Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜே.வி.பி அரசியலும் - தொடரும் பிளவுகளும்...

ஜே.வி.பி முன்னாள் தலைவரும், இன்றைய அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த சோமவன்ச அமரசிங்க, கட்சியில் இருந்து விலகி புதியதொரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஜே.வி.பியின் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்த சோமவன்ச, புதிய தலைவர் அநுரகுமார திஸாநாயக்காவின் தலைமையிலான கட்சி "கட்சிக்கொள்கைக்கு முரணாக" செல்வதாக கூறி வெளியேறியுள்ளார்.

ஜே.வி.பியில் இருந்த விமல் வீரவன்சா 2005 இல் புதிய கட்சியைத் தொடங்கியதும், 2010 இல் முன்னிலை சோசலிசக்கட்சி தோன்றியதும், 2015 இல் சோமவன்ச விலகி புதிய கட்சியைத் தொடங்க இருப்பதான அறிவிப்பும், கடந்த 10 ஆண்டுகளில் ஜேவிபியில் நிகழும் தொடர் நிகழ்வுகளாகும். இது ஜே.வி.பியின் தொடர்ச்சியான பாட்டாளி வர்க்க விரோத அரசியலின் பொது அரசியல் வெளிப்படாகும். அதே நேரம் புதிய கட்சிகளின் தோற்றமானது வர்க்க அரசியலை நோக்கியும், அதில் இருந்து விலகியும் செல்கின்ற இரு நேர் எதிரான அரசியல் பிளவுகளை அடிப்படையாகக் கொண்டு நடந்தேறியவை.

ஜே.வி.பில் இருந்து பிரிந்து உருவான கட்சிகளையும், ஜே.வி.பியின் அரசியலையும், அரசியல் ரீதியான வேறுபாட்டையும் அரசியல் ரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமானது.

தமிழ் மொழி பேசுகின்றவர்கள் இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வதே, எதிர்காலத்தில் இடதுசாரிய பாதையில் பயணிப்பதற்குரிய அரசியல் கற்கைக்கு அடிப்படையாகும். கடந்த காலத்தில் குறுகிய இனவாத சகதிக்குள் வாழ்ந்த தமிழ் மக்கள், இலங்கை பொது இடதுசாரிய அரசியல் இருந்தது தங்களைக் குறுக்கிக் கொண்டு தனிமைப்பட்ட பார்வைக்குள் முடங்கிக் கொண்டே அனைத்ததையும் அணுகினர். ஜே.வி.பியை "சிங்களவர்" கட்சியாகவும், "இனவாதக்" கட்சியாகவும் மட்டும் வரையறுத்த்துக் கொண்ட பார்வைகளையே கொண்டு இருந்தனர். இதைக் கடந்து ஜே.வி.பியை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வது, சமூகம் பற்றிய பொது அக்கறை உள்ளவர்களுக்கு அவசியமானது.

ஜே.வி.பியின் வர்க்க அரசியலும், அதன் அரசியல் போக்குகளும்

1965 களில் தோன்றிய ஜே.வி.பி இயக்கமானது, 1971, 1989-1990 களில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தியது. பல பத்தாயிரம் பேரை தியாகம் செய்த அந்த போராட்டங்கள், உழைக்கும் மக்களின் அரசியல் பொருளாதார விடுதலையை முன் வைத்திருந்தன.

ஜே.வி.பி ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும் இயக்கமாக, மக்களில் இருந்து விலகிய தனிக் குழுவாக தன்னை தகவமைத்துக் கொண்டது. அதே நேரம் குட்டிபூர்சுவா தேசியவாதத்தையே, வர்க்க விடுதலையாக முன்வைத்திருந்தது.

1971 இல் கட்சி ரீதியாக ஒருங்கிணைந்த ஒரு கட்சி கொள்கைக்கு பதில், உதிரியான வர்க்க கொள்கைகளைக் கொண்டிருந்த நிலையிலேயே ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. அதே நேரம் அந்த இயக்கத்தின் பொது அரசியல் வழிமுறை, மக்கள் திரள் போராட்ட பாதையில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தது. குட்டிபூர்சுவா வர்க்கத் தன்மை கொண்ட, இடது தேசியவாத இயக்கமாக பரிணமித்தது.

1970 களின் பின்னான இலங்கை இடதுசாரிய இயக்கத்தில், ஜே.வி.பி மட்டுமே மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து செயல்பூர்வமாக இயங்கும் ஒரு கட்சியாக முன்னிலை வகித்தது. அதே நேரம் குட்டிபூர்சுவா தேசியவாதக் கொள்கையைக் கொண்டதாகவும், சிறுபான்மை மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்பட்டு சிங்களவர்களின் கட்சியாக தன்னை முடங்கிக் கொண்டதுடன் உழைக்கும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து தன்னை தனிமைப்படுத்தியும் கொண்டது.

1989-1990 இரண்டவது ஆயுதக் கிளர்சியின் போதும் கூட கடந்தகால அரசியல் வழிமுறையில் பெரிதும் மாற்றமின்றி, தனிநபர்ளை அழிக்கும் தனிநபர் பயங்கரவாதத்தை அரசியல் - இராணுவ யுத்த தந்திரமாக முன்தள்ளியது. இதன் மூலம் உழைக்கும் மக்களில் இருந்து மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இயக்கம், உழைக்கும் மக்களுக்காக ஆயுதமேந்திய ஒரு குழு போராடி விடுதலை பெற்றுத் தருவதையே விடுதலை என்று நம்பியது.

1980 களில் இன முரண்பாடும், யுத்தமும் முதன்மை பெற்று வந்த வரலாற்றுப் போக்கில், இனவாதம் முதன்மையான சிந்தனை முறையாக சமூகத்தில் இழையோடியது. ஜே.வி.பி உழைக்கும் மக்களுக்கான அரசியலை முன்னிறுத்தி இனவாதத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடுவதை கைவிட்டு விட்டு, இனவாதத்தை ஆதரிக்கும் அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்தது. புலியை முன்னிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் அரசின் இனவாதக் கொள்கையை ஆதரித்து அதனை தனது அரசியல் வழிமுறையாக்கிக் கொண்டு செயற்பட்டது.

ஜேவிபி மேற்குறித்த அரசியலில் பயணித்ததன் காரணத்தால் 2000 களில் இனவாத அரசுடன் இணைந்து கொண்டு, அரசின் இனவாதப் போக்கை ஆதரிக்கும் திசையில் பயணித்தது. விமல் வீரவன்ச பாரளுமன்றம் மூலம் இனவாத அரசியலை முன்தள்ளி, ஜே.வி.பியின் முன்னணி செயற்பட்டாளராக மாறினார். இனவாதத்தை முதன்மையாக்கி அதை பிரச்சாரம் செய்யும் கட்சியாக, ஜே.வி.பியை தன்னை வெளிப்படுத்தியது. ஜேவிபி அரசின் இனவாத யுத்தக் கொள்கையை ஆதரித்து மட்டுமல்ல, யுத்தததிற்கு ஆள் திரட்டுதல் முதல் ராணுவத்திற்கு பங்கர் வெட்ட கட்சி உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி அனுப்பிய எல்லை வரை வலதுசாரிய பாதையில் பயணித்தது. இதன் ஒருபக்க வெளிப்பாடே விமல் வீரவன்ச வெளியேறி அரசுடன் இணைந்து இடம் பெற்றது.

ஜேவிபியின் உள் இருந்த வர்க்க கட்சியினர், இந்த மக்கள் விரோத இனவாத கண்ணோடத்துடன் கூடிய அரசியலுக்கு எதிராக உட்கட்சி போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். ஆனால் 2002 களில் ஜேவிபியின் உள் நிலவிய இனவாத போக்கு காரணமாக பலமற்றவர்களாகவே இவர்கள் காணப்பட்டனர்.

2008 இல் ராணுவத்திற்கு பங்கர் வெட்டப்போவதனை எதிர்த்து போராட்டத்தினை நடத்தியதுடன் மட்டுமல்லாது கட்சியினது வர்க்கப் போராட்டம் பற்றியும், சிறுபான்மை மக்களில் இருந்தும், பெரும்பான்மை உழைக்கும் சிங்கள மக்களில் இருந்தும் விலகிய ஜே.வி.பியின் அரசியல் மீதான உட்கட்சி விவாதம், கட்சிக்குள் முதன்மை பெற்றது. உட்கட்சி விவாதத்தை முடக்கிய தலைமைக்கு எதிராக விவாதத்தை நடத்தி, புதிய அரசியல் வழியினை முன்வைத்த தலைமையை கட்சியில் இருந்து ஒதுக்கி விலத்தி வைத்த நிலையில், பாட்டாளி வர்க்கத்தின் ஒரு ஆரம்ப கட்சியாக முன்னிலை சோசலிசக் கட்சி 2011 இல் ஜே.வி.பியில் இருந்து வெளியேறியது.

முன்னிலை சோசலிசக் கட்சி 1960 களுக்கு பின், இலங்கையின் வர்க்கப் போராட்டம் பற்றி சிந்தனையுடன், மக்கள் திரள் பாதையை முன்வைக்கும் கட்சியாகவும் வெளிவந்தது. இதனை தனது அரசியல் நடைமுறைகள் மூலம் வெளிப்படுத்தும் வர்க்க கட்சியாக தொடர்ந்து இயங்குவதை முன்னிறுத்தி வருகின்றது. வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் இழந்து போன கடந்த இடது வரலாற்றுப் போக்கில் இருந்து, முன்னிலை சோசலிசக் கட்சி தன்னை வேறுபடுத்தி வருகின்றது.

ஜே.வி.பிக்குள் நடந்த உட்கட்சி போராட்டம் காரணமாக முன்னிலை சோசலிசக் கட்சியாக கம்யூனிஸ்ட்டுக்களின் வெளியேற்றத்துடன், ஜே.வி.பி வலது மறறும் தேசியவாத குட்டிபூர்சுவா இடதுகளின் கட்சியாக எஞ்சி தனிமைப்பட்டு போனது. இந்த பின்னடைவிலிருந்து கட்சியை மீட்கும் நோக்குடன் அநுபவம் மிகுந்த கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் இருந்த போதும் கட்சியின் விதிமுறைகளை தவிர்த்து, வலதுசாரியான அநுரகுமார திஸநாயக்கவை சோமவன்ச தனது தெரிவாக பிரேரித்து தலைவராக்கினார். இந்த புதிய தலைமை ஜே.வி.பியின் அரசியல் வழிமுறையையே வலதுசாரியமாக மாற்றி அமைத்தது. அநுராகுமார நவதாராளவாதத்தை மறைமுகமாக ஆதரித்து நிற்பதுடன் மேற்குலத்தினை நலன்களை சார்ந்தும் கட்சியை வழிநடத்துவதும் இன்றைய ஜேவிபியின் பொதுப்போக்காக உள்ளது.

ஜே.வி.பியின் வலதுசாரிய போக்குக்கு எதிராக, கடந்த கால ஜேவிபி போன்று தேசியவாத குட்டிபூர்சுவா இடதுகளின் கட்சியாக அரசியலை தொடர முடியாத நிலையில் சோமவன்சவினது இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. இதைத்தான் சோமவன்ச "கட்சிக்கொள்கைக்கு முரணாக" கட்சி செல்வதாகக் கூறியுள்ளார்.

சோமவன்ச மற்றும் அநுரகுமார இருவர்களினதும் அரசியல் பாதைகள் 2011 இல் முன்னிலை சோசலிசக்கட்சி முன்வைத்து வெளியேறிய வர்க்க அரசியலை நிராகரித்து, குட்டிபூர்சுவ தேசியவாதத்தை முன்னெடுக்கும் வலது - இடது அரசியல் பிரிவுகளாகும். இவை இலங்கையில் இருக்கின்ற உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான, குட்டி பூர்ஸ்சுவா தேசியவாத கொள்கைகள்.

முடிவாக

வர்க்க அரசியலையும், நடைமுறையையும் கொண்டிராத கட்சிகளை, அரசியல் ரீதியாக இனம் கண்டு கொண்டு போராடுவதே இன்றைய வரலாற்றின் தெரிவாக இருக்க முடியும். அரசியல் போலிகளையும், புரட்டுகளையும், பிரமுகர்த்தனத்தையும் கடந்து, மக்கள் திரள் வர்க்க அரசியல் பாதையில் பயணிப்பதே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலாகும். இது மட்டுமே சமூகம் பற்றி உண்மையாகவும் நேர்மையாகவும் நடைமுறையில் வாழ விரும்புகின்றவர்கள் முன்னுள்ள, ஒரேயொரு அரசியல் தெரிவாக இருக்க முடியும்.