Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த அணியும் - எதிரணியினரும் முன்னெடுக்கும் புலிப்பிரச்சாரம்!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், அழிந்து போன புலியை அரசும் எதிரணியும் தமது தேர்தல் வெற்றிக்காக இனவாத நோக்கில் உயிர்ப்பிக்கின்றன. மகிந்த அணியும் - எதிரணியும் பரஸ்பரம் மற்ற அணியினரை புலியாகவும், புலிக்கு உதவியதாகவும், உதவுவதாகவும் குற்றம்சாட்டுவதன் மூலம் இனவாதம் முன்வைக்கப்படுகின்றது.

இந்த பிரச்சாரங்கள் மூலம் தமிழ் மொழி பேசுகின்ற மக்களுக்கு தங்கள் எதிரானவர்களாக, சிங்கள மொழி பேசும் மக்கள் முன் மறைமுகமாக முன்வைக்கின்றனர்.

புலிகள் இருந்த காலத்தில் மக்களை சார்ந்து நிற்க்காத புலி எதிர்ப்பு அரசியல் எப்படி அரசு சார்பாக சாரம்சத்தில் இயங்கியதோ, அதேபோல் இனப்பிரச்சனையை ஜனநாயக பூர்வமாக தீர்க்காது, புலியை முன்வைத்து மகிந்தா அணி - எதிரணி செய்யும் பிரச்சாரங்கள் சாரம்சத்தில் இனவாதத்தையே முன்தள்ளுகின்றன.

இந்த அரசியல் பின்னணியில் இன்று வடக்கு - கிழக்கில் இராணுவத்தின் துணையுடன் தொடரும் இனவொடுக்குமுறையை, எதிரணி "ஜனநாயகம்" இனவொடுக்குமுறையாகக் கூட இனம் காணவில்லை. இதேபோல் புலிகளை உருவாக்கிய குறுந்தேசிய இனவாதத்தை வித்திட்டு வளர்த்தெடுத்த பேரினவாதத்தை, ஒழிப்பதற்கு கூட தயாரில்லாத பொது வேட்பாளரின் "ஜனநாயகமானது" போலியானது புரட்டானது.

அடிப்படையான ஜனநாயக விரோத தன்மையை இனம் கண்டு கொள்ளாத புலிப் பிரச்சாரமானது, இனவாதமாக கொப்பளிக்கின்றது. இனவொடுக்குமுறையும், இனவாதமும் நீடிப்பதை எதிர்த்து போராட்டத் தயாரற்றவர்கள், முரணற்ற முதலாளித்துவ ஜனநாயக தீர்வை இனப்பிரச்சனைக்கு வைத்துவிடப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகமல்ல, இனவாதமே வெல்வதற்கான நெம்புகோல் என்பதால், அது புலி பற்றிய பிரச்சாரமாக வெளிப்படுகின்றது.

இந்த வகையில் இந்தத் தேர்தலிலும் இனவாதம் என்பதே, பேரினவாத அரசியல் கட்சிகளின் பொதுத்தெரிவு. சிங்கள மக்களுக்கு சேவை செய்வதாக காட்டுவதன் மூலம், முழு மக்களை அடக்கி ஆட்சி செய்யும் அதிகாரத்தைக் கோருகின்றனர்.

திரும்பிப் பார்த்தால் 1948 முதல் இந்த இனவாதம் இன்றிய தேர்தல்களும், ஆட்சிகளும் அமைக்கப்பட்டதில்லை. சிங்கள மொழி அல்லாத, பௌத்த மதம் அல்லாத மக்களின் சமவுரிமைகளை பறிக்கின்ற போட்டிக் கோசங்கள் மூலமே, அதிகாரத்தைப் பெற்றவர்கள் இன-மத வாத ஆட்சிகள் மூலம் மக்களை இன-மத ரீதியாக பிரித்தாண்டடு வந்துள்ளமை தெளிவாக தெரியும் உண்மை. இது தான் இன்று வரையான, இலங்கையை ஆட்சி செய்தவர்களின் வரலாறு, இது தான் இந்த தேர்தலிலும் அரங்கேறுகின்றது.

இதற்கு எதிரான போராட்டங்கள் கூட, இறுதியில் இன-மத ரீதியாக குறுகி எதிர் நிலை இன - மத வாதமாக மாறியது. அது மட்டுமின்றி, இவை கூட தேர்தலில் மக்களை பிளக்கும் அணி சேர்க்கையாகியது. பேரினவாதமானது குறுந்தேசியமாகவும், தமிழ் இனவாதமானது எதிர்நிலை குறுந்தேசியமாகவும் மாறி, மக்களை இன ரீதியாக பிளந்தது.

தேர்தல்களில் இன மத அரசியலானது இரு எதிர்முனை இனக் கூறாக மாறி, ஆட்சியை பிடிக்கவும் - பேரம் பேசுகின்றதுமான முரணிலை அரசியலாகியது. சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சிங்கள மக்களில் இருந்து பிரித்து ஒடுக்கின்ற அரசியல் கூறாக அரசு மாறிவிட்ட நிலையில், பேரம் பேசுகின்றதன் மூலம் அதற்கு தீர்வுகளை காண முடியாது போனது. ஆனால் இதை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றுவதே, எதிர்நிலை இனவாத அரசியலாகியது.

இந்த அரசியல் விளைவால் ஒடுக்குமுறைக்கு தீர்வு, அதே இன-மத ரீதியான எதிர் ஒடுக்குமுறையாக பரிணாமம் பெற்று வந்தது. இதன் வளர்ச்சியே இலங்கையில் இன ரீதியான யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. இதன் மூலம் ஆட்சியாளர்களின் இனவாதம், புதிய அரசியல் பரிணாமத்தை பெற்றது.

இப்படி யுத்தகால இன ஒடுக்குமுறையானது, யுத்தத்துக்கு முந்தையில் இருந்தும் வேறுபட்டது. முந்தைய இன ஒடுக்குமுறையானது காலத்துக்கு காலம் மொழி - மத சமவுரிமைகளை மறுக்கும் செயற்பாடுகள் மூலம் அரசியலுக்கு வந்தது. அதற்கான அதிகாரத்தை பெற்று, சமவுரிமையை மறுக்கும் இன ஒடுக்கு முறைகள் அமுலுக்கு வந்தன. யுத்தகால இன ஒடுக்குமுறை தமிழ் மொழி பேசும் மக்களுக்கு எதிரான யுத்தமாக காட்டி, இனவாதம் மேலெந்தது. யுத்தத்தை வெல்வதன் மூலம், தமிழனை ஒடுக்கும் அதிகாரத்தை தருமாறு, சிங்கள மக்களிடம் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர் கோரினர்.

2009 இல் யுத்தத்தை வென்ற பின்னான இனவாதம், முந்தைய இரு வேறுபட்ட சூழலில் இருந்து வேறுபட்ட அரசியல் பரிணாமத்தை பெற்று இருக்கின்றது. வடக்கு - கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படும் இனவாதத்துடன் கூடிய இராணுவ முன்நகர்வுகளை, பெரும்பான்மை மக்கள் கண்டு கொள்ள முடியாத பிரதேச ரீதியாக குறுகிய ஒரு பகுதிக்குள் மாறி இருக்கின்றது. அதாவது பெரும்பான்மை சிங்கள் மொழி பேசும் மக்கள் தெரிந்து கொள்ள முடியாத, அவர்கள் வாழாத பிரதேசத்தில் நடந்தேறுகின்றது.

தங்களை சிங்கள இனத்தின் பாதுகாலர்கள் என தொடர்ந்தும் தங்கள் இனவாத நடத்தையை சிங்கள மக்கள் முன் வைத்து, இனரீதியாக அணிதிரட்ட ஆள்வேரால் முடியாதுள்ளது. இதற்கு பதில் யுத்ததுக்கு முந்தையது போல், சமவுரிமைகளை மறுக்கும் கோசம் ஒன்றை புதிதாக கொண்ட வர வேண்டும். அதை புதிதாக கொண்டு வருவதல் என்பது, அரசியல் நெருக்கடிகளை முரண்களை உருவாக்கும்.

அதனாலேயே இல்லாத புலியை ஒழிப்பது பற்றியும், எதிர் தரப்பை புலியாக முத்திரை குத்துவதுமாக, இனவாதம் மறைமுகமாக மேலேழுகின்றது.

யுத்தம் மூலம் அழித்த புலியை, தேர்தல் பிரச்சாரம் மூலம் மீண்டும் கொண்டு வந்து சிங்கள மக்களது வாக்குகளை வெல்ல முயற்சிக்கின்றனர். அதற்காக வெளிநாட்டுப் புலிகள் பற்றி கூச்சல் போடுகின்றனர். சரி யார் இந்த வெளிநாட்டுப் புலிகள் என்று பார்த்தால்

1. யுத்தம் நடந்த காலத்தில் இலங்கையில் இருந்த புலித் தலைமையை யுத்தம் மூலம் அழிக்க, மேற்குடன் கூடி சதி செய்தவர்கள் தான், புலியை தடை செய்த மேற்குடன், அதை அழிக்கும் அதன் சதியுடன் பயணித்தவர்கள் தான், ஆள்வோரும் - ஆளவிரும்புவோரும் காட்டும் புலிகள்.

2. போராட்டத்தின் பெயரில் திரட்டிய புலிகளின் பணத்தை தமதாக்கி கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் தான் இவர்கள் காட்டுகின்ற புலிகள்.

3. புலிகளின் முந்தைய அடையாளங்களை முன்னிறுத்தி, அதைக்காட்டி பணத்தை திரட்டி பிழைக்கின்றவர்களையே இவர்கள் புலிகள் என்கின்றனர்.

4. ஏகாதிபத்திய உலக முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையின் சொந்த முரண்பாட்டை பயன்படுத்தி, மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் கைக் கூலிகளையே இவர்கள் புலிகள் என்கின்றனர்.

இப்படி புலிகளின் பெயரில் ஏய்த்துப் பிழைக்கும் புலம்பெயர் கூட்டத்தையே, அரசு புலியாக காட்டுகின்றது. இதன் மூலம் இனவாதத்தை முன்னிறுத்தி, சிங்கள மக்களை இவர்களிடமிருந்து காப்பற்றப்போவதாக இனவாத பாசங்கு செய்கின்றது. இல்லாத புலியை இருப்பதாக காட்டும் இந்த இனவாதம் மூலம், மக்களை பிளந்து விடுகின்றனர். இதன் மூலம் இனவாத ஆட்சி அதிகாரத்தைக் கோருகின்றனர். இந்த அதிகாரம் மூலம் நவதாரளவாத மூலதனத்தை கொண்ட எஜமானர்களுக்கு விசுவசமாக இருப்பதை, ஆள்வோரும் - ஆளவிரும்புவோரும் முரணரற்ற வகையில் உறுதி செய்கின்றனர். இதை தோற்கடிக்கும் இடதுசாரிய அரசியல் தான் இதற்கான மாற்று.