Wed01222020

Last updateTue, 10 Dec 2019 10am

நாம் அனைவரும் சமவுரிமைக்காக இணைந்து கொள்வோம்!!

இலங்கையின் மிகப்பெரும்பான்மையினரான ஏழை உழைக்கும் மக்களை மிகச் சிறுபான்மையினரான  ஒரு கூட்டம் அடக்கி ஆண்டு வறுமையில் வாழ விதித்திருக்கிறது. இனவாதம், மொழிவாதம், மதவாதம் பேசி தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை ஒருவரோடு இணைய விடாமல் செய்து எதிரிகளாக்கி இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்து தம் கொள்ளையைத் தொடருகிறது இந்த கொடியவர்களின் கூட்டம். இந்தக் கொடியவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு தடையாக உள்ள இனவாதம் களையப்பட வேண்டுமாயின் ஒரு பொது மேடை தேவையாகிறது.

சிங்கள மக்களின் வறுமைக்கு காரணம் தமிழ் மக்கள் இல்லை என்பதை ஏழைச் சிங்கள மக்களிற்கு எடுத்துச் சொல்ல ஒரு பொதுமேடை தேவையாகிறது. தமிழ் மக்களை கொன்று குவித்தது சிங்களப் பொதுமக்கள் இல்லை என்பதை மரணித்த தம் மக்களை மனதில் நிறுத்தி வாடும் தமிழ் மக்களிற்கு எடுத்துச் சொல்ல ஒரு பொதுமேடை தேவையாகிறது. மக்கள் தம் மனது மயக்கங்களை, சந்தேகங்களை களைந்து நம்பிக்கை கொள்ள தேவைப்படுகிற அந்தப் பொதுமேடை தான் சமவுரிமை இயக்கம். சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்ற சமத்துவ கோட்பாட்டை முன் வைத்து தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்னும் போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கம் தான் சமவுரிமை இயக்கம்.

தமிழ் மக்களின் மேல் இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடுத்த கொடும் போரில் காணாமல் போன தமிழ் மக்களின் உறவினர்களை ஒன்று சேர்த்து கொழும்பில் போராடம் ஒன்றை மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான லலித் வீரராஜ் முன்னின்று ஒழுங்கு செய்தார். 2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரின் பின்பு இலங்கை அரசின் அராஜகங்களினால் நிலவிய பயங்கரச் சூழலில் அரசிற்கு எதிராக குரல் கொடுக்க பலரும் அஞ்சியிருந்தனர். "காணாமல் போனவர்களை வெளிப்படுத்து", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என்ற முழக்கங்களை முன் வைத்து மகிந்த ராஜபக்ச அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக முதலில் எழுந்த குரலாக லலித்தின் உறுதியான போர்க்குரல் எழுந்தது. மக்கள் போராட்ட இயக்கத்தினால் தை மற்றும் கார்த்திகை 2011 இல் மாபெரும் போராட்டங்கள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டன.

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஓர் அங்கமாக சமவுரிமை இயக்கம் அமைக்கப்பட்டது. அதன் பின்பு "காணாமல் போனவர்களிற்கு நீதி வழங்கு", "அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்ற போராட்டங்கள் சமவுரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.  2011 மார்கழி மாதம் பத்தாம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று காணாமல் போனவர்களினதும், அரசியல் கைதிகளின் குடும்பங்களையும் ஒன்று சேர்த்து யாழில் ஒரு போராட்டத்தையும், அதைத் தொடர்ந்து கொழும்பை நோக்கி ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கும்  ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த வேளையில் லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் என்னும் இரு போராளிகளும் மகிந்த அரசின் கொலைக் கரங்களினால் கடத்தப்பட்டனர். இன்று வரை அவர்கள் தமது வீடு வந்து சேரவில்லை. அவர்களின் அன்புக்குரியவர்கள் கண்ணீர் கசியும் விழிகளுடன் காலடிச் சத்தம் கேட்காதா என்று காத்துக் கிடக்கின்றனர்.

இலங்கையின் தென்பகுதியில் முஸ்லீம் மக்களிற்கு எதிராக சிங்கள, பெளத்த இன, மதவெறிக் கும்பல்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களின் போதும் எதிர்த்து எவரும் வாய் திறக்கவில்லை. முஸ்லீம் மக்களிற்காகவே வாழ்கிறோம் என்று சொல்லி வாக்குப்பிச்சை வாங்கி பாராளுமன்றப் பதவிகளில் அட்டைகள் போல் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மகிந்த அரசின் அதிகாரத்திற்கு கால் கழுவிக் கொண்டிருந்தனரே தவிர மக்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களை எதிர்க்கவில்லை. இலங்கை  ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத, இனவாத சக்திகள் நடத்தும்  பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்து, நீதிகோரி  18.06.2014  அன்று கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சமவுரிமை இயக்கமே பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இலங்கையில் தொடங்கிய சமவுரிமை இயக்கம் தன் அமைப்புக்களை பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே, கனடா, அவுஸ்த்திரேலியா என விரிவுபடுத்தியது. இலங்கை அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகளை எதிர்த்தும்; காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்தும் போராட்டங்களை வெளிநாடுகளில் உள்ள சமவுரிமை இயக்கங்கள் முன் எடுக்கின்றன. இலங்கையின் எல்லா இனமக்களையும் ஒன்று இணைந்து "வசந்தத்தை தேடுகின்றோம்" என்னும் கலை நிகழ்ச்சிகளை பிரான்ஸ், பிரித்தானியா, டென்மார்க். கனடா ஆகிய நாடுகளில் சமவுரிமை இயக்கம் நடத்தியது.

லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் முன்னின்று நடத்திய போராட்டங்களை இலங்கை முழுக்க சமவுரிமை இயக்க தோழர்கள் தொடர்கிறார்கள். ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மக்களிடம் கையெழுத்து சேகரித்தல் என பல வடிவங்களில் போராட்டங்கள் தொடரப்படுகின்றன. மக்களிடம் பணம் சேகரித்து காணாமல் போனவர்களின் குடும்பங்களிற்கும், அரசியல் கைதிகளின் குடும்பங்களிற்கும் தம்மால் இயன்றளவு உதவிகளை சமவுரிமை இயக்கம் செய்கிறது.

சமவுரிமை இயக்கம் தன் அடுத்த கட்ட செயற்பாடுகளாக:

1. அண்மையில் கொஸ்கம இராணுவ முகாம் வெடித்து சிதறிய போது ஏற்பட்ட அழிவும், மக்களின் அவலமும் சிங்கள மொழி பேசும் மக்களின் உணர்வையும், உணர்ச்சியையும் உலுப்பி எடுத்தது. இதே குண்டுகளை வீசி வடக்கு கிழக்கை சிதைத்த போது, இந்த உணர்வுகள் சிங்கள மக்கள் மத்தியில் ஏன் ஏற்படவில்லை என்ற கேள்வியை முன் வைத்து சமவுரிமை இயக்கம் வடக்கு, கிழக்கு மக்கள் அனுபவித்த அவலங்களை சிங்கள மொழி பேசும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வண்ணம், இரண்டையும் ஒப்பிட்டு விபரணக் காட்சிப்படுத்தல் ஒன்றினை (வீடியோ ஆவணத்தை) வெளியிடும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளது.

2. "வசந்தத்தைத் தேடும்" என்கின்ற மொழிகள் கடந்த கலை விழாவை, யாழ்ப்பாணத்தில் மூன்று நாள் விழாவாக நடத்த சமவுரிமை இயக்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண விழாவின் பின்பு "வசந்தத்தை தேடுகிறோம்" விழாவை இலங்கை முழுக்க தொடர்ச்சியாக நடத்துவதற்கான முயற்சிகளை சமவுரிமை இயக்கம் முன்னெடுத்திருக்கிறது.

3. "அரசியல் கைதிகளை விடுதலை செய்", "காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் எங்கே" என்ற போராட்டங்களுடன் "பாரம்பரியமான மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவத்தை அகற்று", "மக்களின் நிலத்தை மக்களிடம் கொடு", "யுத்த இழப்பீடுகளிற்கான நட்ட ஈடுகளைக் கொடு" என்னும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்கள், பிரச்சாரங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்லவிருக்கிறது.

இப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான ஒழுங்குகளை செய்வதற்கு தேவைப்படும் நிதிக்காக எம்மக்களே உங்களிடம் இருகரம் ஏந்தி வருகிறோம். மக்களிடம் இருந்தே கற்றுக் கொள்கிறோம், மக்களிடம் இருந்தே பெற்றுக் கொள்கிறோம்.

-இரயாகரன்                                                                        - சீலன்

தொலைபேசி இலக்கம்: 0033695381560                               தொலைபேசி இலக்கம்: 00447778810261

முகப்புத்தகம்: Rayakaran Ray                                                 முகப்புத்தகம்:  Thava Guru