Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரஞ்சு கொடி - ருசியா ஆதரவு மூலம், பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளல்!

சமூக வலைத்தளங்கள் தொடங்கி உலகெங்கும் உள்ள பிரபலமான அடையாளங்கள் மீது பிரஞ்சுக் கொடியைக் கொண்டு அடையாளப்படுத்தியன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சிந்தனைமுறையை உருவாக்கியுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு யுத்தத்தை பிரகடனம் செய்துள்ள பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரஞ்சுக் கொடியை பறக்க விடக் கோரியதுடன், தங்கள் யுத்தத்தில் பிற நாடுகளையும் பங்குகொள்ளுமாறு அழைக்கின்றது. பிரிட்டன் யுத்தத்தில் பங்குகொள்ளவுள்ள நிலையில், அதற்கு எதிராக பிரிட்டிஸ் மக்களின் போராட்டமும் நடக்கின்றது. ஆப்கானிஸ்தானையம், ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிரஞ்சு மக்கள், இன்று பிரஞ்சு கொடிக்குப் பின்னால் மந்தையாக்கப்பட்டு இருக்கின்றனர். இவை பயங்கரவாதத்தை ஒழிக்குமா? பிரஞ்சு முதல் ருசியா வரை முன்னெடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம், உண்மையில் பயங்கரவாதத்துக்கு எதிரானதா? இந்தக் கேள்விகள் மூலம் - யுத்தத்தை ஆராய்வோம்.

சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கோரிய மேற்கு ஏகாதிபத்தியம்

சிரியப் பிரச்சனை தோன்றிய பின்னணியே இன்றைய யுத்த நிலைமைகள் தோன்றக் காரணமாகும். சிரியாவில் ஆட்சிமாற்றத்தைக் கோரி மேற்கு ஏகாதிபத்தியமானது, அதற்காக அங்கு பயங்கரவாத வழிமுறைகளைக் கையாண்டது. சிரியா ஆட்சியைக் கவிழ்க்க பயங்கரவாதத்தை அரசியல் வழிமுறையாக முன்வைத்ததுடன், அவர்களைப் புரட்சியாளராக பிரகடனம் செய்தது. இந்தப் பயங்கரவாத செயலுக்காக பணத்தையும், ஆயுதங்களையும் வழங்கியதுடன், உளவு அமைப்புகள் மூலம் நேரடியாகத் தலையிட்டது.

இந்தத் தலையீட்டை நியாயப்படுத்த சிரியா ஜனநாயகத்துக்கு எதிரான நாடாக இருப்பதாக கூறிக் கொண்டு ஜனநாயக ஆட்சியைக் கோருவதற்கு ஆதரவாகவே, தாம் சிரியாவில் தலையிடுவதான ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிக் கொண்டது.

தங்களுக்கு தாங்களே ஜனநாயக வேஷத்தைப் போட்டுக் கொண்ட இவர்கள் மறுபக்கத்தில் ஜனநாயக ஆட்சிக்கு பதில் மன்னர் ஆட்சியைக் கொண்ட சவூதி, குவைத் போன்ற சர்வாதிகார ஆட்சிகளை பாதுகாப்பவராக இருக்கின்றனர். குறிப்பாக இந்த நாடுகளின் துணையுடன் தான், 1970 களுக்குப் பிந்தைய இஸ்லாமிய பயங்கரவாதங்களை ஏகாதிபத்தியங்கள் தோற்றுவித்தன.

இவர்கள் கூட்டாக தோற்றுவித்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், எந்த ஷரியா சட்டத்தை முன்னிறுத்துகின்றனரோ, அதே ஷரியா சட்டத்தைக் கொண்ட மனிதவுரிமையை மறுக்கும் நாடுகளில் சவூதி முதன்மையானது. கொடூரமான தண்டனைகளை வழங்கும் நாடுகளில், மேற்கு ஏகாதிபத்திய கூட்டாளியாக உள்ள சவூதி முதன்மையானது.

மேற்கு ஏகாதிபத்தியம் ஜனநாயகமற்ற சர்வாதிகார ஆட்சியையும், ஷரியாச் சட்டத்தை கொண்ட நாடுகளுடன் நல்வுறவுகளைக் கொண்டுள்ளதுடன், மற்றைய நாடுகளில் ஜனநாயகத்தைக் கோரி எதிர் செயற்பாட்டை கூட்டாக முன்னெடுக்கின்றது. இதற்காக இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்றுவித்து, ஆட்சிகளைக் கவிழ்க்கின்ற வன்முறைகளில் ஈடுபடுகின்றது. இப்படி மற்றைய நாடுகளின் ஜனநாயகமற்ற ஆட்சி மாற்றத்தைக் கோருகின்ற சதியைத்தான் - இன்று ஊடக பயங்கரவாதம் மூலம் மக்களுக்கு முன்வைக்கின்றது.

ஒருபுறம் ஜனநாயகமற்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு - மறுபக்கத்தில் சில நாடுகளை ஜனநாயகமற்ற நாடுகளாக காட்டுகின்ற மேற்கு ஏகாதிபத்திய கொள்கை மற்றும் நடைமுறையை புரிந்து கொள்வதே - இன்றைய அரசியல் கல்வியில் தவிர்க்க முடியாத அடிப்படைகளில் ஒன்றாhகும்.

நாடுகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான ஏகாதிபத்திய முரண்பாடானது - அடிப்படையில் சந்தையைக் கைப்பற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே நடக்கும் போராட்டமாகும். இந்த வரிசையில் தான், கடந்த பத்தாண்டுகளாக ஆப்கான், ஈராக், ஈரான், லிபியா, சிரியா என்று, மேற்கு நாடுகள் தொடரான தலையீடுகளை நடத்தி வருகின்றது.

மேற்கு தமக்கு தேவையான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்த ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி பயங்கரவாத வன்முறையை நடத்துவது வரை - அனைத்தையும் இன்று அரங்கேற்றுகின்றது. தேர்தல் மூலம் வென்ற ஆட்சிகளைக் கவிழ்ப்பதும் (எகிப்து, சிலி), ஆட்சியைக் கைமாற்ற மறுப்பது (அல்ஜிரியா, பொலிவியா) வரை - எங்கும் மேற்கு ஏகாதிபத்தியங்கள் தலையீடுகள் தொடருகின்றது.

பயங்கரவாதம் மூலம் ஆட்சிகளைக் கைப்பற்;ற முனைவதும் - அதில் தோல்வி பெறும் போது - ஏகாதிபத்திய பயங்கரவாதத்துக்கு எதிராக நடந்த யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புகளை முன்னிறுத்தி (உதாரணமாக சிரியா அரசு நடத்திய யுத்தம்) - யுத்தக்குற்றம் குறித்தான பிரச்சாரம் மூலம் அடுத்த கட்ட ஆட்சிக்கவிழ்ப்பு யுத்தத்தினை நடத்துகின்றது.

இங்கு ஜனநாயக விரோத அரசுகளை (உதாரணமாக சிரியா அரசு) தூக்கியெறியும் மக்களின் போராட்டத்தையும், மக்கள் ஆட்சியையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. மாறாக தங்களுக்கான பொம்மை ஆட்சியையே புரட்சியாகக் காட்டுவதும் - அதையே மேற்கு ஏகாதிபத்தியம் கோருகின்றது.

இந்த அரசியல் பின்னணியில் - இதன் தேவையில் இருந்து உருவாக்கப்படும் பயங்கரவாதம் என்பது, ஏகாதிபத்தியத்தின் தொப்புள் கொடியில் தங்கி வாழ்வதும் - அது தனித்து பிரியும் போது - அதற்கு இடையிலான மோதலாகவும் உருமாறுகின்றது. இதுதான் ஆப்கான் முதல் சிரியா வரை நடந்தேறியது. இந்தியாவில் நடந்த சீக்கிய போராட்டம் முதல் ஈழப் போராட்டம் வரை, இந்திய நலனையும் - அதன் பின்னான அழிவையும் இந்தப் பின்புலத்தில் வைத்து காணமுடியும்.

மேற்கு ஏகாதிபத்தியங்கள் முரண்படும் நாடுகள்

தங்கள் ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு முரணான கொள்கைகளைக் கொண்ட நாடுகள் - ஜனநாயகமற்ற நாடுகளாக காண்பிக்கப்படுகின்றது. உலக நாடுகளின் ஜனநாயகம், சுதந்திரம் குறித்து மேற்கு ஏகாதிபத்தியங்களும், ஊடகங்களும் பேசும் போது, குறித்த நாடுகள் மேற்கு ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைக்கு முரண்பட்ட நாடுகளாக இருக்கின்றது என்பதே அரசியல் உள்ளடக்கமாகும். இந்த வகையில் நான்கு வகையான நாடுகளை அவை குறிக்கும்.

1. சோசலிச நாடுகள்: சர்வதேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட - உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியைக் கொண்ட நாடுகள். இந்த வகையில் இன்று உலகில் சோசலிச நாடுகள் எதுவும் கிடையாது

2. தேசியத்தை முன்னிறுத்தும் நாடுகள்: குறிப்பாக ஏகாதிபத்திய நவதாராள பொருளாதார கொள்கைக்குப் பதில், சொந்தத் தேசிய பொருளாதாரத்தைக் கொள்கையாகக் கொண்ட நாடுகள். (உதாரணமாக வடகொரியா, கியூபா, பொலிவியா போன்ற நாடுகள் )

3. நடுநிலையான நாடுகள்: மேற்கு ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதற்கு பதில், அதை தெரிவு செய்வதில் சுதந்திரமாக இருக்க முனையும் நாடுகள். இந்த சுதந்திரமான தெரிவு மேற்கு ஏகாதிபத்தியத்துடன் முரண்பாடாகவும் - மேற்கு அல்லாத ஏகாதிபத்திய நாடுகளின் சார்பு நாடாகவும் மாற்றிவிடுகின்றது.

4. மேற்கு அல்லாத ஏகாதிபத்திய சார்பு நாடுகள்: மேற்கு அல்லாத ஏகாதிபத்தியம் சார்ந்த நாடுகள்

நான்கு வகையான இந்த நாடுகளுக்கு எதிரான மேற்கத்தைய ஏகாதிபத்திய கொள்கையானது, இறுதியில் இதற்கு எதிராக பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. இந்த ஏகாதிபத்திய முரண்பட்ட அரசியல் பின்னணியில் தோன்றி வளர்வது தான் இன்றைய பயங்கரவாதம். உலகமயமாகும் சர்வதேச பொருளாதாரத்தின் முரண்பட்ட பிரிவுகளுக்கும் இடையேயான போராட்டம் - அதன் ஆயுதங்களின் ஒன்றாக பயங்கரவாதம் இருக்கின்றது.

சிரியாவில் நடப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமா?

சிரியாவில் ருசியா, பிரான்ஸ் நடத்தும் யுத்தம் - பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பது பொய். இதே போல் பிரான்ஸ் மக்களை கொன்றதற்கு எதிரான யுத்தம் என்பது மற்றொரு பொய்;. மாறாக மேற்கு - ருசியா ஏகாதிபத்தியதுக்கு இடையிலான யுத்தமே நடக்கின்றது. அது பயங்கரவாதத்தை ஒழிப்பதன் பெயரில் நடக்கின்றது.

இங்கு ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பை ஒழிப்பதற்காக தங்களது யுத்தம் என்று கூட்டாக மேற்கு-ருசியா ஏகாதிபத்தியங்கள்; கூறிய போதும் - உண்மையில் இதில் ஒரு கூறு மட்டுமே உண்மையாகும். மறுபக்கத்தில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையிலான யுத்தமே நடக்கின்றது.

50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ருசியா சிரியாவின் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராகவே - சிரியாவில் மேற்கு ஏகாதிபத்தியம் தலையிட்டு ஆட்சிக்கவிழ்;ப்பை நடத்த முனைந்து தோல்வியடைந்ததும் - பயங்கரவாத ஆயுதக் குழுக்களை தோற்றுவித்ததன் மூலம் - சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு முனைந்தனர். மத அடிப்படைவாதம்; சார்ந்த பயங்கரவாதத்துக்கு ஆயுதமும் பணமும் வழங்கி - ஜனநாயகப் புரட்சியாளராக மேற்கு மகுடம் சூட்டியது. இதன் வளர்ச்சியும் - குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளும் - மேற்கு ஏகாதிபத்திய நலன் சார்ந்த செயற்பாடுகளும், இறுதியில் ஏகாதிபத்தியத்துடனான முரண்பாடாக மாறியது.

மேற்கு ஏகாதிபத்தியமானது தனக்கு முரண்பட்ட குழுக்களை பயங்கரவாதமாக அறிவித்து , தனக்கு சார்பான குழுக்களை புரட்சிகர ஜனநாயக சக்தியாக அறிவித்துள்ள நிலையில் ருசியாவின் நேரடி தலையீடும் ஆரம்பமாகியது.

கடந்தகாலத்தில் சிரிய விவகாரத்தில் ஐ.நா மூலம் மேற்கு தலையிட்டு ஒரு தாக்குதலை நடத்த முனைந்ததை எதிர்த்துவந்த ருசியா, மேற்கு ஆதரவு பயங்கரவாதக் குழுக்களில் இருந்து சட்டரீதியாக சிரிய அரசைப் பாதுகாத்ததுடன் - யுத்தத் தளபாடங்களையும் வழங்கி வந்தது. மேற்கு தனது தேவைக்கு உருவாக்கி வளர்த்த ஐ.எஸ் குழுவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, அதைப் பயங்கரவாதமாக அறிவித்து அதனுடன் மோதலை தொடங்கியதும்;, சிரிய அரசின் வேண்டுகோளுடன் ருசியப் படை சிரியாவில் இறங்கி – எதிர்த் தாக்குதலை இன்று தொடங்கி இருக்கின்றது.

50 வருடமாக நீடிக்கும் நட்புறவு, சிரிய அரசு சார்பாக ருசிய ஏகாதிபத்திய தலையீடும், மேற்கு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மாறிய ஐ.எஸ்சை அழிக்கும் பணியை கையில் எடுத்ததன் மூலம் - முற்றாக மேற்கு ஏகாதிபத்தியத்தை அங்கு இருந்து அகற்றிவிடும் வண்ணம் - மேற்கின் இன்றைய கொள்கையை தனக்கானதாக மாற்றத் தொடங்கி இருக்கின்றது.

நீண்டகாலமாக மேற்கு ஏகாதிபத்தியம் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவுடன் முரண்பட்ட போதும் - அதன் வளர்ச்சியைத் தடுக்காது - வளர்ச்சியை தனக்கு இலாபமாகக் கருதி அதை ஊக்குவித்து வந்தது. உதாரணமாக இரண்டாம் உலக யுத்த காலத்தில் கம்யூனிசத்துக்கு எதிராக, ஜேர்மனியின் நாசி பாசிசத்தை ஆதரித்து உதவிய பிரான்ஸ்-பிரிட்டன் கொள்கைக்கு நிகரானது. ஐ.எஸ் பயங்கரவாதத்தின் வளர்ச்சி மூலம், தனக்கு சார்பான விடையங்களை எதிர்பார்த்தது. அதாவது

1. சிரிய அரசை தோற்கடித்து ஐ.எஸ் அதைக் கைப்பற்றுவதும் - அதன்பின் தாங்களும், தங்கள் கூலிப்படைகளைக் கொண்டு ஐ.எஸ் க்கு எதிரான ஆட்சியை உருவாக்குவது

2. சட்டவிரோதமாக ஐ.எஸ் மூலம் மலிவு எண்ணையை உற்பத்தி செய்வதன் மூலம், சர்வதேச சந்தையில் எண்ணையின் விலையைக் குறைத்து, ருசிய ஏகாதிபத்தியத்தின் எண்ணைப் பொருளாதாரத்தை வீழ்த்தி, ருசியா ஏகாதிபத்திய தற்காப்பை தகர்ப்பது. இதேபோல் பொலிவியாவின் தேசியம் சார்ந்த எண்ணை வர்த்தகத்தை உடைத்து, நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கு அடிமையாக மாற்றுவது.

3. எண்ணை விலையைக் குறைப்பதன் மூலம், தங்கள் சொந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது.

இந்த வகையில் ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சியை மேற்கு ஊக்குவிக்கும் வண்ணம், துருக்கி எல்லை ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு திறந்து விடப்பட்டது. சிரிய எண்ணை, பஞ்சு, போன்ற பொருட்கள் துருக்கியில் குவிந்ததுடன், உலகின் எண்ணை விலை பாதியாகக் குறைந்தது. ஐ.எஸ் பயங்கரவாதம் மூலம் சர்வதேச பொருளாதாரத்தை தீர்மானித்த மேற்கு ஏகாதிபத்தியமும், துருக்கி மூலம் பன்நாட்டு மூலதனத்தில் கொழுத்தது.

அதேநேரம் துருக்கி எல்லையூடாக பயங்கரவாதத்தை பலப்படுத்தவும், அதற்கான பயிற்சியை ஐரோப்பியர்கள் பெறவும், துருக்கிய எல்லை திறந்துவிடப்பட்டது. அதே பாதையூடாக பிரான்ஸ் வரை வந்து எதிர் தாக்குதல் நடத்தும் வண்ணம், மேற்கு ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு அமைவாக துருக்கிய எல்லை திறந்துவிடப்பட்டது. பயங்கரவாதத்தைக் காட்டி தலையீட்டை செய்வது இதன் கொள்கை நடைமுறையாகும்.

மேற்குடன் ஐ.எஸ் முரண்பட்டாலும் பயங்கரவாதத்தின் வளர்ச்சியை மூலதனத்தின் வளர்ச்சியாக கருதிய மேற்கின் கொள்கை, ஐ.எஸ் பயங்கரவாதம் வளர்வதை ஊக்குவித்து வந்தது. ஐ.எஸ் பயங்கரவாதமானது இந்த வரம்பைக் கடந்து, மேற்கத்தைய பொருளாதாரத்தை சிதைக்க முற்பட்ட நிலையில், பயங்கரவாத ஒழிப்பைப் பற்றி பேசத்தொடங்கி உள்ளது.

இந்தப் புதிய சூழலை ருசியா ஏகாதிபத்தியம் தனதாக்கும் வண்ணம் வலிந்த எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது. மேற்கு சார்பு பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலம், அது துருக்கி எல்லையூடாக ஐ.எஸ் க்காக அது நடத்திய எண்ணை வர்த்தகத்தை, தகர்க்கத் தொடங்கியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதம் மூலம் ஆதாயம் அடைந்த துருக்கிக்கும், அதை பங்குபோட்டுக் கொண்ட மேற்கு பன்நாட்டு முதலாளிகளின் பொருளாதாரத்துக்கும், ருசியா தாக்குதல்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

ருசியா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னணியும் இதுதான். ஏகாதிபத்தியங்களுக்கு இடையே யுத்தம் நடப்பது, மூன்றாம் உலக யுத்த விளிம்பில் உலகம் பயணிக்கின்றது என்பதே உண்மை.

பயங்கரவாதத்தை ஒழிக்க ருசியா ஆதரவுக் கண்ணோட்டம்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்து, பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றிய கண்ணோட்டமாக மாறுகின்றது. சாராம்சத்தில் பயங்கரவாத ஓழிப்பு பற்றிய கண்ணோட்டம், ஏகாதிபத்திய சார்பாகி விடுகின்றது. அரசியல் மற்றும் நடைமுறையற்ற சமூகமாக மாறியுள்ள உலகில், பயங்கரவாதத்தை ஒழிப்பது ஏகாதிபத்தியத்தின் செயலாக உணருகின்ற எல்லையைத் தாண்டி, மனிதன் சுயமாக சிந்திக்கவும் செயற்பட முடியாதவண்ணம், ஊடக பயங்கரவாதம் மூலம் மக்கள் நலமடிக்கப்படுகின்றனர். பயங்கரவாதத்தை உற்பத்தி செய்வது ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கையாக இருப்பதை மூடிமறைக்க, அடிப்படைவாதம் பற்றிய விளக்கமாக பயங்கரவாதத்தை திரித்துவிடுகின்றனர்.

மக்களை பாதிக்கும் பயங்கரவாதத்தை அதன் ஒழிப்பைக் கோரும் மக்களின் மனநிலையும் - மேற்கின் இரட்டை வேடம் மற்றும் சதிகள், ருசிய ஏகாதிபத்திய சார்புக் கண்ணோட்டமாக மாறுகின்றது.

இந்த பின்னணியில் பயங்கரவாத ஒழிப்பானது, ருசிய ஏகாதிபத்தியம் சார்பு கண்ணோட்டமாக, ருசிய ஏகாதிபத்திய பொருளாதார சார்பாகி விடுகின்றது. இங்கு பயங்கரவாத ஒழிப்பு என்பது, ஏகாதிபத்திய பொருளாதார முரண்பாட்டின் வெளிப்பாடு என்பதும், உலக மக்களுக்கு எதிரானதுமாகும்.

பயங்கரவாதம் மக்களுக்கு இழைக்கும் தீங்கை விட, பலமடங்கு அதீதமான தீங்குகளைத் தீமைகளைத் தருவது தான், ஏகாதிபத்திய செயற்பாடுகள். மெதுவாக - சட்டபூர்வ வழிகளில் தொடங்கி முற்றாக அழித்தொழிப்பது வரை, ஏகாதிபத்திய செயற்பாடுகள் என்பது உலகை அடிமைப்படுத்துவதும், மக்களைப் பண்ணை மந்தைகளாக மாற்றிவிட முனைவதும் தான்.

பயங்கரவாதம்- ஏகாதிபத்தியமயம் என்பது, மக்களுக்கு எதிரான ஒரு நாணயத்தின் இரு பக்கமாக இருப்பதும், கணிதத்தில் வருவது போன்று இரு எதிர் நிலை தன்மை மூலம் தன்னைத்தான் நேராக்குகின்ற மோசடிகளிலானது.

இதற்கு எதிராக உலக மக்கள் சர்வதேசிய அரசியல் உணர்வு பெறுவதன் மூலமே, இந்தக் கூட்டு கயவாளித்தனத்தை முறியடிக்க முடியும்.