Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உலகம் அழியப் போகின்றது!

உலகம் அழியப்போவது பற்றி நாங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கலாம். ஆன்மீகவாதிகள் (மதவாதிகளும் - எதிர்காலம் பற்றி ஆரூடம் கூறுவோரும்) உலக அழியப்போவது பற்றி அடிக்கடி கூறுவதால், நாத்திகவாதிகளாகிய (மார்க்சியவாதிகள்) நாங்கள் கூறுவது முரணாக இருக்கலாம். இயற்கை அழிவைக் காட்டி உலக அழிவு பற்றி ஆன்மிகவாதிகள் கூறும் போது, அதை கடவுளின் கோபமாக வர்ணிக்கின்றனர். முதலாளித்துவத்தின் இடத்தில் கடவுளை வைப்பதன் மூலம், புவியை அழிப்பவனை பாதுகாக்கும் ஆன்மிகவாதிகள், புவியின் அழிவை வரவேற்கின்றான்.

புவியை வெப்பமடைய வைப்பதன் மூலம் அழிவை ஏற்படுத்தும் முதலாளித்துவத்தை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு என்பதும், அழிவை தவிர்க்க முடியும் என்பதும் மற்றொரு எதார்த்தம்.

உலகம் அழியப்போவது பற்றி நாம் கூறும் போது, இது எங்கள் சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல. 1960 இல் புவி வெப்பமடைவதைப் பற்றி சூழலியல் விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கையை 50 வருடமாக அலட்சியப்படுத்திய மூலதனம், இன்று உலகம் வெப்பமடைவதை விவாதிக்க மீண்டும் பாரிஸ்சில் கூடியது. உலக அழிவு பற்றியதே, இந்த 21வது சர்வதேச மாநாட்டின் ("COP 21") உள்ளடக்கமாகும். இந்த மாநாடானது உலக அழிவைக் குறைப்பது பற்றி அக்கறை எடுத்ததன் மூலம் உண்மையை மூடிமறைத்தனர்.

இதற்காக 7000 பிரதிநிதிகளையும், 10000 பார்வையாளர்களையும், 3000 பத்திரிகையாளர்களையும், 90000 (இணைய - தொலைபேசி) சர்வதேச இணைப்புகளை ஒருங்கிணைத்த இந்த சர்வதேச மாநாடு, அண்ணளவாக 1900 கூட்டங்களை நடத்தியது. உலக அழிவு பற்றி அறிவுபூர்வமாக சூழலியல் விஞ்ஞானிகள் கண்டடைந்த போதும், உண்மையை மூடிமறைத்து, அதைத் தணிக்கின்ற முதலாளித்துவ பித்தலாட்டத்தை நடத்தினர். உலக வெப்பநிலையை 1.5 முதல் 2 பாகை செல்சியஸ்க்குள் குறைப்பது என்ற அதன் முடிவு, இனி அதிகரிக்கவுள்ள 5 பாகையை குறைப்பது பற்றியதே. இன்றைய வெப்பநிலையை 2 பாகையால் குறைப்பதோ அல்லது இருப்பதை பேணுவதோ அல்ல.

இவர்கள் எடுத்த முடிவுப்படியே, இன்று இருக்கும் உலகம் 2050 இல் இருக்காது என்பதும், 2100 இல் எதுவுமே இருக்காது என்பதை இந்த மாநாடு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதை தடுத்த நிறுத்த, தேவையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியும், தேவையின் பாலான நுகர்வையும் உலகம் தெரிவு செய்ய வேண்டும். இதை நிராகரித்து செல்வத்தை குவிப்பதையே நோக்காகக் கொண்ட இன்றைய உற்பத்தி முறையானது, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100 இல்) உலக வெப்ப நிலையானது, இன்று இருப்பதைவிட 5 பாகை செல்சியஸ்சால் அதிகரிக்கும்.

2050 இல் சனத்தொகையானது 2000 மில்லியனால் (200 கோடியால்) அதிகரிக்கும் அதேநேரம், புவி வெப்பமடைவதால் மக்கள் நிலத்தை இழந்து அகதியாகும் எதார்த்தமும், தவிர்க்க முடியாத மனித அவலங்களுமே விளைவாக இருக்கின்றது. உலகத்தின் இன்றைய எல்லைகள் இருக்காது. மனித நுகர்வுக்குரிய விவசாயத்தின் பெரும்பகுதி அழிந்துவிடும். அதிக அளவில் நிலங்கள் வரட்சியைச் சந்திக்கும். வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாகும். கடல் மட்டத்தின் அளவு அதிகரிக்கும். பல உயிரினங்கள் அழியும். வாழ்வுக்கான மனித யுத்தங்கள் அதிகரிக்கும். இப்படி பற்பல தொடர் நிகழ்வுகளுக்கு முதலாளித்துவத்தில் தீர்வு இருக்காது.

இந்த அழிவைக் குறைக்கவே, அழிவை விளைவிப்பவர்கள் பாரிஸ்சில் கூடினர் என்பதும், 2 பாகை செல்சியஸ்க்குள் வெப்ப அதிகரிப்பை மட்டுப்படுத்துவது பற்றி, மாநாட்டு முடிவுகள் முன்வைத்திருக்கின்றது.

தனிவுடமையைப் பாதுகாக்க எடுத்த முடிவுகளே, புவி வெப்பமடைவதை பற்றிய அதன் தீர்வு

முதலாளிகள் சார்பாக கூடிய அரசுகள், செல்வத்தைக் குவிப்பதை நோக்காகக் கொண்ட உற்பத்தியைப் பாதுகாக்கவும், அதற்காக உற்பத்தியின் வேகத்தை தொடர்ந்து அதிகரிக்கவும், அதே வேகத்தில் நுகர்வை செய்வதை உறுதி செய்த மாநாடு, இதனால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தக் கோருகின்றது.

இந்த நூற்றாண்டின் இறுதியில், அதாவது 2100 இல் குறைந்தது 5 பாகை செல்சியஸ்சாக அதிகரிக்கவுள்ள வெப்பநிலையை, 1.5 க்கும் 2 பாகைக்கும் இடையில் மட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தைப் போட்டு இருக்கின்றது. இதற்காக 2020 இருந்து வருடாந்தம் 100 மில்லியன் (10000 கோடி) டொலரைக் கொண்டு நிதியை ஒதுக்குவதற்கு இணங்கி இருக்கின்றது. இதை இலாபத்துக்கான புதிய முதலீடாகவும் - மானியம் மூலம் கொழுக்கும் புதிய துறையாகவும் மாநாடு முன்னிறுத்தி இருக்கின்றது. அதேநேரம் 2100 இல் கரியமில வாயு இயற்கையாகவே உறிஞ்சுவதற்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவது பற்றியும், கைத்தொழில் புரட்சிக்கு முந்தைய இயற்கை நிலையை எட்டுவது பற்றியும் கூட பேசுகின்றது. இதற்காக இயற்கையான தாவரங்களையும், சக்தி பயன்பாட்டில் மாறுதலைக் கொண்டு வருவது பற்றியும் அறிக்கையிடுகின்றது.

இந்த நிலையை உருவாக்க உலகளவிலும், நாடு தளுவியளவிலும் சட்டரீதியான அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுப்பது பற்றி பேசுகின்றது. 1.5 முதல் 2 பாகை செல்சியஸ் அதிகரிப்பால் கடலில் மூழ்கும் பகுதிகளுக்கு, நிதி ஆதாரத்தைப் பயன்படுத்துவது பற்றி பேசுகின்றது.

இந்த பின்னணியில் ஏகாதிபத்திய ஊடகங்கள் இதை மாபெரும் சாதனையாக காட்டியும், மக்கள் பற்றி அரசுகளின் அக்கறையாகவும் இட்டுக்காட்டி, இதற்கு இலவச விளம்பரம் செய்கின்றது. இந்த எல்லைக்குள் தான், மனிதன் இது தொடர்பான புரிதலை கொள்ளுமாறு காயடித்திருக்கின்றது.

புவி வெப்பமடைவதைத் தடுக்கும் முதலாளிகளின் ஒப்பந்தமானது, பொது மக்களை பார்வையாளராக்கியது. சூழல்வாதிகளைப் புறந்தள்ளியது. தேவையை உற்பத்திக் கொள்கையாகக் கோரும் பொதுவுடமைவாதிகளை எதிரியாக முன்னிறுத்தியது.

இப்படி முதலாளிகளுக்காக அரசுகள் நடத்திய மாநாட்டில் எடுத்த முடிவுகள், எப்படி எந்த நடைமுறை வழிகளில் இனி செல்வத்தை குவிப்பது என்பது பற்றியதே ஒழிய, இயற்கை பற்றியதோ, மானிடம் பற்றியதோ அல்ல. புவி வெப்பமடைவதை எப்படி மூலதனமாக்குவது என்பது பற்றியதே.

செல்வத்தை குவிக்கும் தனிவுடமையே - புவி வெப்பமடையக் காரணமாகும்

தனிவுடமையை தனதாக்கும் முதலாளிகளின் போட்டியே உற்பத்தி முறையாகின்றது. மூலதனத்தை மையப்படுத்திய ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டி, உலக சந்தையில் பொருளைக் குவிக்கின்றது. பொருளை மக்களின் தலையில் திணித்து, அதை நுகர வைக்கும் உற்பத்தி முறையே, புலிவெப்பமடையக் காரணமாக இருக்கின்றது.

தேவையான உற்பத்தி, தேவையான நுகர்வு என்பதை மறுத்து, எதை, எப்படி, எந்தளவில் நுகர வேண்டும் என்பதை, செல்வத்தைக் குவிக்கின்ற முறை தீர்மானிக்கின்றது. எது மூலதனத்தைக் குவிக்க தேவையோ அது விளம்பரமாக, அதையே மனித அறிவாக, அதையே மானிடப் பண்பாடாக மாற்றிவிடுகின்றது. இவை அனைத்தும் சமூக அமைப்பு முறையாகி விடுகின்றது. பாரிஸ் தீர்மானம் இதைத்தான் மீள முன் மொழிந்து இருக்கின்றது.

புவி வெப்பமடைவதற்கு காரணமான இருக்கும் இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை பாதுகாக்க, உலக முதலாளிகள் சார்பாக அரசுகள் நிர்வாணமாக களமிறங்கியது. அதேநேரம் மக்கள் தங்களை எதிர்ப்பை வெளியிட முடியாத வண்ணம், பயங்கரவாதத்தின் பெயரில் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியது. போராட்டங்களை தடைசெய்ததும், இதை மீறி போராடியவர்கள் மீது அரச வன்முறையை ஏவி ஒடுக்கியது.

இந்தப் பின்னணியில் சட்டரீதியானதும், கண்காணிப்புக்கு உட்பட்ட இந்த உடன்பாட்டுக்கு, பன்னாட்டு முதலாளிகளும், ஏகாதிபத்தியமும் பணம் வழங்க ஒப்புக்கொண்டு இருக்கின்றது. சக்தி உற்பத்தியில் அதிக காபனீர் ஒக்சைட்டை வெளியேற்றும் பெற்றோலிய நாடுகளின் எதிர்ப்பு, அதிக சனத்தொகை கொண்ட நாடுகளின் எதிர்ப்பு, வறியநாடுகளின் எதிர்ப்பை மீறி, பணக்கார நாடுகள் ஏழை நாடுளுக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.

புவி வெப்பமடைய காரணமான கரியமில வாயு வெளியேற்றம் - நுகர்வின் வெளிப்பாடே

சக்தியை பயன்படுத்தி உற்பத்தியை யார் நுகர்கின்றனரோ, அவர்கள் புவி வெப்பமடைய காரணமாக இருக்கின்றனர். உலக நாடுகள் ஏற்றத்தாழ்வானதாகவும் - மக்கள் மேடு பள்ளமாக நுகரும் சூழலில், புவி வெப்பமடைவதற்கு மனிதனை பொதுமைப்பபடுத்த முடியாது. அதிகமான கரியமல வாயுவை வெளியேற்றும் பெற்றோலிய உற்பத்தி நாடுகளையோ, மலிவான கூலியைக் கொண்ட நாடுகளின் உற்பத்தி செய்து வாழும் பணகார நாடுகள் ஏழை நாடுகள் வெளியேற்றும் கரியமில வாயுவுக்கு, அவர்களை பொறுப்பேற்கக் கோருவதும் நடக்கின்றது. நுகர்பவன் அதை பொறுப்பேற்க மறுக்கின்ற வக்கிரம்.

இங்கு இந்தத் தரவுகள் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை விளக்க முனைகின்ற முதலாளித்துவ பித்தலாட்டமானது, நாடுகளின் நிலப்பரப்பின் அளவையும், மக்கள் தொகையையும், உற்பத்திக்கு என்ன நடக்கின்றது என்பதையும் மூடிமறைக்கின்றது. இதன் மூலம் யார் இதை நுகர்கின்றனர் என்பதையும், யார் இலாபங்களை அடைகின்றனர் என்பதை மானிட அறிவின் முன் இருட்டடிப்பு செய்கின்றனர்.

2012 இல் உலகளவில் சராசரியாக 6.8 தொன் கரியமில வாயு ஒரு நபர் வெளியேற்றிய சூழல், சீனாவில் தனிநபர் 7.9 தொன்னாகவும், அமெரிக்காவில் 18.5 தொன்னாகவும், ஐரோப்பாவில் 8.2 தொன்னாகவும் இருக்கின்றது. சீனாவின் 7.9 சார்ந்த நுகர்வுடன், 8.2 கொண்ட ஐரோப்பியனின் நுகர்வை ஒப்பிட்டால் யார் பொறுப்பு என்பது வெளிப்படையானது. 6.8 உலக சராசரியாக இருக்க, ஏழை நாட்டின், ஏழையின் நுகர்வுடன் பொருந்தாத பொது பின்னணியில், புவி வெப்பமடையும் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவம் எப்படிப்பட்டது எனப் புரிந்து கொள்ள, 1990 இல் அபிவிருத்தி அடைந்த நாடுகள் 14 மில்லியன் தொன் கரியமில வாயு வெளியிட்ட நிலையில், அதை 2012 இல் 13 மில்லியன் தொன்னாக குறைந்தது. வளர்ந்து வரும் நாடுகள் 7.5 மில்லியன் தொன் கரியமில வாயுவில் இருந்து 2012 இல் 20 மில்லியன் தொன்னாக அதிகரித்தது. இங்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் (மேற்கு) தொழில்நுட்ப நாடுகளாக, அதை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக மாறி, வளர்ந்து வரும் நாடுகளை தனக்கான உற்பத்திக் கூடங்களாக மாற்றியதன் விளைவு இது. இவை அனைத்தும் உலக வங்கியின் நிபந்தனையுடன் கூடிய கடன் கட்டளைக்கு கீழ் நடக்கின்றது.

இந்த வர்க்க சமூக அமைப்பில் 2000ம் ஆண்டில் உலகளவில் 37 மில்லியன் தொன் கரியமில வாயு வெளியேற்றியது என்றால், இது 2012 இல் 47 மில்லியனாக அதிகரித்துள்ளது. அண்ணளவாக 12 வருடத்தில் 10 மில்லியனால் (25 சதவீதத்தால்) அதிகரித்துள்ளது. உலகம் எதை இன்று அபிவிருத்தி என்று கூறுகின்றதோ, எதை வேலை வாய்ப்பு என்று அறிவிக்கின்றதோ, தனி மனித முன்னேற்றம் எதைக் காட்டுகின்றதோ, அது இயற்கையை அழிக்கின்றதும், புவியை வெப்பமடைய வைக்கின்றதுமான நடவடிக்கையாக இருக்கின்றது. தனிமனித நுகர்வைத் தூண்டி, அதை தனிமனித தெரிவாகவும் சுதந்திரமாகவும் பிரகடனம் செய்து, மூலதனத்தைக் குவிக்கின்ற உற்பத்தியின் பொது விளைவு தான், உலகத்தை இன்று அழிவின் விளம்பில் கொண்டு வந்திருக்கின்றது.

இன்று சக்தி பயன்பாட்டில் எந்த வகையான நாடுகள் அதிகம் நுகர்கின்றதோ, அதிலும் எந்த வர்க்கம் அதிகம் நுகர்கின்றதோ, அவர்களே புவி வெப்பமடையக் காரணமாக இருக்கின்றனர் என்ற உண்மையை மறுதளித்து, அனைவரையும் சமமாகக் காட்ட முன்னிறுத்தும் மோசடியை இனம்கண்டு கொள்ள தரவுகள் உதவும்.

இன்று ஏகாதிபத்தியங்கள், பன்னாட்டு முதலாளிகள், அதிகம் நுகரும் வர்க்கம், மலிவான கூலியைக் கொண்ட நாடுகளில் உற்பத்தியைச் செய்கின்ற உலக ஒழுங்கினை உருவாக்கி இருக்கின்றது. அதேநேரம் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யும் நாடுகளாக இருந்தபடி, புவி வெப்பமடைவதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்கின்றனர்.

இதேபோல் இன்று வரி விலக்கின்றியும், ஏழைகளில் இருந்து விலகி பணக்காரர்கள் வாழ்கின்ற அதிசொகுசான அதீத நுகர்வைக் கொண்ட பிரதேசங்களையும், நாடுகளையும் உருவாக்கியுள்ளது. இதே போல் சுற்றுலாமையங்கள் நிறுவப்படுகின்றது. இந்தப் பிரதேசங்கள் உலகைச் சூடாக்குவதில் முக்கிய இடத்தை வகிப்பதுடன், இதன்பின் பன்னாட்டு மூலதனம் இயங்குகின்றது.

இன்று மூலதனத்தைப் பெருக்க உலக வங்கியின் செயற்திட்டங்கள் தான் பூமி வெப்பமடைய ஊக்கியாக இருக்கின்றது. இதை உருவாக்கிய ஏகாதிபத்தியங்கள், இதைப் பாதுகாக்க பாரிசில் கூடினர் என்பதே உண்மை.

இந்த பின்னணியில் புதிய தொழில்நுட்பங்கள் மூலமே சக்தியை பயன்படுத்தக் கோரும் ஏகாதிபத்திய ஒப்பந்தம், சாராம்சத்தில் மேற்கு நாடுகளை தொழில்நுட்ப ரீதியாக சார்ந்து இயங்குமாறு உலகைக் கோருகின்றது. இங்கு தேவைக்கு சக்தி என்பதை நிராகரித்து, தொடர்ந்து செல்வத்தை குவிப்பதற்கு மாற்று சக்தி பற்றிப் பேசுகின்றது.

சக்தியை பெறும் முறைமாற்றம் தீர்வா?

புவி வெப்பமடைவதற்கு மனிதனே காரணம் என்று கூறுவது மோசடி. மனித நுகர்வே என்ற கற்பிப்பது பித்தலாட்டம். எது உண்மையோ அதை மூடிமறைத்து, அனைவரையும் குற்றவாளியாக்குவதே, முதலாளித்துவ சிந்தனை முறையாகும்.

இங்கு உற்பத்தியின் நோக்கமும், அது உருவாக்கும் நுகர்வுக் கொள்கையும் புவி வெப்பமடைய காரணமாக இருக்கின்றது. இதனால் இதைக் கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்வி அடிப்படையாக எழுகின்றது. இங்கு தனிவுடமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையே இதற்கு காரணமாக இருக்கின்றதே ஒழிய, சமூக உடமையை அடிப்படையாகக் கொண்ட தேவைக்கான உற்பத்திமுறையாக இருக்கப் போவதில்லை.

மனிதனே காரணம் என்பது பொதுப்புத்தி மூலமான அறியாமையைத்தான், இங்கு சமூகம் மீது திணிக்கப்படுகின்றது. தனிவுடமை மூலம் செல்வத்தைக் குவிக்க கையாளும் சமூக அமைப்பு முறையே புவியை வெப்பமடைய வைக்கின்றது. நுகர்வுக்கு பதில் தேவையின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தி என்பது செல்வத்தை குவிப்பதற்குரியதாகி விட்ட பின், இந்த முறையை மாற்றாது புவி வெப்பமடைவதை தடுக்க முயல்வது பற்றிய பேசுவது மனித இனத்தை காயடிப்பது தான்.

இந்த முறையை மாற்றாமல் புவி வெப்பமடைவதைத் தடுப்பது எப்படி என்பதையே, உலக முதலாளிகளுக்காக அந்த வர்க்கத்தின் அரசுகள் சிந்திக்கின்றன, அதை செயற்படுத்துகின்றன.

இவர்களைப் பொறுத்தவரையில் பூமியில் மனிதன் வாழ முடியாது அழிந்தாலும் பரவாயில்லை, தனிச் சொத்துடமை குவிக்கும் மூலதனத்தின் புனிதம் பாதுகாக்கப்படுவது முக்கியம்.

இந்த பின்னணியில் இருந்து சக்தியை பெறும் முறைதான் பூமி வெப்பமடையக் காரணமே ஒழிய, உற்பத்திக்கான நோக்கமும், நுகர்தல் முறையும் காரணமல்ல என்கின்றது. சக்தி பெறும் முறையை மாற்றினால் வெப்பமடையும் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறுகின்றது. 2 பாகை அதிகரிப்புக்குபட்ட அழிவுடன் பூமியை பாதுகாப்போம் என்று நம்புமாறு முதலாளித்துவ விளக்கமும் அதன் விளம்பரம் போன்று போலியானதே.

உற்பத்திக்கான நோக்கம் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருக்கின்ற அதேநேரம், மனித தேவை மறுக்கப்பட்டு செல்வத்தைக் குவிப்பதே உற்பத்தியான பின், அதையே கேள்விக்குட்படுத்;தாது, சக்தி முறை மாற்றம் மூலம் தீர்வு என்று கூறியதன் மூலம், முதலாளிகளின் பொது வெற்றியாக்கி இருக்கின்றது.

உற்பத்தியும், நுகர்வும் ஒரே சீராக இயந்திரத்தின் வேகத்தில் தொடர்ந்து அதிகரிப்பதற்குரிய ஏற்பட்டை அங்கீகரித்தபடி, உற்பத்திக்கான சக்தி பயன்பாட்டின் தொழில்நுட்பத்தில் முறைமாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம், வெப்ப அதிகரிப்பை கட்டுப்படுத்துவதென்பது, முதலாளித்துவ வக்கிரத்தை மனித குலத்தின் மேல் திணித்து விடுகின்றது.

மாற்றுச் சக்திப் பயன்பாட்டை எடுத்தால் சூரிய ஒளி மூலம் பெறும் முறையானது, பாரியளவில் புற்றுநோயை உருவாக்கவல்லது. அவ்வாறு சக்தி பெற அமைக்கப்படும் வயல்களுக்கு எதிரான போராட்டங்களை இன்று மக்கள் நடத்துகின்றனர். அதுமட்டுமல்ல விவசாய நிலங்களை ஆக்கிரமித்தும், மானியம் பெறும் சக்தி உற்பத்தி இலாபம் தரும் தொழிலாக மாறி விவசாயத்தை அழித்து வருகின்றது. பல பக்கவிளைவுகள் கொண்டவைதான்.

மாற்று சக்தி என்பது மனித தேவையின் பால் அல்ல, செல்வத்தைக் குவிப்பதற்கான ஒன்றாக முன்தள்ளப்படுவதன் மூலம், மற்றொரு அழிவுக்கு இது வழிசெய்கின்றது.

புவி வெப்பம் அடைவதனாலான விளைவு

புவி வெப்பமடைவதற்கு காரணமான முதலாளிகள் சார்பாக, பாரிஸில் கூடிய அரசுகள் எடுத்த தீர்மானம் வெப்பத்தை குறைப்பதல்ல. மாறாக இன்று இருப்பதை விட 2 பாகை செல்சியஸ்க்கு வெப்பநிலையை அதிகரிக்க வைப்பதன் மூலம் உலகத்தை அழிப்பது தான்.

அவர்கள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய 2100 இல் 2 செனலசியஸ் பாகையால் வெப்பம் அதிகரிக்கும் போது, கடல் மட்டம் 40 சென்றிமீற்றரால் அதிகரிக்கும் என்கின்றது. அதேநேரம் 150 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்கின்றது. இது 3 செல்சியஸ் பாகையால் அதிகரிக்குமாயின், கடல் மட்டம் 60 சென்றிமீற்றரால் அதிகரிக்கும் அதேநேரம், 500 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றது. இது 4,5 செல்சியஸ் பாகையால் அதிகரிக்கும் போது கடல்மட்டம் 80 சென்றி மீற்றரால் அதிகரித்து, 1200 கோடி மக்கள் பாதிக்கப்படுவர்கள். பாரிஸ் தீர்மானம் உலகத்தை அழிப்பது தானே ஒழிய பாதுகாப்பதல்ல.

இன்று கடல் மட்டத்தில் இருந்து ஒரு மீற்றருக்கு கீழாக வாழும் மக்கள் தொகை 400 மில்லியனாகும். அதேநேரம் உலகின் மிகப்பெரிய 20 நகரங்களில், அரைவாசி நகரங்கள் இந்தக் கடல் மட்டத்தின் கீழ் இருக்கின்றது. குறிப்பாக முக்கிய நகரமான நியூயோர்க், பம்பாய், கொங்கொங், சங்காய்... போன்ற பல நகரங்கள், கடலின் மட்டத்தில் கீழ் உள்ள நிலையில், 2 செல்சியஸ் வெப்பத்தால் கடல் மட்டம் அதிகரிக்கும் போது கடலில் பல பாகங்கள் புதைந்துவிடும்.

உதாரணமாக 2 பாகை செல்சியஸ்குள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தினால் கூட, 2050 இல் பங்களாதேசத்தில் 13 முதல் 40 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து விடுவர்கள். அதேநேரம் 17 சதவீதமான நிலம் நீரில் புதைந்துவிடும்.

2 பாகை செல்சியஸ் என்ற வெப்பநிலை அதிகரிப்பால் கடல் மட்ட அதிகரிப்பானது, 2050 இல் 25 கோடி பேரை வாழ்விடமற்ற அகதிகளாக்கிவிடும். 2 பாகை செல்சியஸ்சாக குறைக்க முனையும் போது உலக நுகர்வு உடனடியாக 0.04 முதல் 0.14 சதவீதம் குறையும் அதேநேரம், இது படிப்படியாக 1.6 முதல் 3 சதவீதமாக குறையும். இந்த வெப்பநிலை அதிகரிப்பானது, இயற்கை சார்ந்த விளைவால் உலக உற்பத்தி 5 முதல் 20 சதவீதமாக குறையும்.

புவி வெப்பமடைவதால் 2030 இல் 10 கோடி பேர் மேலதிமாக வறுமைநிலையை அடைவார்கள் என்று உலக வங்கி கூறுகின்றது. இன்று வெப்பம் காரணமாக மொத்த விவசாய நிலத்தில் 2 சதவீதம் குறைந்து இருக்கின்றது. அதேநேரம் கடந்த 15 வருடத்தில் கோதுமை உற்பத்தி குறைந்துமுள்ளது. 2 பாகை செல்சியஸ் அதிகரிக்கும் போது 2050 இல் பல பகுதிகளின் பல்வேறு வேளாண்மை உற்பத்திகள் 30 சதவீதத்தால் குறைந்துவிடும்.

புவி வெப்பமடைவதால் ஏற்படும் இயற்கை அழிவால் 2008 இல் சராசரியாக 166 மில்லியன் மக்களைப் பாதித்த நிலைமையானது, 2014 இல் 27.5 மில்லியன் மக்களைப் பாதிக்கின்ற அளவுக்கு அதிகரித்து செல்லுகின்றது. எதிர்கால விளைவானது பயங்கரமானது.

1901 ஆண்டு இருந்த கடல்மட்டத்தை விட 2010 இல் 14 சென்றி மீற்றரால் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. 1979 இல் இருந்த மொத்த உறைபனியில் 9.4% முதல் 13.6% பரப்பளவு இன்று காணாமல் போய்விட்டது. அவை உருகிக் கடல் நீராகி உயர்வடைந்துள்ளதுடன் வாழ்விடத்தை புதைத்து வருகின்றது. இதற்கு இயற்கையோ, மனிதன் கற்பித்த கடவுளோ காரணமல்ல.

2050 ஆம் ஆண்டு கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனித்தகடுகள், அதாவது உலகிலுள்ள பெரும்பாலான பனிக்கட்டிகளில் 60 சதவீதத்தை முதலாளித்துவ உற்பத்தி அழித்து கடலாக்கிவிடும்.

1880 இல் உலகில் இருந்த நிலையைவிட இன்று குறைந்தளவு 1 பாகை செல்சியஸ்யால் வெப்பம் அதிகரித்துள்ளது. இது சில பிரதேசங்களில் 3 முதல் 4 பாகை செல்சியஸ்வாகவும், அதைவிடவும் கூட அதிகரித்து வருகின்றது. இந்த அதிகரிப்புக்கு முந்தையதான, அதாவது தொழிற்புரட்சிக்கு முன்பான 10000 - 17000 ஆண்டுக்கு முன் இருந்த உறைபனியானது, 4 முதல் 5 பாகை செல்சியஸ்சால் வெப்பநிலை அதிகரித்த போது, கடல் 120 மீற்றரால் உயர்ந்ததை ஒப்பிட்டு அணுகுவதன் மூலம் அழிவைப் புரிந்துகொள்ள முடியும். தொழில் புரட்சிக்குப் பின்பானதும் 2100 ஆண்டில், இன்றைய நிலை தொடருமாயின் 6 பாகை செல்சியஸ்சால் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதை பாரிஸ் மாநாடு ஒத்துக்கொண்டு 2 பாகையால், அதாவது தொழிற்புரட்சிக்குப் பின்பு 3 பாகையாக கட்டுப்படுத்துவதைப் பற்றி பேசுகின்றது. முந்தைய 6 பாகை அதிகரிப்பானது 120 மீற்றரால் கடல்மட்டத்தை உயர்த்திய எதார்த்தம் ஏற்படுத்தும் உண்மை, அழிவைப் புரிந்துகொள்ளப் போதுமானது.

உதாரணமாக 1986 - 2005 இடைப்பட்ட 20 வருடத்தில் வெப்ப அதிகரிப்பு 0.3 பாகையாக இருந்த நிலைமையானது, இதே 20 வருடத்தை அடிப்படையாகக் கொண்ட 2081-2100 இல் எடுத்தால், 4.8 பாகையால் வெப்பம் அதிகரிக்கும்.

உயிரினம் வாழ முடியாத பூமி உருவாகும். அதாவது, 2 பாகை அதிகரிக்கும் போது 13 உயிரினங்களில் ஒரு உயிரினம் அடியோடு அழியும். தென் அமெரிக்காவில் உயிரினங்கள் அடியோடு அழியும் விகிதம் 23 சதவீதமாக இருக்கும். தற்போது வளிமண்டலத்தில் கரியமில வாயு கலக்கப்படும் அளவு நீடித்தால், இந்த நூற்றாண்டின் முடிவில் உலகில் இருக்கும் உயிரினங்களில் 6 இல் ஒன்று முற்றிலுமாக அழிந்துவிடும்.

தொடர்ந்து செல்வத்தை குவிக்கும் முதலாளிகளின் பாரிஸ் தீர்மானமும் - அதற்காக மனித நுகர்வைத் தூண்டும் வக்கிரமும், புவி வெப்பமடைவதை தடுத்து நிறுத்தாது பூமியை அழித்துவிடும்.

வர்க்கப் போராட்டமும் - இயற்கையும்

இயற்கையின் பொது உண்மை தான் மார்க்சியம். வர்க்கப் போராட்டம் மூலம் தேவைக்கு உற்பத்தியை முன்வைக்கும் சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தின் உண்மையை இயற்கை தன் அழிவு மூலம் கோருகின்றது. இயற்கை, இலாபத்துக்கான உற்பத்தியை நிறுத்து இல்லையெனின் உயிர்வாழ முடியாது அழிந்து விடுவாய் என்ற எதார்த்தத்தை இன்று முன்னுக்கு கொண்டு வந்திருக்கின்றது. வர்க்கப் போராட்ட உண்மையும், புவி வெப்பமடைவதன் மூலமான உலக அழிவும், இன்று ஒரே நேர்கோட்டில், ஒரு புள்ளியை நோக்கி, எதிர் எதிர் திசையில் இருந்து, ஒன்றை ஒன்று நோக்கி முன்னேறுகின்றது. செல்வத்தை குவிப்பதற்கான மாற்று சக்தி பயன்பாடு என்பது, இதை முன்னுக்கும் பின்னுக்குமாக தள்ளும் செயலே ஒழிய, இயற்கையைப் பாதுகாக்கும் தீர்வல்ல.

தேவைக்கான உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டத்தின் வெற்றிதான், உலகம் வெப்பமடைவதைத் தடுக்கும் மையப் புள்ளியாக இருக்கும். இயற்கையைப் பாதுகாக்கும் வண்ணம், மனிதன் தன் தேவை சார்ந்து வாழும் தெரிவாக, வர்க்கமற்ற சமூகம் மட்டும் தான் தெரிவாக இருக்கின்றது. அதை உருவாக்குவதன் மூலம் தான், இயற்கையை சார்ந்து மனிதன், மனிதனான வாழ முடியும்.