Fri08072020

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர். குமார் குணரத்தினத்தின் ஜனநாயக, அரசியல், குடியியல் உரிமைகளை அங்கீகரிக்குமாறு கோருகிறோம் !

தமிழர்கள் அதிகாரங்களில் அமர்த்தப்படுகின்றனர். கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இராணுவம் தமிழ் மக்களின் காணிகளில் இருந்து வெளியேறும். இவை போன்ற பல பத்து விடயங்களை தமிழ் மக்களின் நலனுக்காக மைத்திரியின் அரசு செய்வதாகவும்- செய்யும் என்ற நம்பிக்கையிலும், நம்மில் பலர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம்.

அதேவேளை, இந்த அரசாட்சியின் கீழ் நமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் மிக விரைவில் வெற்றி வாகைசூடும் எனக் கூறும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தைகளை நம்பிப் புளகாங்கிதம் அடைந்த வண்ணமுள்ளோம். மறுபக்கத்தில், மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்திசெய்யும் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் 'ரொபின் ஹூட்' அரசு என மைத்திரி அரசு பாராட்டப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரியை இந்தியா உட்பட பல மேற்குநாடுகள் தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தவண்ணமுள்ளன. கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசரைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் என சர்வதேச ராஜதந்திரிகளும் பிரபலங்களும் இலங்கைக்கு விஜயம் செய்ய வரிசையில் நிற்கின்றனர்.

இலங்கை அரசின் பேச்சாளர்களும் மற்றும் அமைச்சர்களும் மஹிந்த அரசினால் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களையும், ஏனையோரையும் நாட்டுக்குத் திரும்புமாறு அடிக்கொரு தடவை அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர். புலம்பெயர்ந்த அனைத்து மக்களையும், இந்தியாவில் அகதியாக இருப்போரையும் நாடு திரும்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐந்து லட்சம் கொடுத்தால் இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அது அறிவித்துள்ளது.

இன்று இலங்கை ஒரு ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் பூமியென மைத்திரி அரசால் பிரச்சாரப் படுத்தப்பட்டு, மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியபடி உள்ளது.

ஆனால், இந்த ஜனநாயகம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை! இலங்கையின் இடதுசாரியக் கட்சிகளில் ஒன்றான முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் நாடு திரும்பியுள்ள நிலையில், அவரை மறுபடியும் நாடு கடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது மைத்திரி அரசு. உல்லாசப்பயண விசாவில் நாட்டுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டார் என்பதே அவர் மீது சுமத்தப்படும் குற்றமாகும்.

தேர்தல் அறிவித்த பின், எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இலங்கைக்கு உல்லாசப் பயண விசாவில் வந்து, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இவர்களில் முன்னாள் புலிகளின் பிரமுகர்கள் தொடக்கம், மஹிந்த ஆட்சியில் வெளியேறிய தமிழ்-சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடக்கம். இவர்களின் பெரும்பான்மையினர், மைத்திரியையோ அல்லது மகிந்தவையோ ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர். மைத்திரிக்கும் - மகிந்தவுக்கும் சார்பாகப் பிரச்சாரம் செய்தவர்கள் எவரும் நாடு கடத்தப்படவுமில்லை, விசாரணை செய்யப்படவுமில்லை. மாறாக அவர்களின் விசாக்கள் நீடிக்கப்பட்டுள்ளது அல்லது அவர்களுக்கு அரசியலில் ஈடுபடும் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு புலம்பெயர முன்பு அவர்கள் வேலை செய்த அரச நிறுவனங்களில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதத் தவறும் இல்லை. இலங்கையச் சேர்த்த எல்லோருக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை அவர்களின் பிறப்புரிமை !

அதேபோன்றே, தனது கட்சி பங்கெடுத்த இடதுசாரிய முன்னணியின் வேட்பாளர் துமிந்த நாகமுவவை ஆதரித்து குமார் குணரத்தினம் பிரச்சாரம் செய்தார். ஆனால் குமார் குணரத்தினத்திற்கு அவரது பிறப்புரிமையான இலங்கையில் அரசியல் செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவர் மறுபடியும் இலங்கையில் தனது வாழ்க்கையைத் தொடர்வது மைத்திரி அரசாலும், அதனைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஆதிக்க சக்திகளாலும், கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது.

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னான வரலாற்றில், ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய சக்திகள் மூன்று தடவைகள் ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். அப் போராட்டங்களினால் பாதிக்கப்பட்டோர் பல இலட்சக்கணக்கில் புலம்பெயர்ந்தனர். அவ்வாறு புலம்பெயர்தவர்களின் பெரும்பான்மையினர், எவரும் சட்ட ரீதியான முறையில் தமது உண்மையான அடையாளங்களையோ அல்லது அரசியல் வரலாற்றையோ கூறி தஞ்சம் கோரவில்லை. இது யாவரும் அறிந்த உண்மை. அதே போன்றே, குமார் குணரத்தினம் அவர்களும்வேறு பெயரில் புலம்பெயர்ந்து வாழ்ந்தார். அன்றிருந்த இலங்கை அரசியற் சூழலால் ஏற்பட்ட உயிர் ஆபத்தும், ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறையுமே அவர் புலம்பெயரக் காரணங்களாகும். குமார் குணரத்தினம் பொருளாதார வளம் தேடி நாட்டை விட்டுப் புலம்பெயரவில்லை. இதன் அடிப்படையில், அவர் புலம்பெயர்ந்து வேறு அடையாளத்துடன் வாழ்ந்தார் என்ற காரணத்தைக் கூறி இலங்கையில் அவர் வாழும் உரிமையையும், அரசியல் செய்யும் உரிமையையும் மறுப்பதற்கு எந்தவித தார்மீக காரணங்களும் கிடையாது! அவர் புலம் பெயர்ந்ததுகான காரணம், இலங்கையை ஆளுபவர்களும்- ஆண்டவர்க்களுமே ஒழிய, சுய விருப்பில் அவர் புலம்பெயரவில்லை .

போர்க் குற்றவாளிகள், போதை வஸ்துக் கடத்தல்காரர்கள், அரசாங்கத்தையும் மக்களையும் கொள்ளை அடித்தவர்கள் எனப் பல்லாயிரம் சமூக-அரசியற் குற்றவாளிகள் சுதந்திரமாக இலங்கையில் நடமாடுகின்றனர் . அவர்கள் மீது இதுவரை எந்த நீதி விசாரணையும் நடக்கவில்லை. உளவுத் துறையோ, அன்றி குற்றவியல் பிரிவோ அக்குற்றவாளிகளை பின் தொடர்ந்து கண்காணிக்கவில்லை. ஆனால், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் ஒருவரை அரச இயந்திரம் குற்றவாளியைப் போல நடத்துகிறது. நாடு கடத்த முயற்சிக்கிறது.

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மக்கள் நலனுக்காகப் போராடியே செலவிட்ட தோழர். குமார் குணரத்தினம், மீதமாகவுள்ள தனது வாழ்வையும் தனது சொந்த குடிமக்களுடனேயே - மக்களுக்காவே கழிக்க விரும்புகிறார்.

துவரம் பருப்புக்கும், மண்ணெண்ணைக்கும் விலை குறைப்பது மட்டுந்தான் நல்லாட்சி ஆகிவிடாது. இவற்றை விட நல்லாட்சியில் அதி முக்கியமானது, மக்களின் அரசியல் உரிமையை- ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதும், நாட்டில் மாற்றுக் கருத்துக்களையும்- மாற்று அரசியல் செயற்பாட்டையும் முன்னெடுக்க, அனைத்து ஜனநாயக வெளிகளையும் உருவாக்கிக் கொடுப்பதுவுமாகும்.

இந்த வகையில்: மைத்திரி அரசு தோழர். குமார் குணரத்தினத்தின் பிறப்புரிமையை அங்கீகரிக்க வேண்டும்! அவரை நாடுகடத்த எடுக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்! என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரான நாம் கோருகின்றோம். அத்துடன் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளையும், தோழர். குமார் குணரத்தினத்தின் அரசியல், ஜனநாயக, குடியியல் உரிமைகளுக்காக குரல் கொடுக்குமாறும் தோழமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம் !

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

30.01.2015