Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர்கள் போராட்டம் மீதான வன்முறையும் - அவதூறுகளும்

அதி உயர் கணக்காளார் பட்டப்படிப்புக்கான நான்கு வருடக் கல்வியை; உலக வங்கியின் தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அமைவாக, இந்த கற்கையை மகிந்த அரசு மூன்று வருடங்களாக்கியது. இப்படி மாணவர்களின் கல்வியின் தரத்தைக் குறைத்ததுடன், மேலதிகமான ஒரு வருடக் கல்வியை பணம் கொடுத்து கற்கக்கோரியது. தனியார் கல்வியை திருட்டுத்தனமாக புகுத்தி மாணவர்கள் மீதான நிர்ப்பந்தமாக மாற்றியது.

இதற்கு எதிரான மாணவர் போராட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது. முந்தைய அரசின், திருட்டுத்தனமாக அதே தனியார் கல்வி கொள்கையைப் பாதுகாக்கும் "நல்லாட்சி" அரசு, போராடும் மாணவர்கள் மீதாக வன்முறையை ஏவி தனியார் கல்வியை நடைமுறைப்படுத்த முனைகின்றது. இந்த நடத்தையானது மக்களினதும் மாணவர்களினதும் பால் அரசு கொண்டுள்ள "நல்லாட்சி" கொள்கைகளையும் - அதன் மக்கள் விரோதப் போக்கையும் அம்பலமாக்குகின்றது. அரசின் "நல்லாட்சிக்கு" எதிரான போராட்டத்தை நடத்துமாறு மக்களையும், மாணவர்களையும் அரசு நிர்ப்பந்திக்கின்றது.

மாணவர்களின் தொடர்ச்சியான நீண்ட போராட்டம் - அரசு தொடர்ந்து காட்டும் அலட்சியம் - அரசை நெருக்கடிக்குள்ளாகும் வண்ணம், போராட்டம் பண்புமாற்றம் பெற்று வருகின்றது. இந்தப் போராட்டங்களை ஒடுக்க அதன் மேல் வன்முறையை ஏவியவர்கள் வன்முறையைக் கண்டிப்பது போல் கண்டித்துக் கொண்டும் - விசாரணை நாடகங்களை நடத்திக் கொண்டும் - மறுபக்கம் வன்முறையை நியாயப்படுத்தும் எதிர்வாதங்களை திட்டமிட்டு முன்வைக்கின்றனர்.

போராட்டமானது கொழும்பு நகர மைய செயற்பாட்டை முடக்கியதாகவும் - கொழும்பு அரசு மருத்துவமனை நோயாளிகளை பாதிக்குமளவுக்கு போராட்டம் வீதிகளை முடக்கியதாகவும்... இதனால் வன்முறை தவிர்க்க முடியாது நடந்ததான ஒரு இழிவான பக்கத்தை - உருவாக்கிக் காட்ட முற்பட்டு இருக்கின்றனர். அத்துடன் போராட்டத்தை முன்னிலை சோசலிசக்கட்சியின் சதியாகவும் - தன் அரசியல் நோக்கையடைய இது போன்ற போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறி, திட்டமிட்ட அவதூறுகளை போராட்டம் மீது உருவாக்க முனைகின்றது. இதன் மூலம் மாணவர்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அதைத் தனிமைப்படுத்தவும் - அதேநேரம் இதன் மூலம் முன்னிலை சோசலிசக் கட்சியையும், அதன் தலைவர்களையும் அவதூறுகள் மூலம் சேறடிக்கும் அரசியலை செய்கின்றனர். முதலாளித்துவ அறிவுஐPவிகளும் - முதலாளித்துவ ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஒரு எதிர்ப்பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த முதலாளித்துவ அறிவுசார் பிரிவினர், அரச வன்முறையை கண்டிப்பது போல் கண்டித்தும் - போராட்டத்தை ஆதரிப்பது போல் ஆதரித்துக் கொண்டு, போராட்டத்தைக் கொச்சசைப்படுத்தி அழிக்க முனைகின்றனர்.

ஜனநாயக ரீதியான மக்களின் போராட்டத்தை வன்முறை மூலம் ஒடுக்கமுனையும் அரசின் ஜனநாயக விரோத நிலைதான், போராட்டங்கள் நடக்கக் காரணமாகும். இதை மூடிமறைத்துக் கொண்டு - போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதும் போராட்டப் பின்னணிக்கான காரணங்களை கற்பிப்பதும் - முதலாளித்துவத்தின் பொது அணுகுமுறையாகவும் - அதைப் பாதுகாக்கும் ஊடகங்களின் வக்கிரமாகவும் இருக்கின்றது.

அரசு என்பது மக்களை ஒடுக்குவது தான். மக்களின் அடிப்படை உரி;மைகளைப் பறித்து, அதை சந்தைப் பொருளாக்குவது தான். இதற்காக உலக வங்கியுடன் கூடி சதிகளையும் சூழ்ச்சிகளையும் அரசு தொடர்ந்து செய்கின்றது.

தனியார்மயமாக்குவதை நேரடியாக செய்ய முடியாத போது - இரகசியமான சதிகள் மூலம் அமுல் செய்கின்றது. போராடும் மாணவர்களையும், மக்களையும் ஏமாற்றுவதும் - அவர்களுக்கு இடையில் பிளவுகளை உருவாக்கி தனியார் மயமாக்கத்தை முன்தள்ளவும்; முனைகின்றது.

இந்த பின்னணியில் "சுதந்திரமான" ஊடகங்கள் - ஊடகவியலார்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தவும் - அதற்கு பின்னணிகளை கற்பித்த அரசை பாதுகாக்கவும் முனைகின்றனர்.

தனியார்மயமாக்கலை அரசு, உலக வங்கி மட்டும் முன்னெடுக்கவில்லை - ஊடகவியலின் பின்னணி இசையுடன் தான் இன்று அமுலுக்கு வருகின்றது. இதற்கு எதிரான போராட்டங்களாகவே மாணவர் போராட்டங்கள் மேலெழுந்து வருகின்றது.