Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை -(புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 14)

14.கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம்

அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரான அரசியல் நிலையை இயக்கங்கள் உருவாக்கியதற்கு, இலங்கை இனவாத பாசிச அரசை நாம் நேரடியாக குற்றம் சாட்டமுடியாது. மாறாக போராடும் அமைப்புகளின் வர்க்கம் சார்ந்த, மக்கள் விரோதத் தன்மையே இதன் பிரதான அடிப்படையாகவும், மூல வேராகவும் இருந்துள்ளது. இன ஒடுக்குமுறையை பேரினவாத பாசிச அரசு தமிழ் மக்கள் மீது திணித்து அவர்களை அடக்கிய போது, அதற்கு எதிரான போராட்டம் இயல்பாகவும் இயற்கையாகவும் மனித உரிமைக்கானதாக எழுந்தது.

 

இந்தப் போராட்டம் பாராளுமன்ற அரசியல் வழிகளில் இருந்து நேரடியாக இளைஞர்களின் கைகளுக்கு மாறியது. மக்களின் உரிமைகளை உள்ளடக்காத, மக்கள் போராட்டமல்லாத, அரசியலற்ற லும்பன்களின் ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்த வகையில் இப் போராட்டம் தலைமறைவான சில உதிரி இளைஞர்களின் போராட்டமாக வெளிப்பட்டது. அத்துடன் தமிழ் பாராளுமன்ற தரகு நிலப்பிரபுத்துவத்தை அடிப்படையாக கொண்ட  அரசியல், குட்டிபூர்சுவா வர்க்கத்தின் நலன்களுடன் இணைந்து நின்றதால், இதுவே இயக்கங்களின் பொது அரசியல் வழியானது. இந்த பூர்சுவா இளைஞர் இயக்கங்கள் ஆயுதத்தை எடுத்த அதேநேரம், நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ பாசிச அடிப்படைவாதத்தின் பாதுகாவலராக தம்மை வெளிப்படுத்தினர். இதன் அரசியல் பண்போ, ஜனநாயக மறுப்பை ஆதாரமாக கொண்டு தங்களை நிலை நிறுத்தத் தொடங்கினர். இந்த ஜனநாயக மறுப்பு சொந்த இயக்கத்துக்குள்ளும், மக்களுக்கு எதிராகவும் ஆரம்ப முதலே வெளிப்பட்டது.

இதை மூடிமறைக்க, பேரினவாதத்தைக் காட்டினர். அதேநேரம் மக்கள் போராடும் சுதந்திர உரிமைக்கு எதிராகவும், மற்றைய இன மக்களுக்கு எதிராகவுமே, தனது ஜனநாயக விரோத மற்றும் குறுந்தேசிய இனவாதத்தை அரசியல் மயமாக்கினர். தமிழ் மக்களின் போராட்டம் சார்ந்து எழுந்த 30 க்கு மேற்பட்ட இயக்கங்களில், ஒரு இரு இயக்கம் தவிர, அனைத்தும் குறுந்தேசிய இனவாதத்தை அடிப்படையாக கொண்டு, ஜனநாயக மறுப்பை ஆதாரமாக கொண்டே உருவாகின. சொந்த இயக்கத்துக்குள் கருத்துச் சுதந்திரத்தை மறுத்தது. இப்படி சர்வாதிகார பாசிச அமைப்புகளாக உருவாகிய இயக்கங்கள், மாற்று இயக்கத்தின் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து அழித் தொழிப்பதன் மூலம், தம்மைத் தாம் நிலை நிறுத்த முனைந்தன. இந்த இயக்கங்கள் மக்களை அற்பமாக கருதியதுடன், மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் சிந்தனைச் சுதந்திரம் அனைத்தையும் அடக்கியொடுக்கியதுடன், அதை துரோகமானதாகவும் கூட பிரகடனப்படுத்தின. மக்கள் சிந்திப்பது ஆபத்தானது என்பது, இவர்களின் அறம் சார்ந்த அரசியலாகியது. மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்;தையும், மக்களின் ஜனநாயக உரிமையாக கூட இயக்கங்கள் அங்கீகரிக்கவில்லை.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கோரி வீதியில் இறங்கி, இயக்கங்களுக்கு எதிராக போராடினர். இதன் போது, புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில், இதை தாம் ஏற்றுக் கொண்டால் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்|| என்ற கூறி, அந்த உரிமையை மக்களுக்கு மறுத்தனர். இதற்கு எதிராக வன்முறையையும், படுகொலைகளையும் ஈவிரக்கமின்றி புலிகள் எவினர். உத்தியோகபூர்வமாக ~மேதகு| தலைவர் பிரபாகரன் பெயரில் வெளியிட்ட துண்டுபிரசுரத்தில் ~~இந்த ஐந்து கோரிக்கைகள் உட்பட விஜிதரனுடன் சம்பந்தப்படாத, விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய, மேலும் இரு கோரிக்கைகள் வெகுஜன அமைப்பின் மூலம் எம்முன் கொண்டு வரப்பட்டு பேச்சுவார்த்தை தொடரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.|| என்று புலிகள் அறிவித்து நிராகரித்த இரு கோரிக்கையும் என்ன எனப் பார்ப்போம்.

1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்;.

2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் தான் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்|| என்று அவர்கள் கூறிய போது, இங்கு பாசிசம் குதிராட்டம் போடுவதையே காணமுடியும். இதைக் கோரியவர்களையும், இதை முன்னெடுத்தவர்களையும் துரோகியாக காட்டிய புலிகள், ஆயிரக்கணக்கில் கொன்றனர். இந்த வகையிலும் மக்கள் உரிமைகளை மக்களுக்கு நிராகரித்த புலிகள், என்றும் மக்கள் இயக்கமாக இருந்ததில்லை. மக்கள் விரோதியான புலிகள், இதை மக்களுக்கு மறுத்தே வந்தனார். இதற்கு மரணத்ததையே அவர்கள் பரிசாக வழங்கினர். மக்கள் போராடும் உரிமை, மக்களின் அடிப்படையான அரசியல் உரிமையாகும். இதை நிராகரிக்கும் புலிகளின் வக்கிரமான மக்கள் விரோத போக்கு தான், வரலாறு காணாத வகையில் அனைத்து துறையிலும் விசுவரூபம் எடுத்திருந்தது. புலிகளின் கடைசிக் காலம் வரை, இது தான் புலிகளின் அரசியலாக, ஒழுக்கமாக, படுகொலையாக நீடித்தது. பாசிச அடிப்படையாக அதையே சர்வாதிகாரமாக கொண்ட புலிகளின் மக்கள் விரோத வன்முறை அரசியலே, எப்போதும் மக்களின் அடிப்படை உரிமையை நிராகரித்தது. புலிகள் அதன் ஒட்டு மொத்த மக்கள் விரோதிகளாக இருந்ததையே, அவர்களின் துண்டுப்பிரசுரம் அம்பலப்படுத்தியது. "தமிழ் மக்கள்", "தமிழ் மக்கள்" என்று வாய் கிழிய பிதற்றிய புலிகளின் உண்மை முகம், மக்களின் அடிப்படை மனித உரிமையை மறுப்பதை ஆதாரமாக கொண்டே எழுந்தது. இவற்றை அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக்கியது. மக்களின் உரிமைகள் புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடக் கூடியது என்றால், மக்கள் விரோத கொடூரத்தை நாம் அவர்களின் சொந்த அரசியல் கூற்றின் ஊடாகவே அதைப் புரிந்து கொள்ளமுடியும்;. தம்மை அதி புத்திசாலியாக தனிமனித வழிபாட்டின் மூலம் நிறுவ முனைந்த புலிகளின் தேசியத் ~மேதகு| தலைவர் பிரபாகரனினதும், புலிகளினதும் ~~தணியாத தாகமான தமிழீழக் கோரிக்கை|| எதுவாக இருந்தது? தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திர மறுப்பை, அதன் கல்லறையின் மீதே தமிழீழம் கோரப்பட்டது. புலித் தமிழீழம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது மட்டும், நிதர்சனமாக இருந்தது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, புலிகளை அரசியல் அநாதையாக்கி விடுமல்லவா. அதனால் புலிகள் தமது பாசிச தனிமனித சர்வாதிகாரத்தை, படுகொலைகள் மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு, மக்களை மந்தைகளாக மாறினர். அவர்களை வாய்பொத்தி கைகட்டி தோப்புக்கரணம் போடவைத்தனர்.

தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட சர்வாதிகார பாசிச கட்டமைப்பில் தான், இயக்க மோதலும் உட்கட்சி படுகொலைகளும் விசுவரூபம் எடுத்தது. இதன் விளைவாக இயக்கப் படுகொலைகள் ஒரு யுத்தமாகவே புலிகளால் நடத்தப்பட்டது. நடுச்சந்தியில் உயிருடன் தீ வைத்து கொழுத்துவது முதல் ஈவிரக்கமற்ற சித்திரவதைகளையும் படுகொலைகளையும் ரசித்து செய்வதில், அவர்கள் என்றும் பின்நிற்கவில்லை. கைது செய்யப்பட்டவர்களை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று போடுவதே, தம் வீரத்துக்குரிய நடவடிக்கையாக்கினர். இப்படிப் புலிகளின் பாசிச வக்கிரம் வெளிப்பட்டது. ஜனநாயக மறுப்பையும் படுகொலை அரசியலையும் நியாயப்படுத்தி தொடருமளவுக்கு, புலிகளின் தனிமனித சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. இந்த மக்கள் விரோத அரசியல் தமிழ் மக்களின் நியாயமான சுயநிர்ணய போராட்டத்தின் பெயரில் அரங்கேறியது. தம்முடன் முரண்பட்ட அனைத்தையும், சொந்த இயக்கத்துக்குள்ளும் விதிவிலக்கின்றி துரோகமாக காட்டினர். அவர்களை இல்லாது ஒழிப்பதன் மூலம், தம்மையும் தமது பாசிச சர்வாதிகார அரசியலையும் நிலைநாட்டினர். இங்கு எந்த இடத்திலும் அரசியல் ரீதியாக மக்களைச் சார்ந்து முன்னேறிய வெற்றியில், தம்மை நிலைநாட்டிவிடவில்லை. சதிகள் மற்றும் படுகொலைகளின் மூலமே, புலிகள் அரசியல் அநாதையாகாது தம்மைத் தாம் தக்கவைத்தனர். மக்களை அச்சத்தில் உறையவைத்து, தம்மை மிதப்பாக காட்டினர்.

மறுதளத்தில் இந்த இயக்க அழித்தொழிப்பு பாசிச நடைமுறையில் தோற்றுப் போனவர்கள், நேரடியாகவே அன்னிய கைக்கூலியாக மாறினர். முன்னைய மறைமுக கைக் கூலிதனத்தை களைந்து, நேரடியாக மற்றைய நாடுகளின் சுரண்டல் விஸ்தரிப்புவாத கூலிப்பட்டாளமாக மாறினர். இவர்கள்தான் பின்னால் இலங்கை சிங்கள இனவெறி பாசிச அரசின் தயவில், நேரடிக் கைக்கூலியாக மாறினர். இப்படி நேரடியான மக்கள் விரோதிகளாக மாறி அரசின் பின் ஆயுதம் எந்திய அமைப்புகளாகவும், பாராளுமன்ற கட்சிகளாகவும் தம்மை தாம் நிலை நாட்டியிருந்தனர்.

மக்கள் போராட்டத்தை சிதைத்து இந்த நிலைக்கு இட்டுச் சென்ற வரலாற்றில், புலிகளின் ஜனநாயக மறுப்பும் தனி மனித சர்வாதிகாரமும் தான் முதன்மையான அரசியல் கூறாக இருந்தது. இதன் பின் மக்கள் விரோத பாசிசத் தன்மை ஒரு அடிப்படை கூறாக இருந்தபோதும், இயக்கங்களின் முந்திய மக்கள் விரோத ஜனநாயக மறுப்புடன் கூடிய கைக்கூலித்தன அரசியலே இதன் அடிப்படையாகவும் ஆதாரமாகவும்; இருந்தது. மக்களை வெறுக்கும் சமூக கண்ணோட்டம், இதன் அரசியல் அத்திரவராமாக இருந்தது. மக்கள் போராட்டம் என்பதை மறுத்து இளைஞர்களின் போராட்டமாகியது முதல், அதுவே அன்னிய உதவியாகி, ஆயுதங்களே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற அரசியல் நடைமுறையை உருவாக்கியது. இது மக்களை வெறுக்கும் அளவுக்கு, போராட்டம் ஆழமாக சீராழித்தது. இது அனைத்து இயக்கத்தினதும், அடிப்படை கொள்கையாகும். எதிர்நிலையில் மற்றைய இயக்கங்களால் (இங்கு புலிகள் அழிக்கப்பட்டிருந்தாலும்), இதே கதிதான் புலிக்கும் நிகழ்ந்திருக்கும். புலிகளின் ஈவிரக்கமற்ற அழித்தொழிப்பு, துரோகத்துக்கு எதிராக சொந்த காலில் வாழ வழியற்ற இளைஞர்களையும், தவிர்க்க முடியாமல் துரோகத்துக்கு துணை நிற்கச் செய்தது. இது துரோக இயக்கத்தை தொடர்ச்சியாக ஆயுதபாணியாக்கியது. ஆயிரமாயிரம் இயக்க உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு தமது சொந்த குடும்பத்துடன் சாதாரணமாக உயிர் வாழ முடியாத அவலத்தை, புலிப் பாசிசம் திணித்தது. இவர்கள் மறுதளத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாத பொருளாதார பலவீனமும், புலிகளின் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைக்கவும், துரோக இயக்கத்தின் பின்னால் தவிர்க்க முடியமால் ஆயுதமேந்தி நிற்க நிர்ப்பந்தித்தது. துரோக இயக்கங்களின் தொடர்ச்சியான ஆள்பலத்துடன் கூடிய அடிப்படையும் ஆதாரமும், ஈவிரக்கமின்றிய புலிகளின் படுகொலையுடன் கூடிய அழித் தொழிக்கும் பாசிச அரசியலே துணை நின்றது. அதாவது அரசுடன் துரோக கைக்கூலி இயக்கங்களாக நிலைத்து நீடித்து நிற்பதற்கான அரசியல் அடிப்படையையும், ஆதாரத்தையும், ஆள் பலத்தையும், புலிகளின் பாசிச கண்ணோட்டத்துடன் கூடிய அழித்தொழிப்பு பாசிச அரசியலிலேயே இருந்தே உற்பத்தியாகியது.

இந்த துரோக இயக்கத்தை எதிர்த்து சிலர் சொந்த காலில் நிற்க முனைந்தனர். குடும்பத்தை சார்ந்தும், சொந்த உழைப்பைச் சார்ந்தும், துரோகத்துக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்தனர். அவர்கள் புலிகள் ஈவிரக்கமின்றிய, பாசிச இரத்த வேட்கைக்கு பலியாக்கினர். எம் மண்ணில் புலிகளின் படுகொலை பாசிச அரசியலுக்கு, அண்ணளவாக 10000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலத்திலும், அதன் பின்பும் இது உச்சத்தில் இருந்தது. நாள் ஒன்றுக்கு 3, 5 படுகொலைகள் என்று, வருடம் 1000 முதல் 1500 மேற்பட்டோரை வடக்கு கிழக்கு வீதிகளில் படுகொலை செய்தனர். அன்றைய நாளாந்த பத்திரிகைச் செய்திகளில் இருந்து இதைத் தொகுத்தலே, இதை மீளவும் உறுதி செய்ய முடியும். புலிகளை எதிரி கொன்ற போது, அதை அவர்கள் அம்பலம் செய்ததை வைத்து, இதை  நாம் வேறு பிரித்து தொகுக்க முடியும். இந்திய ஆக்கிரமிப்பாளன் நாட்டை விட்டு வெளியேறிய பின்பு, சில ஆயிரம் பேரைக் கைது செய்த புலிகள் அவர்களை வதைமுகாமில் வைத்தே படுகொலை செய்தனர். இடதுசாரி சேர்ந்த என்.எல்.எப்.ரி, பி.எல்.எவ்.ரி, பேரவை, தீப்பொறி உறுபினர்கள் மற்றும் இடது கருத்ததை கொண்ட தனிநபர்கள் அனைவரையும் புலிகள் கொன்றனர்.    

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் எம்மண்ணில் இருந்த காலத்தில், என்.எல்.எப்.ரியின் வடமராச்சி பகுதியைச் சேர்ந்த சகல தாழ்த்தப்பட்ட உறுப்பினர்களையும் தெரிவு செய்து, ஒரு கிழமைக்குள்ளாகவே சாதிரீதியாக இனம் பிரித்து வீதிவீதியாக புலிகள் படுகொலை செய்தனர். அதற்கு முன்பாக வடமராட்சி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த புலிகளின் பொறுப்பாளர், படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்பே இந்த சாதிய வெறியுடன் கூடிய படுகொலையும் அரங்கேற்றப்பட்டது. இது கிழக்கில் புலிகளுடன் இருந்த முஸ்லீங்களை உட்படுகொலைகள் மூலம் கொன்ற பின்பு, முஸ்லீம் மக்கள் மேல் நடத்திய படுகொலையை போன்றது. தெல்லிப்பளை பகுதியில் புலி உறுப்பினர் ஓருவன் (பாரிசில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் மணைவியின் தம்பி) புலிகள் சார்பாக தானாக முடிவெடுத்து, 16 அப்பாவிகளை துரோகியாக அறிவித்து தனிப்படவே சுட்டு கொன்றான்;. இந்திய இராணுவம் அவனை சுட்டுக் கொல்லப்படும் வரை, அவன் தனது சொந்த மறைவிடத்தை விட்டு வெளியில் வருவதே படுகொலை செய்ய என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த மாதிரியான படுகொலைகள், வரலாறு காணாத மனித துயரத்தை ஏற்படுத்தியது. எம்மண்ணில் புலிகள் செய்த படுகொலை மற்றும் சித்திரவதையால் ஏற்பட்ட சமூக ஊனம், ஒரு இனத்தின் அழிவுக்கு வழிகாட்டியது. இப்படி மிருகத்தனமாக அடக்கப்பட்டு அடங்கிய மன அழுத்ததுக்குள், மக்கள் ஆழமாக சிறைவைக்கப்பட்டனர். மாற்றுக் கருத்துடன் கூடிய சிந்தனை சுதந்திரம் மறுக்கப்பட்டு, தொடர்ச்சியாக நடத்தப்பட்ட படுகொலையின் வரலாறு தான் புலிகள் வரலாறு. இதனால் சமூகம் தன் தொடர்ச்சியான வரலாற்று செயற்பாட்டை இழந்து, சிதைவது ஒரு அரசியல் பண்பாக்கியது. அடக்குமுறைக்கு அஞ்சிய மக்கள் செயற்பாடற்ற செம்மறி மந்தைகளாகினர். புலிகள் சொல்வதையே, செய்ய வேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

இதனால் புலிகளின் பாசிச சர்வாதிகாரம் நிலவிய பிரதேசத்தில் இருந்து மக்கள் தப்பியோடினர், இப்படி சொந்த மண்ணை விட்டு தப்பியோடியவர்களின் எண்ணிக்கை, தமிழ் மக்களின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினராவர். இந்த தப்பியோட்டம் புலிகளின் அழிவு வரை முடிவின்றி தொடர்ந்து நிகழ்தது. மக்கள் வெளியேறுவதை பலாத்;காரமாக தடுத்து நிறுத்தும் வகையில், வெளியேறுவதற்கு புலிகளின் அனுமதி பெறுவது அவசியமாக்கியது. இதன் மூலம் புலிகள் தமது பாசிச சர்வாதிகார அதிகாரத்தின் கீழ், மக்களை சிறை கைதிகள் ஆக்கினர். அதேநேரம் புலிகள் கொழும்பில் நடத்திய தொடர்ச்சியான தற்கொலை தாக்குதலை தடுக்கும் வகையிலும் அரசு, வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறி வருவோரை தடுத்தது. இப்படித்தான் வடக்கு கிழக்கில் புலிகளுடன் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். இயற்கைக்கு புறம்பான வகையில், அரசு மற்றும் புலிகள் மக்கள் வெளியேறுவதை கடடுப்படுத்துவது நிறுத்தப்பாடது இருப்பின், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் புலிகளுடன் வாழ்ந்து இருக்கமாட்டார்கள். புலிகள் போராடும் பிரதேசத்தில் மக்களையே காணமுடியாத ஒரு சூனியப் பிரதேசத்துக்காக போராட வேண்டிய அளவுக்கு, புலிகளின் மக்கள் விரோத அரசியல் வக்கிரம் பிடித்த பாசிசமாக பரிணமித்திருந்தது.

மக்கள் மீது வன்முறையை அடிப்படையாக கொண்ட புலிகளின் அரசியல், மக்கள் சார்ந்த சமூக கூட்டுகளைக் கூட சிதைத்தது. சமூகத்தின் அனைத்து செயற்பாட்டையும் புலிகள் சார்ந்து புலி மயமாக்கப்பட்ட நிலையில், மக்களின் துயரங்கள் வரைமுறையின்றி பெருகிச் சென்றது. இங்கு இந்த அடிப்படையை வைத்தே புதிய படுபிற்போக்கான மதவாத அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும் தம்மை விரிவாக்குவதற்கு, புலிகள் அரசியல் ரீதியாக அனுமதித்திருந்தனர். இவ்விரு போக்கினரும் போராட்டத்துக்கு எதிராக, ஏகாதிபத்திய உலகமயமாதல் நோக்கத்தை ப+ர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டனர். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை கோருகின்றவர்களையும், தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்க கோருபவர்களையும், ஏழை மக்களின் துயரத்தை போக்க தீர்வை கோருபவர்களையும் அழித்தொழித்தன் மூலம் தான், புலிகள் பதிலளித்தனர். இதன் மூலம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும், நியாயமான இயற்கையான மக்களின் போராட்டத்தையும் புலிகள் மறுத்தனர். மாறாக மக்கள் விரோத கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டு தமது பாசிச அதிகாரத்தை நிறுவினர். ஆயுதம் மூலம் அனைத்தையும் கையாளும் புலிகளின் பாசிச ஆட்சியில், சமூக இயக்கம் என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாகியது. இதுவோ மக்களின் அவலங்களை எல்லையற்ற வகையில் ஆழமாக விரிவாக்கியது.

தொடரும்

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1 

பாகம்- 2 & 3

பாகம்- 4 & 5

பாகம்- 6 & 7

பாகம்- 8 & 9

பாகம்- 10

பாகம்- 11

பாகம்- 12

பாகம்- 13