Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முகமாற்ற ஆட்சியும் - இடதுசாரி அரசியலும்

முகமாற்றம் நடந்து முடிந்திருக்கின்றது. முகப் பூச்சுகள் நடந்து வருகின்றது. இந்த பின்னணியில் மாற்றங்களுக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளுடன் கூடிய பொது அரசியல் மேலெழுந்து காணப்படுகின்றது. இதற்கு பின்னால் இடதுசாரிய அரசியல் முடங்கிவிட முடியுமா?   

அதாவது முகமாற்றமும், முகத்துக்கு மேல் அடிக்கும் வெளிப்பூச்சுகளும் தானாக அம்பலமாகும் வரை காத்திருப்பதல்ல இடதுசாரியம். இது இடதுசாரிய சிந்தனையாகவோ, நடைமுறையாகவோ இருக்க முடியாது. மாறாக இவை சூழலுக்கு பின்னால் வால்பிடிப்பதாகும். தேர்தல் முன்பாகவே, முகமாற்றத்தை உண்மையான மாற்றமாக கருதுகின்ற அரசியல் போக்கு இருந்தது. இதை அரசியல்ரீதியாக எதிர் கொள்ளவும், இடதுசாரிய அரசியல் மூலம் கற்றுக் கொடுக்கவுமே, நாம் இடதுசாரி முன்னணி வேட்பாளரை நிறுத்தினோம். இந்த அரசியல் போராட்டம், தேர்தல் முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அதேநேரம் அது தானாக அம்பலமாகும் வரை, காத்து இருப்பதில்லை.         

முகமாற்றத்தை மக்கள் ஏன் தெரிவு செய்தனர் என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து நாம் தொடங்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை முகமாற்றம் நிறைவு செய்யும் என்ற  நம்பிக்கைக்கு பின்னால், மக்கள் வாக்களித்தனர். முகமாற்றம் ஜனநாயகத்தை முன்வைத்ததையும், அதற்கு மக்கள் வக்களித்ததையும் காணமுடியும். ஆனால் முகமாற்றம் ஒரு வர்க்கத்தின் ஆட்சி என்பதால், அது தனக்கு தானே இரு முகங்களைக்; கொண்டது. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் இருப்பது போல், ஜனநாயகம்  - சர்வாதிகாரம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டதே முகமாற்றம். இதனால் இரண்டு அரசியல் போராட்டங்களை கொண்டதாக இருக்கின்றது. இந்த வகையில் 

1.முகமாற்றம் முன்வைத்த ஜனநாயக அடிப்படைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியும்,  ஜனநாயகத்தை பாதுகாக்கவும், முரணற்ற ஜனநாயகத்தை கோரியும் போராட வேண்டும். 

2.வர்க்க ஆட்சி என்ற வகையில் ஜனநாயகத்தை மறுத்து அதன் வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுதல் வேண்டும். 

இந்தவகையில் இந்த வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக முரணற்ற ஜனநாயகத்தை ஆணையில் வைத்தல் வேண்டும். முகமாற்றம் வைத்த, ஜனநாயகத்தைக் கோரி போராட வேண்டும். அதாவது முகமாற்றத்திடம் ஜனநாயகத்தைக் கோரி போராடுவதானது, அது தனக்குள் கொண்டுள்ள வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதாகும். இதற்கு மாறாக ஜனநாயக வேஷம் அம்பலமாகி வர்க்க சர்வாதிகாரம் தானாக மேலெழும் வரை காத்திருப்பதில்லை.               

முகமாற்ற ஆட்சி என்பது ஒரு வர்க்கத்தின் ஆட்சியாக இருப்பதால், ஜனநாயகம் அதற்கு முரணானது. சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சி, சுரண்டப்படும் மற்றைய வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கும் சர்வாதிகாரத்தையே சாரமாகக் கொண்டது. இடதுசாரிகள் ஜனநாயகத்தை அரசியல் ஆணையாக முன் வைத்து, அதை கையில் எடுக்க மறந்துவிடக் கூடாது.  

இந்த வகையில் முகமாற்ற ஆட்சி முன்வைத்த 100 நாள் வாக்குறுதிகளை அமுல்படுத்தக் கோரி போராடுவதன் மூலம், மக்களின் உண்மையான கோரிக்கைளுடன் இடதுசாரிகள் இணைந்து கொள்ளவேண்டும்;. 100 நாள் ஜனநாயகத் திட்டத்தை முன்வைத்தே, முகமாற்றம் நடந்துள்ளது. இதன் பின் பல்வேறு சக்திகள் தங்கள் கோரிக்கைகளுடன் அணிதிரண்டு, வாக்களித்து இருந்தனர். இந்த வகையில 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் சார்ந்த ஜனநாயக கோரிக்கைகளை அமுல்படுத்தக் கோரியும், மக்கள் சார்ந்த பிற ஜனநாயகக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் போராடுவதே இடதுசாரிகளின் உடனடி அரசியல் வேலைத்திட்டமாகும். 

முகமாற்றத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும், அதற்காக அது கொடுத்த   காலக்கெடுவுக்குள் அதை அமுல் செய்யக் கோரி போராடுவதன் மூலம், ஜனநாயகத்தை கோருவதற்கான செயல்தந்திரங்களில் நாம் இறங்கி இருக்கின்றோம். 

மைத்திரிக்கு வாக்களித்த பலவேறு தரப்புகள் தங்கள் கோரிக்கைகளுடன் மைத்திரியை ஆதரித்ததும், அவை தொடர்பான அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று கானல் நீராகி வருவதால், பொது அதிருப்தி தோன்றி வருகின்றது. இதை தன்னியல்பான ஒன்றாக வடியவிடுதற்கு பதில், இடதுசாரிகள் அதை முன்னோக்காகக் கொண்டு போராடுவது அவசியம்.      

இந்த வகையில் 100 நாள் முகமாற்றம் 

1.முன்வைத்த ஜனநாயகக் கோரிக்கையிலான முன்னெடுப்புகளை முரணற்ற ஜனநாயக வடிவில் அமுல்படுத்தும் வண்ணம், அதை முன்னோக்கக் கொண்டு இடதுசாரிகள் போராடுவது           

2.தங்கள் முக மாற்றங்களுக்காக முன்வைத்து அமுல்படுத்த மறுக்கின்ற கோரிக்கைகளை, அமுல்படுத்தக் கோரி போராடுவதன் மூலம், இடதுசாரிகள் உண்மையான எதிர்க்கட்சியாக மாற்றிக் கொள்வது 

3.முகமாற்றம் முன்வைக்க மறுக்கும் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணிதிரட்டுவது.

தேர்தலின் போது இடதுசாரிய போராட்டம் தங்கள் வர்க்க அணிகளை அணிதிரட்டுவது மட்டுமல்ல, மாறாக தேர்தலில் வென்றவர்கள் முன்வைத்த ஜனநாயகக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோருவதன் மூலம், மக்களின் ஜனநாயக உணர்வுடன் ஒன்று இணைந்து அதன் நடைமுறைக்காக உண்மையாக போராடுவதாகும்.          

முகமாற்றம் ஒரு வர்க்கத்தின் ஜனநாயகம் என்பதால் ஜனநாயகத்துக்கே அது முரணானது. இந்த ஜனநாயகத்தின் மறுபக்கம் வர்க்கத்தின் சர்வாதிகாரமே. இந்த வகையில் இது தான் இடதுசாரிய செயல்தந்திரத்தின் மையமான அரசியல் சாரமாகும்.