Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை தேசிய பிரச்சனைக்குரிய தீர்வு அல்ல என்ற வாதங்கள் தொடர்பாக!

 

தேசியப் பிச்சனைக்குரிய தீர்வை சமவுரிமைக்கான போராட்டம் தராது என்ற வாதம், தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் சமவுரிமை இயக்கத்தை இனவாதம் என்று கூறுமளவுக்கு, இனத் தேசியவாதம் முன்தள்ளப்படுகின்றது. சமவுரிமைக்கான அமைப்பு தொடங்கிய காலம் முதல் இதற்கு எதிரான இன்றைய அவதூறுகள் வரை, சமவுரிமை போராட்டத்தை முடக்குவதையே கோருகின்றது. சமவுரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் இனவாதமேயொழிய, இனப்பிரச்சனைக்குரிய தீர்வாகவும் அதற்கான செயல் பூர்வமான ஒன்றாகவும் இருக்க முடியாது என்பதே இதில் உள்ள அரசியலாகும்.

 

 சமவுரிமைக்கு பதில் அவர்கள் கோருவது என்ன?

1.அனைத்து தேசிய இன வாதத்துக்கு ஆதரவு

2.பிரிவினைக்கு அல்லது தனியரசுக்கு ஆதரவு

3.பிரிவினைவாத இன தேசியத்தை பாட்டாளி வர்க்கம் தனது அரசியலாக முன்னெடுத்தல் வேண்டும்

குறைந்தபட்சம் இவற்றில் ஒன்றையே தீர்வுக்குரியதாக முன்வைக்கின்றனர். இதை முன்னெடுக்க மறுப்பது இனவாதம் என்கின்றனர். இன்று சமவுரிமையை மறுக்கின்ற அனைத்து தரப்பினது வாதமும், இவற்றுள் ஏதோவொன்றையே முன்னிறுத்துகின்றது.  நிபந்தனை இன்றி ஆதரிக்குமாறு கோருகின்றது. இதன் மூலம் தனது சொந்த வர்க்கத்தின் நலனுக்கான உத்தரவாதத்தைக் கோருகின்றது.

தேசியத்தை தன் அரசியலாக கொண்ட முதலாளி வர்க்கத்தின் இந்தத் தீர்வு மற்றும் செயல் ப+ர்வமான செயற்பாட்டை எதிர்த்துதான், பாட்டாளி வர்க்கம் தன் சொந்தக் கோட்பாட்டை முன்வைக்கின்றது. இதன் உள்ளடக்கம் மற்றும் நடைமுறை வடிவம் தான் சமவுரிமைக்கான போராட்டமாக இருக்க, அதன் கோட்பாட்டு பெயர்தான் சுயநிர்ணயம்.

சுயநிர்ணய உள்ளடக்கத்தை மறுத்து உரிமையை முன்னிறுத்திக் கொண்டு இயங்கும் சந்தர்ப்பவாதிகள் கூட, முதலாளித்துவ அரசியல் உள்ளடக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயத்தில் செயல்பூர்வமான அரசியல் வடிவம் புரட்சிக்கு முன் சமவுரிமைக்கான போராட்டமாகவும், புரட்சிக்கு பின் சமவுரிமையிலான தன்னாட்சியும் தான். இதைத்தான் பாட்டாளி வர்க்கம் செயல்பூர்வமான தீர்வாக கொண்டு, நடைமுறையில் முன்னெடுக்கின்றது.

பாட்டாளி வர்க்கத்தின் இந்த செயல்பூர்வமான அரசியலை மறுக்கின்ற முதலாளித்துவ தேசியவாதிகள், "தனியரசு", "தனிநாட்டுக்" "இடைக்கால தீர்வு".. என்று தேசியவாதக் கோரிக்கைகளை முன்வைப்பதையே தீர்வாகவும் செயல்பூர்வமானதாகவும் இருக்கும் என்கின்றனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் ஆதரிக்குமே ஓழிய, அதற்குரிய விசேட சலுகைகளை ஆதரிக்காது. பாட்டாளி வர்க்கம் தன் வர்க்கப் போராட்டத்துக்குரிய ஒன்றை முன்னிறுத்திப் போராடுமே ஒழிய, முதலாளித்துவத்தின் தனி ஆட்சிக்கான அதன் தேசிய கோரிக்கையை ஆதரிக்காது. இங்கு தீர்வு மற்றும் செயல்பூர்வமானதாக கருதும் அடிப்படைகள், இரண்டு நேர் எதிரான வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்துக்கான அரசியல் போராட்டத்துக்கான உள்ளடக்கமாகும்.        இந்த அரசியல் அடித்தளத்தில் நின்று, அரசியல் ரீதியாக தம்மை மூடிமறைத்துக் கொண்டவர்கள் தனியரசை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றனர்.  சமவுரிமைப் போராட்டம் மூலம் தன்னாட்சியை அடையும் சுயநிர்ணயத்தை மறுத்து முன்வைக்கும் இவர்களது சுயநிர்ணயம், தனியரசுக்கான பிரிவினையை முன்னிறுத்தி தன்னை முன்னிறுத்துகின்றது. இடதுசாரிய அணிக்குள் புகுந்துள்ள தேசியவாதம் இப்படி தன்னை முன்னிறுத்துகின்றது.

இங்கு பாட்டாளி வர்க்கத்தின் சுயநிர்ணய அடிப்படையிலான சமவுரிமைக் கோரிக்கைக்கு பதில், முதலாளித்துவ கோரிக்கையான "தனியரசு" கோரிக்கையையே செயல்பூர்வமானதாகவும், இனப் பிரச்சனைக்கான தீர்வாகவும் முன்னிறுத்துகின்றது. இதை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்பதே, சமவுரிமையை எதிர்ப்பவர்களின் பொதுக் கோரிக்கை. தனியரசு அல்லாத எந்தத் தீர்வும், இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல என்பதே இதன் பின்னுள்ள அரசியல் சாரம். பாட்டாளி வாக்கம் இதை ஆதரிக்காது என்பதும், சமவுரிமையை மறுக்கின்ற இந்த குறுகிய ஜனநாயக விரோதக் கோரிக்கையை எதிர்த்தும் போராடும் என்பதும்,  பாட்டாளி வர்க்க நலனிலான அரசியலாகும்.

பாட்டாளி வாக்கத்தின் வர்க்கக் கடமை என்பது சமவுரிமையைப் பெறவும், இதன் மூலம் வர்க்கப் போராட்டத்துக்கான மிகச் சிறந்த சூழலை உருவாக்குவதும் தான். இதன் மூலம் பாட்டாளி வர்க்க அதிகாரத்தில், சுயநிர்ணய அடிப்படையிலான தன்னாட்சியையே தேசங்களுக்கு இடையில் அரசியல் தீர்வாக கொண்டுவருவதும் தான்.

பாட்டாளி வர்க்கம் தன் வர்க்க நலன் அடிப்படையில் செயல்பூர்வமான ஒன்றாக சமவுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், தனது ஆட்சியில் சமவுரிமை அடிப்படையில் தேசங்களின் தன்னாட்சி அடிப்படையிலும் தீர்வைக் காண முனைகின்றது. இது தான் மார்க்சிய சுயநிர்ணயத்தின் அரசியல் உள்ளடக்கம்.

இங்கு சமவுரிமைக்கான போராட்டம் என்பது சாராம்சத்தில் பாட்டாளி வர்க்கம் முன்வைக்கும் சுயநிர்ணயத்தின் நடைமுறை சார்ந்த அரசியல் உள்ளடக்கக் கூறாகும். லெனின் முன்வைத்த பாட்டாளி வர்க்க சுயநிர்ணயம், இந்த சமவுரிமையையே முன்னிறுத்திப் போராடுவதையே ஒரேயொரு செயல்பூர்வமான நடைமுறையாக முன்வைக்கின்றதே ஓழிய, முதலாளித்துவ தேசியத்தை ஆதரித்தல்ல. சமவுரிமைக்கான நடைமுறைப் போராட்டத்தின் முழுமை பெற்ற கோட்பாட்டு வடிவம் தான் சுயநிர்ணயம். பாட்டாளி வர்க்கம் தன் ஆட்சியில் சுயநிர்ணய அடிப்படையில் தேசங்களுக்குள் சமவுரிமையின் அடிப்படையில் தன்னாட்சியைக் கொண்டு இருப்பதை, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியோ, முன்னிலை சோசலிசக் கட்சியோ மறுக்கவில்லை. மாறாக அதையே தங்கள் கொள்கையாக, அரசியல் நடைமுறையாக கொண்டு செயற்படுகின்றன.

இங்கு இலங்கையில் சுயநிர்ணயத்தை முன்வைப்பதில் உள்ள பிரச்சனை, அது திரிக்கப்பட்டு அதன் அரசியல் உள்ளடக்கம் சிதைக்கப்பட்டு காணப்படுவதுதான். 20 ம் நூற்றாண்டின் ஆரம்ப  காலத்தில் வர்க்க அடிப்படையை கொண்ட "சமுக ஜனநாயக கட்சிகளின்" அரசியல் உள்ளடக்கம் திரிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில், அந்தப் பெயர் மூலம் பாட்டாளி வர்க்க கட்சிகளை அடையாளப்படுத்த முடியாத போது, வர்க்கக் கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சியாக தன்னை அழைத்துக் கொண்டது.

இன்று அதே அரசியல் அடிப்படை விடையம் தான், இலங்கையில் சுயநிர்ணயம் தொடர்பாக காணப்படுகின்றது. சுயநிர்ணயம் திரிக்கப்பட்டு, பிரிவினையாக முன்னிறுத்தப்படுகின்றது. சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டு அரசியல் உள்ளடக்கம், இலங்கையில் தலைகீழாகவே முன்னிறுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு பதிலாக மார்க்சிய சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி சமவுரிமையை முதன்மைப்படுத்தி, பாட்டாளி வர்க்கம் களத்தில் போராடக் கோருகின்றது. சுயநிர்ணயத்தை நிராகரித்தல்ல, மாறாக அதன் உள்ளடக்கத்தை முன்னிறுத்தி செயல்பூர்வமாக சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றது. சுயநிர்ணயம் என்ற சொல்லுக்கு வெளியில், அதன் அனைத்து வர்க்க நடைமுறையையும் முன்னெடுக்க சமவுரிமை இயக்கம்  கோருகின்றது. சுயநிர்ணயம் சமவுரிமை மூலம் முன்தள்ளப்படுகின்றது.

சுயநிர்ணயத்தின் வர்க்க அரசியல் உள்ளடக்கத்தை நடைமுறையில் முன்னெடுப்பதில் எந்த அரசியல் தடையையும், இந்த சொல்லை பயன்படுத்தாததால் தடுக்காது. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும் கட்சி,  ஜனநாயகக் கோரிக்கையை ஆதரித்து முன்னெடுக்குமேயொழிய, இதுவல்லாத எதையுமல்ல. இதுதான் சமவுரிமையாக இருக்கின்றது. இதுவே தான் புதிய ஜனநாயக மக்கள் முன்ணணியினதும், முன்னிலை சோசலிசக் கட்சியினதும் பொதுவான அரசியல் நிலை மட்டுமல்ல, இதையே அரசியல் ரீதியாக சமவுரிமைக்கு ஊடாக முன்னெடுக்கின்றோம்.

சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டுக்குரிய அடையாளச் சொல்லை புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாங்கள் பயன்படுத்தும் போது, சுயநிர்ணயத்தின் திரிந்த வடிவத்தை எதிர்த்துப் போராடும் அரசியல் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு தான் முன்னிறுத்துகின்றோம். சுயநிர்ணயத்தை சரியான ஒரு அரசியல் மூலம் கொண்டுவரும் கோட்பாட்டு ரீதியான போராட்டத்தை முன்னிறுத்தித் தான் அதை முன்வைக்கிறோம். இதற்கு வெளியில் சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றவர்கள், கோருகின்றவர்கள் எவரும், சுயநிர்ணயத்தின் திரிந்து போன பிரிவினைவாத வடிவத்தை எதிர்த்து போராடுவது கிடையாது. தேசியவாத அடிப்படையிலான சந்தர்ப்பவாத உள்ளடக்கத்திலேயே, சுயநிர்ணயம் இலங்கையில் கோரப்பட்டு முன்வைக்கப்படுகின்றது. சுயநிர்ணயத்தை மார்க்சிய உள்ளடக்கத்தில் முன்வைப்பவர்கள் நாங்களாக இருக்கும் இன்றைய சூழலில், எமக்கு எதிராக தேசியவாதிகள் பேசும் போது மட்டும்தான் சுயநிர்ணயத்தை அவர்கள்  பேசுகின்றனர். அதுவும் தங்கள் முதலாளித்துவ தீர்வை முன்னிறுத்தி, சுயநிர்ணயத்தினை  திரித்த வடிவிலேயே எமக்கு எதிராக முன்னிறுத்துகின்றனர்.

புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி சுயநிர்ணயத்தை முன்வைக்கும் போது, அதன் திரிந்த வடிவங்களுக்கு எதிரான கோட்பாட்டை அம்பலப்படுத்தியும், இது சாhந்த அனைத்து தேசிய வாதத்தையும் எதிர்த்து போராட்டத்தில் நடைமுறையுடன் இணைந்து தான் பயணிக்கின்றது. முன்னிலை சோசலிசக் கட்சியோ இனவாதத்துக்கு எதிரான சமவுரிமை என்னும் தனது சொந்த அரசியல் நடைமுறை மூலம், சுயநிர்ணயத்தின் சரியான அரசியல் உள்ளடக்கத்தை நடைமுறையில் முன்னெடுப்பதன் மூலம், மாற்றி அமைக்க முனைக்கின்றனர். இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றாக, நடைமுறை ஒன்றாக, ஒரே திசையிலேயே பயணிக்கின்றோம். கடந்த காலத்தில் எம்மைச் சுற்றிய வௌ;வேறான இலங்கையின் வரலாற்றுச் சூழலின் காரணமாக, பணிகளும் கடமைகளும் வேறுபட்டு இருக்கின்றது.

இன்னுமொரு வகையில் கூறுவதானால், இன்று இலங்கையில் திரித்த சுயநிர்ணயத்தைக் கோருகின்றவர்கள், அதை முன்வைக்கின்றவர்கள், பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுயநிர்ணய அடிப்படையிலான தன்னாட்சியையும், அதற்கான சமவுரிமை போராட்டத்தை மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். அதாவது லெனின் முன்வைத்த சமவுரிமையிலான தன்னாட்சி என்ற மார்க்சிய நடைமுறைக் கண்ணோட்டத்தை சுயநிர்ணயத்தில் இருந்து பிரித்து அகற்றி விடுகின்றனர். இன்று புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும், முன்னிலை சோசலிசக் கட்சியும், லெனினின் இந்த சுயநிர்ணயத்தின் அடிப்படையை முன்வைத்து போராடுகின்றவராக இருக்கின்றனர். இதற்கு வெளியில் மற்றவர்கள் இந்த நடைமுறை அரசியல் உள்ளடக்கத்தை மறுக்கின்றவராக இருக்கின்ற அதேநேரம், சுயநிர்ணயத்தை தேசியவாத கண்ணோட்டத்தில் வெறும் கோதாக மாற்றி திரிக்கின்றவராகவே இருக்கின்றனர். இந்த அடிப்படையில்தான் சமவுரிமையை மறுதளிக்கின்றவராக செயற்படுகின்றனர்.

 

பி.இரயாகரன்

03.12.2013