Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

மூலதனத்துக்கு இடையிலான யுத்தமே, அமெரிக்கா – சீனா முரண்பாடாகும்

மூலதனத்தைக் குவிக்கும் வரைமுறையற்ற சந்தைப் பொருளாதாரத்தில் திவாலாகும் மூலதனங்கள், மீள கையில் எடுத்திருக்கும் தற்காப்பு ஆயுதம் தான் எல்லைக்குட்பட்ட ஏகாதிபத்தியப் பொருளாதாரம். அதாவது உலகமயமாதலுக்கு எதிரான, ஏகாதிபத்திய தேசியவாதம்.

முதலாளித்துவத்தின் பொது முரண்பாடானது, உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முதல் இரு நாடுகளான அமெரிக்கா – சீனாவுக்கு இடையில் முற்றி வருகின்றது. அதாவது உள்ளார்ந்த உள்ளடக்கமென்பது உலக மூலதனத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகும். மூலதனங்கள் ஒன்றையொன்று அழித்து கொழுக்கும் உலகமயமாக்கலுக்குப் பதில், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தமாக அதை மாற்றி விட முனைகின்றனர்.

தேசங்களின் எல்லைகள் இன்றி மக்களையும் - இயற்கையையும்  வரைமுறையின்றி சுரண்டுவதற்காக மூலதனங்களால் உருவாக்கப்பட்ட உலகமயமாக்கமானது, ஒன்றையொன்று அழித்து கொழுக்கும் தனக்குள்ளான போட்டியில், முன்னேற முடியாத தேக்கத்தை அடைந்து இருக்கின்றது. தேக்கத்தைக் கடக்க உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைத்து சந்தையை தக்க வைக்கவும், இலாபத்தை அடையவும் முனைந்தனர். அந்தப் போட்டியால் சந்தையில் பொருட்கள் குவிந்துவிட, பொருட்கள் விற்க முடியாது தேங்கி விடுகின்றது. விலைக் குறைப்பு, பொருள் தேக்கமானது வேலை இழப்புகளாகவும், கூலி குறைப்பாகவும், அதிக நேர வேலையாகவும், குறைந்த கூலி உள்ள நாடுகளை நோக்கி மூலதனத்தின் பாய்ச்சலாகவும் மாறியது. மொத்தத்தில் உழைக்கும் வர்க்கம் மீதான மூலதனத்தின் ஒடுக்குமுறைகள் மூலம், சந்தையை தொடர்ந்து தக்கவைக்க முனைந்த மூலதனத்தின் போராட்டமானது, உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை இல்லாதாக்கி வருகின்றது. இது சுழற்சியாக மூலதனத்திற்கு எதிரான புதிய நெருக்கடியாக மாறும் அதேநேரம், மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைக் கூர்மையாக்குகின்றது.

 

அதாவது மூலதனங்களுக்கு இடையிலான முரண்பாடும், மூலதனத்தை உற்பத்தி செய்யும் உழைப்புக்கு இடையிலான வர்க்க முரண்பாடாக கூர்மையாக, அதை ஏகாதிபத்தியங்களுக்கு   இடையிலான முரண்பாடாக மூலதனம் மடை மாற்றுகின்றது.

இந்த நெருக்கடியானது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த விதியாக இருக்கின்றது.  அதேநேரம் முதலாளித்துவத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாகி வருகின்றது. வர்க்க ரீதியாக ஏற்படும் ஆழமான சமூகப் பிளவுக்கும், போராட்டத்துக்கும் வித்திடுகின்றது. தேர்தல் அரசியல் மூலம் எந்த மாற்றத்தையும் பெற முடியாத அனுபவம், பாராளுமன்ற அரசியலின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். போராட்ட அரசியல் மூலமே எதையும் பெற முடியும் என்பதை, அனுபவங்கள் எடுத்துக் காட்டி வருகின்றது.

மூலதனம் இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, ஒன்றையொன்று அழித்து சந்தையை கைப்பற்றும், ஏகாதிபத்திய தேசியவாதத்தை முன்னிறுத்த தொடங்கி இருக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் யுத்தத் தயாரிப்பு அடிப்படையில், இராணுவச் செலவுகளை அதிகரித்து வருகின்றது. வெளிப்படையான முரண்பாட்டைக் கொண்ட நாடுகளான அமெரிக்கா – சீனா, தங்கள் இராணுவ செலவுகளை அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. வெளிப்படைப் பொருளாதார யுத்தமானது, இராணுவ தயாரிப்பு யுத்தத்தை தொடக்கி இருக்கின்றது. ஒரு உலக யுத்தத்தை நோக்கி, மூலதனம் தன்னைத்தான் தயார் செய்கின்றது.

உழைக்கும் மக்களை ஒடுக்கி புதிய சந்தைகளைக் கைப்பற்றவும், தக்கவைக்கவும் மூலதனங்கள் நடத்தும் இந்தப் போராட்டம், முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியாகி ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் கூர்மையாகியிருக்கின்றது.

மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டமா அல்லது மூலதனத்துக்கு இடையிலான யுத்தமா என்பதை உழைத்து வாழும் மக்களிடம் தெரிவு செய்யக் கோருகின்றது.

இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்

1.டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானதால் உலகம் அழியப் போகின்றதா!?

2.சீனப் பண பெறுமதி குறைக்கப்பட்டதும் - அதன் விளைவுகளும்