோப்பிய - அமெரிக்க இன்றைய சிந்தனைமுறை என்னவென்பதைப் பார்ப்போம். பயங்கரவாதத்தை முஸ்லிம் மக்கள் ஊடாகவும், இஸ்லாமிய மதம் ஊடாகவும் காண்பதுடன், சமூக பண்பாடுகள் கலாச்சார அடையாளங்கள் ஊடாக அடையாளம் காண்பதையும், புரிந்து கொள்வதையும் இன்று அனுபவ ரீதியில் காணமுடியும். இதனடிப்படையில் அரச அடக்குமுறைகள் தொடங்கி குற்றச் சமூகமாக அணுகுவது வரை, இந்தச் சிந்தனைமுறையை இனங்காண முடியும். இனவாதம் - நிறவாதம் - ஏகாதிபத்திய மேலாண்மை ஒன்றிணைந்த ஆதிக்க கருத்தினாலானது இந்தச் சிந்தனைமுறை.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வர முனையும் குடியரசுக்கட்சி வேட்பாளர் முஸ்லிம் மக்களையே மானிட விரோதிகளாக அறிவிக்கும் தேர்தல் பிரச்சாரமாகட்டும், டென்மார்க் அரசு அகதிகளின் சொத்தை பறிக்கும் சட்டமாகட்டும், பிரஞ்சு அரசு பிரஜாவுரிமையைப் பறிக்கும் புதிய சட்டமாகட்டும் அனைத்தும் இந்தச் சிந்தனைமுறையைத் தளுவியது தான்.

இந்த பின்னணியில் வலதுசாரியத்தின் அதிதீவிரமான கருத்துகள் செயற்பாடுகளை எதிர்த்து, சீர்திருத்தம் சார்ந்த எதிர்ப்புகள் கூட, இந்த சிந்தனைமுறையைக் கொண்டு இருப்பது வெளிப்படையான உண்மை. இதை பிரதிநிதித்துவம் செய்யும், இடது வலது என்று பலவேறு கட்சிகள் கூட இந்த சிந்தனை வகைப்பட்டதே.

இதே அடிப்படையில் இலங்கையில், இயக்க பயங்கரவாதம் முதல் அரச பயங்கரவாதம் வரை, தமிழ் மொழி பேசும் மக்களும் சிங்கள மொழி பேசும் மக்களும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொண்டு இருந்ததையும், இருப்பதையும் காணமுடியும்.

ஒரு விடையத்தைப் புரிந்துகொள்கின்றதன் பின்னால் ஒரு சிந்தனைமுறை இருக்கின்றது. இது தனிப்பட்ட தெரிவோ, தனிப்பட்ட கருத்தோ அல்ல. மாறாக வாழ்கின்ற சமூகத்தைச் சார்ந்த சிந்தனை முறையாகும்.

இந்த வகையில் "லண்டன்காரர்" கதையின் சிந்தனைமுறை குறித்து கேள்வி அவசியமாகின்றது. வலதுசாரியத்தை எதிர்ப்பதன் மூலம் மட்டும் சரியான சிந்தனை முறையை கொண்டு இருப்பது என்பது பொதுப் புத்தியாகும். உதாரணமாக புலிகளை எதிர்த்த அனைவரையும் இடதுசாரியாக, முற்போக்குவாதியாக, ஜனநாயகவாதிகளாக கருதிய, கருதுகின்ற அதே சிந்தனையும் அளவீடும் எப்படி தவறானதோ அதேபோன்றது தான். இதே போன்ற படைப்பியலுக்கும் பொருந்தும்.

சமூகக் கேடானவைகளைக் குறித்து எழுதுவதன் மூலம் அதை முற்போக்காகவும், அதை மாற்றமாகவும் கருதுகின்ற அளவீடுகளைக் கொண்ட சிந்தனைமுறை எந்த வகையான சிந்தனைமுறை என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகின்றது. ஒன்றை மனதளவில் எதிர்ப்பதால், அதை எழுதுவதால், அது சமூகம் சார்ந்ததாகவும் மாற்றம் நிகழ்ந்து விடும் என்றும் கருதுவது இருக்கின்ற அமைப்பு சார்ந்த சிந்தனைமுறை தான். நடைமுறை என்பது வர்க்க அமைப்பில் வர்க்கத் தன்மை கொண்டதாக இருப்பதால் ஒவ்வொரு வர்க்கமும் விடையத்தை தன் வர்க்கக் கண்ணோட்டத்தின் ஊடாகத்தான் அணுகுகின்றது.

இந்த வகையில் "தமிழர்" என்ற "இன" அடையாள மூலம் தங்களை முன்னிறுத்தி வாழக் கூடியவர்கள் இன, சாதிய குழுமத்தின் சிந்தனை முறையில் தான் சிந்திப்பர். இந்த வகையில் "லண்டன்காரர்" என்ற நாவல் சிந்திக்கின்றது. "தமிழன்" தன் சிந்தனைத் தளத்தை கேள்விக்குள்ளாக்காத வரை அது யாழ் சிந்தனை முறை தளுவியது. "தமிழர்" என்ற இன சாதிய சமூகம் "லண்டன்காரனின்" பாத்திரங்களை எப்படிப் பார்க்கின்றதோ அதையே தனது இன சாதி சிந்தனை மூலம் "மார்க்சியமாக" காட்ட முனைந்ததை இந்தப் படைப்பில் காண முடியும்.

தமிழ்த் தேசியம், பின்நவீனத்துவம், பின் அமைப்பியல், விளிம்பு, மார்க்சியம், கட்சி என்று, கூட்டியள்ளி அதை "லண்டன்காரர்" மூலம் அள்ளித் தெளிக்கும் "மார்க்சியமானது", சாராம்சத்தில் யாழ் இனவாத சாதிய சிந்தனைமுறையாகும். அதாவது இது தான் வெள்ளாள "மார்க்சியமாகும்".

ஜரோப்பிய சிந்தனை முறையானது தாம் அல்லாத மற்றவர்களை வேறுபடுத்த, இழிவுபடுத்த, தனிமைப்படுத்த, ஒடுக்க. ஆணின் "தாடி" பெண் அணியும் "பர்தா", தொப்பி, கலால் உணவு போன்ற கலாச்சார வேறுபாடுகள் அடையாளங்களாக இருப்பதும், அதேபோல் "பாக்கி", "அடையான்" "காப்பிலி", "கறுவல்" என்ற "அடைமொழிச்" சொற்கள் மூலம் சமூகம் குறித்தான சிந்தனை போன்று "கறுப்பி", "ஐயர்" "குடும்பி" என்று யாழ் சிந்தனை முறை மூலம் இந்த நாவலில் கும்மி அடிப்பதைக் காணமுடிகின்றது.

"தமிழர்" என்ற தன் இன சாதி அடையாளத்தின் அடிப்படையில், "கறுப்பி", "ஐயர்" என்று தமிழ்ப் பாத்திரங்கள் உருவாக்கி அந்த சிந்தனை முறையை தனது பிரதியாக்கியதில் தொடங்குகின்ற யாழ் சிந்தனை முறை. இந்த மாதிரியான தமிழனின் கதைகளுக்கு பஞ்சமில்லை. அதே சிந்தனையிலான அதே யாழ்ப்பாணத்தானின் கதைகளை அப்படியே தொகுத்து லண்டன் கலவரத்துக்கு தொடுப்பு கொடுத்து தனது கட்சியை இணைத்து, இதுதான் வர்க்கப் புரட்சியின் நெம்புகோல் என்று காட்டுகின்றதன் பின்னால் இருப்பது, யாழ் மேலாதிக்கம் சார்ந்த வெள்ளாள சாதிய சிந்தனை முறை தான்.

சமூகத்தின் எந்த நிலையில் வாழுகின்ற மனிதனாக இருந்தாலும், அவனின் வாழ்நிலை தொடங்கி லண்டன் கலவரம் வரை, அனைத்தும் வர்க்க சமூக அமைப்பிற்கு உட்பட்டது. இதற்கு வெளியில் சமூகத்தைக் காட்ட முற்படுவது கருத்து முதல்வாதத்தின், அதாவது மனிதனின் உணர்வுகளின் விளைவாக காட்டுவது தான். இந்த வர்க்க அமைப்பிற்கு வெளியில் "விளிம்பு" மனிதன் இருப்பு பற்றி பேசுவது என்பது, கருத்து முதல்வாதத்தின் பிரதியாகிவிடும். இது எதார்த்தத்தில் இருக்கின்ற ஒடுக்குகின்ற வர்க்க அமைப்பின் பிரதியாகி விடுகின்றது.

"லண்டன்காரர்" மூலம் சேனன் அறிவுத்துறை சார்ந்த அசல் யாழ்ப்பாணத்துக்காரனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றார். இங்கு எம்மைச் சுற்றிய கதைகள் எல்லாம் கலையாகி விடுமா? மணிக்கணக்காக தொலைபேசிகளில் அன்றாடம் பேசப்படும் கதைகள் எல்லாம், கலையாகிவிடுமா? அதைத் தொகுத்து, கட்சிக்கு தொடுப்புக் கொடுத்து அதையே நாவலாக சேனன் முன்வைக்கின்றார்.

வாழ்க்கையைச் சுற்றிய எதார்த்தம் எங்கும் இருக்கின்றது. அதை கதையாக சொல்வதால், அது கலையாகி விடாது. அன்றாடம் மனிதர்கள் பற்றிய உரையாடல்கள் ஒவ்வொன்றும் கதையாக இருப்பதும் ஆனால் அவை எல்லாம் கலையாக இருப்பதில்லை. கலையல்லாத கதைக்குள் கட்சி, அரசியற் சொற்களைப் புகுத்தி விடுவதால் அவை கலையாகி விடாது.

சேனன் "லண்டன்காரன்" மூலம் கதை சொல்லும் போது அவர் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். இதனால் அவர் கதைக்குரிய பாத்திரங்கள் தேர்வும், அது குறித்த அவரின் இடதுசாரிய பார்வையின் அடிப்படையில் கதையாக்கும் போது, பொது சமூகத் தளத்தில் கேள்விக்குள்ளாக்குவது என்பது, கலை குறித்தும், அரசியல் குறித்தான அடிப்படை விவாதமாக மாறிவிடுகின்றது.

குறிப்பாக இலக்கியத்தில் அரசியற் கட்சியை முன்னிறுத்தும் போது, அதைப் பிரச்சார இலக்கியமாக, கலையல்ல என்று தர்க்க செய்கின்ற "இலக்கியவாதிகள்", "லண்டன்காரன்" குறித்து கள்ள மௌனமும் அல்லது புகழ்வதையும் பொதுவில் காண முடிகின்றது. மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியமல்லாத "விளிம்பு மனிதர்கள்" குறித்தும், அந்த மனிதர்களின் நடத்தையை "பின்நவீனத்துவ" "பின் அமைப்பியலாக" "பெண்ணியமாக" சித்தரிக்கின்ற கதைப் பின்னணியில், இந்தச் சந்தர்ப்பவாதம் இயங்குகின்றது.

எதார்த்தத்தின் அகநிலை உட்கூறுகளை ஆராய்வதே கலை

எதார்த்தத்தின் அகநிலையின் உட்கூறை ஆராய்வதே கலை. சமூகத்தில் இயங்கும் ஒவ்வொரு பாத்திரம் - அவர்களின் இயக்கத்தின் பின்னால் காரண காரியங்கள் இருக்கும். காரண காரியத்தை விட்டுவிட்டு இயக்கத்தை மட்டும் எடுத்துக் காட்டுவதும் வலதுசாரித்தை எதிர்ப்பதும் என்பது இந்தச் சமூக அமைப்பின் பிரதி தான். எதார்த்தம் என்பது வெளித் தோற்றத்தின் பிரதியே ஒழிய அகத்தோற்றமல்ல. எதார்த்தத்தின் உள்ளே காரண காரியங்கள் இன்றி எதார்த்தம் வெளிப்படுவதில்லை. காரண காரியங்கள் அனைத்தும் வர்க்க அமைப்பிற்கு வெளியில் இயங்குவதில்லை.

இந்த படைப்பின் இரண்டு உதாரணங்களை எடுப்போம்

இந்தப் படைப்பில் "ஐயர்" என்ற அடையாளத்தை எடுப்போம். பெயருக்கு பதில் "ஐயர்" "குடும்பி" அடையாளத்தை முன்னிறுத்துகின்றது. இது யாழ் சிந்தனை வகைப்பட்ட வெள்ளாள "மார்க்சியமாகும்". பிறப்பு சார்ந்த சாதிய அடையாளத்தையே "சாதியாக" காட்டி எதிர்ப்பதும், சாதிய அடையாளத்தை கொண்டு அதைப் போராட்டமாக மையப்படுத்தி இயங்குவதும், சமூகத்தை இயக்கும் சாதிய வாழ்வியலுடனான சிந்தனை குறித்து அலட்டிக்கொள்ளாது அதுவாக வாழ்வதாகும்.

இந்திய சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் சாதிய அடையாளத்துடன் தான் பிறக்கின்றனர். ஆனால் அனைவரும் பிறப்பிலான சாதிய அடையாளத்தை முன்னிறுத்தாது வாழ்வதும், சாதிய சமூகத்தை எதிர்த்தும் வாழ்கின்றனர். ஏற்றத்தாழ்விலான சாதிய சமூகக் கட்டமைப்பில் சாதிய சிந்தனை மேலிருந்து கீழாக ஒடுக்குமுறை வடிவில் மட்டும் இயங்குவதில்லை. ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட சாதிய சமூகமாக சமூகம் இருப்பதால் சாதிய சிந்தனை எல்லா தளத்திலும் இயங்குகின்றது.

பெண்ணாக இருப்பதால் பெண்ணிய சிந்தனையாக கருதுவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் சிந்தனையை சாதிய எதிர்ப்பு சிந்தனையாக கருதுவதும் அடிப்படையில் ஆதிக்க சிந்தனைமுறையாகும். இது போன்று தான் சாதிய அடையாளங்களை முன்னிறுத்தி சாதி எதிர்ப்பு பேசுகின்ற சிந்தனை முறையானது இந்தியாவில் பார்ப்பனியமாகவும் வடகிழக்கு "தமிழர்" இடையே வெள்ளாள சிந்தனையாகவும் இருக்கின்றது.

உதாரணமாக பாடசாலையின் பெயரின் முன் இந்து, கிறிஸ்துவ வெள்ளாள, முஸ்லீம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அதை மதப் பாடசாலையாக முத்திரை குத்துவது சரியானதா? தங்களை அறிவுத்துறையினராக கூறிக் கொள்கின்றவர்கள், இப்படி சாதியை பார்ப்பது காட்டுவது வெள்ளாளச் சிந்தனை முறையாகும்.

ஒருவரின் பிறப்பிலான சாதியை அடையாளத்தைக் கொண்டும், சாதிப் பெயரை அடிப்படையாகக் கொண்டும் அவரின் அடையாளத்தைக் (குடும்பியைக்) கொண்டு, சாதியை அடையாளம் காட்டுவதா சாதியம்? இப்படி அடையாளம் காணும் முறை கூட சாதியச் சிந்தனைமுறையாகும்.

உதாரணமாக தங்களை "முற்போக்காளராக" கூறிக்கொள்கின்றவர்கள் "நான் சாதி பார்ப்பதில்லை", "எல்லா வீட்டையும் போய் வாரனான்", "வீட்டுக்குள் பாகுபாட்டை காட்டுவதில்லை"... என்று கூறுகின்றதன் பின்னால் இருப்பது, சாதியம் குறித்த அவர்களின் வாழ்வியலான சிந்தனையே. சாராம்சத்தில் சாதியை பாதுகாக்கின்ற சாதிய சிந்தனை முறையிலான சீர்திருத்தவாதத்தின் பொது வெளிப்பாடாகும். சாதிய சமூக அமைப்பின் ஓப்பிட்டுத் தன்மை வாய்ந்த வேறுபாடுகள் மூலம் சாதிச் சிந்தனை முறையினைப் பாதுகாக்கின்ற சீர்திருத்தவாதமாகும். சாதி சமூக வாழ்க்கை முறையை எதிர்த்து நிற்காத, அதை மாற்றத்துக்கு கொண்டுவர முனையாத, சாதி சமூகத்துக்குள் இணக்கமாக வாழ்கின்ற, நடைமுறையை மறுப்பதன் மூலம் தனக்குள் சாதிச் சிந்தனை இருப்பதை மறுக்கின்ற, சாதிய அடையாளங்களைக் கொண்டு சாதியை காட்டுகின்ற சாதியவாதமாகும். மனிதன் மனிதனான வாழ்கின்ற வாழ்வியல் சூழலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையை சாதிக்கு எதிரான ஒன்றாக காண்பதும் காட்டுவதும் கூட சாதியமாகும்.

சாதிய அடையாளம் என்பதும், அது குறித்த மதிப்பீடும், சமூகத்தின் பொது மதிப்பீடு சார்ந்த வெளித் தோற்றம் அவ்வளவு தான். இதேபோல் நான் சாதி பார்ப்பதில்லை என்பது சாதிய அடையாளங்களை எதிர்ப்பதும், ஓப்பிட்டளவிலானதே ஓழிய இதுவும் சாதியமாகும்.

சாதியம் வெறும் வெளித்தோற்றம் சார்ந்த புறநிலையான கூறல்ல. சாதியம் அகநிலையானது. உற்பத்தி, உற்பத்தி உறவுகள், அதன் பண்பாட்டு சமூகக் கூறுகளாக சமூகத்தின் எல்லா தளத்திலும் இயங்குகின்றது. "தமிழர்" என்ற அடையாளம் கொண்ட எல்லா சிந்தனைத் தளத்திலும் இயங்குகின்றது. "தமிழர்" என்ற அடையாளம் மூலம் "மார்க்சியம்" பேசும் போது கூட அதற்குள் இயங்குகின்றது. வெறும் வெளித்தோற்றம் மூலம் சாதியத்தை காண்பது, காட்டுவது அதை எதிர்ப்பது கூட, சாதிய சிந்தனை முறையின் வெளிப்பாடாகும். இப்படி "ஐயர்" "குடும்பி" என்று, சாதியத்தை திரித்துக் காட்டும் சாதிய சிந்தனை முறையாகும்.

இந்தப் படைப்பில் "கறுப்பி" என்ற அடையாளத்தை எடுப்போம். பெயருக்குப் பதில் "கறுப்பி" என்ற பாத்திரம் மூலம் ஆபிரிக்கா மக்களைப் பற்றிய "தமிழரின்" சாதிய சிந்தனை படிமங்களையே இந்தப் படைப்பில் அப்படியே பிரதியாக்கப்பட்டு இருக்கின்றது. "கறுப்பி" என்ற அடையாளம் மூலம், அந்த மக்கள் பற்றிய பொது விம்பம் தக்க வைக்கப்படுகின்றது. கதை சொல்லி, குறித்த பாத்திரம் மூலம் "கறுப்பி" என்ற அடையாளப்படுத்தப்படும் அக உட் கூறுகளை ஆராய மறுக்கின்றது. இங்கு "கறுப்பி" நிறத்தைக் கொண்டு மதிப்பீட்டைத் தாண்டி சாதி, நிற வெறி கூறாக இருப்பதை, இந்தப் படைப்பு தனதாக்கி இருக்கின்றது. "கறுப்பி" கட்சி உறுப்பினராகி விட்டால் எல்லாம் மாறிவிட்டதான பொது பிரமைதான் ஊட்டப்படுகின்றது.

லண்டன் கலவரத்தை "விளிம்பு" மனிதர்களின் கலகமாகத் திரிப்பது

உற்பத்தி, உற்பத்தி உறவுகளின் விளைவு தான் லண்டன் கலவரம். இதுதான் மார்க்சின் மார்க்சியமாகும். சேனனின் வெள்ளாள "மார்க்சியம்" இதை மறுதலிக்கின்றது. அதற்குப் பதில் லண்டன் கலவரத்தை வர்க்கமற்ற "விளிம்பு" மனிதர்களின் நடத்தையாகவும், "பின்நவீனத்துவ" "பின் அமைப்பியலாகவும்", "பெண்ணியமாகவும்" கூட அதை சித்தரிக்கின்றது.

வர்க்க அமைப்பாகாத ஒரு கலவரத்தின் பின்னால் மதவாதம், நிறவாதம், இனவாதம், சுரண்டல், கொடிய ஒடுக்குமுறைகள் தனிமைப்பட்டதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான சமூக குணாம்சங்கள் என்று, சமூகம் மீது அதிருப்த்தியுற்ற மக்கள் கூட்டம் நடத்துகின்ற கலவரம் அதாவது ஓழுங்குபடுத்தப்படாத அராஜகம் வர்க்கம் கடந்தாகி விடாது.

வர்க்க அமைப்பு எங்கும் இருக்கக் கூடிய, வர்க்கங்கள் வர்க்க ரீதியாக அணிதிரளாத சூழலில், தங்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாத உதிரிகளின் வன்முறை வடிவம் தான் லண்டன் கலவரம். இதை "விளிம்புகளின்" கலவரமாக காட்டுவது கலவரத்தை வர்க்கமற்றதாக்குகின்ற புரட்டுவாதமாகும். "வர்க்கமற்ற" தங்கள் ஆளும் வர்க்க அரசியல் சிந்தனை முறையில் இருந்து கொண்டு "விளிம்பு" என்று விழிக்கின்ற எந்தச் சமூகப் பிரிவும் வர்க்க அமைப்பின் உற்பத்தியும், விளைவுமாகும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வர்க்கம் கடந்த மக்கள் கூட்டமல்ல.

தனியுடமை அமைப்பில் தன்னை முன்னிறுத்தி தனித்து வாழ்வதே மானிடமாகவும், மனித சுதந்திரமாகவும் வாழும் நிலையில் தனியுடமையற்று உதிரியாகின்ற தனிமனிதர்கள் தொடங்கி தனிமைப்பட்டுப் போகும் ஒரு சமூகப் பிரிவு வரை சமூகத்தன்மையை (வர்க்க உணர்வற்ற தன்மையை) இழந்து தனித்து விடுகின்றனர். அதாவது தன்னை முன்னிறுத்தி தனித்த தன்மையானது சொத்துடமை சார்ந்த சமூகமாக இயங்குகின்ற போது, சொத்துடமையற்ற சூழலில் சமூகத்தில் இருந்த அன்னியமாகி விடுகின்றனர். தன்னை சொத்துடமையற்ற சமூகமாக (வர்க்க உணர்வுள்ளவர்களாக) அணிதிரள்வதில் ஏற்படும் பிறழ்ச்சியானது, தனியுடமைக் கண்ணோட்டம் சார்ந்த உதிரி வர்க்க தன்மையைப் பெறுகின்றனர். இவர்கள் வர்க்கமற்ற "விளிம்புகள்" அல்ல. மாறாக தனியுடமைக் கண்ணோட்டம் கொண்ட, அதாவது உதிரி வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட சமூகத் தன்மையற்று தனிமைப்பட்டுப் போன பிரிவுகளாகும்.

உதிரி வர்க்க மனப்பான்மை கொண்ட சமூக உறுப்புகள் அதாவது தனது சமூகத் (வர்க்க கூட்டு உணர்வு) தன்மையை இழந்த நிலையில் கலவரத்தில் ஈடுபடும் போது மொத்த சமூகம் மீதான அராஜகத்தை கைக்கொள்கின்றது. சமூக நோக்கற்ற உதிரியான தனிப்பட்ட சம்பவங்கள் தொடங்கி கலவரம் வரை, சமூகத்தன்மையை இழத்தல் (வர்க்க உணர்வை இழத்தல்) இதற்கான அடிப்படையாக இருக்கின்றது. வர்க்கத் தன்மையை இழந்த உதிரித்தனம் என்பது, வர்க்கப் போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனத்தினது விளைவுகளின் ஒரு பகுதியாகும். வர்க்கப் போராட்டங்கள் கைவிடப்பட்ட சமரசங்களினால், அதிருப்தியுற்று அந்நியமான மனிதர்களின் நடத்தையாகும். இது வர்க்க அமைப்புகளின் விளைவுகளாகும்.

சமூக (வர்க்க) உணர்விழந்த மனிதனின் நடத்தையை "விளிம்பு" மனிதனின் செயலாக பார்ப்பதும், காட்டுவதும், வர்க்கமற்ற மனிதர்களின் நடத்தையாக வருணிப்பதும், வர்க்க அமைப்பை மறுக்கின்ற ஆளும் வர்க்கத்தன்மை கொண்ட அரசியலாகும். "தமிழன்" அடையாளத்தை உயர்த்தும் சேனன் போன்ற "தமிழ் தேசியவாதிகளின்" வெள்ளாள "மார்க்சியமாகும்;'.

சமூகத்தில் உள்ள வெவ்வேறு பாத்திரங்களை, அவர்களின் வாழ்க்கையைச் சுற்றிய நிகழ்வுகளை கதையாக கூறுவதால் அது கலையாகிவிடாது. கதைக்குரிய பாத்திரங்களை வர்க்கம் கடந்த "விளிம்புநிலை" மனிதர்களாக விழிப்பது, இந்தத் தனியுடமையிலான வர்க்க அமைப்பின் விளிம்பாக காட்டுவது இந்த தனிவுடமை அமைப்பை பாதுகாப்பதாகும்.

உற்பத்தி, உற்பத்தி உறவுகளுக்கு வெளியில் மனிதர்களின் நடத்தையை அப்படியே கதையாக சொல்வது, இருக்கின்ற சமூக அமைப்பின் பிரதிதான். வலதுசாரியத்தின் நடத்தைகளை எதிர்ப்பதன் மூலம் இரக்கப்படவும் பிச்சை போடவும் கோருகின்றது.