Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமாரை நாடு கடத்த முனையும் முகமாற்ற ஜனநாயகம்



ஜனநாயக விரோதமான அரச ஒடுக்குமுறையால் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள், நாடு திரும்பலாம் என்ற அரசின் அண்மைய அறிவிப்பும், தோழர் குமாரை நாடு கடத்த முனையும் 100 நாள் முகமாற்ற ஜனநாயகமும் அரசியல் அரங்கு வந்துள்ளது.

தோழர் குமாரின் விசா முடிய முன்னமே விசாரணை, கைது, நிதிமன்றம்.., புதிய அரசின் செயற்பாடுகள், இன்று (30.01.2015) முதல் சட்ட ரீதியானதும் ஜனநாயக ரீதியானதுமான வெளிப்படையான போராட்டத்துக்கு கொண்டு வந்துள்ளது.



தோழர் குமார் மீது அரசு முன்னெடுக்கும் செயற்பாடானது, அனைத்து புலம்பெயர் சமூக செயற்பாட்டளருக்கும் எதிரானதாகும். ஜனநாயகம் - கருத்துச் சுதந்திரம் பற்றி முகமாற்ற ஜனநாயகம் முன்வைக்கும் போலி நாடகங்கள், தோழர் குமாருக்கு எதிரான செயற்பாடுகளுடன் அம்பலமாகத் தொடங்கி இருக்கின்றது.     

தோழர் குமார் குணரத்தினம் இலங்கை பிரஜை என்பதும், இலங்கையில் ஜனநாயக விரோத அரசியல் சூழலால் வாழ முடியாத ஒரு நிலையில் நாட்டை வெளியேறியவர் என்பது வெளிப்படையான உண்மை. இதன் பின் அவர் நாடு திரும்பிய போது, 2010இல் அரசினால் இரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் கடத்தப்பட்ட நிலையில், அவர் காணமல் போனார். இறுதியில் அவர் அரசியல் புகலிடம் பெற்ற நாட்டின் தலையீட்டால், கடத்தல் நாடகம் அம்பலமானதும் அதே நேரம் நாடு கடத்தப்பட்டார்.

நாட்டுக்கு திரும்பும் சட்டவடிவிலான நீண்ட போராட்டத்தை அடுத்து, தேர்தலுக்கு முன்பாக மீண்டும் நாடு திரும்;பியிருந்தார். தான் ஒரு இலங்கை பிரஜை என்ற அடிப்படை மனித உரிமையை முன்வைத்து சொந்த நாட்டில் வாழ்வதற்கான அவரின் போராட்டம், நாட்டை விட்டு வெளியேறிய அனைத்து சமூக செயற்பாடாளர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற அடிப்படை மனித உரிமையுடன் தொடர்புபட்டதாக இது மாறியுள்ளது.

முன்னைய அரசின் சட்டவிரோதமான வெள்ளை வான் கடத்தலுக்கு எதிரான சட்டரீதியான விசாரணையை கோரும் உரிமையை, அவரை நாடு கடத்துவதன் மூலம் முறியடிக்க இந்த புதிய அரசு  முனைகின்றனர். கடந்த காலத்தில் சட்டவிரோத கடத்தல்கள் காணமல் போன சம்பவங்களில் உயிர் தப்பிய சாட்சியாக தோழர் குமார் இருப்பதும், கடந்த கால சம்பவங்களுக்கான திறவுகோலாக இருக்கும் முக்கிய சாட்சியாகவும், அதற்காக போராடக் கூடிய அரசியல் பலமும் கொண்ட செயற்பாட்டை முறியடிக்க இந்த அரசு விரும்புகின்றது.

அத்துடன் நவதாராளக் கொள்கையை எதிர்க்கின்ற ஒரு அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் என்பதும், அதற்காக போராடும் ஜனநாயகத்தை மறுதளிக்கவும் இந்த அரசு முனைகின்றது.        

தோழர் குமார் தான் பிறந்த மண்ணில் வாழ்வதற்கான ஜனநாயக உரிமையும், தான் விரும்பிய கருத்தைச் சொல்லும் உரிமையையும், அதற்காக செயற்படும் ஜனநாயக உரிமையையும் மறுதளிக்கும், ஜனநாயக விரோத செயற்பாடை தனது முதல் 100 நாளின் தொடக்கமாகத் தொடங்கியுள்ளது இந்த அரசு.