Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை பாராளுமன்றமும் நீதிமன்றமும் எதற்காக, யாரின் நலனுக்காக தமக்குள் மோதுகின்றன?

இலங்கை பாராளுமன்றமும் நீதிமன்றமும் எதற்காக, யாரின் நலனுக்காக தமக்குள் மோதுகின்றது? மக்களின் நலனை முன்னிறுத்தியா? இல்லை. மக்கள் மேலான ஒடுக்குமுறையை எதிர்த்தா? இல்லை. உலகை மீளப் பங்கிடக் கோரும் ஏகாதிபத்தியத்துக்கும், அதைத் தக்கவைக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான மோதல் தான் இது. இலங்கையில் வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு முகம் கொண்டு, அது தன்னை வெளிப்படுத்துகின்றது. ஆளும்வர்க்கத்தை சேர்ந்த அதிகார வர்க்கத்துக்கும், ஆட்சியாளருக்கும் இடையிலான, தத்தம் அதிகாரத்துக்கான மோதலாக இது வெளிவருகின்றது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் நீடித்த அதிகாரப் பங்கீடுகளுக்கு முரணாக, ஆட்சியாளர்கள் நாட்டை பாசிசமாக்குகின்றபோது ஏற்பட்டுள்ள மோதலாக தன்னை வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் முதுகெலும்பான சட்டத்தின் ஆட்சியதிகாரத்தை, குறித்த அதிகார வர்க்கத்திடம் இருந்து பறித்தெடுப்பதன் மூலம் இது ஏற்படுகின்றது. நீதிமன்ற அதிகாரங்களைப் பறித்தெடுக்க முனையும் பாசிசத்தின் விளைவிலான மோதலாக வெளித்தெரிகின்றது. இந்த பாசிசக் கூத்து, இலங்கையில் சட்ட ஆட்சி பற்றிய மயக்கத்தையும் மாயையையும் ஆட்டம் காண வைத்திருக்கின்றது.

இந்த வகையில் நீதிமன்றத்தின் சட்ட ஆட்சியை முன்னிறுத்தி அதை ஆதரிப்பவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தையும், பாராளுமன்றத்தை முன்னிறுத்தி சட்டத்தின் ஆட்சியை நிராகரித்து நிற்பவர்கள் பாசிசமயமாக்கலையும் தேர்ந்தெடுத்து தமக்குள் மோதுகின்றனர். இந்த இரு வேறுபட்ட ஆட்சி அதிகார சக்திகளுக்கு இடையில் நடக்கும் இழுபறிகளும், மோதல்களும், மக்கள் பற்றிய பொது அக்கறையால் எழுந்ததல்ல.

எந்த ஏகாதிபத்திய நலன் சார்ந்து, மக்களை அடக்கியாளும் வடிவம் எது என்பதில் தான் மோதல். எந்த சுரண்டும் வர்க்கம் மக்களை எந்த வடிவில் சுரண்டுவது என்பது தான், இதன் சாரம். அதாவது அனைத்து சிவில் சட்ட வடிவில் சுரண்டுவது அல்லது அதை மறுத்து பாசிச வடிவில் சுரண்டுவது என்பது தான் இதன் பொருள். இதன்பின் ஏகாதிபத்திய முரண்பாடுகளும், முரண்பட்ட நலன்களையும் இது பிரதிநிதித்துவம் செய்கின்றது.

இதுவரை காலம் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க, சுரண்டப்பட்ட மக்களை பிளக்க இனவாதம் உதவியது. யுத்தத்தின் பின் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையிலான இனப் பிளவு மறைய, சட்டத்தின் ஆட்சி மூலம் சுரண்ட முடியாது என்பதே பாசிசத்தை முன்வைப்பவர்களின் நிலை. இது ஆளும் வர்க்கத்துக்குள்ளான ஏகாதிபத்திய நெருக்கடி தான், தமக்குள்ளான மோதலாகின்றது. இதுவே இனவாதத்தை மீண்டும் ஆழமாக்கி தூண்டிவிடுகின்றது.

இந்த வகையில் சுரண்டும் வர்க்கத்தின் ஒரு பகுதி மக்களை சுரண்டுவதற்கு பாசிசமயமாக்கல் அவசியமில்லை என்ற அடிப்படையில் சட்டத்தின் ஆட்சி கோருகின்றனர். மறுதரப்பு சட்டத்தின் ஆட்சி மூலம் சுரண்ட முடியாது, பாசிச ஆட்சி வடிவம் மூலம் சுரண்ட முடியும் என்பது சட்டத்தின் ஆட்சியை மறுக்கும் பாராளுமன்றவாதிகளின் நிலை.

சட்ட ஆட்சியை மறுத்த பாசிச அடிப்படைக்கு எந்த வகையான ஆட்சி வடிவம் என்று வரும் போது, அது இராணுவ ஆட்சி முதல் குடும்ப ஆட்சி வரை அங்குமிங்குமாக தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இங்கு சட்டத்தின் ஆட்சி மறுப்பு என்பது, ஜனநாயகத்தை மறுத்தலாகும். குறிப்பாக சுரண்டும் வர்க்கமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான ஜனநாயகக் கூறுகளை இல்லாததாக்குவதாகும். இதன் பொது வெளிப்பாடு தான், சமூகத்தில் நிலவும் ஜனநாயக கூறுகள் காணமல் போதலாகும்.

இன்றைய இந்தச் சூழலை மூடிமறைக்கவே இனவாதம் மதவாதம் என, மக்களை பிளக்கும் வண்ணம் சமூகப் பிரிவுகளை பாசிட்டுகள் தூண்டிவிடுகின்றனர். இதற்கு அமைவாகவே பாசிசம் பாராளுமன்றம் ஜனநாயகம் முதல் ஜனநாயக உரிமை வரை, தனது தேவைக்கும் தன் வளர்ச்சிக்கும் ஏற்ப வரையறுத்து அனுமதிக்கின்றது.

இன்று இலங்கையில் நடந்தேறும் பாசிசமாக்கலின் பொது அரசியல் அடித்தளம் இதுதான். இன்று நீதிமன்றம் பாராளுமன்ற மோதல் இதன் ஒரு அங்கமாகும். பாசிசம் மக்களுக்கு எதிரான என்ற வகையில், நீதிமன்றம் நடத்தும் போராட்டத்தை நாம் அணுக வேண்டும். ஆனால் மக்களை சார்ந்ததாக இதைக் கருதக் கூடாது.

இந்த நீதிமன்றப் போராட்டத்தின் அரசியல் அடித்தளம், ஏகாதிபத்தியத் தன்மை கொண்டது. இது மேற்கின் ஜனநாயக உலக ஒழுங்கை பேணுவதை, நாம் அரசியல்ரீதியாக இனம் காண வேண்டும். இது இந்த பாசிசமாக்கலின் மற்றொரு பரிணாமத்தை புரிந்து கொள்ளக் கோருகின்றது.

இலங்கை பாசிசமயமாக்கல் என்பது தனித்து சொந்த நாட்டுக்குள்ளான ஒன்றாக தன்னை குறுகிக் கொண்டு வெளிப்படுத்தவில்லை. மேற்கு ஏகாதிபத்தியத்துடன் முரண்பட்ட, ஏகாதிபத்தியங்களும் சேர்ந்து தான் தன்னை வெளிப்படுத்தி வருகின்றது. உலக ஒழுங்கில் புதிய வகையில் உலகை மீளப் பங்கிடக் கோரும் மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்களுடன் இணைந்து தான், இலங்கை பாசிசமயமாக்கல் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. குறிப்பாக இரண்டு ஏகாதிபத்திய முகாம் சார்ந்த சுரண்டும் மற்றும் தரகு வர்க்கங்களுக்கு இடையிலான உள்ளுர் மோதல் தான் இது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் தான், இலங்கையில் ஆளும் வர்க்க பிரிவுகளின் முரண்பாடாக மாறி இருக்கின்றது. ஜனநாயக வழியில் போட்டியிட்டு சுரண்டும் ஜனநாயகமா அல்லது பாசிச மூலம் சுரண்டுவதா என்பதில், ஏகாதிபத்தியம் சார்ந்த சுரண்டும் வர்க்கங்களின் முரண்பாடு இது.

உலகை மீளப் பங்கிடக் கோரும் புதிய மூலதனத்தின் வருகையும், அதன் செயற்பாடும் சட்டபூர்வமான வழிகளில் செயற்பட முடியாத போது, அது பாசிசத்தை தேர்ந்தெடுக்கின்றது. சொத்துகளைக் கைப்பற்றுவது, ஒப்பந்தத்தை இரத்து செய்வது தொடங்கி, இவை அங்குமிங்குமாக பல வடிவில் இன்று வெளிப்படுகின்றது. இது சட்டத்தின் ஆட்சி மூலமல்ல, பாசிச வடிவங்களில் தான் இலங்கையில் புதிய மூலதனங்கள் அபிவிருத்தியின் பெயரில் பாய்கின்றது. இது மேற்கு ஏகாதிபத்திய மூலதனத்தை அகற்றி தனக்கு ஏற்ப இலங்கையை மீளப் பங்கிடக் கோருகின்றது. இன்று நீதிமன்ற பாராளுமன்ற மோதல் இதற்குள்ளானதே. பாசிமயமாக்கலின் தேர்வு இதற்கு உட்பட்டதே.

பி.இரயாகரன்

28.12.2012