Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரம் என்பது நவதாராளமயமாக்கலை முன்னெடுப்பதே!

கூட்டமைப்பின் அதிகாரம் இனம் சார்ந்த ஆட்சி அதிகாரமல்ல. மாறாக வடமாகாணத்தை நவதாராளமயமாக்கலுக்கான அரசியல் அதிகாரம். இந்த அதிகாரத்தை இனரீதியான வாக்களிப்பு மூலம் பெற்று கொண்டுள்ளது கூட்டமைப்பு. வடக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ள கூட்டமைப்பு, தமிழ்தேசிய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கப்போவதில்லை. அப்படி ஒரு கொள்கையும் அதனிடம் கிடையாது. மாறாக தரகுமுதலாளித்துவ நவதாராளமயமாக்கல் பொருளாதாரத்தையே தன் கொள்கையாக வட மாகாணசபை முன்னெடுக்க உள்ளது. "தேசியம்", "இனத் தேசியம்" என்பது இங்கு மாயையும், கற்பனையுமாகும்.

சமூகப் பொருளாதார அடிப்படையற்ற மனம் சார்ந்த விருப்பங்கள் என்பது கனவுலக பிரமைகள். இதுவே இன்று பொது சமூக உளவியலாக, சமூகத்தை ஆட்கொண்டு பிரதிபலிக்கின்றது. சமூக பொருளாதார அடிப்படையற்ற சிந்தனைகள் அனைத்தும், மானசீகமான மனம் சார்ந்த கற்பனைகளும் நம்பிக்கைகளுமே. இது தன்னைத் தானே தேற்றிக் கொள்கின்ற, அகநிலையான மனத் தோல்விகள். தங்கள் விருப்பம் போல் வாழும் ஒரு சமூகத்தை எதார்த்தத்தில் படைக்க முடியாத பொதுத் தோல்வியின் அகநிலை வெளிபாடுகள். சமூக அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி, அகநிலையான கற்பனைகளில் அதீதமாக நம்பிக்கை கொள்ளுதலாகும். தொடர்ந்து ஏமாற்றத்தையும், நம்பிக்கையீனத்தையும் கொடுப்பதுடன், விரக்தியுடன் கூடிய கற்பனையே வாழ்க்கையாகிப் போகின்றது.

உண்மை என்பது எங்கும் எப்போதும் எதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது, நேரடியாக மனம் சார்ந்தது அல்ல. எதார்த்த வாழ்வு சார்ந்த, சமுகப் பொருளாதார அரசியல் அடிப்படையற்ற, இன ரீதியான சிந்தனைக் கண்ணோட்டங்களை ஒருவர் பொய்யானவை என உணருதல் என்பது, மனம் சார்ந்தல்ல, வாழ்வு சார்ந்தாக அவர் உணரும் போது அவ் உண்மையைக் காணமுடியும். அவ் உண்மையை கண்டடைய முதலில் ஒருவர் தனது சொந்த வாழ்வியலை விளங்கிக் கொள்வதிலிருந்து தொடங்க வேண்டும. இனம் சார்ந்த ஒடுக்குமுறை, பொருளாதாரம் சார்ந்த அவலம், இரண்டையும் உள்ளடக்கிய உண்மையைக் காண வேண்டும். இந்த வகையில் வடக்கு மாகாணசபையின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகள் தான், மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உண்மையான அரசியல் அடிப்படையாகும். இதைப்பற்றி அக்கறையற்ற இனரீதியான கற்பனைகள், மனம் சார்ந்து பொய்மையாக இருப்பது வெளிப்படையான உண்மையாக இருக்கின்றது.

இன்று முதலாளித்துவ ஜனநாயகம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நவதாராளமயமாக்கல் நிகழ்ச்சித் திட்ட அரசியலில் வெறும் தலையாட்டிப் பொம்மைகள் தான். இங்கு இந்த ஜனநாயக முறையில், வேறுபட்ட அரசியல் பொருளாதார கொள்கைக்கு இடமில்லை. வேண்டுமானால் மதம், இனம், சாதி ... என்று, வேஷம் மட்டும் போடலாம்.தேர்தலில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முதலாளித்துவ ஆட்சி முறைமை, அது ஆரம்பித்த காலத்திலிருந்து, அதன் வடிவம் மாறிய வண்ணமேயுள்ளது. தற்போது மாறிவரும் பொருளாதார கட்டமைப்புடன் முதலாளித்துவ முறைமையும், அது தேர்ந்தெடுக்கும் "ஜனநாயக" அமைப்பு முறையும் சீரழிந்து காலாவதியாகி வருகின்றது. இதன் அர்த்தம் சமூக பொருளாதார கட்டமைப்பில் முரண்பாடுகள் இன்றி, அதை முன்னெடுப்பதில் கொள்கை கோட்பாடுகளில் எந்த வேறுபாடுமின்றி, அதிகாரத்தை கைப்பற்றும் முறைதான் இன்று "ஜனநாயகமாக" மாறிவிட்டது. இதுவே இன்று தேர்தல் முறையாகி இருக்கின்றது.

உலகமயமாதலின் அடிப்படையில் நவதாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, இதுதான் தேர்வு செய்யும் "ஜனநாயக" உறுப்புகளின் பொருளாதாரக் கொள்கையும் கூட.வடக்கு மாகாணசபையின் பொருளாதாரக் கொள்கை என்பது, இலங்கை அரசின் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கும். இலங்கையின் பொருளாதாரக் கொள்கை என்பது நவதாராளமயமாக்கலே.

அன்னிய மூலதனத்தின் நலனை முன்னெடுக்கும் கொள்கையை அபிவிருத்தி அரசியலாக முன்னெடுத்தலே இலங்கையின் இன்றைய பொருளாதார நிகழ்ச்சித் திட்டமாகவுள்ளது. அதாவது, இந்தியா, சீனா முதல் மேற்கு மூலதனத்தின் நலனுக்கு ஏற்ப, மக்களின் தேசிய பொருளாதாரத்தை இல்லாது அழித்தலும்- சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை முன்னெடுத்தலும், சந்தைப்படுத்தலும் தான் இலங்கையினது அரசியற் பொருளாதார நடைமுறையாகவுள்ளது. இதன் அடிப்படையில், இலங்கை அரசியல் - நிருவாகக் கட்டமைப்பின் ஒரு அங்கமான வடக்கு மாகாணசபையினதும்; அரசியல் பொருளாதாரக் கொள்கை தரகு முதலாளித்துவ - நவதாராள பொருளாதரமே!!! இது வடமாகாணத்துக்கும், கூட்டமைப்புக்கும் மட்டும் பொருத்தமல்ல, இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையகம் என்ற எந்தத் தரப்பின் இன ஆட்சியாகட்டும், அவை நவதாராளமயமாக்கலை அடிப்படையாகக் கொண்டவையாகத் தான் இருக்க முடியும். ஆகவே, மேற்கூறியதுபோல இனம், மதம், சாதி, பிரதேசம் . என்று எதை உச்சரித்தாலும், நவதாராளமயமாக்கலை மீறிச் செயற்படுவதுகிடையாது.

நவதாராளமயமாக்கலை முன்னெடுப்பதற்கான மூகமுடிதான் இந்தக் குறுகிய அடையாளங்கள்.இந்த வகையில் 2011 நவம்பர் மாதம் இலங்கை அரசால் வெளியிடப்பட்ட நவதாராள பொருளாதாரக் கொள்கையின், நடைமுறை வேலைகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலவற்றை மஹிந்த அரசுடன் இணைந்து முன்னெடுக்கப்படப்போகும் பொறுப்பு விக்னேஷ்வரன் தலைமையிலான வடமாகாண அரசின் நிகழ்ச்சி நிரலாகவுள்ளது. குறிப்பாக, மன்னாருக்கும் தனுஸ்கோடிக்கும் இடையிலான நெடுஞ்சாலை சிறப்பு விவசாய மையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்படப்போகும் சர்வதேசிய கொம்பனிகளின் ஏற்றுமதி சார்ந்த பயிர்ச் செய்கையும், அதற்கான நிலம், நீர், போக்குவரத்து, சுகாதாரம், மனிதவளம் போன்ற தேவைகளை அவர்களுக்குக் கிடைக்க வழிசெய்வதும். வடமாகாணத்தின் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலம் இத் திட்டத்துக்கு வழங்கப்படும். 6 சர்வதேச கல்வி வலயங்களை அமைத்தல். இங்கு சர்வதேச பல்தேசிய கொம்பனிகள் தனியார் மயப்பட்ட பல்கலைக் கழகங்களை அமைக்கும்.

இதில் ஒரு வலயம் கிளிநொச்சியில் அமைக்கப்படும்.இந்த மூன்று திட்டங்களும் சிறு உதாரணங்கள் மட்டுமே. இத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின், வடபகுதி விவசாயம் முற்றாக அழிக்கப்பட்டு, விவசாயிகள் கூலிகள் ஆக்கப்படுவார்கள். இன்று இலங்கையில் உள்ள இலவசக் கல்வி, இந்தியாவில் உள்ளதுபோல பணம் சார்ந்த பண்டமாக - சந்தைப்பொருளாக மாற்றப்படும். இந்திய பொருளாதார - கலாச்சரா- சமூக ஆதிக்கம் முக்கியமாக வடக்கிலும் கிழக்கிலும் நிறுவப்படும்.

ஆகவே மக்கள் நலம் சார்ந்து இயங்கும் சக்திகள் இனம், மதம், சாதி, பிரதேசம் போன்ற விடயங்களைக் கடந்து, மக்கள் அனைவருக்கும் தீமை விளைவிக்கும் இலங்கையின் நவதாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகப் போராடவேண்டிய தருணமிது. இந்த நவதாராளமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தை யார் நடைமுறைப்படுத்தினாலும் அவர்கள் அனைவரும் மக்களின் எதிரிகளே! அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்- விக்னேஷ்வரன் தலைமையிலான வடமாகாண அரசாக இருந்தாற் கூட !!!

13.10.2013